\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

தன்னகங்காரம் Narcissism

தமிழர் பண்டைய இதிகாசங்களிலிருந்து இன்று வரை முருகன் கோவில் வழிபாடுகளில்   தன்னகங்காரம் (தன் அகங்காரம்) அழித்தல் என்பது முக்கியமானதொன்றாகும். ஆயினும் நடைமுறையில் நமது சமூகம், இதர அமெரிக்க, உலக சமூகங்கள் போன்று சுய நலத்தன்மை, தற்பெருமை போன்ற மாசுக்களால் மனநிலை மாறி நிற்பதைக் கடந்த முப்பது ஆண்டுகளில் அவதானிக்க முடிகிறது.

இன்றைய பல நவீன அன்றாட விடயங்களிற்கு விடையாக அமைவது   எமது சான்றோர் எமக்குத் தெளிவாக வகுத்து தந்த கலாச்சாரம் எனலாம்.   

குறிப்பாக முருகன் கோவிலில் நடைபெறும் சூரன் போர் விழாவின் பின்னணி மிகவும் அருமையானது. இந்தப் போர் அனுசரிப்பு தமிழ் கலாச்சாரத்தில்  விவரிக்கப்படும் மனிதன் மும்மலங்கள் பற்றியது. அவையாவன ஆணவம், கன்மம், மாயை ஆகும். இவற்றை அகற்ற ஞான ஒளி தேவை என்கிறது இதிகாசம்.

சூரன் போரில் இவை மூன்று பாத்திரங்களாகப் பிரதிபலிக்கப்படுகின்றன. தமிழ்க் கலாச்சாரத்தில் மாயைக்குத் தாரகாசுரனும், கன்மத்துக்குச் சிங்கமுகாசுரனும், ஆணவத்துக்கு சூரபத்மனும் உருவாக்கப்படுகின்றனர். இந்த மும்மலங்களை அருட்சக்தியாகிய ஞானவேல் எனும் முருகப்பெருமானின் திருக்கை வேல் அழித்துவிடுகிறது. இதன் பின் தான் ஆன்மா மோட்சத்தின் வாயிலை அணுகத் தயாராகுகிறது என்கிறது சான்றோர் வாய்மொழி.

இது தமிழ் இதிகாசம் தான் எனினும், இதில் மனோத்துவ உட்பொருளும் உண்டு. இன்றைய காலத்தில் பெருமளவில் காணப்படும் தன்னகங்காரத் தன்மை (Narcissism) இந்த மும்மலங்களும் ஒன்று கூடிக் காணப்படும் ஒரு விடயமேயாகும். இதுவே எமது கட்டுரையின் உள்ளடக்கமாகும்.

தன்னகங்காரம் (Narcissism) என்றால் என்ன?

தன்னகங்காரம் என்பது  தனது + அகங்காரம் எனும் இரு சொற்கள் சேர்ந்து உருவாக்கப்பட்டது. கிரேக்க திரிபில் இருந்து வந்த நாசிசம் (Narcissism) என்ற ஆங்கிலச் சொல் ஓரளவு தன்னகங்காரத்துக்கு பொருந்திவரும். இந்தத் தன்மையைச் சமூக மேம்பாட்டிற்காகச் சற்று ஊடுறுத்து அறிந்து கொள்வோம். குறிப்பு – Narcissism என்ற சொல்  சில சமயங்களில் தற்சிறப்பு என்ற நேரடி அகராதி மொழிபெயர்ப்புக்கும் உள்ளாகியுள்ளது, ஆயினும் அது முற்று முழுதாக இந்தத் தன்மையை விளக்கவில்லை எனலாம்.

ஒருவர் தனது உண்மையான, இயல்பான நிலைப்பாட்டிற்கு மாறாக, பொய்யாக ஊதிப்பெரிதாக்கி  தற்பெருமை பேசுவது தன்னகங்காரமாகும் (self-boasting / gradiosing). அதாவது தம்மைத் தாமே மகத்துவமாக எண்ணிக் கொள்ளுதல் எனலாம்.  

தனது தகுதிக்கு மீறிய ஆற்றல், கவர்ச்சி, புத்திசாலித்தனம், தனித்துவம், கூடுதல் உரிமை தன்னிடம் இருப்பதாக எண்ணிக்கொண்டு  மற்றவர்களிடம் ஆளுமை செலுத்துவது தன்னகங்காரத்தின் வெளிப்பாடுதான்.  

தன்னகங்காரத்தை ஒருவர் குணாதிசயமாகப் பார்க்கும் போது சில தனித்துவமான அம்சங்களை வெளிப்படையாகக் காணலாம். அவையாவன இப்பேர்பட்டவர்கள் பெருமளவு புறவயத்தன்மை (extrovert) கொண்டவர்கள்; செயலாண்மை மிக்கவர்களாகக் காட்டிக்கொள்வர்; அதே சமயம் இவர்கள் மற்றவருடன் ஒத்துப்போவதிலும், குழுவாகப் பணியாற்றுவதிலும் நாட்டமில்லாதவர்களாக இருப்பர்.

இதை நாம் சமூகவியல் மனோத்தத்துவ அடிப்படையில் பார்க்கும் போது, இவர்களது குணநலன் வெளிப்படையாகத் தெரிய வரும். தன்னகங்காரக் குணாதியம் உள்ளோர் பிரத்தியேகமாகத் தமது சமூகத் தொடர்புகளை உபயோகிப்பர். தொடர்புகளைப் பாவித்து தமக்கென்ற சுய மரியாதையைப் பெருக்கிக் கொள்வர்; தமது மனத்துக்குள்  நேர்மறை எண்ணங்களை (positive approach) அல்லது தன்னகங்கார வைராக்கியத்தை (Narcissistic confidence) உருவாக்கிக் கொள்ள முனைவர்.

சமூகத்தொடர்புகள்

தன்னகங்காரத் தன்மை கொண்டோர் தமது சமூகத் தொடர்புகளில் ஒருவர்க்கு ஒருவரிடையே ஏற்படும் நெருக்கத்தை அல்லது அத்தொடர்பு நிலைக்கத் தேவையான முயற்சிகளை  பெரிதாகக் கருதுவதில்லை. தம்மை அறிமுகப்படுத்திக் கொள்வதில் துரிதமானவர்கள். இத்தொடர்புகள் மூலம் குறுகிய காலத்தில் தாம் பிரபல்யம் அடைதல், வெற்றி அடைதல், எதையும் பெற்றுக் கொள்ளும் ஆற்றல் அடைதல் ஆகியவைதான் இவர்களது முக்கிய நோக்கமாக இருக்கும்.

இவர்களைப் பொறுத்தவரையில் சமூகத் தொடர்புகள்  தம்மை உயர்த்திக்கொள்ளும் குறுக்கு வழி, அவ்வளவுதான். எனவே நீண்ட காலத் தொடர்புகள் பேணுதல், நீண்ட கால நட்பின் பயன் அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை.

இந்தக் குணாதிசயத்தின் தன்மை பல அறிமுகங்களை உருவாக்கிக் கொள்ளுதல்;  அடுத்து தம்மை அந்தத் தொடர்புகளின் நடுவில், தலைமைத்துவம் மிக்கவராக காட்டிக் கொள்ளுதல்; எப்போதும் உற்சாகமானவராக, சமூகத்தில் திடகாத்திரமான ஆளுமை உள்ளவராக,  இனிமையானவராக, பொழதுபோக்குகளை விரும்புவராக, தாம் நினைத்தால் யாரையும் வகீகரிக்கக் கூடியவராகக் காட்டிக்கொள்ளுதல் போன்றவை இவர்களது அடிப்படை மனோதத்துவ சுபாவங்களாகும். 

நவீன கலாச்சாரம் சமூக வலயங்களின் உந்துதல்கள்

பல மேலை நாட்டு ஆய்வாளர்கள், சென்ற 3 தசாப்தங்களில் தன்னகங்கார எழுச்சிதனைக் கவலைக்குரிய விடயமாகப் பகிர்ந்துள்ளனர். புள்ளி விபரவியல் படி, அமெரிக்கச் சமூக வலயங்களில்  உடல் பருமன் பற்றி அதிகம் அலசப்பட்ட போதும், அதைவிட அதிகரித்துள்ள, தகுதியற்ற தன்னகங்கார நிலை பற்றி சம்பாஷிக்கப்படவில்லை என்பதும் அடிப்படை உண்மை. இது அமெரிக்காவில் சகல கலாச்சாரங்களிலும் வரையறையற்ற தொற்று நோயாகப் பரவியுள்ளது. தன்னகங்கார விரோதத்தன்மை தற்போது அமெரிக்க மட்டுமல்லாது, சமூக வலயங்கள் மற்றும் பகிரிகள் மூலம் உலகெங்கும் பரவியவாறுள்ளது.

இந்த விஷத் தீயை விசிறி பெரிதாக வளர்ப்பது மின் வலயங்கள் மற்றும்  சமூக உடகங்கள். மக்களின் தன்னகங்காரத் தன்மையை வளர்க்கும் வகையில் மென்மேலும் சமூக தொடர்புகளை உருவாக்கி அந்தத் தொடர்புகளைக் கைப்பற்றி, விளம்பரங்கள் விற்று காசு பார்த்து வருகின்றன மின், சமூக வலயங்கள்.

மும்மலங்கள் என்று எமது சான்றோர் உணர்த்திய ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றிலிருந்து, பகுத்தறிவு ஞானம் கொண்டு விலகி, பாங்குடன்  ஒருவரை ஒருவர் மதிக்கும், நேசிக்கும் சமுதாயத்தைக் கட்டியெழப்ப உதவுவோம்.

  • ஊர்க் குருவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad