ஃப்ரோஸன் 2
2013 இல் ஃப்ரோஸன் முதல் பாகம் வெளிவந்த போது, பெண் குழந்தைகளின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றதோடு நிற்காமல், பாக்ஸ் ஆபிஸிலும் சாதனைகளைப் படைத்தது. ‘லெட் இட் கோ’ பாடல், அப்போதைய சிறுமிகளின் தேசிய கீதமாகவே மாறிவிட்டிருந்தது. அந்த ஆண்டின் வசூல் சாதனை படைத்த படங்களில் முதல் இடத்தைப் பிடித்தது. வீடுகளில் வாங்கப்படும் வீடியோ விற்பனையிலும் முதல் இடத்தைப் பிடித்தது. அனிமேஷன் படங்களின் வசூல் சாதனை பட்டியலில் இந்தாண்டு வரை அதுவே முன்னணியில் இருந்தது. சமீபத்தில் தான் லயன் கிங் வந்து முதல் இடத்தைப் பிடித்தது. இந்த வாரம் வெளியாகிய ஃப்ரோஸனின் இரண்டாம் பாகம், வசூலில் என்னவிதமான சாதனைகளைப் படைக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். இப்போது இப்படத்தின் கதையைப் பற்றி பார்க்கலாம்..
முதல் பாகத்தில் சகோதரி இளவரசிகளான எல்சா, ஆனா பற்றிய அறிமுகம் நமக்குக் கிடைத்திருந்தது . எல்சாவிடம் இருக்கும் பனியை உருவாக்கிடும் மந்திர சக்தி, எல்சாவையும் ஆனாவையும் பிரித்திட, எல்சாவை தேடி ஆனா செல்லும் பயணத்தில் க்ரிஸ்டாப், ஒலாப், ஸ்வென் ஆகிய கதாபாத்திரங்களைச் சந்திப்பாள். இவர்கள் அனைவரும் சேர்ந்து அவர்களை ஏமாற்றிய ஹான்ஸ் எனும் இளவரசனை முடிவில் வீழ்த்துவார்கள். எல்சாவின் மந்திர சக்தியைக் கட்டுபடுத்திடும் சக்தி அன்பிற்கே உண்டு என்று இறுதியில் கண்டடைவார்கள். முதல் பாகத்தில் நமக்கு அறிமுகமான இந்தக் கதாபாத்திரங்கள் எல்லாமே இதில் வருகிறார்கள் – வில்லன் ஹான்ஸ் தவிர. சொல்லப்போனால், இதில் வில்லன் இல்லை.
அரெண்டெல் ராஜ்ஜியத்தின் ராணியாக எல்சாவும், அவளுடைய சகோதரி ஆனா இளவரசியாகவும் இருக்கிறார்கள். எல்சாவுக்கு மட்டும் (இல்லை, நமக்கும் தான்!!) ஒரு மாய ஒலி அவ்வப்போது கேட்கிறது. அந்த ஒலியைத் தொடர்ந்து, அதன் ரகசியத்தைத் தேடி, எல்சா, ஆனா, க்ரிஸ்டாப், ஒலாப் மற்றும் ஸ்வென் ஆகியோர் ஒரு மாயக் காட்டிற்குள் செல்கிறார்கள். அங்கு அவர்கள் சந்திக்கும் கதாபாத்திரங்களும், சம்பவங்களும் பல புதிர்களுக்கு விடையளிக்கின்றன. எல்சா, ஆனாவின் தாத்தாவிற்கும் அந்தக் காட்டில் வசிக்கும் வீரர்களுக்கும் இடையேயான சம்பந்தம் என்ன, அக்காலத்தில் அவர்களுடைய தந்தையை ஆபத்திலிருந்து காப்பாற்றியது யார் போன்றவை தெரிய வருகிறது. கூடவே அந்தக் காட்டைக் காத்திடும் காற்று, நெருப்பு, நிலம் மற்றும் நீர் ஆகிய நான்கு சக்திகளுக்கும், எல்சாவுக்கும் என்ன தொடர்பு என்பதை இதில் அறிகிறாள். இறுதியில் ஒரு ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் எல்சாவை காப்பாற்றும் ஆனா, நாட்டின் ராணியாக முடிசூடிக்கொள்ள, காட்டைக் காத்திடும் நோக்கில் எல்சா காட்டில் தங்குகிறாள்.
ஆறு வருடங்களுக்குப் பிறகு எல்சா, ஆனாவை பார்க்கும் குழந்தைகளுக்கு எழும் மகிழ்ச்சியைத் திரையரங்கில் காண முடிகிறது. அதிலும் ஆனாவின் சேட்டைகளுக்கும், நகைச்சுவை பேச்சுக்கும் குழந்தைகள் சிரித்து மகிழ்கிறார்கள். இதில் புதிதாகச் சில கதாபாத்திரங்கள் வருகின்றன. நெருப்பு பற்ற வைக்கும் ப்ருனி பல்லி அனைவரையும் கவரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் முகபாவங்களுக்கு, க்யூட், க்யூட் என்று திரையரங்கில் சத்தம் எழும்புவதைக் கேட்க முடிகிறது. படத்தின் உருவாக்கம், டிஸ்னியின் கைவண்ணத்தில் வண்ணமயமாக, உயர்தரத்தில் உள்ளது. நாம் படம் பார்க்கும் ஒன்றரை மணி நேரத்திற்கு வேறொரு கனவு உலகத்திற்குச் சென்று வரும் அனுபவமானது அருமை என்றே சொல்ல வேண்டும். முதல் பாகம் போலவே, இதிலும் படம் முழுக்கத் தொடர்ந்து பாடல்கள் வருகின்றன. அதில் சில கவரும் வண்ணம் உள்ளன. முதல் பாகம் அளவுக்குப் பாடல்கள் இன்னமும் ஹிட் ஆகவில்லை. அதற்கு இன்னும் சில காலம் பொறுக்க வேண்டுமோ? படத்தின் இறுதி கட்டத்திற்கு முன்பு வரும் காட்சிகள் கொஞ்சம் சோர்வை ஏற்படுத்துவது படத்தின் பலவீனம்.
முதல் பாகம் 2013 தேங்க்ஸ் கிவிங் வாரயிறுதியில் வெளியாகி இருந்தது. இரண்டாம் பாகமான இது 2019 தேங்க்ஸ் கிவிங்கிற்கு ஒரு வாரம் முன்பே உலகமெங்கும் வெளியாகி உள்ளது. வரும் வாரம் முழுவதுமே விடுமுறை கொண்டாட்டம் தொடங்கிவிடும் நிலை இருக்க, டிஸ்னி வசூலை அள்ள இருப்பது நிச்சயம். ஏற்கனவே முதல் வாரத்திலேயே உலமெங்கும் 350 மில்லியன் டாலர்களைக் குவித்திருக்கிறது. தமிழ் டப்பிங்கில் எல்சாவுக்கு ஸ்ருதிஹாசனும், ஆனாவுக்கு டிடியும், ஒலாப்பிற்குச் சத்யனும் குரல் கொடுத்திருக்கிறார்கள். பாடலாசிரியர் விவேக் படத்திற்கு வசனமும், பாடலும் எழுதியிருக்கிறார்.
பொதுவாகவே, நம் வீட்டிலும், நாட்டிலும் பெண்களின் பங்கு பெருமளவு மாற்றம் கொண்டு உயர்ந்து வரும் போது, திரைப்படங்களில் பெண் கதாபாத்திரங்களின் பங்கு குறைத்து எழுதப்பட்டே வந்தன. இந்த நிலையில் தற்சமயம் பெண் கதாபாத்திரங்கள் வலிமையாக எழுதப்படுவது வரவேற்பிற்குரியது. அதுவும் குழந்தைகளைக் குறி வைத்து எடுக்கப்படும் இது போன்ற அனிமேஷன் திரைப்படங்களில் பெண் கதாபாத்திரங்களை முன்னிலைபடுத்திக் கதை அமைய பெறுவதும், அவை வெற்றி பெறுவதும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சிறு வயதிலேயே பாலினம் சார்ந்த வேறுபாடுகளை இது போன்ற படங்கள் களைவது நல்லதே!!
- சரவணகுமரன்.
Tags: Frozen 2