பனிப்பூக்கள் Bouquet – 2020 கணிப்புகள்
2020 இல் இந்தியா வல்லரசு என்னும் குறிக்கோளுடன் உழைக்க வேண்டும் என்றும் அதற்கான திட்டங்களையும் பல ஆண்டுகளுக்கு முன்பு 1998 இல் அப்துல் கலாம் அவர்கள் வகுத்துக் கொடுத்தார். இன்னும் சில தினங்களில் 2020 ஆம் ஆண்டுத் துவங்குகிறது. அடுத்தாண்டு இந்தியா வல்லரசு ஆகிவிடுமா என்று கேட்டோமானால், வல்லரசு என்பதற்கான அர்த்தத்தை முதலில் புரிந்துக்கொண்டு அதற்கான பதிலைக் கூற வேண்டியிருக்கும். வல்லரசு என்பது வல்லமை கொண்ட அரசு என்று எடுத்துக்கொண்டோமானால், ஒருவிதத்தில் இந்திய அரசு ஏற்கனவே வல்லரசு என்று ஒத்துக்கொள்ள வேண்டியுள்ளது. தொடர்ச்சியாக அதிரடி சட்டத்திட்டங்கள், எதிர் கொள்கையுடையோர் மீது ஒடுக்குமுறைகள், மக்களின் இன்னல்களைக் கண்டுக்கொள்ளாமல் எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்று எவ்வித மென்மையான போக்கும் இல்லாமல் வன்மையாக நடந்துக்கொள்ளும் அரசு என்பதால் இதையும் நாம் வல்லரசு என்று கூறலாமோ என்று தோன்றுகிறது. நாம் என்ன நினைத்தோம், நமக்கு என்ன கிடைத்திருக்கிறது என்று பாருங்கள்!!
—————-
அப்துல் கலாம் கண்ட கனவு தான் இப்படி ஆகிவிட்டது. கலாமின் நண்பர் எழுத்தாளர் சுஜாதா அவர்கள் 1980 இல் கண்ட கனவின் நிலை என்ன என்று பார்ப்போம். 1980களில் அவர் எழுதிய ‘என் இனிய இயந்திரா’ கதை 2020க்கு பிறகு நடப்பதாக வரும். அந்தக் கதையில் அனைத்து கதாபாத்திரங்களின் பெயர்களும் இரண்டு எழுத்துகளால் வருவதாக இருக்கும். 2020 இல் இந்தியா ஜீவா என்ற சர்வாதிகாரியின் பிடியில் இருக்கும், சரி, அரசியலை விடுங்க. அதில் வேறு பல விஞ்ஞானச் சாதனங்கள் பற்றிக் குறிப்பிட்டு இருப்பார். உதாரணமாக, பார்த்துக்கொண்டே பேசுவதற்கான தொலைபேசி, நகரின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் மோனோ ரயில், புத்தகம் படிக்கும் நாய்க்குட்டி என அவர் குறிப்பிட்ட பல சங்கதிகள் பல ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டன. அரசியல்வாதிகளை விட விஞ்ஞானிகள் காலத்தை மீறி சாதிக்கிறார்கள். வேறென்ன சொல்ல?
——————-
இந்தக் கதையைத் தழுவியே இயக்குனர் ஷங்கர் 2010இல் எந்திரன் முதல் பாகத்தை எடுத்தார். அதற்கு முன்பு, 2007 இல் கருப்புப் பணத்தை மையமாக வைத்து சிவாஜி படம் எடுத்தார். இந்தப் படத்திற்கு எழுத்தாளர் சுஜாதா வசனம் எழுதியிருந்தார். அதன் இறுதியில் கிரடிட்ஸ் போடும் போது சில காட்சிகள் வரும். என்னவென்றால், 2008 இல் 500-1000 ரூபாய்கள் செல்லாதது என்று அறிவிக்கப்படும், 2010இல் மணி கார்டு எனப்படும் மின் பணவர்த்தனை நடைமுறைக்கு வரும், கருப்புப் பணம் முற்றிலும் ஒழிந்தது, 2015இல் இந்தியா வல்லரசு ஆனது என்று அந்தக் காட்சிகள் முடியும். ஷங்கருக்கு ரொம்பத் தான் பேராசை. ஆனால், அதில் சொன்ன சில விஷயங்கள் இந்தியாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. முழுமையாக நனவாகக் காத்திருப்போம். அதற்கு முன்பு, சிவாஜி 2 எடுத்து வெளியிட்டாலும் ஆச்சரியமில்லை.
———————
கனவு காணுவதோ, எதிர்காலத்தைக் கணிப்பதோ தவறல்ல. குத்துமதிப்பாகக் கணிக்கும் போது, கணிக்கும் காலம் தொலைவில் இருப்பது நல்லது. குறிப்பாக, உயிர் போன பிறகான காலத்தில் நடப்பதை கணித்தால், கணித்தவை நடைபெறாமல் போகும்போது யாரும் கேள்வி கேட்க போவதில்லை. இல்லாவிட்டால், கணிப்புத் தவறும்போது காமெடியாகிவிடும். கிறிஸ்து பிறப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மாயன் என்றொரு இனக்குழு உருவாக்கிய காலண்டர் 2012 ஆண்டோடு முடிவதாக இருந்தது. அதனால் பலரும் 2012 ஆண்டோடு உலகம் அழிந்துவிடும் என்று உறுதியாக நம்பினார்கள். 2009 இல் 2012 என்றொரு படம் கூட வந்தது. அன்றைய காலக்கட்டத்தில் படம் செம்மையாகக் கல்லா கட்டியது. அதுவரை திகில் கிளப்பிய அந்தப் படம், 2012 க்கு பிறகு காமெடிப்படமாகி போனது.
—————————————————-
2019 முடிந்து 2020 வந்தே விட்டது. இப்போதாவது 2020இல் என்ன நடக்கும் என்று நம்மால் கணிக்க முடியுமா? இம்பீச்மெண்ட் தாண்டி ட்ரம் பதவியில் நீடிப்பார், அடுத்தத் தேர்தலிலும் ட்ரம்ப் மீண்டும் வெற்றி பெறுவார், தமிழ்நாட்டுக்கு 2020லும் எடப்பாடியே முதல்வராக நீடிப்பார், ரஜினி அரசியலுக்கு வராமல் இரண்டு படங்களில் நடிப்பார், எதிர்கட்சிகள் எதிர்ப்பை மீறி மோடி-அமித்ஷா கூட்டணி என்.ஆர்.சி. சட்டம் கொண்டு வருவார்கள், சசிகலா பெங்களூர் ஜெயிலில் இருந்து வெளியே வருவார் என்று ஜோசியம் கூறுவது போல் அடிச்சு விடலாம். இவை நடைபெறலாம், நடைபெறாமல் போகலாம். எதிர்காலத்தைத் தெரிந்துகொள்வதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது? என்னவென்று தெரியாமல் கடப்பதில் தான் ஒரு கிக் இருக்கும். நாமும் ஒரு எதிர்ப்பார்ப்புடன் 2020 ஆம் ஆண்டை எதிர்கொள்வோம்.
- சரவணகுமரன்