\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

தாய் வீடு

உறைபனி, ஊரையே மூடியிருந்த, இதே போல ஒரு டிசம்பர் மாதத்தில் தான், ஆறு வருடங்களுக்கு முன் நான் மிநீயாபொலிஸ்கு வந்தேன். அதுதான் முதல் முறை நான் வேறு நாட்டிற்கு வந்திருப்பது. பூட்டிய வீட்டிற்குள் மனிதர்கள் இருந்தார்கள். முழுவதும் மூடிய வாகனங்களில் பயணித்தார்கள். முகம் பார்ப்பது அரிது. இங்கு வருவதற்குஐந்து நாட்களுக்கு முன்” அப்படினு  கார்டு போட்டு, கட் பண்ணி , அடுத்தஷாட்”ஐ  சென்னையில் ஓபன் பண்ணா, ஒரு மதிய வேளையில் சென்னை T-நகரில் வியர்வை வழிய நடந்துகொண்டிருந்தேன்.

எத எடுத்தாலும் பத்து ரூவா சார். வாங்கம்மா .. வாங்கய்யா..,” 

டேய் ஒரு ice cream வாங்கி குடேன்.. !!” 

இந்த தீவாளிக்கு தான் எடுத்தேன். அதுக்குள்ள சாயம் போயிடுச்சு. இனிமே அவன் கடைக்கு போக கூடாது..!!”

அம்மம்மாதம்பி என்று நம்பி, அவன் உன்னை வளர்த்தான், தாய் என்றும் தந்தை என்றும் தன்னை நினைத்தான்என பாடிக்கொண்டு யாசகம் கேட்கும்  கண் தெரியாதவர் கூட்டம்“. 

இப்படியாக பேச்சு சத்தம் இரைந்து கிடக்கும் சாலையில், poomex பனியங்களும், வழக்கமாக நான் வாங்கும், சில மாதங்களிலேயே பிருஷ்ட பகுதியில் ஓட்டை விழுந்து விடும் சாதாரண ஜட்டியை விடுத்து, Jockey ஜட்டி வாங்கவும், கடையை நோக்கி நடந்து கொண்டிருந்தேன்

இப்போது உடல் முழுவதும் கனத்த ஆடை கொண்டு மூடி, மனிதர்கள் அற்ற, பேச்சு குரல் கேட்காத ஒரு தெருவில்  வெறுமையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஐந்தே நாட்களில் நான் வேறோர்  உலகத்திற்கு வந்துவிட்டேன்.

இது கனவுதான், விடிந்ததும் 

அம்மா டீ போட்டுவந்து எழுப்புவாள். ஆட்டுக்கறி வாங்க சீக்கிரமா கடைக்கு போக வேண்டும். துவைத்த துணியெல்லாம் iron பண்ண குடுத்துட்டு, வயலுக்கு போய் உர மூட்டையை  இறக்கி  வச்சிட்டு வந்துட்டா, ராத்திரி கடைசி பஸ்சை பிடித்து சென்னைக்கு  போய்டலாம்காலைல 9 மணிக்கு ரூம்லேர்ந்து கிளம்பினா ஆபீஸ் போக சரியா இருக்கும் என நினைத்துக்கொண்டேன்.

காலையில் எழுந்து, கிளம்பி அலுவலகம் செல்ல தயாரான நேரத்தில், நான் தங்கி இருந்த என் அறை தோழர், இரண்டு ரொட்டி துண்டுகளை சுட்டு அதில் வெண்ணையை தடவி தின்றுகொண்டிருந்தார்ஒரு பசித்த, ஏழை தமிழ் சிறுவன், யாரோ பாதி தின்று போட்ட ஒரு காய்ந்த சப்பாத்தியை சாப்பிடுவது போன்று இருந்த அந்த காட்சியை பார்க்கவே பாவமாக இருந்தது. தின்று கொண்டே கேட்டார், “உனக்கும் பிரெட் டோஸ்ட் பண்ணவா.?” என்று. “எனக்கென்ன தலையெழுத்தா..?!!” என்பது போல் அவசரமாக மறுத்து, அவருக்காக கொஞ்சம் வருத்தமும் பட்டுக்கொண்டிருந்த என்னிடம் கேட்டார். “அப்புறம்பட்டினியா கிடப்ப..??!!”. இந்த ஒரு கேள்வி, விமானம் விட்டு இறங்கி பல மணிநேரம் ஆன பின்பும் தமிழக வானில் மிதந்து கொண்டிருந்த என்னை இழுத்து மினியேபோலிஸின் பனி மூடியிருந்த மண்ணில் ஆழமாக நட்டது. “இது கனவில்லைஎன எனக்கு புரிய தொடங்கிய நொடி பசிக்க ஆரம்பித்தது. இரண்டு பிரட் எடுத்து டோஸ்ட்டரில் போட்டு பொத்தானை அழுத்தினேன்.

மாலை 5 மணிக்கெல்லாம் இருட்டிவிடுகிறது. அலுவலகம் முடிந்து அறைக்கு வந்ததில் இருந்து விடிவதற்கான நீண்ட  காத்திருப்பு தொடங்கும். என் அறையை ஒட்டியபடியே ஒரு மரம் இருந்தது. சாளரத்தின் வழியே அதைத்தான் வேடிக்கை பார்ப்பேன். இலையெல்லாம் கொட்டி, வெறும் கிளைகளின் மேல் பனி படர்ந்து, தலையெல்லாம் பஞ்சடைத்த முதிர்ந்த கிழவி, பிரிந்த உறவுக்காகவோ, வராத மரணத்திற்க்காகவோ காத்திருப்பது போல இருக்கும்.

“இந்த உருவத்தை நான் வேறு எங்காவது பார்த்திருக்கேனா..? அந்த கிழவிக்கும் எனக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா..? என்னை விடாமல் துரத்தி வந்து என் சாளரத்தின் வழி எனக்கு ஏதேனும் சேதி சொல்ல வந்திருக்கிறாளா..?” என சில சமயம் நினைப்பேன். தீவிர எண்ணங்கள் தனிமையின் பக்க விளைவுகள்

ஆனால் இந்த நினைப்பெல்லாம் இந்தியாவில் விடியும் நேரம் வரைதான். அம்மா  இப்போதெல்லாம்  சேவல் கூவி எழுவதில்லை.., அதற்கு முன் என் அழைப்பு மணி அவள் தொலைபேசியில் அடித்துவிடும்.

அங்காளம்மன் கோவிலுக்கு காப்பு கட்டியாச்சுஎன போன வாரமே அம்மா சொல்லி இருந்தாள். எங்கள் ஊரின் பிரதான கோவில் அங்காளம்மன் கோவில், சுயம்புவாக தோன்றியதாக சொல்வார்கள். அம்மன் படுத்திருக்கும்  நிலையில் இருக்கும். பாவாடைராயனும், பேச்சியம்மனும் துணை தெய்வங்களாக இருப்பர். திருவிழா காலங்களில் உற்சவராக பாவாடைராயன் குதிரை வாகனத்தில்  ஊருக்குள் சென்று படையலேற்று ஆசி வழங்கி வருவார். வருடா வருடம் பிப்ரவரி மாத இறுதியில் பஞ்சமி அன்று காப்பு கட்டி பத்து நாள் திருவிழா நடக்கும். பத்துநாளும் முன்னிரவில் சாமி ஊருக்குள் வரும். ஒன்பதாவதுநாள் மகா சிவராத்திரி அன்று அக்கினி சட்டி மற்றும் பத்தாவது நாள் நிறைந்த அமாவாசையில்  மயானக்கொள்ளை விடுவதோடு திருவிழா நிறைவடையும்

நேத்து திருவிழா எப்படி இருந்தது..? னு  கேக்கணும், என போன் செய்தபோது தான்மின்தார் தாத்தாஇறப்பு செய்தியை அம்மா சொன்னாள். “கொஞ்ச நாளாவே படுக்கையில தான் இருந்திருக்காரு, எனக்கு செய்தியே தெரியாது.., காலையிலே எழவு சொல்ல வந்த ஆளுகிட்ட தான் கேட்டேன். அவரு முடியாம தான்  இருந்தாரு, உங்களுக்கு தெரியும்னுல நினைச்சேன் ஆச்சி, அப்படின்னாரு..!! முன்னாடியே தெரிஞ்சிருந்தா, உயிரோடு இருக்கறப்பவே ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்துருக்கலாம்

ரொம்ப நேரம்லாம் இல்லை.. பத்து மணிக்கு செத்தாரு, 2  மணிக்கெல்லாம்  கொண்டுபோய்ட்டாங்க. அப்புறம் தீட்டு கழிக்க கொடும்பாவி கட்டி ஊரெல்லாம் இழுத்துட்டு போய், சாயங்காலம் சாமியும் ஊருக்குள்ள வந்துட்டு போய்டுச்சு.

போனதுதான் போனாரு.. திருவிழா முடிஞ்சு போய் இருக்கலாம். ஆனா அவரு இப்பதான் போகணும்னு இருந்திருக்கு பாரு. என அம்மா ஆச்சர்யமாக சொல்வதற்கான காரணம் எனக்கு தெரியும். அது அங்காளம்மன் கோவிலில் மின்தார் தாத்தாவுக்கு நடந்ததாக சொல்லப்படும் ஒரு சம்பவம்.

பல வருடங்களுக்கு முன்னர் இதே போல் ஒரு திருவிழா நாளில், சாமி புறப்பட அலங்காரங்கள் நடந்து கொண்டிருந்தது. அப்போது மத்திய வயதினரான மின்தார் தாத்தா, “சாமி ஊருக்குள் செல்ல புறப்படும் போது என்னை  எழுப்புங்கள்என சொல்லிவிட்டு கோவில் திண்ணையில் உறங்கியிருக்கிறார். எதோ ஒரு காரணத்தால் சாமி புறப்பாடு தாமதமாக, அந்த பரபரப்பில், அனைவரும் மின்தார் தாத்தாவை மறந்துவிட்டு சாமியுடன் ஊருக்குள் சென்று விட்டனர். ஊர் மக்கள் அனைவரும் சாமியுடன் ஊருக்குள் இருக்க, ஊர் வெளியில் இருக்கும் கோவிலில் மின்தார் தாத்தா மட்டும் உறங்கிகொண்டிருந்தார்

பொதுவாக பேரமைதி நிலவும் பின்னிரவில் அன்று வழக்கத்துக்கு மாறாக மின்னல் ஒளியும் பெருங்காற்று ஏற்படுத்தும் சத்தமும் தாத்தாவை கண் விழிக்க வைத்தது. சுற்றும் முற்றும் பார்த்தார், யாரும் இல்லை. பூட்டு தொங்கிக்கொண்டிருந்த இரும்பு கதவுக்குள்தாயார்முன்பு ஒரு விளக்கு எரிந்துகொண்டிருந்தது. “அடடா.. எழுப்ப மறந்துட்டு போய்ட்டானுவோ போல இருக்குஎன நினைத்துக்கொண்டு வெளியே வந்தார் தாத்தா.. கோவிலுக்கு முன் வரிசையாக நடப்பட்டிருந்த அசோக மரங்கள்  காற்றில் பயங்கரமாக ஆடி கொண்டிருந்தன. அந்த மரங்களுக்கு அருகில் நெடுநெடுவென வளர்ந்த வெள்ளை வெளேரென ஒரு பெண் உருவம் தலைவிரி கோலமாக இரண்டு கைகளையும் ஊர் பக்கமா நீட்டி பெரு மூச்சினை விட்டுக்கொண்டிருந்தது.. இந்த காட்சியை கண்ட தாத்தாவுக்கு பயமான பயம்

ஆகாசத்துக்கும் பூமிக்குமா ஒரு பொம்பள நம்ம ஊர பாத்து ரெண்டு கைய நீட்டிக்கிட்டு நிக்குதே, இதுக்கு என்ன அர்த்தமா இருக்கும்னு தெரியலையே. அங்காளம்மா நீதான் காப்பாத்தணும் என கோவில் பக்கம் தடால் என கீழே விழுந்து எழுந்தவரை பார்த்து அந்த உருவம் சொல்லுது. “என் புள்ளைங்க ஊருக்குள்ள போயி நாழி  ஆச்சுஇன்னும் கொஞ்ச  நேரத்துல விடிஞ்சிடும். அதுக்குள்ள என் புள்ளைங்க கூட்டுக்கு திரும்பிரனும். ஓடுறா ஊருக்குள்ளஎன சொல்ல .. தாயே..!! அங்காள ஈஸ்வரி..!! நீதானா இது.. மன்னிச்சுடுமா தாயே னு ஒரே ஓட்டம் ஊருக்குள்ள ஓடி போயி, அம்மா கூப்புடுறா.. அம்மா கூப்புடுறா.. கத்திகிட்டே ஒத்த ஆளா சாமிய கொண்டுவந்து விடியறதுக்குள்ள கோவில்ல  சேர்த்துப்புட்டு படுக்கையில விழுந்தவருக்கு நினைவு தப்பிடுச்சி . ரெண்டு மாசமா ஒரு நினைப்பும் இல்ல அவருக்கு. அப்புறம் யார் யாரையோ வர வச்சி மந்திரிச்சு, பரிகாரம் பண்ணி ஆள பொழைக்க வச்சாங்கன்னு, “ஆட்டுக்கார ஆயாகதை சொல்லி தான் எனக்கு தெரியும். அவர் சரியாக ஒரு திருவிழா  நாளில்  இறந்தது தற்செயலாக கூட இருக்கலாம்.

இப்படியாக மின்தார் தாத்தாவையும், பிள்ளைகளை காக்கும் ஒரு தாயான ஈஸ்வரியையும் பற்றி யோசித்து கொண்டிருக்கும் போதே, சட்டென எதோ தோன்ற, என் சாளரத்தின் திரையை விலக்கி பார்த்தேன். பனி படர்ந்து வெள்ளை வெளேரென, ஆயிரம் கைகளை நீட்டி காத்திருக்கும் ஒரு பெண் போல காற்றில் ஆடிக்கொண்டிருந்தது அந்த மரம். என் மூளை மடிப்பில் படிந்துவிட்டிருந்த, மஞ்சளும் குங்குமமும் கொட்டி இருக்கும் அங்காளம்மன் கோவில் பிரகாரத்திலிருந்து எழுந்து வரும் ஊதுபத்தியின் மணத்தை என் நாசி உணரத்தொடங்கிய அந்த நிமிடம் இந்த ஊருக்கும் எனக்குமான இடைவெளி குறைய தொடங்கி இருந்தது.

நம்முடனே இருக்கும் ஒரு நபர், நம் நண்பனாக நம்மை நெருங்கும் கணம் எப்போது..? அவர் வாழ்க்கை புத்தகத்தின் ரகசிய வரிகளை நம்பிக்கை கொண்டு  நமக்கு படிக்க தரும்போது..! அவரின் காயத்தின் தழும்புகளை நமக்கு காட்டும் போது..!!, அவரின் பிரியத்தின், அன்பின் பசுமையான புல்வெளிகளில் நம்மை நடத்தி அழைத்து செல்லும் போதுதான்.. இல்லையா..?  அவ்வாறு இந்த ஊரும் அதன் திரைகளை விலக்கத்தொடங்கியது.

ஏப்ரல் மாத இறுதியில் உறைபனி உருகி தெருவெங்கும் ஓடியது. புல்வெளிகள், மண்தரைகள் தெரிய ஆரம்பித்தன. வெண்மை நிறம் மறைந்து பச்சை எங்கும் பரவ தொடங்கியது. இனிமேல் உன்னிடம் இருந்து மறைக்க என்னிடம் ரகசியங்கள் ஏதும் இல்லை என ஒரு திரை விலகும் போது, எனக்கு இந்த ஊரின்பால் ஒரு அன்பு துளிர்த்தது. அந்த அன்பு ஒரு நதியாக பிரவாகம் எடுத்தது, இத்தனை நாள் இந்த பனி மறைத்து வைத்திருந்த ஏரிகளை கண்டபோது தான்.

மினசோட்டா பத்தாயிரம் ஏரிகளை கொண்ட மாகாணம். எங்கும் ஏரிகள். நான் பல ஏரிகளுக்கு நடுவே தான் வாழ்த்து கொண்டிருக்கிறேன் என்ற உண்மையே எனக்கு புது வலிமையை, மனஅமைதியை தந்தது. வாராவாரம் எதோ ஒரு ஏரிக்கு சென்று விடுவேன். கால் நனைத்து நின்றிருப்பேன். அது தரும் நம்பிக்கையும் ஆசுவாசமும் நான் என் சொந்த ஊரில் உணர்ந்தவை. என் சொந்த ஊர் கடல் போல் காட்சியளிக்கும் வீராண ஏரிக்கரையில் உள்ள கந்தகுமரன்.

ஏரிக்கும் எனக்குமான உறவு மிக நீண்டது. நான் நீச்சல் பழகாத நாளில் தவறுதலாக ஏரியின் ஆழத்தில் விழுந்தேன். போராடியும்  வெளியே வர முடியவில்லை, என் வாழ்வின் கடைசி நிமிடங்களை ஏரியின் தண்ணீராய் குடித்து மூழ்கி கொண்டிருந்தேன். நான் ஏரியின் கர்ப்பத்தில் இருந்தேன். எல்லாம் முடிந்திருக்கும். ஆனால் திடீரென ஏதோ ஒரு விசை  என்னை தண்ணீரின் மேற்பரப்பை நோக்கி தள்ளியது, மீண்டும் கை, காலை உதறி ஒரு போராட்டம். நான் கரையை அடைந்துவிட்டேன். கரையில் நின்று ஏரியை பார்த்தேன். எந்த சலசலப்பும் இல்லாமல் அமைதியாக இருந்தது. இயக்கமே இல்லாத இந்த தண்ணீரில் எங்கிருந்து வரும் விசை. .? 

பூவினை போல இருக்கும் ஒரு கர்பிணி தன் சக்தியெல்லாம் திரட்டி வலி பொறுத்து முக்கி, விசை கொடுத்து வெளியே தள்ளி பிறக்கும் ஒரு உயிர் போலநான் மீண்டும் பிறந்து இருக்கிறேன். ஏரி என் தாய். ஏரிக்கரையில் இருக்கும் அங்காளம்மன் கோவிலை பார்த்து கும்பிட்டுவிட்டு, வீடு நோக்கி நடந்த போது என் உடல் சிலிர்த்தது. நான் எப்போதும் ஏரிகள் சூழ்ந்த ஊரில் வாழும் போது மகிழ்ச்சியாக இருந்திருக்கிறேன். ஏரியே இல்லாத ஊர்களில் மிகுந்த துயருற்றுருக்கிறேன். அந்த வகையில் மிநீயாபொலிஸ் என்னை மகிழ்ச்சியாக வாழவைக்கும் நகரம். இந்த ஊர் என் மற்றொரு தாய் வீடு.

திருமணம், குழந்தை என இனிமையான ஆறு ஆண்டுகள். நான் வீராண ஏரிக்கரையில் வாழ்ந்தது போல், என் மகன் இங்கு பத்தாயிரம் ஏரிகளுக்கு நடுவில் வாழ்கிறான். ஏரியை அவனும், அவனை ஏரியும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என பார்ப்பதற்கு ஒரு நாள் என் இரண்டு வயது மகனை முதன் முறையாக west medicine ஏரிக்கு அழைத்து சென்றேன். மற்ற குழந்தைகள் ஒரு தயக்கத்துடன் தண்ணீரில் கால் நினைத்துவிட்டு கரைக்கு ஓடுவது, பின் வந்து தண்ணீரில் கால் நனைப்பதுவுமாக இருக்க, இவன் எந்த தயக்கமும் இல்லாமல் விடுவிடுவென ஏரியில் இறங்கி நெஞ்சளவு தண்ணீரில் நின்றுகொண்டு மகிழ்ச்சியாக விளையாடுகிறான். தண்ணீரை அடித்து அடித்து அவனே பேசி சிரித்து கொள்கிறான்எனக்கும் ஏரிக்குமான உறவை பற்றி எதுவுமே தெரியாத என் மனைவி, என் மகனை கரைக்கு வரும்படி  பதற்றத்துடன் அழைக்கிறாள்.   ஏரியில் நின்று நானும் என் மகனும்  திரும்பி பார்க்கிறோம். மாலையில் விழுந்து கொண்டிருந்த குங்கும சிவப்பு சூரியனை மறைத்து என் மனைவி நின்றிருந்ததால் அவள் முகம் எங்களுக்கு சரியாக தெரியவில்லை. ஆயினும் தலைமுடி காற்றில் ஆட  இரண்டு கைகளையும் நீட்டி பதற்றத்துடன் தன் பிள்ளைக்காக காத்திருக்கும் தாயை என் மகன் முதன்முதலாக பார்க்கிறான். நான் இதற்கு முன் எங்கோ பார்த்திருக்கிறேன்.!!

-மனோ அழகன்

Comments (2)

Trackback URL | Comments RSS Feed

  1. Thiru says:

    Arumaiyaana padhipu…

  2. Thirumurugan says:

    Arumaiyana padthipu….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad