மினசோட்டாவினுள் கம்போடியா
உலகின் மிகப் பெரிய இந்து கோவில் கம்போடியாவில் இருக்கிறது என்பார்கள். வைணவக் கோவிலாகக் கட்டப்பட்ட அந்தக் கோவில், பிறகு பௌத்தக் கோவிலாக மாற்றப்பட்டது. சரி, இப்ப அமெரிக்காவிற்கு வரலாம். கம்போடியர்களின் மிகப் பெரிய பௌத்தக் கோவில் வட அமெரிக்காவில் எங்கிருக்கிறது தெரியுமா? மினசோட்டாவில் தான்.
செயிண்ட் பாலில் (St. Paul) இருந்து தெற்கே 30 மைல்கள் தொலைவில் ஹாம்டன் (Hampton) என்ற பகுதியில் சுமார் 40 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது. எழுபதுகளின் இறுதியில் கம்போடியாவில் இருந்து அகதிகளாக மினசோட்டாவிற்குள் தஞ்சமடைந்த கம்போடியர்கள், அடுத்தப் பத்தாண்டுகளில் கோவில் கட்டுமானத்திற்காக இந்தப் பரந்த இடத்தை வாங்கிப் போட்டனர்.
1975இல் கம்போடியாவைக் கைப்பிடித்த கெமரூஷ் அமைப்பு, கிராமியத்தை மறந்து மக்கள் நவீனத்தில் திளைப்பது தான் நாட்டின் பிரச்சினைகளுக்குக் காரணம் என்று நகர்ப்புறத்தில் இருந்த மக்களைக் கிராமப்புறத்திற்கு விரட்டியடித்தனர். கல்வியாளர்கள், மாணவர்கள், மருத்துவர்கள் என்று நவீனத்தின் பிரதிநிதிகளாகக் கருதப்பட்டவர்கள் அடித்துக்கொல்லப்பட்டனர். கம்யூனிசத்தின் எதிர்நிலையாகப் பௌத்த மதம் நம்பப்பட்டு, பௌத்தத் துறவிகளும், மதத் தலைவர்களும் கொல்லப்பட்டனர். இதில் தப்பித்துப் பல கம்போடிய மக்கள் பிற நாடுகளுக்குத் தஞ்சம் தேடி ஓடினர். அப்படித் தான் அமெரிக்காவின் பல மாகாணங்களுக்கு கம்போடிய மக்கள் அகதிகளாக வந்து சேர்ந்தனர். அதில் பெரும் பகுதி மக்கள் மினசோட்டாவிற்குக் குடிப்புகுந்தனர். அந்த மக்கள் கட்டிய, தொடர்ந்து கட்டிக்கொண்டிருக்கும் கோவில் தான் இது.
பௌத்த மதத்தில் பல பிரிவுகள் உள்ளன. அதில் தேரவாத பௌத்தம் என்பது பழமையானதாகும். இந்தப் பிரிவு தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் உருவானதாகும். பின்பு பிற நாடுகளுக்கும் பரவி, பௌத்தத்தின் பெரும்பான்மை பிரிவாக உருவெடுத்தது. மினசோட்டாவிலிருக்கும் இந்தப் பௌத்தக் கோவிலும் இப்பிரிவினரால் கட்டப்பட்டது தான்.
1988 இல் இந்த இடத்தை வாங்கிவிட்டாலும், அச்சமயம் சிறு கட்டடத்திலேயே வழிபாடு நடந்துவந்தது. 2007 இல் தான் இப்போதிருக்கும் பெரிய கோவிலுக்கான கட்டடம் கட்டப்பட்டது. இன்னமும் கட்டுமானங்கள் நடந்துக்கொண்டே இருக்கின்றன. 88இல் வழிபாடு நடந்த வீட்டில்தான், தற்சமயம் இங்கிருக்கும் துறவிகள் தங்கியிருக்கிறார்கள்.
வாட் முனிசோத்திரம் (Watt Munisotaram) என்று அவர்களால் அழைக்கப்படும் இந்தக் கோவிலின் முக்கியக் கட்டடம் இரண்டு தளங்கள் கொண்டதாகும். மேல் தளத்தில் பிரார்த்தனை மற்றும் தியானம் போன்றவை நடைபெறும். இந்த மேல் தளத்தின் ஒரு பக்கத்தில் இரு பெரிய வெண்கல புத்தர் சிலைகளை மத்தியிலும், அதனைச் சுற்றி பல்வேறு சிறிய அளவு சிலைகளையும் வைத்துள்ளனர். இந்தச் சிலைகளுக்கு முன்னால் தரையில் உட்கார்ந்து தியானம் செய்வதற்கு நீண்ட தளம் உள்ளது. இந்த அறையின் சுவர்கள் முழுதும் புத்தர் கதையின் காட்சிகளைப் படங்களாக வரைந்து வைத்துள்ளார்கள். சிறார்களுக்குப் புத்தர் கதையைச் சொல்லிக்கொடுக்க இந்தப் படங்களை எளிய வழியாக வைத்துள்ளார்கள்.
கீழ்த்தளத்தில் உணவு தயாரிப்பதற்கான இடமும், பரிமாறுவதற்கான இடமும் உள்ளன. பொதுவாக, விழா கொண்டாட்டங்கள், இசை நிகழ்ச்சிகள் போன்றவை இந்தக் கீழ்த்தளத்தில் நடைபெறுகின்றன. ஒரு சிறு அங்காடியும் இங்கு ஒரு பக்கத்தில் உள்ளது.
இவை தவிர, பெரிய கோவிலுக்கு வெளியே பல மண்டபங்களும், சிலைகளும் சுற்றிலும் அமைந்துள்ளன. உயரமான கோபுரம் கொண்ட ஒரு மண்டபத்தின் கட்டுமானம் தற்சமயம் நடந்துவருகிறது. இங்கு பௌத்த மதத்தின் 5000 ஆண்டுப் பழமையை நினைவுக்கொள்ளும் வகையில் 5000 சிலைகள் வைக்கப்படவுள்ளன. வெளிப்புறத்தில் இலங்கையிலிருந்து கொண்டு வரப்பட்ட மறைந்த பௌத்த மதத்துறவிகளின் படிமங்கள் வைக்கப்படவுள்ளன. நாங்கள் சென்றிருந்த சமயம், அங்கிருக்கும் பணியாளர் ஒருவர் இந்தக் கட்டிடத்தைத் திறந்து காட்டினார். உள்ளே மத்திய பகுதியில் புத்தர் சிலை படுத்த கோலத்தில் இருந்தது. சில இந்து கோவில்களில் விஷ்ணு படுத்தவாறு இருப்பாரே!! அது போல் இந்த புத்தர் சிலை இருந்தது. சுற்றிலும் வண்ண விளக்குகளால் இந்த இடம் அலங்கரிக்கப்பட்டு, மெல்லிய இசை ஒலித்துக்கொண்டிருந்தது.
இந்தியாவிலோ, அமெரிக்காவிலோ எங்கு இந்து கோவில்களுக்கு சென்றாலும், ‘இங்கு புகைப்படம் எடுக்கக்கூடாது’ என்று ஒரு பலகை வைத்திருப்பதைக் காணமுடியும். அதனால் எந்த வழிப்பாட்டுத் தலங்களுக்குச் சென்றாலும் கேமராவை வெளியே எடுத்துப் புகைப்படம் எடுக்க இயல்பிலேயே ஒரு தயக்கம் இருக்கும். இங்கு அது போல் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள எந்தக் கட்டுப்பாடும் இல்லாததால், பலரும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருப்பதைக் காண முடிந்தது. நாங்களும் புத்தருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டோம் என்றால் பாருங்களேன்!!
கம்போடியா முழுமையான பௌத்த மத நாடு என்பதால், அவர்களது கலாச்சாரம் பௌத்த மதத்துடன் நெருங்கிய உறவு கொண்டது. கம்போடிய மக்களின் கலாச்சார வெளிப்பாட்டின் மையமாக இக்கோவில் மினசோட்டாவில் விளங்குகிறது. அதனால் கம்போடியக் கலாச்சாரத்தை நேரில் கண்டிட மினசோட்டாவாசிகள் எட்டாயிரம் மைல்கள் தொலைவில் இருக்கும் கம்போடியா செல்ல வேண்டியதில்லை. பக்கத்தில் இருக்கும் இந்தக் கோவிலுக்கு ஒரு நடை சென்று வரலாம்.
சரவணகுமரன்
மேலும் தகவல்களுக்கு,
https://religionsmn.carleton.edu/exhibits/show/wattmunisotaram/introduction
https://minnesota.cbslocal.com/2018/08/26/buddhist-temple-hampton/
முகவரி – 2925 220th St E, Hampton, MN 55031