காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (அக்டோபர் 2019)
சென்ற இரு மாதங்களில் வெளிவந்த படங்களில் பல படங்கள் நல்ல பாராட்டையும், வெற்றியையும் பெற்று வருவது நல்ல விஷயம். கேட்பதற்கு நல்ல பல பாடல்கள் வெளியாகி உள்ளன. இனி வரும் மாதங்களிலும், தீபாவளி, கிருஸ்துமஸ் எனப் பண்டிகை தினங்களில் பெரிய படங்கள் வரவிருக்கின்றன. அப்படங்களில் உள்ள பாடல்களும் நம்மைக் கவரும்விதமாக இருக்கும் என்று நம்புவோமாக.
பக்ரீத் – ஆலங்குருவிகளா
ரொம்பவும் சிரமப்பட்டு வெளிவந்த இப்படம் வந்ததே தெரியாமல் போய்விட்டாலும், இமான் இசையில் சித் ஸ்ரீராம் பாடிய இப்பாடல் இன்னமும் காற்றில் உலாவிக்கொண்டே தான் இருக்கிறது. முதன்முதலாக ஒரு ஒட்டகத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட தமிழ்ப்படம் இது. அதனாலயே, மிகவும் சிரமத்திற்கு உள்ளான படம். படத்தின் நாயகனான விக்ராந்த் தமிழ்நாட்டில் இருந்து ராஜஸ்தானுக்கு ஒரு ஒட்டகத்தைத் திரும்பக் கொண்டு செல்லும் பயணத்தைப் பற்றிய கதை. இமானின் இசை படத்திற்குப் பலமாக அமைந்திருந்தது.
கோமாளி – பைசா நோட்டை
20 ஆண்டுகள் கோமாவில் இருக்கும் ஒருவன், கோமாவில் இருந்து மீண்டு வெளிவந்த பிறகு, இந்த நாட்டில் நடைபெற்று வரும் கோமாளித்தனமான விஷயங்களைக் கண்டு என்ன செய்கிறான் என்பதை இப்படத்தில் காமெடியாகக் காட்டியிருக்கிறார்கள். படத்திற்கு இசை – ஹிப்ஹாப் ஆதி. நல்ல சுருக்கமான கதைக்கு இணை கதை, துணை கதை எழுதி இழுத்திருந்தார்கள். இருந்தாலும், மக்களின் ஆதரவுடன் படம் வெற்றிப் பெற்றுவிட்டது. படத்திற்குச் சென்சார் கொடுத்த கட் எல்லாவற்றைவும் தொகுத்து இணையத்தில் இப்படக்குழு வெளியிட்டது. யூட்யூப்பிற்கு நோ சென்சார்.
காப்பான் – சிறுக்கி
ஷங்கர் படத்தைப் பாதிப் பார்த்த திருப்தி கே.வி. ஆனந்த் படங்களைப் பார்க்கும் போது கிடைக்கும். சுவாரஸ்யமான கதையை நல்ல நடிகர்களை வைத்து எடுத்தாலும், எங்கோ அடி வாங்கி விடும். சூர்யாவுடன் மூன்றாவது முறையாக இணைந்து இப்போது காப்பான். உடன் மோகன்லால், ஆர்யா எனப் பெரும் நடிகர் கூட்டம். பெரும் பட்ஜெட்டை லைக்கா இறக்க, கையைக் கடிக்காமல் படம் சுமாராக ஓடியது. ஹாரிஸ் ஜெயராஜிற்கு இவ்வருடம் இது இரண்டாவது படம். இதற்கு முன்பு கார்த்தி படமான தேவ். இப்போது சூர்யா படம். இப்படத்தின் பாடல்களை என்னுடன் கேட்ட அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவன் ஒருவன், இப்பாடல்களின் மூல ஆங்கிலப் பாடல்களை எடுத்துவிட்டுக்கொண்டு இருந்தான். கமான் ஹாரிஸ்!! இந்தச் சிறுக்கி பாடல் வரிகளைக் கேட்டு, முதலில் லைட்டாக ஆட்சேபங்கள் எழுந்தன. பின்பு, அது மாடுகளைக் குறித்து எழுதப்பட்டது எனப் படக்குழு கூறிச் சமாளித்தார்கள்.
சிவப்பு மஞ்சள் பச்சை – மயிலாஞ்சியே
பிச்சைக்காரன் என்ற வெற்றிப்படத்தைக் கொடுத்த இயக்குனர் சசி, மூன்று வருடங்களுக்குப் பிறகு எடுத்துள்ள இப்படத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் இருவரும் நாயகர்களாக நடித்துள்ளார்கள். பைக் ரேஸ் ஹீரோவுக்கும், ட்ராபிக் போலீஸ் ஹீரோக்கும் ரோட்டிலும், குடும்பத்திலும் நடக்கும் பிரச்சினையைச் சுற்றிய கதை. பெரிய வெற்றி என்றோ, தோல்வி என்றோ சொல்ல முடியாத வகையில் சுமாராக ஓடிய படம். படத்தின் இசை சித்து.
நம்ம வீட்டு பிள்ளை – எங்க அண்ணன்
சென்ற ஆண்டுக் கடைக்குட்டி சிங்கம் என்ற கிராமத்து வெற்றிப்படத்தைக் கொடுத்த இயக்குனர் பாண்டிராஜ், இந்தாண்டு இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அதேப்போல் இந்தக் கிராமத்து அண்ணன்-தங்கை பாசக்கதை கொண்ட படத்தை இயக்கியிருக்கிறார். படமும் அதேப்போல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அண்ணனாகச் சிவகார்த்திக்கேயனும் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷும் நடித்துள்ள இப்படத்தில் பாரதிராஜா, சூரி, நட்ராஜ், சமுத்திரக்கனி எனப் பெரும் நடிகர் பட்டாளம் உடன் நடித்துள்ளது. இசை – இமான். படத்திற்குத் தேவையான ஹிட் பாடல்களைத் தனது பாணியில் வழங்கியுள்ளார்.
சமீபத்தில் வெளியாகிய அசுரன், பிகில் ஆகிய படங்களின் பாடல்கள் குறித்து நமது அடுத்த பகுதியில் காணலாம்.
- சரவணகுமரன்