\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

அங்கோர் வாட் – நூல் விமர்சனம்

ஒரு பயண நூலைப் படித்தால், பயணம் சென்ற அனுபவம் கிடைக்க வேண்டும். அது போன்ற பயணம் செல்ல நம்மைத் தூண்ட வேண்டும். புத்தகத்தில் பார்த்த இடத்தை, நேரில் பார்த்தாற்போன்ற ஒரு திருப்தி கிடைக்க வேண்டும். இது அனைத்தும் திரு. பொன் மகாலிங்கம் எழுதிய ‘அங்கோர் வாட்’ புத்தகம் படித்த போது கிடைத்தது.

முதலில் நூலாசிரியரைப் பற்றிச் சுருக்கமாகப் பார்த்துவிடலாம். திரு. பொன் மகாலிங்கம் அவர்கள் சிங்கப்பூரில் ஊடகத்துறையில் பணிபுரிகிறார். பயணங்களில், சிற்பக்கலையில் பெரிதும் ஆர்வமுடையவர் என்பது அவரது எழுத்தை வாசிக்கும் போது தெரிகிறது. அவருடைய நெடுநாள் கனவான அங்கோர் வாட்டில் தடம் பதித்து, தனது கனவு, நனவான தினங்களை எழுத்தில் வடித்து நம்முடன் பகிர்ந்துள்ளார் இப்புத்தகத்தில்.

இந்தப் புத்தகத்தில் அவர் சிறுவயதில் இருந்தே கம்போடியாவிலிருக்கும் அங்கோர் வாட் செல்ல ஆசைப்பட்டதில் தொடங்கி, சிங்கப்பூரில் இருந்து நண்பர்களுடன் கம்போடியா சென்று, அங்கு அவர் கண்டு, களித்து, உண்டு, உலவி வந்த அனைத்து நிகழ்வுகளையும் எழுதி வைத்துள்ளார். ஊருக்கு சென்று வந்த நண்பனுடன் உரையாடியது போல் இருக்கிறது, இப்புத்தகத்தை வாசிக்க.

இதுவரை அங்கோர் வாட் போகாதவர்கள், அறிந்திராதவர்கள் இப்புத்தகத்தைப் படித்தால், நிறையத் தகவல்களை அறிந்துக்கொள்ளலாம். ஏற்கனவே போனவர்கள் படித்தாலும், தெரிந்துக்கொள்ள விஷயங்கள் நிறைய இருக்கும் என்று உறுதியாக நம்பலாம். ஏனெனில், இதில் அங்கோர் வாட் கோவில் பற்றி மட்டும் எழுதவில்லை. அதன் கூடவே, அந்த நிலப்பரப்பு, வரலாறு, வாழ்வியல், நடுநடுவே தமிழ்நாட்டுக் கோவில்கள், சிற்பக் கலை எனப் பல தகவல்களைத் தன்னுடைய அனுபவங்களிடையே அள்ளித் தெளித்திருக்கிறார்.

“உலகின் ஆகப் பெரிய இந்துக் கோயில் இந்தியாவில் இல்லை” என்ற ஆச்சரியம் கொடுக்கும் வரியில் தொடங்கும் முதல் அத்தியாயத்தில் அவர் விமான டிக்கெட் எடுத்ததில் இருந்து புனோம் பென் விமான நிலையத்தில் வந்திறங்கி, அங்கிருந்து சியெம் ரீப்பிற்கு வேனில் சென்று, இரவு உணவு உண்டு உறங்குவது வரை எழுதி நம்மை ஒரு பயணத்திற்குத் தயாராக்கிவிடுகிறார்.

கையோடு ஒரு கேமரா எடுத்து சென்றிருப்பதால், அங்கு அவர் கண்டதை எழுத்தில் மட்டுமில்லாமல், புகைப்படங்களாகவும் நம்முடன் பகிர்ந்துள்ளார். அவர் எழுத்தில் வருணிப்பதை, புகைப்படத்தில் காணும் போது அருமையாக இருக்கிறது. என்ன ஒரு குறை என்றால், புகைப்படங்கள் கருப்பு வெள்ளையில் அச்சிடப்பட்டுள்ளதால் சற்றே தெளிவின்மை  உள்ளது. வண்ணத்தில் இருந்திருந்தால் மேலும் அருமையாக இருந்திருக்கும். இணையத்தில் அங்கோர் வாட் கோவிலின் 360 கோணப் புகைப்படங்கள், முப்பரிமாண மாதிரிகள், கழுகு பார்வை காணொளிகள், கிராபிக்ஸில் உருவாக்கப்பட்ட அன்றைய காலத்த்துக் கோவிலின் காணொளிகள் எனக் கொட்டிக்கிடக்கின்றன. இப்புத்தகத்தை வாசிக்கும் போது அவ்வப்போது அவற்றைப் பார்த்துக்கொண்டால், ஆசிரியர் இப்புத்தகத்தில் குறிப்பிடுவதை நம்மால் மேலும் உணர முடியும். ஆனால், புத்தகம் வாசிப்பனுவம் என்பது எல்லாவற்றையும் ஒதுக்கி அதனுள் முழ்குவது என்பதும் உண்மை தான்.

ஆசிரியர் கம்போடியாவில் பயணித்துக்கொண்டிருந்தாலும், நடு நடுவே கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம், மதுரை, இராஜபாளையம், இராமேஸ்வரம், தஞ்சாவூர், யாழ்பாணம் என்று நினைவுகளில் மூழ்கி, நம்மையும் அவருடன் இணைத்துக்கொள்கிறார். புதிதாக ஒரு இடத்திற்குச் செல்லும் போது, நாம் ஏற்கனவே புழங்கிய பல இடங்களை அவை நினைவுப்படுத்தும். இதை நாமும் அனுபவித்திருப்போம். அவ்வாறு ஆசிரியர் இதில் எழுதும்போது அதை நம்மால் உணர முடிகிறது.

புராணக் கதைகள், சிற்பக் கலை ஆகியவற்றில் ஆர்வமும், ஞானமும் இருப்பதால், ஆசிரியரால் பல மேலதிகத் தகவல்களைத் தர முடிகிறது. விஷ்ணுவுக்காகக் கட்டப்பட்ட அங்கோர் வாட், பின்பு பௌத்தர்களால் புத்தர் சிலைகளால் நிறைக்கப்பட்டுப் பௌத்த ஆலயமாக மாற்றப்பட்டது. இப்போது புத்தர் சிலை இருக்கும் இடத்தில் முன்பு என்ன இருந்திருக்கலாம் என்ற யூகங்கள்,  வரலாற்று மாற்றங்களைப் புரிந்துக்கொள்ள உதவுகிறது. 12 ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட இந்த ஆலயம் கடந்து வந்த பல நூற்றாண்டு காலப் பயணத்தில் பல தாக்குதல்களைப் பார்த்து வந்துள்ளது. இங்கிருக்கும் பல சிலைகள் தலையை இழந்து நிற்பது போல், கம்போடியா நாடும், நாட்டு மக்களும் பல இழப்புகளைக் கடந்து வந்துள்ளனர். இவற்றை எல்லாமே இப்புத்தகத்தில் ஆசிரியர் அடக்கியிருக்கிறார்.

ஆசைப்பட்ட தலத்தைக் காண செல்லும் பேரார்வம், ஆசை நிறைவேறிய மகிழ்ச்சி, பிரமாண்டமாக எழுந்து நிற்கும் கோவிலைக் காணும் போது எழும் மலைப்பு, காண நினைத்த இடங்களை எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாகப் பார்த்த களைப்பு, இன்னும் இருந்து காண வேண்டுமே என்ற ஏக்கம், சிதைந்த சிலைகள், பராமரிப்பின்றி இருக்கும் கலைப்படைப்புகள், பராமரிப்பு என்ற பெயரில் செய்யப்பட்டிருக்கும் மடத்தனங்கள் போன்றவற்றைக் காணும்பொழுது அடைந்த வேதனை என்று தனது அங்கோர் வாட் தினங்களின் உணர்வுகளை இப்புத்தகத்தில் அடைத்து வாசகர்களிடம் சேர்ப்பித்திருக்கிறார். இது போன்ற இடங்களைக் காணச்செல்லும் போது, இவர் போன்ற நபரைக் கையோடு அழைத்துச் சென்றால் பயணம் சிறக்கும். அது முடியாதபட்சத்தில் அவருடைய இப்புத்தகத்தையாவது ஒருமுறை வாசித்துவிட்டு செல்வது உசிதம்.

ஒரு எக்ஸ்க்ளூசிவ் தகவல் – ஆசிரியர் தற்போது தனது எகிப்துப் பயணத்தைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறார். அது வெளிவரும் போது, நாமும் அவர் எழுத்தின் மூலம் எகிப்தை ஒரு சுற்றுப் பார்க்கலாம்.

  • சரவணகுமரன்.

Tags: , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad