இம்பீச்மெண்ட்
இரண்டு வாரங்களாக, அமெரிக்கத் தொலைகாட்சிகளிலும், ஊடகங்களிலும் மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட, பயன்படுத்தப்படும் சொல் ‘இம்பீச்மெண்ட்’. அமெரிக்க அதிபர் டானல்ட் ட்ரம்ப் ‘இம்பீச்’ செய்யப்படுவாரா என்ற கேள்வி அனைத்துலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது என்றால் அது மிகையில்லை. தன்னை இம்பீச் செய்தால் உலகப் பொருளாதாரம் வீழும்; உலக அரசியல் ஸ்தம்பிக்கும் என அவரே எச்சரித்துள்ளது எந்தளவு நிதர்சனம்? அப்படி என்ன செய்துவிட்டார் ட்ரம்ப்?
கட்டுரைக்குள் செல்லும் முன்னர் “இம்பீச்மென்ட்” என்ற பதத்துக்குப் பொருளறிந்து கொள்வது அவசியம். அகராதிப்படி “இம்பீச்மென்ட்” என்றால் பழி சுமத்துதல், குற்றச்சாட்டு எழுப்புதல் என்று பொருள் கொள்ளலாம். சட்டப்படி, குற்றஞ் சாட்டப்படுபவர் அனைவரும், நிரூபிக்கப்படாதவரை குற்றவாளிகள் அல்ல. எப்படி சாமான்யர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தீர்ப்பளிக்கப்படுகிறதோ அதைப் போன்றதே இம்பீச்மென்டுகளும் நடத்தப்படும். அமெரிக்க நீதிமன்றங்களில் பொதுமக்கள் பங்கெடுக்கும் நடுவண் குழுக்களும், பெரும்பாலான நாடுகளில் நீதிபதியும் வழக்குகளின் முடிவைத் தீர்மானிப்பார்கள். இம்பீச்மெண்டுகளுக்கு அந்தந்த அலுவலகத்துடன் தொடர்புடைய குழுக்கள் முடிவெடுக்கும்.
அமெரிக்க அரசியலமைப்புச் சட்டப்படி, மத்திய அரசின் பொறுப்பிலிருக்கும் நபர்கள் மீதான குற்றச்சாட்டுகளை இரு அவைகளும் விசாரிக்கும். கீழவை (House of Representatives) ஓட்டெடுப்பில் நிருபிக்கப்படும் குற்றங்கள், மேலவைக்கு (Senate) செல்லும். இங்கும் ஓட்டெடுப்பு அடிப்படையில் குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் மட்டுமே சம்பந்தப்பட்ட குற்றவாளி பதவியிழப்பார். ஆக ‘இம்பீச்மெண்ட்’ என்பது பழி சுமத்தும், குற்றஞ்சாட்டும் நடவடிக்கையே தவிர இது மட்டுமே அதிபரைப் பதவியிழக்கச் செய்யாது. குற்றம் நிருபிக்கப்படும் பட்சத்தில், குற்றத் தண்டனையின் ஒரு பகுதியாக மட்டுமே பதவிபறிப்பு நடைபெறும்.
அமெரிக்க அரசியலைமைப்புச் சட்டம் மூன்று பிரிவுகளின் கீழ், மத்திய அரசுப் பொறுப்பிலிருக்கும் ஒருவர் மீது குற்றம் சாட்டப்படலாம் என்கிறது.
- அரசுத் துரோகம் (Treason)
- இலஞ்ச நடவடிக்கைகள் (Bribery)
- இதர சட்டத்துக்கு புறம்பான பெருங்குற்றங்கள்; சட்ட
மீறல்கள் (other crimes and misdemeanor)
இப்போது அதிபர் டானல்ட் ட்ரம்ப் மீது சுமத்தப்பட்டிருக்கும் பழி, மேலே சொல்லப்பட்டிருக்கும் பிரிவுகள்படி மூன்றாவது வகையைச் சார்ந்தது. தனது அரசுப் பதவியை துஷ்பிரயோகம் செய்தார், அரசு அதிகாரத்தை சுய இலாபத்துக்காகப் பயன்படுத்தினார் என்பதே இந்தக் குற்றச்சாட்டின் சாராம்சம்.
அப்படி என்னதான் செய்துவிட்டார் திருவாளர் ட்ரம்ப்? சென்ற மே மாதம் நடந்த தேர்தலில், உக்ரைன் நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் வோளோடிமர் செலன்ஸ்கி. அவரைப் பாராட்டவும், இரு நாடுகளுக்கான நட்புணர்வை வளர்த்துக் கொள்ளவும் வெள்ளை மாளிகையிலிருந்து தொலைபேசி வழியே உரையாடியுள்ளார் அதிபர் ட்ரம்ப். அரசு ரீதியான குசலங்களுக்குப் பிறகு, இந்த உரையாடலின் ஒரு பகுதியாக அதிபர் ட்ரம்ப், உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியிடம் ஒரு உபகாரம் கேட்கிறார்.
இந்த இடத்தில் சில கடந்தகால நினைவூட்டிகள்
- முன்னாள் துணை அதிபரின் மகனான ஹண்டர் பைடன், ரோஸ்மான்ட் செனேகா பார்ட்னர்ஸ் எனும் கம்பெனியின் பங்குதாரர். உலக நாடுகள் பலவற்றில் தொழில்ரீதியான ஆலோசனைகள் வழங்கும் நிறுவனம் இது. உக்ரைன் நாட்டின் முந்தைய அரசுக் காலத்தில், ஹண்டர் தனது தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி இடைத்தரகராக பணியாற்றி, பல கோடிகளைச் சம்பாதித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து அடங்கின.
- 2016 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் சமயத்தில் ஜனநாயகக் கட்சியினரின் கணினிகள் சில ‘ஹேக்’ செய்யப்பட்டன. அக்கட்சியின் தேர்தல் வியூகங்கள், நிதி நிலை போன்ற தகவல்கள் வெளியே கசியத் தொடங்கியதும் சுதாரித்த அவர்கள், உக்ரைனைச் சேர்ந்த ‘கிரவுட் ஸ்ட்ரைக்’ எனும் ‘சைபர் செக்யூரிட்டி’ நிறுவனத்தை அணுகினர். ஹேக்கர்கள் பயன்படுத்திய கணினிகள், அவர்கள் களவாடிய தகவலுடன் உக்ரைன் நாட்டிலுள்ளதாக நம்பப்படுகிறது.
இவற்றைப் பற்றி அறிய முற்பட்ட அமெரிக்க அதிபர், உக்ரைன் அதிபரிடம், மேலே குறிப்பிட்ட கணினி பற்றி தகவலறிந்து தெரிவிக்குமாறு கேட்கிறார்; உக்ரைனின் முந்தைய அரசின் தில்லுமுல்லுகளை, குறிப்பாக அவற்றில் ஹண்டரின் பங்கு என்ன என்பதை வெளிக்கொணர வேண்டும் என்கிறார். அதோடு, இந்த விவரங்களைக் கண்டறிந்து நியுயார்க்கின் முன்னாள் மேயரான ருடி ஜூலியானியிடம் (தற்போது அதிபர் ட்ரம்பின் தனிப்பட்ட வழக்கறிஞர்) தெரிவிக்குமாறு கோருகிறார். இது தொடர்பாக முதலில் அமெரிக்க அரசாங்க அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார் உங்கள் அதிகாரிகளைத் தொடர்பு கொள்வார். அதன் பின்னர் ரூடி ஜூலியானி அவர்களுடன் தொடர்பு கொள்வார் என்கிறார். இந்த உபகாரம் பற்றி பேசுவதற்கு முன்னர் பிற ஐரோப்பிய நாடுகள் உக்ரைனை கை கழுவிய போதிலும் அமேரிக்கா எவ்வாறு உக்ரைனின் மாற்றங்களுக்குத் தோள் கொடுத்தது என்றெல்லாம் திருவாளர் ட்ரம்ப் பீடிகை கொடுத்துள்ளார். இதிலுள்ள சொற்கள் பயன்பாடு, இந்த உபகாரத்தை செய்யவில்லை என்றால் உக்ரைனுக்கான அமெரிக்காவின் உதவிகள் முடக்கப்படும் எனும் அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது. அதாவது ஏறத்தாழ உக்ரைன் அதிபரை திருவாளர் ட்ரம்ப் ‘பிளாக்மெயில்’ செய்துள்ளார் என்று பார்க்கின்றனர்.
எதற்காக ட்ரம்ப் இதைச் செய்தார்?
இரண்டு விஷயங்கள். இந்த உரையாடலுக்கு சில நாட்களுக்கு முன்னர் இந்த தகவல் ஹேக்கிங் தொடர்பாக ராபர்ட் மூலர் தலைமையில் நடந்த விசாரணை கமிட்டி தனது ஆய்வறிக்கையைச் சமர்பித்திருந்தது. போதுமான ஆதாரங்கள் இல்லாத நிலையில் இந்த ஆய்வு எப்போது வேண்டுமானாலும் தொடரக்கூடும் என்ற நிலை தொடர்கிறது.
இரண்டாவது – 2020 ஆம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், டானல்ட் ட்ரம்ப் போட்டியிடவுள்ளார். எதிர்த் தரப்பில் பலர் போட்டியிட முனைந்தாலும், முன்னாள் துணை அதிபரான ஜோசப் பைடன், இறுதி போட்டியாளரானால் திருவாளர் ட்ரம்புக்கு பலத்த நெருக்கடி தரக்கூடும் என்பது சமீபத்திய அரசியல் கணிப்பு. ஜோ பைடன் தனது பதவிக்காலத்தில் அவரது மகனான ஹண்டர் பைடனுக்கு பல நாடுகளில் தொழில் செய்ய வழியமைத்து தந்தார் என்ற குற்றச்சாட்டை நிறுவி, அவரது ஆதரவைக் குறைக்க சதியாலோசனை செய்துள்ளார் என்பது தான் தற்போதைய குற்றச்சாட்டு.
பொதுவாக சில நாட்டுத் தலைவர்கள் மற்ற நாட்டுத் தலைவர்களிடம் சில உபகாரங்களைக் கேட்பதுண்டு. அவையெல்லாம், பெரும்பாலும், தமது நாட்டு பாதுகாப்பு, பொருளாதாரத்தைக் குறித்ததாக இருக்குமே தவிர தங்களது தனிப்பட்ட ஆதாயத்துக்காக அண்டை நாடுகளை அணுகுவதில்லை. அண்மைக் காலங்களில் சில தலைவர்கள் இவ்வகை அரசியல் கட்டுப்பாடுகளை, கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு வருவதைக் காண முடிந்தாலும், திருவாளர் ட்ரம்ப் விஷயத்தில் ‘விசில் ப்ளோயர்’ எனப்படும் தகவலாளி உள்ளுக்குளிலிருந்துகொண்டே இந்த தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தியது போல மற்ற நாடுகளில் நடைபெறவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
இந்த உரையாடலின், சில பகுதிகளை எழுத்து வடிவில் கொடுத்து உதவியுள்ளது வெள்ளைமாளிகை. முழு உரையாடலையும் விசாரணைக்கு தருமாறு கேட்டு வருகின்றன எதிர்க்கட்சிகள். இந்த விஷயம் துணை அதிபரான மைக் பென்ஸ், வெளியுறவு செயலாளர் மைக் பாம்பேயோ ஆகியோருக்குத் தெரிந்திருக்கக் கூடும் என்ற நம்பிக்கையில் அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் என்று கேட்டுவருகிறார்கள் இவர்கள். மிக பரபரப்பாக நடந்து வரும் விசாரணையில், வலுவான ஆதாரங்கள் கிடைத்தால் அதிபர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மான வாக்கெடுப்பு முதலில் கீழவையிலும், அது வெற்றி பெறும் பட்சத்தில் மேலவையிலும் நடத்தப்படும். இரண்டு அவைகளிலும் இந்தத் தீர்மானம் வெற்றி பெற்றால் திருவாளர் ட்ரம்ப் பதவியிழக்க நேரும். அரசியலமைப்புச் சட்டத்தில், ‘இம்பீச்’ செய்யப்பட்ட ஒருவர் மீண்டும் அதிபர் தேர்தலுக்கு போட்டியிட முடியாது என்று குறிப்பிடவில்லை. ஆகையால் ஒருவேளை குற்றம் நிரூபிக்கப்பட்டு பதவி இழந்தாலும், திருவாளர் ட்ரம்ப் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளது.
பொருளாதார பலத்துடன், உலகமே அண்ணாந்து பார்க்கும் உயர்ந்த இடத்திலுள்ள நாட்டின் அதிபர் அரசியல் சதியாலோசனைக்காக தண்டனை பெற்று பதவியிழப்பது மிகவும் அவமானகரமானது. உலகப் பொருளாதாரம் எல்லைகள் கடந்து பரந்துள்ள நிலையில், அமெரிக்க அரசியலின் ஸ்திரமின்மை பல நாடுகளைப் பாதிக்கக்கூடும்; வருங்காலங்களில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றங்கள் நேரலாம்; அரசாங்கத்துக்கு இது பெரும் செலவை உண்டாக்கலாம்; மற்ற பல அரசியல் நடவடிக்கைகள் முடங்கலாம்; வரப்போகும் தேர்தல் களம் முற்றிலும் புது பரிமாணம் எடுக்கலாம்; ஆக இது டானல்ட் ட்ரம்ப் என்ற தனி மனிதரோடு முடிந்துவிடக் கூடியது அல்ல.
இத்தனை பின்விளைவுகள் இருந்தாலும், சர்ச்சைக்குரிய இந்த விசாரணையில் கடைபிடிக்கப்படும் வெளிப்படைத் தன்மை அமெரிக்க நாட்டின் ஜனநாயகத்தையும், பத்திரிக்கை, தனிமனித சுதந்திரங்களையும் உயர்த்திப் பிடிக்கிறது என்றால் அது மிகையில்லை. வெள்ளை மாளிகை வெளியிட்ட உரையாடலின் நகல் ஊடகங்களில் கிடைக்கிறது. நாட்டு மக்களின் வரிப்பணத்தில், அரசவையில் நடத்தப்படும் விசாரணை நேரடியாகத் தொலைகாட்சியில் ஒளிபரப்பானது. கிடைக்கும் சந்தர்ப்பங்களில் செய்தியாளர்கள் அதிபரிடம், நேருக்கு நேர் அவரது முகத்தைப் பார்த்து கேள்வி கேட்கிறார்கள். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், சிரிப்புடனோ, கோபத்துடனோ அதிபரும் பதில் தருகிறார். அண்மையில் பின்லாந்து அதிபருடன், நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஒரு நிருபர் திருவாளர் ட்ரம்பிடம் அவரது உக்ரைன் விவகாரம் பற்றி கேட்க, எரிச்சலடைந்த அவர் பின்லாந்து அதிபருக்கான கேள்விகளைக் கேட்கச் சொல்கிறார். அந்த நிருபர் விடாது மீண்டும் மீண்டும் அதிபர் ட்ரம்பிடம் அதே கேள்வியைக் கேட்கிறார். உள்ளுக்குள் கொந்தளித்து, முகம் சிவந்தாலும் அதிபர் அந்த நிருபரை அகற்ற உத்தரவிடவில்லை. அவரது பாதுகாவலர்கள் நிருபரை வெளியே இழுத்து வரவில்லை. அவர் மீது எந்த ‘தேச விரோத’ வழக்கும் பதிவாகவில்லை. அவரது பூர்வீகம் ஆராயப்படவில்லை. அவர் ‘தீவிபத்தில்’ இறந்து விடவில்லை. இது தான் உண்மையான ஜனநாயகம்! இந்த ஜனநாயக உரிமைகளும், சுதந்திரமும்தான் உலக அரங்கில் அமெரிக்காவை உயர்த்திப் பிடிக்கிறது.
-ரவிக்குமார்-