அசுரன்
“சாதிச் சச்சரவுகளைத் தாண்டிச் செல்ல, கல்வியே சரியான வழி”
‘மெட்ராஸ்’ படத்தில் இயக்குனர் ரஞ்சித் சொன்னதையும், ரஞ்சித்தின் தயாரிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் சொன்னதையும், அசுரன் படத்தில் இயக்குனர் வெற்றி மாறன் அவருக்கே உரிய பாணியில் சொல்லியிருக்கிறார். கூடவே “அப்படிக் கல்வியால் பெற்ற பதவியில் உட்கார்ந்து அவர்கள் நமக்குச் செய்ததை, நாம் செய்யாமல் இருக்க வேண்டும்” என்று சொல்லி நம்மை மேலும் கவருகிறார் வெற்றி மாறன்.
கலைப்புலி தாணு தயாரிப்பில், தனுஷ் நடிப்பில், வெற்றி மாறன் இயக்கிருக்கும் அசுரன் படத்தின் கதைக்களம் கோவில்பட்டி வட்டாரம். எழுத்தாளர் பூமணி எழுதிய “வெக்கை” என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தின் கதை, எண்பதுகளில் நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது. கதை ஆதிக்க சாதியினருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் இடையே நிலம் உள்ளிட்ட உரிமைகள் குறித்து நிலவும் பிரச்சினைகளைக் குறித்தும், தொடர்ந்து தாழ்த்தப்பட்டோருக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்தும் தீவிரமாக, அதே சமயம் சினிமாவுக்குரிய மசாலாவுடன் பேசியிருக்கும் படம் தான், அசுரன்.
ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஆடுகளம் நரேன் தனது நிலத்தில் ஒரு ஃபேக்டரி தொடங்க இருக்க, அதற்குத் தனுஷ் குடும்பத்தின் நிலம் தேவைப்படுகிறது. அந்த நிலத்தைக் கொடுக்க தனுஷ் குடும்பம் மறுக்க, இரு குடும்பத்திற்கும் இடையே பிரச்சினை தொடங்குகிறது. அடிதடி, கொலை என்று அடுத்தடுத்த நிலைக்குச் செல்கின்ற பிரச்சினையில் தனது முதல் மகனை இழந்த தனுஷ், தனது அடுத்த மகனைக் காப்பாற்ற, அவரைக் காட்டிற்குள் அழைத்துச் செல்கிறார். அவரைத் துரத்தும் நரேன் குடும்பத்திடம் இருந்து தனது குடும்பத்தை அவரால் காப்பாற்ற முடிகிறதா என்பதும், தனுஷின் பின்னணி என்ன என்பதும் படத்தின் அடுத்த பாதியில் சொல்லப்படுகிறது..
தனுஷ் படத்திற்குப் படம் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார். திருமண வயதில் ஒரு பையனுக்கு அப்பாவாகத் தனுஷ் இதில் வருவதை நம்மால் ஏற்றுக்கொள்ள வைக்கும் விதத்தில் அவருடைய நடிப்பு இருக்கிறது. தனுஷ் முகத்தில் காட்டும் எக்ஸ்ப்ரஷன்களை நாம் இதுவரை கண்டிருக்கிறோம். இதில் உடல் மொழியிலும், வசன உச்சரிப்பிலும், குரலிலும் அசத்தியிருக்கிறார். வயதான அப்பாவாக, சோர்வான நடை போட்டுச் செல்லும் போது, இதற்கு முந்தைய படத்தில் ‘ரவுடி பேபி’ என்று ஆட்டம் ஆடிய நடிகராக இவர் என்று எண்ணத் தோன்றுகிறது. மனைவியும், மகன்களும் அவருடைய இயலாமையைச் சொல்லிக்காட்டும் போது வெளிப்படுத்தும் உணர்வுகளாகட்டும், குடும்பத்தினரைக் காப்பாற்ற வெகுண்டெழும் போது வெளிப்படுத்தும் உணர்வுகளாகட்டும், அப்பப்பா… வாட் ஏ மேன்!!!
தனுஷின் மனைவியாக மஞ்சு வாரியர். முதலில் இவரது தோற்றத்தை, அந்தக் கதாபாத்திரத்திற்கு ஏற்றுக்கொள்ளத் தயக்கம் ஏற்பட்டாலும், பிறகு தனது நடிப்பால் ஸ்கோர் செய்கிறார். தனுஷின் மகன்களாக டிஜே அருணாச்சலமும், கென் கருணாஸும் படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களின் நடிப்பே, புதுமுகங்கள் போல் இல்லாத போது, படத்தில் நடித்திருக்கும் தேர்ந்த நடிகர்களான பிரகாஷ்ராஜ், பசுபதி ஆகியோரின் நடிப்பை என்னவென்று சொல்வோம். இதுதவிர, பாலாஜி சக்திவேல், வெங்கடேஷ், சுப்பிரமணிய சிவா என்று பல இயக்குனர்களும் தலை காட்டியிருக்கிறார்கள். படத்தின் மிகப்பெரிய பலமே, நடிகர்களின் தேர்ந்த நடிப்பே.
ஒரு சிறு இடைவெளிக்கு பிறகு, வெற்றி மாறன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார். படத்தின் பின்னணி இசை படத்திற்குப் பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது. படத்திற்கு ஒளிப்பதிவு, வேல்ராஜ். படத்திற்கு அருமையான ஒளிப்பதிவு கொடுத்ததோடு மட்டுமல்லாமல், ஒரு கதாபாத்திரத்தில் நன்றாகவும் நடித்துள்ளார் வேல்ராஜ். இப்படத்தின் இன்னொரு சிறப்பான வசனங்களை, சுகாவும், வெற்றி மாறனும் இணைந்து எழுதியிருக்கிறார்கள்.
“க்ராஸ் ரூட்ஸ்” என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் வைத்திருக்கும் இயக்குனர் வெற்றி மாறனிடம், அப்பெயர் காரணத்தைப் பற்றிச் சமீபத்தில் ஒரு பேட்டியில் கேட்டபோது, சமுதாயத்தின் அடித்தட்டு மக்களைப் பற்றிய கதைகளைக் கொடுப்பதற்காக அப்பெயரை வைத்ததாகக் கூறினார். இதிலும் அப்படி ஒரு கதையைத் தான் சொல்லியிருக்கிறார். இந்தக் கதையே எண்பதுகளில் நடப்பதாக வருகிறது. அச்சமயத்தில் நடக்கும் சாதிய பிரச்சினைகளைப் பேசிக்கொண்டிருக்கும் படம், ஃபிளாஷ்பேக்கில் இன்னும் இருபது வருடம் முன் செல்கிறது. அப்போதும் அது போன்ற, அதைவிட மோசமான சாதிய நிலையைக் காண முடிகிறது. இந்தப் படம் பார்க்கும் இப்போதும் செய்திகளில் இது போன்ற சாதியப் பிரச்சினைச் சார்ந்த சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதைக் காண முடிகிறது. செய்திகளில் சாதாரணமாகக் கடந்து செல்லும் இது போன்ற சம்பவங்களில் வாழ்க்கையைத் தொலைக்கும் நிஜ மனிதர்களின் நிலையை நினைத்துப்பார்க்கும் போது பகீரென்றிருக்கிறது. அவர்களின் நிலையையும், அந்த அனுபவத்தையும் நம் கண்முன் நிறுத்துவதில் வெற்றி மாறன் வெற்றி பெற்றுள்ளார்.
இப்பிரச்சினைகளின் தீர்வாகக் கல்வியைப் போதிக்கும் வெற்றி மாறன், அந்தக் கடைசி ரீலுக்கு முந்தைய ரீல் வரை, நமக்குக் காட்டுவது ஆக்ரோஷமான அடிதடி சண்டைக் காட்சிகளும், கத்தி வெட்டுக் குத்துகளும் தான். இவை ஒருவிதத்தில் படம் பார்க்கும் அத்தகைய பிரிவினர்களை உசுப்பேற்றிவிடும் என்றாலும், இந்தப் படத்தைக் கமர்ஷியலாக வெற்றி பெற வைப்பவை அந்தச் சண்டைக் காட்சிகளும், அதற்கு முந்தைய பரபரப்புக் காட்சிகளும்தான். வெற்றி மாறன் எனும் திரைமொழி மந்திரவாதிக்கு ரசிகனுக்குக் கசக்காமல் மருந்து கொடுக்கும் வித்தை நன்றாகத் தெரிந்திருக்கிறது. இதிலும் அவர் கொடுத்திருக்கும் மருந்து நன்றாக வேலை செய்திருக்கிறது.
குறிப்பு – குழந்தை குட்டிகளைப் படிக்க வைங்கடா!! என்ற தேவர் மகன் தத்துவத்தை மீண்டும் சொல்லியிருக்கும் இப்படத்தைக் குழந்தைக் குட்டிகளோடு பார்க்க முடியாது என்பதையும் சொல்லிக்கொள்ள வேண்டும். அவ்வளவு வெட்டுக்குத்துகள் படம் முழுக்க இருக்கிறது.
அசுரன் – மக்களைக் கவரும் சூராதி சூரன்.
– சரவணகுமரன்.