பனிப்பூக்கள் Bouquet – தேங்க்ஸ் கிவிங்
தேங்க்ஸ் கிவிங் தினத்தை முன்னிட்டுக் கடைகளில் விற்பனை எப்படிக் கொட்டப் போகிறதோ தெரியாது. வரும் வாரம் சாலைகளில் பனி கொட்டப் போவது நிச்சயம் என்கிறார்கள். அதனால் தேங்க்ஸ் கிவிங் நிமித்தம் ஏற்படும் பயணங்களைக் கவனமாக முடிவு செய்யவும் என்று மினசோட்டா போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது. அதனால், எச்சரிக்கையுடன் பயணிக்கவும். டீல் பிடிக்கிறேன் என்று வேகமாகச் சென்று சில்லறையைச் சிதற விட்டுவிடாதீர்கள்!!
—
ஒவ்வொரு ஆண்டும் தேங்க்ஸ் கிவிங் விற்பனையில் இணையம் மூலம் நடக்கும் பரிவர்த்தனை கூடிக்கொண்டே செல்கிறது. சென்ற வருடம் 24 பில்லியன் டாலர்கள் என்று இருந்த இணைய வழி வர்த்தகம் 4% கூடி, இவ்வருடம் 28 பில்லியன் டாலர்களைத் தொடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மொத்த விற்பனையில் இது 20 சதவிகிதம் ஆகும். கடைகளில் கிடைக்கும் தள்ளுபடி, இணையத்திலேயே கிடைத்தால், எதற்குக் கடைக்குச் சென்று தள்ளுமுள்ளுவைப் பார்க்க வேண்டும் என்று மக்கள் நினைக்கலாம். இதனால், இணைய விற்பனை இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பேயுள்ளது.
—
மக்களுக்கு மட்டுமல்ல, நிறுவனங்களுக்கும் ஒரு பக்கம் இணையம் வசதி என்றாலும், கடந்த காலங்களில் தேங்க்ஸ் கிவிங் தினத்தன்று நிறுவனங்கள் பாதிக்கப்படுவது, சர்வர் கிராஷ்களால் (Server Crash). ஒரே நாளில் டீல்களைப் பெற மொத்த ஜனமும் வந்து குவிவதால், ஒவ்வொரு வருடமும் சர்வர் கிராஷ் என்பது சகஜம் ஆகிவிடுகிறது. ஒரு பக்கம் வியாபாரத்திற்குப் பாதிப்பு என்றால், இன்னொரு பக்கம் நிறுவனத்தின் நற்பெயருக்குப் பாதிப்பாகிறது. இதனாலேயே, அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, தேங்க்ஸ் கிவிங் வியாழனன்று வியாபாரத்தைத் தொடங்குவதற்குப் பதில், இப்போதெல்லாம் ஒரு மாதத்திற்கு முன்பே Early Thanksgiving Deals என்ற பெயரில் வியாபாரத்தைப் பல நிறுவனங்கள் தொடங்கிவிடுகிறார்கள். இருந்தாலும், தேங்க்ஸ் கிவிங் வியாழன் ஷாப்பிங் என்பது ஒரு கிக் என்றாகிவிட்டது.
—
வரும் விடுமுறை காலத்தை எதிர்கொள்ள நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்குப் பலவித பயிற்சிகளைக் கொடுக்கிறார்கள். அந்த வகையில் மினசோட்டாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டார்கெட் நிறுவனம், சமீபத்தில் தங்கள் ஊழியர்களுக்குக் கொடுத்த ஒரு பயிற்சி, பலரும் புருவத்தை உயர்த்தச் செய்துள்ளது. அது என்னவென்றால், துப்பாக்கி சுடும் பயிற்சி. ஆம், கடையில் எதிர்பாராதவிதமாக ஏதேனும் அசம்பாவிதம் நேரிட்டால், அதை எதிர்கொள்ளும் திறம் வேண்டுமென இந்தப் பயிற்சி கொடுக்கப்படுகிறதாம். இது ஊழியர்களிடையே ஒருவித சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாம். பின்னே இருக்காதா? கடைக்குச் செல்லும் நமக்கே இச்செய்தி கிலி ஏற்படுத்துகிறதே!!
—
தேங்க்ஸ் கிவிங் விற்பனை கலாச்சாரம் அமெரிக்கா, கனடா தாண்டி, உலகின் பல பகுதிகளுக்கும் சென்றடைந்துவிட்டது. இந்தியாவிலிருந்து கொண்டு, அமெரிக்க இணையத்தளங்களில் ப்ளாக் ஃப்ரைடே விற்பனை என்ன நடக்கிறது என்று பார்த்து ஷாப்பிங் செய்யவும் ஒரு கூட்டம் உள்ளது. இது தவிர, இந்தியாவிலேயே ‘பிக் பில்லியன் டே’ என்று ஃப்ளிப்கார்ட்டும், ‘க்ரேட் இண்டியன் ஃபெஸ்டிவெல்’ என்று தீபாவளியை முன்னிட்டு அமேசானும் கல்லா கட்டுகிறார்கள். சீனாவிலோ, ‘சிங்கிள்ஸ் டே’ என்ற பெயரில் அலிபாபா நிறுவனம் நவம்பர் பதினொன்றாம் தேதியன்று கடந்த சில வருடங்களாக ஒரு பெரும் விற்பனையை நிகழ்த்தி வருகிறது. ஒவ்வொரு வருடமும் இவர்களது விற்பனை பல மடங்கு கூடிக்கொண்டே வருகிறது.
அந்தக் கணக்கில் சில சர்ச்சைகள் எழும்பினாலும், நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. ப்ளாக் ஃப்ரைடே, பிக் பில்லியன், சிங்கிள்ஸ் டே என்று இந்த வியாபார திருவிழாக்கள் எல்லாம் வருஷக் கடைசியில் வரிசையாக வந்து சேர்கிறது. வருஷம் முழுக்க மக்கள் சேர்த்து வைத்த பணத்தை, வருஷ கடைசியில் இந்த நிறுவனங்கள் ஏதேதோ பெயரில் வாரியெடுத்துக்கொண்டு செல்கிறார்கள், அதிக வருமானத்தையும் காட்டுகிறார்கள். அந்த வகையில் யாருக்கு யார் நன்றி சொல்கிறார்களோ இல்லையோ, நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நன்றி நவிலலை நினைவுப்படுத்திக்கொண்டே இருக்கும்.
- சரவணகுமரன்
Tags: 2019, Shopping, Thanksgiving