ரிச் ஃபீல்ட் நகர பூர்வீக மக்கள் தினம்
மினசோட்டா மாநிலத்தினதும், பல்வேறு அமெரிக்க நகரங்களின் பூர்வீக வாசிகள் தினப் பிரகடனங்களையும் ஒட்டி, ரிச் ஃபீல்ட் நகரமும் ஆக்டோபர் இரண்டாம் திங்களை, பூர்வீக மக்கள் தினமாக அறிவித்துள்ளத்து. ரிச் ஃபீல்ட் நகரமானது மினியாப்பொலிஸ் பெருநகரின் தென்புற எல்லையில் உள்ளது.
அந்த அறிவிப்பானது ஆக்டோபர் 8, 2019 அதிகாரப்பூர்வ நகர சபைக்கூட்டத்தின் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்தப் பிரகடனத்தின் படி கொலம்பஸ் டே எனப்படும் தினம் அகற்றுப்பட்டு ஆக்டோபர் இரண்டாம் திங்கள் பூர்விக மக்கள் தினமாக கௌரவிக்கப்பட்டுக் கொண்டாடப்படும். இத்தினத்தில் பூர்வீகவாசிகளுக்கு மரியாதை செலுத்துதல், பன்சமூக புரிந்துணர்வு,பொறுமை,சமாதானம் தேடுதல்,சமூக மேம்பாட்டிற்காக நகரமக்கள் உழைத்தல் போன்றன கொண்டாடப்படும்.
கொலம்பஸ் தினத்தைக் கொண்டாடுவது அமெரிக்கரிடையே பல வருடங்களாக மனத் தாபத்தை உண்டாக்கி வந்துள்ளது. சென்ற நூற்றாண்டின் மத்தியக்காலம் வரை பூர்வீக மக்களுக்குப் பெரும்பான்மையான ஐரோப்பியக் குடியேறிகள் முக்கியத்துவம் தரவில்லை என்பது உலகம் அறிந்த விடயம். ஆயினும் மனச்சாட்சியுள்ள பல அமெரிக்கர்கள் 1970களிலிருந்து பூர்வீக மக்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்டு வந்துள்ளனர். இந்த முயற்சிகள் சென்ற இரு தசாப்தங்களில பொது மக்கள் சிந்தனையை நல்ல வகையில் மாற்றியுள்ளது. முதன் முதலாக இந்த மாற்றும் 1989 ஆண்டு, மினசோட்டாவின் அயல் மாநிலமான தென் டக்கோடா மாநிலம் கைப்பிடித்தது.
மினசோட்டா மாநிலத்தில் இந்தப் பெயர் மாற்றப் பிரகடனத்தை மினியாப்போலிஸ், செயின்போல் நகரங்கள் 2014இல் கடைப்பிடிக்கத் தொடங்கின. இதனையடுத்து மினசோட்டா மாநிலம் முழுதும் இதனை பின்பற்றியது. மேலும் இவ்வருட சிறப்பு மினசோட்டா மாநிலத் தாபகத்தில் இருந்து இன்று வரை முதன் முதலாக எமது உப-கவணர் மதிப்புக்குரிய பெகி ஃபிளானிகன் எனும் பூர்விக மக்களில் இருந்து வந்த தலைவியே ஆகும்.
மேலும் இந்த பேர் மாற்ற முயற்சியை ரிச் ஃபீல்ட் நகர மனிதயுரிமைகள் இணையமும், நகர பூர்வீக வாசிகள் கல்வியமைப்பும் சேர்ந்து 2019 ஆம் வருடத்துவக்கத்தில் முன் வைத்தன.
எமக்கு தினத்தைப் பெயரிடுதல், யார் யாரெல்லாம் இதைச் சுதாகரித்துக் கொண்டாடுகிறார்களோ அந்தளவுக்கு முக்கியமானது என்றார் நகர மனிதயுரிமை இணையத் தலைவர் பிறட் ஸ்ரேஸா. மேலும் கொலம்பஸ் நாள் என்பதை பூர்வீக மக்கள் நாள் என்று மாற்றுவது ரிச் ஃபீல்ட் மக்களின் மனப்பாங்கையும் தெரிவிக்கிறது என்றார்.
இன்று ரிச் ஃபீல்ட் நகரில் பூர்விக மக்கள் சனத்தொகை மீண்டும் இயல்பாக அதிகரித்தவாறுள்ளது. தற்போது ஏறத்தாழ 130 பூர்வீக மாணாக்கர் நகரப் பொதுப் பாடசாலைகளில் கல்வி பயில்கின்றனர். இந்தப் பூர்வீகக் குடும்பங்கள் பிரதானமாக டக்கோட்டா, மற்றும் ஒஜிப்வே சமுகங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பலவேறு பூர்வீகத் தேசங்களில் இருந்து வந்த மக்கள்.
கொலம்பஸ் நாள் பற்றிய சிறுகுறிப்பு
கிரிஸ்தோபர் கொலம்பஸ் எனும் இத்தாலிய கப்பல் மாலுமி அக்டோபர் 12ம் திகதி, 1494 இல் பஹாமாஸ் தீவில் வந்து இறங்கினான். பஹாமாஸ் வட அமெரிக்க தொடர் நிலப்பரப்பில் இல்லாதது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பின்றி கொலம்பஸ் நாள் 1700களில் சிலஅமெரிக்கரால் கொண்டாடப்பட்டது. பின்னர் கொலராடோ மாநிலம் 1906இல், இந்நாளை தனது மாநில விடுதலை நாளாக்கியது. இதன் பின்னர் அமெரிக்க மத்தியரசு 1934ஆம் ஆண்டு இந்நாளை தேசிய விடுமுறையாக்கியது. எனினும் 1971ஆம் ஆண்டு முதல் அக்டோபர் இரண்டாம் திங்கள தேசிய விடுமுறையாக்கப்பட்டது.
கொலம்பஸ் வந்து இறங்கியதிலிருந்து பூர்வீக மக்கள் படுகொலைகள் 1970ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது என்கிறது வரலாறு. இதனால் கொலம்பஸ் நாளை ஐரோப்பாவில் இருந்து வந்தவர்கள் குறிப்பாக இத்தாலியர் தமது பண்டைய அடையளாமாக கொண்டாட விரும்பினும் இதன் துயரம் பூர்வீக வாசிகளால் பல நூறு ஆண்டுகளாக உணரப்பட்டது.
பூர்வீக தேசங்கள்
வடஅமெரிக்காவில் இன்று மத்திய அரசு அடையாளமிடும் 557 பூர்வீக தேசங்கள் உண்டு. இவற்றில் 229 தேசங்கள் அலாஸ்க்கா மாநிலதில் இன,கலாச்சார, மொழி சார்ந்த பிரிவுகளாகக் காணப்படுகின்றன. மீதி தேசங்கள் 35 அமெரிக்க மாநிலங்களில் காணப்படுகின்றன. இந்தத் தேசங்கள் சுய உரிமையுள்ள பூர்விக குழுமிய ஆட்சிமுறைகளைப் பின்பற்றும் இடங்களாகும். பூர்வீக தேசங்களில் அரசாட்சி அந்த குழுமிய சுயேட்சையைப் பொறுத்து அமையும்
இன்றைய சில வினோத அவதானிப்புக்கள்
பூர்வீக மக்கள் தினத்தை ஐக்கிய நாடுகள் சம்மேளனம் 1994 ஆண்டு, ஆகஸ்ட் 9ஆம் நாளை சர்வதேச பூர்வீக மக்கள் தினம் எனப்பிரகடனமாக்கியது. இன்று ஏறத்தாழ 170 பட்டணங்களும், பல மாநிலங்களும் இதைக் கொண்டாடுகின்றன. எனினும் அமெரிக்க மத்திய அரசு இன்றும் கொலம்பஸ் நாள் விடுமுறையையே அனுசரிக்கிறது.
அமெரிக்கச் சமூக எதிர்காலம் ஒருவர் மற்றவரிற்கு மதிப்புக் கொடுப்பதன் முலமே அடிப்படையில் பேணப்படும். எனவே சரித்திரப்பிழைகளை முடிந்தளவு நிவர்த்தி செய்து, ரிச் ஃபீல்ட் நகருடன் சேர்ந்து நாமும் பூர்விக மக்கள் பாரம்பரியத்தைக் கொண்டாடுவோம்.
- யோகி
Tags: Columbus Day, Minnesota, Native Indians, Natives Day, Richfield