\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

தேசியக் குடியுரிமைச் சட்டத்திருத்தங்கள் 2019

சமீபத்தில் இந்தியக் குடியுரிமைச் சட்டங்களில் கொண்டுவரப்பட்ட மாற்றம் இந்திய தேசம் முழுதும் ஒரு பதற்ற நிலையை உருவாக்கியுள்ளது. பல மாநிலங்களில், குறிப்பாக வட கிழக்கு மாநிலங்களில், இந்தச் சட்ட மாற்றம் பெரும் போராட்டங்களை உருவாக்கி, உயிர் மற்றும் பொருட் சேதங்களை ஏற்படுத்திவிட்டன. சில மாநிலங்களில் மக்களின் அடிப்படைத் தேவை, இணைய, தொலைபேசிக் குறுஞ்செய்திச் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டத் திருத்தத்துக்கான முதன்மை நோக்கம் இந்தியாவிலிருந்து பிரிந்து சென்ற ஆஃப்கானிஸ்தான் (1926 இல் பிரிந்தது), பாகிஸ்தான் (1947 இல் பிரிந்தது), பங்களாதேஷ் (1971இல் பாகிஸ்தானிலிருந்து தனிநாடாகப் பிரிந்தது) ஆகிய நாடுகளிலிருந்து குறிப்பிட்ட காலங்களில், இந்தியாவுக்குள் தஞ்சம் தேடி வந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் வரையறைகளை முறைப்படுத்துதல் என்பதே.

இந்த மாற்றங்களை அறிய முற்படும் முன், ஏற்கனவே உள்ள சட்டங்களை அறிந்துகொள்வது அவசியமாகிறது.

இந்தியக் குடியுரிமை சட்டம் 1955      

1947 ஆம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்ட பின்பு இரு நாடுகளிலிருந்து மக்கள் இடம் பெயர்ந்தனர். இதனைத் தொடர்ந்தும் நடைபெற்று வந்த குடிமாற்றங்களை நெறிப்படுத்த   1955 ஆம் ஆண்டு இந்தியக் குடியேற்றச் சட்டம் இயற்றப்பட்டது. மூன்று பெரும் பிரிவுகளில் இந்தச் சட்ட வரைவுகள் அமைந்தன :

  1. பிறப்பின் அடிப்படையில்
    • ஜனவரி 26, 1950 தொடங்கி ஜூலை 1, 1987 வரை இந்தியாவில் பிறந்தவர்கள் இந்தியர்.
    • ஜூலை 2, 1987 தொடங்கி 2003 ஆம் ஆண்டு திருத்தங்கள் வரை இந்தியாவில், பிறந்த  ஒருவர், பெற்றோர் இருவரில் ஏதேனும் ஒருவர் இந்தியப் பிரஜையாக இருக்கும் பட்சத்தில் இந்தியக் குடியுரிமை பெறுவார்.
    • 2003 ஆம் ஆண்டு திருத்தங்களுக்குப் பிறகு இந்தியாவில், பிறந்த  ஒருவர், பெற்றோர் இருவருமே இந்திய பிரஜையாக இருக்கும் பட்சத்தில் இந்தியக் குடியுரிமை பெறுவார்.
  1. வம்சாவளி அடிப்படையில்

இந்தியா அல்லாத வெளிநாட்டில் பிறக்கும் ஒருவர், பின்வரும் ஏதேனும் ஒரு பிரிவின் கீழ் வருவாரே எனில், பிறந்த ஓராண்டுக்குள் அந்நாட்டு இந்திய தூதரகத்தில் பதிவு செய்தால் அவர் இந்தியக் குடியுரிமை பெறுவார்.

    • ஜனவரி 26, 1950 தொடங்கி டிசம்பர் 10 1992 வரை இந்தியா அல்லாத வெளிநாட்டில் பிறந்த ஒருவர் அவரது தந்தை இந்தியராக இருக்க வேண்டும்.
    • டிசம்பர் 10 1992க்குப் பிறகு இந்தியா அல்லாத வெளிநாட்டில் பிறந்த ஒருவர் அவரது பெற்றோரில் எவரேனும் ஒருவர் இந்தியராக இருக்க வேண்டும்.  
    • இதைத் தவிர அரசாங்கப் பணி நிமித்தமாக வெளிநாட்டில் பணியாற்றி வரும் பெற்றோரில் ஏதேனும் ஒருவர் இந்தியராக இருக்க வேண்டும்.
  1.  பதிவு முறைப்படி

கீழ்க்கண்ட விதிகள் படி வேற்று நாட்டில் பிறந்தவர்கள் இந்தியக் குடியுரிமை கோரி விண்ணப்பித்துப் பதிவு செய்து கொள்ளலாம்.

    • இந்திய வம்சாவளியினர் (இந்தியப் பெற்றோருக்குப் பிறந்த ஒருவர்) வெளிநாட்டில் பிறந்து, ஓராண்டில் பதிவு செய்யாது, ஏழு ஆண்டுகள் இந்தியாவில் தங்கியிருக்கும் ஒருவர் இந்தியக் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம்.,
    • இந்திய வம்சாவளி அல்லாத ஒருவர் இந்தியப் பிரஜையைத் திருமணம் புரிந்து, எழு ஆண்டுகள் இந்தியாவில் வசிக்கும் பட்சத்தில் அவர் இந்தியக் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம்.
    • இந்தியப் பெற்றோருக்குப் பிறந்த 18 வயது நிரம்பாத சிறுவர் விண்ணப்பிக்கலாம்.  
  1. இயல்புரிமை (Naturalization) முறைப்படி

மேற்சொன்ன மூன்று பிரிவுகளில் இல்லாது முறையான நுழைவிசையுடன் (Visa) இந்தியாவுக்கு வரும் ஒருவர்,  ஏழு ஆண்டுகள் கழித்து குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு குடியுரிமை வழங்கும் முடிவு முழுக்க முழுக்க அரசாங்கத் துறைகளைச் சார்ந்தது.

  1. இவை மட்டுமல்லாமல் முறையான ஆவணங்கள், நுழைவிசைவு இல்லாது பிற நாடுகளிலிருந்து அபயம் தேடி இந்தியாவுக்குள் அகதிகளாக நுழைந்தவர்கள் ஏராளம். இவர்கள் தங்களது நாடுகளின் சிறுபான்மையினர்; தங்களது நாடுகளில், இன, மதத் துன்புறுத்தல்,  நெருக்கடிகளுக்கு அஞ்சி, பாதுகாப்பான வாழ்க்கை தேடி இந்தியாவுக்குள் வந்தவர்கள். இவர்கள், இந்தியாவில் 12 ஆண்டுகள், அதில் குறைந்தபட்சம் தொடர்ச்சியாக 11 மாதங்கள், வசித்திருந்து விண்ணப்பிக்கும் பட்சத்தில், சட்ட ஒழுங்குப் பரிசீலனைகளுக்குப் பிறகு அரசாங்கம் அவர்களுக்குக் குடியுரிமை வழங்கலாம்.    

தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் மேற்சொன்ன ஐந்தாம் பிரிவுக்குத் தொடர்புடையவை.

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா (Citizenship Amendment Bill- CAB) 2019.

குடியுரிமைச் சட்டத்திருத்தம் 2019 படி, டிசம்பர் 2014 ஆம் ஆண்டு வரை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து மதத் துன்புறுத்தல் காரணமாக அகதிகளாக வந்தோரில் இந்து, கிறித்துவ, பௌத்த, ஜைன, பார்சி, சீக்கிய மதத்தைச் சார்ந்தோருக்கு, அவர்கள் அகதிகளாக நுழைந்து ஆறு வருடங்களைக் கடந்துவிட்டிருந்தால் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம்.

இதற்கு முன்பிருந்த சட்டம் அகதிகளாக நுழைந்தவர், பன்னிரண்டு ஆண்டுகள், அதில்  தொடர்ச்சியாகக் குறைந்தபட்சம் பதினோரு மாதங்கள் இந்தியாவில் வாழ்ந்திருந்தால் அவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படலாம் என்றது. இதில் மதங்களைப் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. இந்திய அரசியல் சாசனப்படி, மதத்தின் அடிப்படையில் வகைப்படுத்துதலும், பாகுபாடு காண்பதும் சட்டவிரோதமானவை.

ஆனால் தற்போதைய அரசு, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ். இந்த மூன்று நாடுகளிலும் அரசு மதமாக இருப்பது இஸ்லாம். மேலே சொல்லப்பட்ட ஆறு மதத்தவரும் இந்நாடுகளில் சிறுபான்மையினர். சிறுபான்மையினரான இந்தக் குறிப்பிட்ட மதத்தவர்க்கு மட்டுமே  முன்னுரிமையில் குடியுரிமை வழங்கவேண்டிய தேவையுள்ளது; இந்நாடுகளின் இஸ்லாமியரும், பிற நாட்டவரும் வழக்கம்போல் பதினோரு ஆண்டுகள் காத்திருந்து குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என்கிறது.

எதிர்க்கட்சியினர் மதத்தை வைத்துக் குடியுரிமை வழங்கும் முறையைக் கடுமையாக எதிர்க்கின்றனர். ஏற்கனவே இங்கிருக்கும் இஸ்லாமிய மக்களுக்கு எந்தப் பாதிப்புமிருக்காது என்று ஆளும் அரசு சொன்னாலும், நாடு முழுதும் அமல்படுத்தப்படவுள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு (National Registry of Citizens) இந்திய மக்களின் குடியுரிமையைக் கேள்விக்குரியதாக்கிவிடும் என்கிறார்கள் இவர்கள்.

தேசிய குடிமக்கள் பதிவேடு.

அஸ்ஸாமை மையமாகக் கொண்டுதான் இந்தப் பதிவேடு அவசியமாக்கப்பட்டது.  1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானை விட்டு, வங்கதேசம் பிரிந்தபோது, இந்து, இஸ்லாம் இதர மதத்தவர் உட்பட 2 கோடி  மக்கள் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்கள். இவர்களில் பெரும்பாலோனோர் அஸ்ஸாம், மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில்  குடியேற்றப்பட்டார்கள். இதற்குப் பின்னர் வங்கதேசத்தவர் மட்டுமின்றி மேற்கு வங்க மக்கள் சிலரும் அஸ்ஸாமில் குடிபுகுந்தனர். இது பூர்வீக அஸ்ஸாம் மாநில மக்களின் வாழ்க்கை வளத்தையும், வேலை வாய்ப்பையும்  பெரிதும் பாதித்தது. இதனை எதிர்த்து அஸ்ஸாமின் மாணவர் அமைப்பினர் பலரும் போராட்டங்களைத் துவங்கினர். 1985 ஆம் ஆண்டு வரை பெருமளவில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த அஸ்ஸாம் மாநிலத்தவரின் இந்தப் போராட்டம், அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி ‘அனைத்து அஸ்ஸாம் மாணவர்’ அமைப்புடன் ஏற்படுத்திய அஸ்ஸாம் ஒப்பந்தத்திற்குப் பின்னர் சற்று அடங்கியது. இருப்பினும் அவ்வப்போது சில அமைப்புகள் எழுப்பிய போராட்டங்களைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அஸ்ஸாமில் குடியேறியுள்ள வெளிநாட்டவரைப் பற்றிய கணக்கெடுப்பு நடத்தி,  அவர்களை அஸ்ஸாமை விட்டு வெளியேற்ற தேசியக் குடிமக்கள் பதிவேடு ஒன்றை உருவாக்கவேண்டுமென நீதி மன்றம் அரசாங்கத்துக்கு உத்தரவிட்டது. இதன்படி அஸ்ஸாம் அரசாங்கம் தங்களிடமிருந்த தகவல் ஆவணங்கள்படி எவரெவர் இந்தியர் என்று பட்டியலிட்டது.

சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்ட இந்தப் பதிவேட்டில் நாற்பதாண்டுகளுக்கு முன்னர் அஸ்ஸாமில் குடியேறியோர் மற்றும் அங்கு பிறந்து வளர்ந்த வாழ்ந்த  சுமார் பத்தொன்பது லட்ச மக்கள் விடுபட்டுபோயினர். அதாவது இவர்கள் இந்தியர் அல்லாத வெளிநாட்டவர் என்று அடையாளப்படுத்தப்பட்டனர். இவர்களில் இந்திய நாட்டுக்காக ராணுவத்தில் சேவையாற்றி உயர் விருதுகள் வாங்கியோர், அறிவியல், மருத்துவ ஆராய்ச்சிகளில் பங்கெடுத்து இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்தவர்களும் அடக்கம். இவர்கள் அனைவரும் தற்போது தடுப்புக் காவல் முகாம் (Detention Center) களில் வைக்கப்பட்டுள்ளனர். இப்பட்டியலில் விடுபட்டவர்கள் கீழுள்ள அடிப்படை  ஆவணங்களில் ஒன்றைக் கொடுத்து தங்களை, இந்தியர் என்று நிரூபித்துக்கொள்ளலாம்.  

பதிவேட்டுக்கான அடிப்படை விதிகள்  

மார்ச் 24, 1971 க்கு முன்னர் அவர்களது மூதாதையர் இந்தியாவில் இருந்ததனர் என்பதற்கான சான்றாக பின்வருவனற்றுள் எதையேனும் ஒன்றைக் கொடுக்க வேண்டும்.     

  1. வாக்காளர் அடையாள அட்டை
  2. பள்ளிச் சான்றிதழ்கள்
  3. லைப் இன்சுரன்ஸ் ஆப் இந்தியாவின் ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்கள்
  4. வங்கிக் கணக்குப் புத்தகங்கள்
  5. நிலப் பத்திரங்கள்

 

இதனுடன் தாங்கள், மேல குறிப்பிட்ட ஆவணங்களில் உள்ளோர்க்குப் பிறந்தவர் என்பதற்கான பிறப்புச் சான்றிதழையும் கொடுத்தால் மட்டுமே அவர்கள் இந்தியக் குடிமக்களாக கருதப்படுவர். 1971க்கு முன்னர் இந்தியாவில் நிலவிய ஆவணக் கலாச்சாரம் கேள்விக்குரியது. மேலே சொல்லப்பட்ட வரையறைக்குள் பலர் இருந்தாலும் அவர்களிடம் அதற்கான ஆவன ஆதாரமில்லாத காரணத்தால் திடிரென ஒரு நாள் காலை அவர்கள் தடுப்புக் காவல் முகாமுக்கு அனுப்பப்பட்டுவிட்டனர்.

அஸ்ஸாம் ஒப்பந்தத்தில் மாற்றம்

1985 ராஜீவ் காந்தி காலத்தில் போடப்பட்ட அஸ்ஸாம் ஒப்பந்தத்தின் படி 1971 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25  தேதியில் அஸ்ஸாமில் இருந்தவர்கள் அனைவரும் இந்தியக் குடிமக்கள்; அந்தக் குறிப்பிட்டத் தேதிக்குப் பின்னர் அஸ்ஸாமுக்குள் நுழைந்தவர்கள் இந்தியர் அல்ல என்பது தான் ஒப்பந்தம். ஆனால் அசாம் மாநில பாரதிய ஜனதாக் கட்சியினர் இந்தக் கணக்கெடுப்பின் படி ஏகப்பட்ட இந்துக்கள் பாதிக்கப்படுவர் என்ற கவலையை எழுப்பியதால் தற்போதைய அரசு இந்த இறுதிநாளை மார்ச் 25, 1991 என மாற்றியது. கூடவே முன்னர் சொன்ன  ஆறு மதத்தவர் தவிர மற்றவர் இந்தியக் குடியுரிமைக்குத் தகுதியற்றவர் என்ற துணை விதியையும் சேர்த்தது புதியக் கிளர்ச்சிகளைத் துவக்கியுள்ளது.

அஸ்ஸாம் மாநில மக்கள் 1985 ஒப்பந்தம், மற்றும் 2013 கணக்கெடுப்பின் படி, இந்து, இஸ்லாம் மத வேற்றுமையின்றி அனைவரையும் வெளியேற்ற வேண்டுமென்று போராடுகிறது. ஆனால் இவர்கள் அனைவரையும் அப்படியே வெளியேற்றினால் கணிசமான இந்து மக்கள் வாக்குகளை இழந்து விடுவோமெனத் தற்போதைய அரசாங்கம் அஞ்சுகிறது.

நாடு முழுவதற்கும் குடிமக்கள் பதிவேடு

உச்ச நீதிமன்றம் அஸ்ஸாமுக்காக மட்டும் வலியுறுத்திய இந்தக் கணக்கெடுப்பு மற்றும் பதிவேட்டை நாடு முழுவதிலும் செயல்படுத்த மத்திய அரசாங்கம் முனைகிறது. இந்தப் பதிவேட்டை நாடு முழுவதற்கும் அமல்படுத்துவதன் மூலம் தங்களது குடியுரிமைச் சட்டத் திருத்தங்களையும் சேர்த்து அமல்படுத்திவிடுவது என்பது அரசாங்கத்தின் எண்ணம்.

இங்கு தான் பொது மக்கள், மாணவரிடையே போராட்டங்கள் வெடிக்கத் துவங்கின. 1985 ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி அனைவரையும் வெளியேற்ற வேண்டுமென அஸாம் மாநிலத்து மாணவர் அமைப்புகளும், மூன்று குறிப்பிட்ட நாடுகள், குறிப்பிட்ட மதத்தினர் என்ற பாரபட்சம் ஏன் என்று மற்ற மாநிலத்தவரும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.  

அஸ்ஸாமுக்காக மட்டுமே உச்ச நீதிமன்றம் வகுத்த தீர்வை நாடு முழுவதிலும் செயல்படுத்துவது ஏன், அதிலும் மனிதாபிமானம் மறந்து மத அபிமானத்துடன் சட்டங்களைத் திருத்துவது மதச்சார்பற்ற இந்திய இறையாண்மையையும், சட்டத்தையும் மீறுவதாகும் என்பது எதிர்க்கட்சிகளின் கண்டனம்.

கூடுதலாக காஷ்மீர் மாநிலத்துக்கு இதுவரை இருந்துவந்த சிறப்பு அந்தஸ்து (இந்தியச் சட்டமைப்பு 370) போன்றே மேலும் சில மாநிலங்கள் சிறப்பு அந்தஸ்து பெற்றவை (இந்தியச் சட்டமைப்பு 371). இதில் மிசோராம், நாகாலாந்து, மணிப்பூர், சிக்கிம், கோவா போன்ற மாநிலங்களை இந்த குடிமக்கள் சட்டத் திருத்தம் கட்டுப்படுத்தாது. அப்படியென்றால் இங்கிருக்கும் மக்கள் இந்தியரா, வெளிநாட்டவரா என்று நிருபிக்கத் தேவையில்லை. இதே 371 பிரிவின் படி சிறப்பு அந்தஸ்து பெற்ற அஸ்ஸாம், திரிபுரா மாநிலங்களில் சில மாவட்டங்கள் மட்டுமே  இந்த விலக்கை பெற்றுள்ளதும், மற்றவர் தாங்கள் இந்தியர் என்று நிருபித்தாகவேண்டி கட்டாயப்படுத்தப்படுவதும் குழப்பங்களின் உச்சம். அதாவது நடப்பு ஆளும் கட்சியினர் தங்களுக்குச் சாதகமான மாவட்ட வாக்குகளைத் தக்கவைத்து கொள்ள இந்த சதிகளைச் செய்வதாக எதிர்க்கட்சியினர் கொந்தளிக்கிறார்கள்.

2021 மக்கட்தொகைக் கணக்கெடுப்புக்கு முன்னர் இந்த தேசியக் குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு முயல்கிறது. பஞ்சாப், கேரளா, சட்டீஸ்கர், மேற்கு வங்கம் போன்று எதிர்க்கட்சியினர் ஆளும் மாநிலத் தலைவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். என்றாலும் இது மத்திய அரசு, தேசிய அளவில் செயல்படுத்தும் குடியுரிமைத் திட்டம் என்பதால் சட்டப்படி அனைத்து மாநிலங்களும் (மேற்சொன்ன சிறப்பு அந்தஸ்துப் பெற்ற மாநிலங்கள் தவிர)  பின்பற்றியாக வேண்டும். எனவே இந்த மாநிலங்கள் அனைத்தும் அஸ்ஸாமைப் போன்று தங்களிடமுள்ள தகவலை வைத்து இந்தியக் குடிமக்கள் பட்டியலைத் தயாரிக்க வேண்டும். இதில் தங்கள் பெயர் விடுபட்டிருக்கும் பட்சத்தில் என்னென்ன ஆவணங்களைக் கொடுக்க வேண்டும், அந்த ஆவணங்கள் எந்த தேதிக்கு முந்தையதாக இருக்க வேண்டுமென்ற திட்டங்கள், குறிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இத்தகைய ஆவணங்கள் இல்லாதபட்சத்தில் கோடிக்கணக்கான மக்களின் குடியுரிமை கேள்விக்குரியதாகிவிடும்.

தமிழகம் உள்ளிட்ட தென்னக மாநிலங்களில் நாற்பது வருடங்களுக்கு முன்னர் அகதிகளாக வந்த இலங்கையினரைப் பற்றிய குறிப்புகள் இந்தச் சட்டத் திருத்தத்தில் இடம்பெறாதது தமிழர்க்கு இழைக்கப்பட்ட துரோகமாகக்ட்கருதப்படுகிறது. ஏற்கனவே பல ஆண்டுகளாக வேலை, தொழில் போன்ற எந்த வாழ்வாதாரமும் இல்லாமல் தடுப்புக் காவல் முகாம்களில் வாழ்ந்து வரும் இவர்களது வாழ்க்கை நிரந்தரமாக இருண்டுவிடும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பிறப்புச் சான்றிதழ் கட்டாயப்படுத்தப்படாத நிலையில் (கிராமப்புறங்களில் வீடுகளில் பிரசவம், பிறப்புச் சான்றிதழ் பற்றிய அறிமுகமின்மை)  இந்தியாவிலேயே பிறந்து, வளர்ந்திருந்தாலும் ஒருவேளை ஒருவரது பெயர் இந்தப் பட்டியல்களில் விடுபட்டிருந்தால் தேவையான ஆவணங்களைச் சேகரிக்கவும், வழக்காடவும் ஒருவர் லட்சக்கணக்கில் செலவிட நேரும்.

தெளிவான புரிதல் உண்டாக்காமல், அவசர அவசரமாக இந்தச் சட்டத்திருத்தங்கள் இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் குழப்பத்தையும், அச்சத்தையும் தூண்டிவிட்டுள்ளன. இதற்கு ஆங்காங்கே எதிர்ப்புகள் கிளம்பி, அடக்குமுறைகள் காரணமாக, போராட்டங்களாக வெடிக்கிறது. அரசின் இரு அவைகளிலும் பெரும்பான்மை பலத்தால் இத்திருத்தங்கள் அங்கிகரிக்கப்பட்டுள்ளன. இதனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ளன.  

வாக்கு வங்கிகளை வளர்க்க அரசியல் கட்சிகள் சட்டங்களைத் தங்களுக்குச் சாதகமாக வளைப்பது மிகவும் வருந்தத்தக்கது.  ஒருவேளை இன்றைய ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இடம் மாறியிருந்து, இந்தச் சட்டத் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால் இன்று திருத்தங்களை எதிர்க்கும் கட்சிகள் ஆதரித்திருக்கும்; ஆதரிக்கும் கட்சிகள் எதிர்த்திருக்கும். 

வருங்கால நாட்டு  மக்கள் நலனைக் காற்றில் பறக்கவிட்டு, குயுக்தி முறைகளில் மக்களிடையே பிரிவினை ஏற்படுத்துவது. இந்தியா உலகின் மிகப் பெரிய மதச்சார்பற்ற , ஜனநாயக நாடு என்ற அடையாளத்தை இழக்கக் காரணமாகிவிடும்.  மதங்களை முன்னிறுத்தித் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் நாடுகளில் அமைதியின்மை நிலவுவதைக் கண்கூடாகக் காண்கிறோம். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று முழங்கியவனது நாடு, . ‘இந்தியர்கள் அனைவரும் எனது உடன்பிறப்புகள்’ என்று உறுதிமொழி ஏற்கும் பிள்ளைகளின் நாடு பிரித்தாளும் அரசியல் சூழ்ச்சிகளுக்கு வீழாதிருக்க வேண்டும்.

    ரவிக்குமார்.

Tags: , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad