காற்று வாங்கப் போனேன்..
“அம்மா ,, ஆக்ஸி பாருக்கு போறேன்; நீயும் வரியா?” படிக்கும் பொழுது சிறிது அநாகரிகமான வாக்கியமாகத் தோற்றமளித்தாலும், இது விரைவில் உலகின் பல நகரங்களில், குறிப்பாக இந்திய நகரங்களில் புழங்கும் வாக்கியமாகிவிடும்.
சமீபத்திய ஆண்டுகளில் இந்தியத் தலைநகரான டெல்லியின் காற்று மாசு அளவு அதிகமாக அலசப்பட்டிருந்தாலும், இந்தாண்டு நவம்பர் மாத மத்தியில் இதுவரை இல்லாத அளவு அதிகரித்தது உலகின் மிக மோசமான மாசடைந்த நகரம் என்ற நிலையைத் தொட்டது. பள்ளிகள் தொடர்ந்து பல நாட்கள் மூடப்பட்டிருந்தன; வாகனப் போக்குவரத்து மாற்றங்கள் கொணரப்பட்டன; தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகையைக் கட்டுப்படுத்த புதிய விதிகள் அமலுக்கு வந்தன; சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மாசுக் கட்டுப்பாடு வாரியம் புதிய கட்டடங்கள் எழுப்பப்படுவதை நிறுத்தி வைத்தது.
பூமியின் வளி மண்டலம் பல வாயுக்களைக் கலவையாகக் கொண்டது. இதில் 79 சதவிகிதம் நைட்ரஜனும், 20 சதவிகிதம் பிராணவாயுவான ஆக்ஸிஜனும், 3 சதவிகிதம் கரியமிலவாயுவும் மீதம் இன்னபிற வாயுக்களும் நிறைந்திருக்கும்.
காற்றுத் தரக் குறியீடு (Air Quality Index)
காற்றுத் தரக்குறியீடு என்பது காற்றிலுள்ள இரசாயன துகள்களின் (ஓசோன், நைட்ரோஜன் டை ஆக்ஸைட், கார்பன் மோனோ ஆக்ஸைட் ஆகியவற்றின் உமிழ்வால் அளக்கப்படுகிறது. வாயுக்களின் சமச்சீர் நிலை மாறும்பொழுது காற்று மாசடைகிறது. இதனால் உண்ணும் உணவு, உற்பத்தி, உடல்நலம் பாதிப்படைகின்றன. கடந்த நவம்பரில் டெல்லியின் காற்று தரக் குறியீடு 527 என்ற அளவைத் தொட்டு உலகின் காற்று மாசு அதிகம் கொண்ட பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. இந்தத் தரக்குறியீட்டுக் கணக்கின்படி இது மிகவும் அபாயகரமான சூழலாகக் கருதப்படுகிறது.
காற்றின் தர அளவைகள்
டெல்லியின் இன்றைய காற்று மாசுபாட்டுக்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. தொழிற்சாலை வெளியிடும் நைட்ரஜன் மற்றும் கந்தக ஆக்ஸைடு, வாகனப் பெருக்கம், பெட்ரோலியச் சுத்திகரிப்பு ஆலைகள் வெளியிடும் ஹைட்ரோ கார்பன் மற்றும் கரிமச் சேர்மங்கள், தரக் குறைவான எரிபொருட்கள் ஆகிய பல காரணங்கள் இருப்பினும், டெல்லியின் அண்டை மாநிலங்களான ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் வயல்களில் அறுவடை செய்த பின் மீதமிருக்கும் அபரிமிதமான வைக்கோலை எரிப்பதால், கடுமையான புகைமூட்டம் டெல்லியைச் சூழ்ந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
200 புள்ளிகளை மீறினாலே சுவாசப் பிரச்சனைகள் நிகழும் என்கிறது ஆய்வு. அமெரிக்காவில் புற்றுநோய்க்கு அடுத்து மனிதர் இறப்பதற்கு சுவாசப் பிரச்சனைதான் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை 25 சதவிகித இறப்புகள் காற்று மாசுபாட்டால்தான் நிகழ்கின்றன. உலகச் சுகாதார அமைப்பின் கணக்குப்படி ஆண்டுக்கு 46 லட்சம் பேர் சுவாசப்பிரச்சனையால் இறக்கிறார்கள். டெல்லியில் மட்டும் 1990 முதல் 2015-ம் ஆண்டு வரை காற்று மாசுபாடு காரணமாக ஏற்பட்ட நுரையீரல் பாதிப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை, ஏறத்தாழ 150 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக ஹெல்த் எஃபெக்ட்ஸ் இன்ஸ்டிடியூட் (Health Effects Institute) அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்திய நகரங்களின் காற்றுத் தரம் – (டிசம்பர் 29 2019 இந்திய நேரம் இரவு 9 மணி நிலவரப்படி)
(ஆதாரம் – https://aqicn.org/map/india/)
அமெரிக்க நகரங்களின் காற்றுத் தரம் – (டிசம்பர் 29 2019 இந்திய நேரம் இரவு 9 மணி நிலவரப்படி)
(ஆதாரம் – https://aqicn.org/map/usa/)
மாசுபட்ட காற்றைச் சுவாசிப்பது நுரையீரல் மற்றும் மூச்சுக்குழாய் தொடர்பான தொற்றுநோய், நிமோனியா, நுரையீரல் மற்றும் இதய பாதிப்புகள், நுரையீரல் புற்றுநோய், சுவாச பாதிப்புகள், நுகர்வுத்திறன் குறைபாடு போன்ற விளைவுகளை ஏற்படுத்தும்.
இவ்வித மாசுத் தாக்குதலால் பாதிப்படையும் நுரையீரலின் நச்சு நீக்கும் பொருட்டு டெல்லியில் செயற்கை சுவாச நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. சுத்தமான பிராணவாயுவைச் சுவாசிக்க ‘ஆக்ஸி பார்’ (Oxy Bar) என்ற பெயரில் இயங்கிவரும் இந்த ஆக்ஸிஜன் பார்களைத் தேடி மக்கள் குவிகின்றனர். சுத்தமான இந்த ஆக்ஸிஜனை சுவாசிப்பது, மாசுபட்ட வாயுவைச் சுவாசிப்பதால் உண்டாகும் தீங்குகளை எதிர்த்து அல்லது சமன் செய்து உடலைப் பாதுகாக்க உதவுகிறதாம். வெனிலா, செர்ரி, பாதாம், ஸ்பியர்மிண்ட், யூகலிப்டஸ், எலுமிச்சை, ஆரஞ்சு, இலவங்கம், லாவண்டர் போன்ற பல நறுமணங்களில் பிராணவாயு கிடைப்பது இந்நிலையத்தின் சிறப்பம்சம். பதினைந்து நிமிடம் இவ்வகையான காற்றைச் சுவாசிக்க குறைந்தபட்சமாக 299 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. லாவண்டர் நறுமணத்தோடு சுவாசிக்க கட்டணம் 499 ரூபாய்.
வசதி படைத்தவர்கள் வீட்டின் அறைகளில் பல அடுக்கு ஃபில்டர்களைப் பொருத்திக்கொள்கின்றனர். ‘ப்ரீத் ஈஸி’ (Breatheasy) என்ற நிறுவனம் ஒரு சிறிய அறையில் இவ்வகை மாசுத் தடுப்பான்களைப் பொருத்த 3௦௦௦௦ ரூபாய் முதல் 1,00,௦௦௦ ரூபாய் வரை செலவாகிறது. கூடவே நச்சுத் தன்மையைக் குறைக்கும் பாம்புக் கத்தாழை, பணம் ஆலை எனப்படும் மணி பிளான்ட் போன்ற செடிகளை அறைகளில் வைக்கவேண்டும்.
(ஆக்ஸி பார் விலைப் பட்டியல்)
இவை தவிர, மலையேற்ற ஆர்வலர்கள் உயரமான சிகரங்களில் பிராணவாயு சிக்கல் ஏற்பட்டால் பயன்படுத்தும் ஆக்ஸிஜன் புட்டிகளும் இந்தியத் தலைநகரில் அன்றாடப் பயன்பாட்டுக்குக் கிடைக்கின்றன.
கடந்த தசாப்தத்தில் குடிக்கும் நீர் பாட்டில்கள் விற்பனைக்கு வந்தபோது, ‘இது என்ன குடிக்கும் நீரைக் கூடவா காசு கொடுத்து வாங்கவேண்டும்?’ என்று அங்கலாய்த்த தலைமுறை இருந்தது. இன்று சில்லறை விற்பனையில் முன்னணியில் இருப்பது தண்ணீர் பாட்டில்கள்தான். விரைவில் ஆக்ஸிஜன் பார், பாட்டில்கள் விற்பனை இதனை விஞ்சினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஐம்பூதங்களில் நீருக்கும், நிலத்துக்கும் சொந்தம் கொண்டாடி இன்று அடித்துக்கொள்ளும் நாடுகளும், மாநிலங்களும் காற்றுக்கு உரிமைகோரி, போராடாமல் இருந்தால் சரி!
– ரவிக்குமார்.
Tags: Air quality, India, oxy bar, USA