காதல் தோல்வி
காலையில் எழுந்ததும்.. கன்னியின் நினைவு..
காலம்பல கடந்தும் கருமையின் அதிர்வு
கால்கள் அனிச்சையாய்க் கழிவறை அடைந்ததும்
காத்து வைத்திருந்த, கசங்கிய புகைப்படம்
ரகசியமாய் எடுத்து ஒருமுறை ரசித்ததும்
ரதியவளின் சிரிப்பு கசங்கலின் மத்தியில்
ரணங்களைக் குணமாக்கும் வெண்ணிறப் பற்கள்
ரகமான வரிசையில் ரசனையுடன் நடமாடியது!
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும்
ஒருத்திக்காகவே உயிர் வாழ்ந்த உண்மை
ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு உணர்வும்
ஒருத்தியோடு இணைந்து உயர்ந்த பெருமை!
மிதிவண்டி ஏறி மின்னலெனப் பறப்பவன்
மிகுதியான காதலால் மிதமாய்ச் செல்வான்
மிகவும் பொலிவாய் மிளிரும் பெண்ணவள்
மிதந்தே வருவாளென்ற மிஞ்சிய தெளிவினால்!
தினமும் அவளின் பின்னர் மிதித்து
திருவளர்ச் செல்வியைப் பள்ளியில் விட்டு
திருவாளன் இவனோ தாமதமாய்ச் சேர்ந்து
திருதிருவென விழிப்பது கல்லூரி வழக்கமானது!
உலகு முழுவதும் உயிரோடு திரிவது
உன்னதப் பறவைகள் நாங்கள் மட்டுமேவென்று
உளரலாய் நினைத்தலைய, ஊர்முழுதும் இவர்களின்
உரசற் காதலை உருவகமாக்கி உலைமேலிட்டது!
தளிர்களென நினைத்தவர் தனக்கேற்ற சோடியென
தம்பட்டம் இட்டுவிட தந்தைகள் இருவருக்கும்
தராதரம் தெரியாத தறுதலை உறவென்றே
தவறாய் நினைத்திடும் தர்ம சங்கடம் !
வீடுகள் இரண்டும் விரிசல்கள் ஆயின!
வீரமாய்ப் பலரின் விரட்டுதல் தொடங்கின!
வீணர்கள் சிலரும் விமரிசனம் செய்தனர்!
வீச்சினால் இருவரும் விரைந்தே பிரிந்தனர்!!
கழிவறைக் காலையும் கையிருந்த புகைப்படமும்
கண்களின் நீரினைக் கரைபுரண்டு ஓட்டியது!
கவிதைகள் புனையும் கருவினைத் தந்ததுடன்
கன்னியின் நினைவுக்கு கருத்தான பயன்வேறுண்டோ?
– வெ. மதுசூதனன்
Tags: Love failure