\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

வட்டிக்காரி

Filed in கதை, வார வெளியீடு by on January 7, 2020 0 Comments

வட்டிக்கு பணம் கொடுக்கும் மாரியம்மாளிடம் குப்பக்கா சொன்ன செய்தி அவள் வயிற்றில் அக்னி ஜூவாலையை உருவாக்கியது. கோடி வீட்டு சுப்பத்தாள் நன்றாகத்தானே இருந்தாள். நேற்று மாலை மூன்று மணிக்கு வந்து அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு பணம் பத்தாயிரம் வாங்கி சென்றாளே !

குப்பக்கா கதவை திறந்த உடன் இந்த செய்தியை சொல்லுகிறாளே, உண்மையாய் இருக்குமா? அப்படி பொசுக்கென்று போகிற உடம்பா அது ? ஆள் நல்ல திட்காத்திரமாகத்தானே இருந்தாள். பணம் வேறு பத்தாயிரம் வாங்கிட்டு போனாளே. அவ்வளவுதானா? நினைக்கும்போதே ஆங்காரம் பீறிடுகிறது. அதெப்படி விட முடியும், பணம் என்ன மரத்துலயா காய்க்குது, மாச மாசம், வட்டிய கரெக்டா கொடுத்துடுவேன்னு வாங்கிட்டு போனவதானே. இத்தனை வருசம் ஒழுங்கா கொடுத்துட்டுத்தானே இருந்தாள். போன மாசம்தாம் எல்லா கடனும் அடைச்சுட்டு நேத்து பத்தாயிரத்தை இந்த கையால வாங்கி எண்ணிட்டு போனாளே?

இப்ப போயி பாக்கலாமா? வேணாம் வட்டிக்காரி இழவுக்கு முதல்ல வந்து நின்னுட்டான்னு பேசுவானுங்க. இவனுங்களுக்கு பணம் வேணுங்கற போது உங்களை மாதிரி யாரும் கிடையாது அப்படீன்னு பேசறது, இல்லையின்னா கண்டபடி பேசறது. நினைக்குபோது அவர்களை காறி துப்ப வேண்டும் போல் இருந்தது.

வாசலில் நின்று பார்த்தாள். நாலைந்து பெண்கள் அவள் வீடு தாண்டி சுப்பத்தாள் வீட்டுக்கு செல்வது தெரிந்தது. இவளை பார்த்தவுடன் ஒருத்தி என்ன மாரியம்மா சுப்பத்தா வீட்டு சேதி கேட்டியா? ம்..கேட்டேன், வாறீயா? இல்லை நீங்க போங்க, நான் புறவு வாறேன், உள்ளே நுழையும் முன் அந்த கூட்ட்த்தில் ஒருத்தி குசுகுசுவென பேசுவது போல் இவள் காதில் விழுகட்டுமென்று பேசினாளோ தெரியாது. அவளே பணம் போச்சுன்னு கவலையில இருப்பா, இப்ப போயி நீ அவளை கூப்பிடறே?

சுருக்கென்று பதில் சொல்லலாமென்று திரும்பியவள் வேண்டாம் இந்த சனியன்கள் கிட்டே காலையில சண்டை எதுக்கு? நினைத்தவள் யார் அவள் பேசியது என்று அந்த கூட்டத்தை ஊடுருவி பர்ர்த்தாள். பேசியவள் இவள் பார்ப்பதை கண்டு அப்படியே அந்த கூட்டத்துக்குள் பதுங்குவது தெரிந்தது. இந்த அசைவே அவளை நன்றாகவும் அடையாளம் கண்டு கொள்ளவும் இவளுக்கு உதவியது..

காமாட்சி கிழகோட்டுல இருக்கற மருதன் பொண்டாட்டி, மாசமானா பஞ்ச பாட்டு பாடி காசு கடன் வாங்கறதுக்கு நிக்கறவ. அவ இன்னைக்கு வாய் துடுக்கா பேசிட்டு போறா,

ம்..அடுத்த வாட்டி வரட்டும், விளக்குமாத்தால நாலு சாத்து சாத்தறேன். காலையில இந்த சனியன்களோட…

கணவன் மாரியம்மா..கூப்பிடும் குரல் கேட்கவும் சட்டென்று உள்ளே போனாள். அவனுக்கு வாதம் போல் வந்து விட்டதால் கட்டிலோடு சரி, ஏதோ தட்டு தடுமாறி பாத்ரூம் போய்க்கொள்வான். மற்றபடி மாரியம்மா அவனுக்கு சமைத்து சாப்பாட்டை பக்கத்தில் வைத்தால் வலது கையால் மிகுந்த கஷ்டப்பட்டு சாப்பிடுவான். தண்ணீர் குடிப்பதும் அப்படித்தான். தண்ணீர் டம்ளரை அருகில் கொண்டு வைக்கவேண்டும்.

இந்த அளவு கூட, வீட்டிற்கு வந்த கை கால அசைக்க பயிற்சி கொடுக்கும் டாக்டர் தம்பி வந்துதான் பழக வைத்தது. அதற்கு முன்னர் எல்லாமே மாரியம்மா தான். பாத்ரூம் கூட்டி போறது முதல் சாப்பிட வைப்பது வரைக்கும்.

இப்ப தண்ணீர் ஊற்றி வைத்தால் தானாக குளிக்க கூட முயற்சிக்கிறார். ட்வலால் உடம்பை துடைப்பதற்கு மட்டும் ஆள் வேண்டும்.

இந்த மூன்று வருடங்களில் மாரியம்மாள் பட்ட துன்பம் யாருக்காவது தெரியுமா? இவ்வளவு வியாக்கியானம் பேசி விட்டு செல்லும் இந்த பெண்கள் இவள் கஷ்டப்பட்ட காலத்தில் எத்தனை முறை உதவியிருக்கிறார்கள். ஏதோ இவளது பையன் வேலைக்கு சென்று சம்பாதித்து கொண்டு வருகிறான். அதை கூட இவள் தொடுவதில்லை. அவனது கணக்கிலேயே வைத்து பார்த்துக் கொள்கிறாள். நாளைக்கு அவன் குடுமப்த்துக்கு வேணும்னா யார் கைய்யும் எதிர்பார்க்க கூடாது.

இந்த பணம் முழுக்க முழுக்க இவள் கணவனுக்கு வந்த பணிக்கொடை பணம். அவனுக்கு ஓய்வு பெற இன்னும் கொஞ்ச நாட்கள் இருந்தன், என்றாலும் இனி வேலை செய்ய முடியாது என்பதால் முழு காலம் கணக்கிட்டு அவன் வேலை செய்த கம்பெனி இந்த பணத்தை கொடுத்தது. அது போக ஓய்வூதியமாக கொஞ்சம் தொகையும் வருகிறது. அந்த பணத்தை இப்படி வட்டிக்கு விட்டு இவளுக்கும், புருசனுக்கும் ஏற்படும் மருந்து மாத்திரை செலவுகளை ஒப்பேற்றி கொள்கிறாள். இதை பற்றியெல்லாம் இவளுகளுக்கு என்ன தெரியும். மாரியம்மா வட்டி வாங்கறா, இவ்வளவுதான்.

அப்படி வயித்துல வாயில அடிச்சுக்கற மாதிரியா வாங்கறா? அடுத்த தெருவுல அம்புஜக்கா நூத்துக்கு பத்து போட்டு வாங்குது, அது கிட்டே போய் வாய் கொடுக்கறது, போட்டு தச்சுடும். மனதுக்குள் நினைத்தவள் தானாக சிரித்துக்கொண்டாள்.

ஏம்புள்ளே சிரிக்கறே? கணவன் அவள் முகத்தை பார்த்து கேட்கவும் ஒண்ணுமில்லையா, இந்த பொம்பளைகளை நினைச்சு வயிரெறிஞ்சு சிரிக்கிறேன், சொன்னவள், சரி நீ தனியா இருப்பியா நான் சுப்பத்தாள் வீட்டு வரைக்கும் போயிட்டு வாறேன்.

ஏன் எதுக்கு? இவன் கேட்கவும் அவள் சுப்பத்தாள் போயிட்டாளாமா? குரலில் வருத்தம் மேலிட சொன்னாள். அப்படீன்னா? அவனின் பார்வை நேற்று சுப்பத்தாள் வீட்டில் இவனுடனும் பேசி விட்டு மாரியம்மாளிடம் பணத்தை வாங்கி சென்றதை பார்த்தவன், கேள்விக்குறியுடன் இவளை பார்க்க, பார்க்கலாம், கிடைக்கலியின்னா போகட்டும்னு விட்டுட வேண்டியதுதான், வருத்தமாய் சொன்னவள், சரி நான் கதவை சாத்திட்டு ஒரு எட்டு பாத்துட்டு வந்துடறேன், கிளம்பினாள்.

சுப்பத்தாள் வீட்டில் இவளை கண்டவுடன் பெண்கள் மெல்ல பதுங்கினர். அந்த கூட்டத்தில் ஒருத்தி பேசியதை மாரியம்மாள் கவனித்து விட்டாள் என்பது எல்லோருக்கும் தெரிந்து விட்டது. இனி மாரியம்மாளிடம் முகம் கொடுப்பது எப்படி என்று தயக்கம்.

சுப்பத்தாளின் புருசனிடம் சென்று எப்படியாச்சு என்றாள். அவன் துண்டை வாயில் திணித்தபடி விடியக் காலையில திடீருன்னு எந்திரிச்சவள் நெஞ்சு வலிக்குது அப்படீன்னு சொல்லிட்டு விழுந்துட்டா, ஓடி வந்து பார்த்தா எல்லாம் முடிஞ்சு போயிடுச்சு, மெல்ல அவனை ஆறுதல் படுத்தி விட்டு அந்த பெண்கள் கூட்டத்தை விட்டு சற்று தள்ளி உட்கார்ந்தாள். அரை மணி நேரம் உட்கார்ந்து விட்டு துக்கத்துடன் வீட்டுக்கு கிளம்பினாள். சுப்பத்தாள் கரெக்டாக வட்டியையும் அசலையும் அடைப்பவள். இதுவரை ஒழுங்காக கொடுத்து வ்ந்தவள். சரி அவளுக்கு கொடுத்ததாக இருக்கட்டும், மனசுக்குள் ஒரு வெறுமையை உணர்ந்து அப்படியே வீட்டுக்கு கிளம்பினாள்.

இரவு ஏழு மணி இருக்கலாம், கதவை தட்டும் சத்தம் கேட்டு திறந்தவள் வாசலில் சுப்பத்தாளின் பையன் நின்று கொண்டிருந்தான். வா..வா. உள்ள வா அன்புடன் சொன்னாள் மாரியம்மாள்.

இல்லீங்க நான் போகணும், வீட்டுல உறம்புறைங்க இருக்கறாங்க, இந்தாங்க உங்க பணம் என்று நேற்று சுப்பத்தாளிடம் இவள் கொடுத்த பணத்தை கொடுத்தாள். அதிர்ச்சியாய் நின்று விட்ட மாரியம்மா தம்பி இந்த பணம் இப்ப எதுக்கு கொண்டு வந்து கொடுக்கறே?

இல்லீங்க அம்மா என்னோட காலேஜ் பீசுக்காக வாங்கி வச்சிருந்தாங்க, அப்பா நேத்து இராத்திரி வந்து அம்மாகூட சண்டை போட்டு அந்த பணம் எனக்கு கண்டிப்பா வேணும்னு நின்னாங்க, அவர் கிட்டே போனா அது குடிச்சே அழிஞ்சிடும்னு தெரியும். அதனால அப்பாவோட சண்டை போட்டுட்டு அந்த பணத்தை பத்திரமா என் கிட்டே கொடுத்து வச்சிருந்தாங்க, ஆனா காலையில எங்கம்மா…ஹார்ட் அட்டாக் வந்து சொல்ல சொல்ல பையன் கண்களில் கண்ணீர் ஆறாக பெருக விக்கி விக்கி அழ ஆரம்பித்தான். இனிமேல் இந்த பணம் எனக்கெதுக்கு? நான் படிக்கறதையே நிறுத்தலாமுன்னு முடிவு பண்ணிட்டேன்.

மாரியம்மாள் சட்டென அந்த பையனை அணைத்து கொண்டவள், இங்க பாரு அழுவாதே, இந்த பணம் இப்ப என் கிட்டே இருக்கட்டும். உங்கம்மா காரியம் எல்லாம் முடிஞ்ச பின்னால நானே வந்து உன் காலேஜ் பீசை கட்டிடறேன், நானில்லாட்டி என் பையனை அனுப்பி கட்டிடறேன். நீ போய் மத்த வேலை எல்லாம் பாரு, படிப்பை மட்டும் நிறுத்திடாதே. உனக்கு எவ்வளவு ஆனாலும் நான் கட்டறேன். நீ திருப்பி தரணும்னு அவசியமில்லை, நல்லா படிச்சு, உன் தம்பி, தங்கச்சிகளை பார்த்துக்கிட்டா போதும். போ..அவனை அனுப்பினாள்.

இதை அருகில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்த மாரியம்மாளின் கணவன் தன் இரு கைகளையும் தூக்கி அவளை பாராட்டுவது போல காட்டினான். அதை பார்த்த மாரியம்மாள், கணவனின் இரு கைகளும் ஒன்றாய் செயல்படுவதை ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.

-தாமோதரன் ஸ்ரீராமுலு, கோவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad