\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

எலுமிச்சை மெறாங் பை (Lemon Meringue Pie)

குளிர் காலம் ஆரம்பித்து விட்டது; சுற்றுப்புற சூழல் யாவும் மந்தமாகும் காலமிது. இச்சமயத்தில் நாக்குத் தித்திக்க மினசோட்டா மற்றும் அண்டை மாநிலங்களில் பனிக் காலப் பண்டிகை, கேளிக்கைகளில் பாங்காகப் பகிரப்படும் உணவுகளில் ஒன்று தான் எலுமிச்சை மெறாங் பை.

இது எலுமிச்சையின் புளிப்பு, சர்க்கரையின் இனிப்பு சேர்ந்த பாகினை மத்தியிலும், ஒரத்தில் நறுக்கான மாவினால் ஆன கோது (crust)  கொண்டும் அமைந்திருக்கும்.

தேவையானவை

பாகு செய்ய

1 கோப்பை சீனி

½ கோப்பை சோள மாவு (Corn Starch)

2 முட்டைகள்

4 முட்டை மஞ்சள் கருக்கள் (தனியே )

4 எலுமிச்சை வெளித் தோல் (Lemon zest) உரித்து எடுத்துக் கொள்ளவும்

1 கோப்பை எலுமிச்சம் சாறு

1 தேக்கரண்டி உப்பு

3 மேசைக்கரண்டி உப்பு அற்ற வெண்ணெய் (Unsalted butter)

1 ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பை கோது – (Pre made Pie crust).

 

மேலே குவியத்திற்கு

4 முட்டை வெண்கருக்கள்

¾ கோப்பை சீனி

½ தேக்கரண்டி உப்பு

¼ தேக்கரண்டி – தாட்டார்சாரம் – (Cream of tartar)

 

செய்முறை

பாகு செய்தல்

பை உள் வைக்கும் பாகு தயாரித்தல்.

ஒரு அகன்ற பாத்திரத்தில் சோள மா, சீனி சேர்த்து  நன்கு கலந்து கொள்ளவும். அடுத்து முட்டைகள், முட்டை மஞ்சள் கருக்களை மெது மெதுவாக அடித்துக் கலந்து முழுப் பாகும் நன்றாக சேருமாறு பார்த்துக் கொள்ளவும். பாத்திரத்தின் ஓரங்களில் மாவு ஒட்டிக்கொள்ளாதவாறு நன்கு கலக்கவும். இதில் உரித்த எலுமிச்சைத் தோலை சிறு தூவல்களாக்கி, எலுமிச்சை சாறு, உப்பு, 1 ½ கோப்பை தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

அடுத்து கடாயில், மிதமான சூட்டில் , இந்தக் கலவையைக் கொதிக்க வைத்துத் துழாவிக் கொள்ளவும். சுமார் 8-10 நிமிடங்கள் கொதித்த பின்னர், சற்று பாகாக இந்தக் கலவை இறுகும். அடுப்புச் சூட்டைக் குறைத்து தொடர்ந்து 2-3 நிமிடங்களுக்கு இடைவிடாது கலந்து இறக்கிக்கொள்ளவும்.  இறக்கிய பின்னரும் கலவை பாறை போல் இறுகிவிடாதிருக்க கலந்தவாறே இருக்கவும். லேசாக சூடு தணிந்த பின்பு வெண்ணெய் சேர்த்து கலந்துவிடவும். இது பாகிற்கு சுவை சேர்ப்பதுடன், மிருதுத் தன்மையும் உண்டாக்கிக்கொடுக்கும்.

நன்கு ஆறிய பாகினை பை கோதில் (pie crust) இட்டுக் கொள்ளவும். இக்கலவை பை கோதில் பரந்து படிய 2 மணி நேரம் குளிர்ச்சாதனப் பெட்டியில் வைக்கவும். 

(இப்படி 2, 3 நாட்கள் வரை கூட இக்கலவை  குளிர்ச்சாதனப் பெட்டியில் கெடாமலிருக்கும்).

பை மேலான குவியம் தயாரித்தல்

ஒரு சூடற்ற பாத்திரத்தில் முட்டை வெண்கருக்கள், சீனி, உப்பு மற்றும் தாட்டார் சாரம்  (cream of tartar) சேர்த்து மிருதுவாக அடித்துக் கலக்கவும் (whisk). 

வேறொரு அகன்ற பாத்திரத்தில் நீர் சேர்த்து அடுப்பிலேற்றி மிதமாக சூட்டில் வைத்துக்கொள்ளவும். இதில் மேற்சொன்ன  கலவை பாத்திரத்தை வைத்து, சீனி சேர்த்து நன்கு கரையும் வரை (சுமார் நான்கைந்து நிமிடங்கள்) கலந்து கொள்ளவும். இந்தக் கலவையை இயந்திர கலக்கி (electric mixer with whisker) கொண்டு அடித்தால் மூன்று மடங்காக  நுரைத்து வரும். 

இந்த வெண்நுரை கலவையை ஒரு  பிளாஸ்டிக் உறையுனுள் (plastic bag) ஊற்றி ஒரு மூலையில் கத்தரித்து துளை ஏற்படுத்தி வைத்துக் கொள்ளவும். குளிர்சாதனப்பெட்டியிலிருந்து பை கோதை வெளியே எடுத்து அதன் மேல்  வெண்நுரை கலவையால் விருப்பம் போல் அழகாக அலங்கரித்துப் பகிரலாம்.

  • யோகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad