மினசோட்டாவின் தமிழ் மொழி மற்றும் மரபு மாத பிரகடனம்
அமெரிக்காவின் மினசோட்டா மாகாண ஆளுனர் திரு. டிம் வால்ஸ் (Tim Walz) அவர்கள் இந்தாண்டு 2020 ஜனவரி மாதத்தை மினசோட்டாவில் “தமிழ் மொழி மற்றும் மரபு” மாதமாகப் பிரகடனம் செய்திருக்கிறார். இதற்கான பிரகடனத்தில் டிசம்பர் 31 ஆம் தேதியன்று கையெழுத்திட்டு, மினசோட்டா மாகாண முத்திரை பதித்த ஆவணத்தை மினசோட்டா தமிழ் சங்கத்திடம் பகிர்ந்திருக்கிறார்.
இது போன்ற பிரகடனங்கள் முக்கிய நிகழ்வை ஒட்டி, அதன் முக்கியத்துவத்தை மாநில மக்கள் அறிந்துக்கொள்ளும்பொருட்டு அரசால் வெளியிடப்படுகிறது. இந்தப் பிரகடனத்தில் தமிழ் மொழியின் 2600 ஆண்டுக்காலத் தொன்மை, மினசோட்டாவின் இருமொழி முத்திரை பெறுவதில் தமிழ் மக்களின் பங்கேற்பு, தமிழ்மொழி கல்வியில் சுயச் சார்பை செயல்படுத்துதல், தமிழ்மொழி மற்றும் தமிழ்க் கலைகளை மினசோட்டாவில் வளர்த்தெடுப்பது, தமிழ் மாதமான தையின் தொடக்கத்தில் முதல் 4 நாட்கள் பொங்கல் கொண்டாடப்படுவது, இந்த விழாவில் மினசோட்டாவில் வசிக்கும் அனைத்து மக்களையும் வரவேற்று பங்குகொள்ளமைக்கு அழைத்தல் போன்ற சிறப்புச் செய்திகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இனி இந்தத் தீர்மானம் குறித்து மினசோட்டாத் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. சுந்தரமூர்த்தி அவர்கள் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.
இது போன்ற ஒரு தீர்மானத்தை மினசோட்டா அரசிடம் இருந்து பெற வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது?
இதற்கு முன்னால் வட அமெரிக்காவில் சில மாகாணங்கள் ஏற்கனவே இது போன்ற பிரகடனங்களை வெளியிட்டுள்ளன. எண்ணற்ற தமிழ் மொழி மற்றும் கலை சார்ந்து நிகழ்ச்சிகள் நிகழும் நமது மினசோட்டா மாநிலத்தில் ஏன் இது போன்ற ஒரு பிரகடனத்தை அறிவிக்க நாம் முயற்சி எடுக்கக் கூடாது என்று தோன்றியது.
இப்போது மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் தொடங்கி 12 ஆண்டுகள் ஆகின்றன. இந்த ஜனவரி மாதம் நடக்கப்போவது, 12வது சங்கமம் விழா. சங்கமம் விழா, எப்பொழுதும் பொங்கல் விழா சார்ந்து நடைபெறும். இந்தச் சமயத்தில் நாமும் இது போன்ற ஒரு பிரகடனத்தைப் பெற்றால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணினோம்.
இதை எப்படிச் செயல்படுத்த முடிந்தது?
சென்ற 2019 சங்கமம் விழாவில் செனட்டர் திரு. ஜான் ஹாப்மென், செனட்டர் திரு. பால் ஆண்டர்சன், ஐஐஎம் இயக்குனர் மற்றும் மினசோட்டா கல்விக்கழகத் தலைவர் ஆகியோர் கலந்துக்கொண்டனர். அந்த மேடையில் செனட்டர் திரு. ஜான் ஹாப்மென் அவர்களுக்குத் திருவள்ளுவர் சிலையைப் பரிசளித்தப்போது, இது குறித்த கோரிக்கையை நாங்கள் முன்வைத்தோம். அதற்குச் சிறிதும் தயக்கமின்றி, தீர்மானம் கொண்டுவருவதற்கான முயற்சிகளை உடனே மேற்கொள்ளுங்கள். நாங்கள் அந்த முயற்சிக்கு உறுதுணையாக இருப்போம் என்று உறுதியளித்தார். பின்னர், மினசோட்டாத் தமிழ்ச் சங்க நிர்வாகக் குழு இதற்கான ஆயத்தப்பணிகளை மகிழ்வுடன் மேற்கொண்டனர். இதற்கான கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, ஆவணங்களை உருவாக்கி, அரசை சரியான வழியில் தொடர்புக்கொண்டோம்.
உங்களது முயற்சிகளுக்கு அரசின் பதில் என்னவாக இருந்தது?
இது போன்ற பிரகடனம் அறிவிக்க, ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு சட்டத்திட்டங்கள் இருக்கின்றன. மினசோட்டா மாநிலத்தில் பிரகடனம் அறிவிப்பதற்கான வழிமுறைகளை அறிந்துக்கொள்ள அரசு நிர்வாகிகள் உதவிகரமாக இருந்தனர். நாம் மினசோட்டாவில் தமிழ் மொழி மற்றும் மரபு சார்ந்து நடத்தி வரும் பல்வேறு நிகழ்ச்சிகள் குறித்து விவரித்தோம். மினசோட்டாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு தமிழ் சார்ந்த முன்னெடுப்புகளை அறிந்த அவர்கள், அதற்காகப் பாராட்டி, ஆர்வத்துடன் இந்தத் தீர்மானம் கொண்டு வர முன் வந்தனர்.
இந்தப் பிரகடனத்தின் பயன்கள் என்னென்ன?
இந்தப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளபடி, நமது தமிழ்மொழி மற்றும் மரபு குறித்த சிறப்புகளை இந்த மாநில மக்கள் அனைவரும் அறிந்துக்கொள்வார்கள். இந்தச் செய்தி ஊடகங்களால் நாடெங்கும் சென்றடைந்துள்ளது. இது போன்ற அரசு அங்கீகாரங்கள் மற்றும் வாழ்த்துகள், நமது அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு, தமிழ் மொழியின் சிறப்பையும், பெருமையையும் கொண்டு சென்று, அது குறித்த நம்பிக்கையளிக்கும் என்பதும், உலகமெங்கும் உள்ள தமிழ் பற்றாளர்களை மேலும் தமிழுக்காகத் தொண்டாற்ற ஊக்கமளிக்கும் என்றும் நான் நம்புகிறேன்.
இந்தப் பிரகடனத்தை எவ்வாறு கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது?
இந்த வருடம் சங்கமம் விழா ஜனவரி 18ஆம் தேதியன்று கொண்டாடப்பட உள்ளது. அதில் மினசோட்டா அரசு மற்றும் பிற அமைப்புகளின் தலைமைப்பொறுப்பில் உள்ளவர்களைக் கலந்துக்கொள்ள அழைத்திருக்கிறோம். அவர்கள் முன்னிலையில் மினசோட்டா தமிழ் மக்கள் மத்தியில் இந்தப் பிரகடனத்தை வாசித்து, அந்த மகிழ்வைப் பகிர்ந்துக்கொள்ள இருக்கிறோம்.
இந்தப் பிரகடனம் வரும் காலங்களிலும் தொடருமா?
நிச்சயமாக. வரும் காலங்களிலும் இதற்கான முயற்சிகளை எடுப்போம். அதற்கான திட்டங்களும் உள்ளன.
இது குறித்து மினசோட்டாவில் வசிக்கும் தமிழர்களிடம் என்ன கூற விரும்புகிறீர்கள்?
மினசோட்டாத் தமிழ்ச் சங்கமானது தொடர்ந்து 12 ஆண்டுகளாக மினசோட்டாவில் தமிழ் மொழி சார்ந்தும், தமிழ் கலைகள் சார்ந்தும் நிகழ்வுகளை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. உதாரணமாகத் தோல்பாவை கூத்துக் கலைஞர் திரு. அம்மாபேட்டை கணேசன், நாடகக்கலைஞர் திரு. வேலு சரவணன், தமிழிசை கலைஞர் திரு. திருபுவனம் ஆத்மநாதன் ஐயா, திரு. சீர்காழி சிவசிதம்பரம், திரு. ஈரோடு தமிழன்பன், திரு. சகாயம் IAS, திரு. மயில்சாமி அண்ணாதுரை, திரு. சிலம்பொலி செல்லப்பனார், தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறை கலைஞர்கள் மற்றும் எண்ணற்ற பல தமிழ் நாட்டுப்புற இசைக் கலைஞர்களை, தமிழ் இலக்கியப் பேச்சாளர்களைத் தொடர்ந்து மினசோட்டாவிற்கு அழைத்து வந்து நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டு இருக்கிறோம். தமிழ் கலைகளை இங்குள்ளவர்கள் கற்றுக்கொள்ளப் பல வழிகளை ஏற்படுத்திக்கொடுத்து வந்துள்ளோம். மினசோட்டாவில் உள்ள தமிழர்கள் தொடர்ந்து இதுபோன்ற கலைகளைக் கற்றுக்கொண்டு, தங்களையும் அக்கலைகளில் ஈடுபடுத்திக்கொண்டு அந்த முயற்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வந்தால், நம் தமிழ்க்கலைகள் மினசோட்டாவில் தழைத்தோங்க உறுதுணையாக இருக்கும்.
இந்தப் பிரகடனத்தைப் பின்வரும் அரசு தளத்தின் இணைப்பில் காணலாம்.
- சரவணகுமரன்
Congratulations! Glad to be a part of this community.