இருளில் இரகசிய ஏழில் ஆந்தைகள்
வட அமெரிக்காவில் இலையுதிர்காலம் படிப்படியாகப் பனிகாலத்தை நோக்கி நகர்கிறது. இதன் போது சூழலில் பல உயிரினங்களும் அம்பலமாகின்றன. இவற்றில் ஒரு வகைதான் ஆந்தைகள். வடஅமெரிக்காவில் குறிப்பாக மினசோட்டா, ஒன்ராரியோ நிலங்களில் எமக்கருகில் ஏறத்தாழ பத்து வகை ஆந்தைகள் வசித்து வருகின்றன.
ஆந்தைகளை சிலர் மதித்துப் போற்றினாலும், விவரம் புரியாமல் அருவருப்புடன் பார்ப்பவர்களே அதிகம். அடர்ந்த வட அமெரிக்க ஊசிமரக் காட்டுப் பகுதிகளாக இருக்கட்டும், இல்லை நகர்ப்புறச் சந்து பொந்துகளாக இருக்கட்டும் தமது அயலிற்கேறப்ப அமைந்து வாழும் தன்மையுள்ள பறவைகள் ஆந்தைகள். எமது சூழலில் வாழும் ஆந்தைகள் பொதுவாக இருவகைப்படுத்தலாம். தனித்து மரங்களில் அல்லது மரப் பொந்துகளில் வாழும் ஆந்தைகள் ஒன்று; மற்றையது கொட்டகை வாழ் ஆந்தைகள் (Barn-Owl). இவை மினசோட்டா மாநிலத்தில் பாழடைந்த விவசாயக்கொட்டகைகளில் கூடு கட்டிவாழ்வன ஆகும்.
ஆந்தைகள் மற்றைய பறவைகள் போன்று பனிகாலத்தில் புலம் பெயராதவை. அவை எம்மைச்சூழ்ந்து நகரிலும் நாட்டுப்புறத்திலும் காணப்படுவன. மேலும் ஆந்தைகளில் பெண் ஆந்தைகள் பொதுவாக ஆண் ஆந்தைகளிலும் பெரியன. இந்தப் பறவைகள் பொதுவாக எலிகள், முயல்கள் போன்ற கொறித்துத் தின்னிகளை உண்பனவாயினும், ஆந்தைகளில் சில வகைகள் தனியே மீன்களை மட்டும் பிடித்து உண்பனவாகவும் காணப்படும்.
கண்கள் காணும் ஒரு காட்சி
நீங்கள் ஒரு ஆந்தையை உற்று நோக்கி அவதானித்தால் அதன் வாழ்வுக்கு அதன் பார்வை எவ்வளவு முக்கியம் என்று உணர்ந்து கொள்ளலாம். ஆந்தைகளின் கண்கள் அவைகளின் உடலுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது பெரியவை. மினசோட்டாப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரின்படி ஆந்தைகளின் கண்கள் அவற்றின் உடல் நிறையில் 3 சதவீதமாகும். இதை மனிதரோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது மனிதக் கண்கள் உடல் நிறையில் 1 சதவீதத்திற்கும் குறைந்தது.
ஆந்தையின் கண்கள் பருமன் மிகப் பெரியது ஆகையால், அது அதன் கபாலத்தின் கண்குழியில் திடமாக இணைக்கப்பட்டுள்ளது. எனவே தான் ஆந்தைகளால் எம்மைப்போலத் தலையைத் திருப்பாமல், கண்களை மட்டும் அசைத்துப் பார்க்க முடியாது. ஆயினும் அவை தமது தலையை 270 பாகைகள் சுழற்றி சுற்று வட்டாரத்தை அவதானிக்க வல்லன.
ஆந்தையால் மனிதரைப் போலவும், பிற பறவைகள் போலவும் அனைத்து நிறங்களையும் தெளிவுறப் பார்க்க இயலாது. ஆனால் ஆந்தையின் கண்களுள் கோல் உயிரணுக்கள் ( ROD CELLS) இருளில் பார்த்திடவும், விசேட கூம்பு உயிரணுக்கள் (CONE CELLS) சிறப்பு நிறங்களை அவதானிக்கவும் உதவுகின்றன. இது இருளில் இரையைத் தேடவும் அதே சமயம் பறக்கும் போது எதன் மீதும் மோதாமல் இருக்க உதவுகிறது.
இரகசியமான முறையில் பறப்பு
மேலும் வீடு வளவுகளில் அழகிய பறவைகளுக்காக வைக்கப்பட்டிருக்கும் நீர்நிலைகளில் ஆந்தைகள் இரகசியமாக இரவில் நீர் அருந்தும். அவை வந்து போகும் சலனம் எமக்குத் தெரியாது அவற்றின் பஞ்சுபோன்ற கால்செட்டைகள் எந்தத் தடயங்களையும் ஏற்படுத்தாது. இதே யுக்தியை இரவில் இரை தேடும் பொழுதும் ஆந்தைகள் பாவிக்கும்.
இரவில், இருட்டில் நடமாடும் பறவைகள் இரண்டு பிரதானமான அம்சங்களைக் கொண்டுள்ளன. அவை இருட்டில் இலைச்சருகுகள், சிறிய மரக்கிளைகள் முறிதலை உற்றுக்கேட்கும் ஆற்றல் கொண்டவை. மேலும் கும்மிருட்டிலும் சத்தம் சலனமின்றி அமைதியாகப் பறக்கும் ஆற்றலும் பெற்றவை இவை.
இருட்டில் உற்றுக் கேட்கும் தன்மை வேட்டையாடத் தேவையானதொன்று. ஆந்தைகள் தமது தலையை மேலும் கீழுமாக ஆட்டி உற்றுக் கேட்க முனையும். இந்த தலை அசைவு மும்முனை அளக்கை (Triangulation) எனப்படும். இதன் மூலம் ஆந்தை, சத்தம் எங்கிருந்து வருகின்றது என்பதைத் துல்லியமாகத் தெரிந்து கொள்ளும்.
ஆந்தையின் காதுகள் அழகிற்கானவை மட்டுமல்லாமல் துல்லியச் சத்தங்களையும் சிறப்பாக கேட்குமாறு அமைந்துள்ளவை என்கிறார்கள் மினசோட்டா பல்கலைக்கழக விலங்கியல் ஆய்வாளர்கள்.
மொட்டை மூக்கு
பொதுவாகப் பறவையினங்கள் மணம், சுவையறியும் ஆற்றல் குன்றியவை. இதில் ஆந்தைகளும் விலக்கல்ல. மணம் உணராமலிருப்பது குறையாக இருந்தாலும், ஒரு வகையில் இதனை சாதகமாக மாற்றிக் கொள்கிறது ஆந்தை. துர்நாற்றம் மிக்க முடைவளிமா (Skunk) போன்ற உயிரினங்களைப் பிடித்து உண்ணும். எலிகள், முயல்கள் போன்ற கொறித்துண்ணிகளை (rodents) ஆந்தைகள் விரும்பி உண்ணும்.
பிடி நல்ல உற்றுப் பிடி
ஒலியை முதன்மைப்படுத்தி, மும்முனை அளவீட்டின் மூலமும், கண்களாலும் இரையின் இருப்பிடத்தை அறிந்து கொள்ளும் ஆந்தை அவற்றை அபகரிப்பது மற்றுமொரு வியப்பாகும்.
ஆந்தைகள் நான்காவது, குவிக்கும் எதிர்முனை (opposable thumb) விரல்கள் கொண்டது. இந்த விரலின் அசைவுகள் மனிதக் கட்டைவிரல் போல இறுக்கமாகப் பற்றிக் கொள்ள உதவுகின்றன. இதன் மூலம் எலி போன்ற இரைகளை பற்றிக்கொண்டு சட்டென பறக்கும் தன்மை கொண்டவை ஆந்தைகள்
கண்முடித்ததனமாக ஆந்தைகளை வெறுத்து ஒதுக்காமல், அவற்றின் ஆற்றல்கள் பற்றியறிந்து கொள்வது சாலவும் நன்று. வட அமெரிக்காவில் இலையுதிர், பனிக்காலங்களில் ஆந்தைகளை வெளியில் காணவும் முடியும்.
– யோகி