\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

இதுவா வாழ்க்கை?

தொலைக்காட்சிப்   பெட்டிநம்மின் வீட்டிற்   குள்ளே

தொகைகொடுக்க   வந்தபின்னே புத்த  கங்கள்

விலைகொடுத்து   வாங்குவதை நிறுத்தி   விட்டோம்

வீற்றிருந்து   படிப்பதையும் விட்டு  விட்டோம் !

அலைபேசி   நம்கைக்கு   வந்த பின்போ

அழகான   கையெழுத்தில்   நலங்கள் கேட்டுக்

கலையாக   எழுதிவந்த   கடித மெல்லாம்

காணாமல்  போனதுவே கையை   விட்டே !

 

பொன்னாக   மேசையின்மேல்   கணினி வந்தே

பொலிவாக  அமர்ந்தவுடன்  கையால் நாமும்

பன்னாளாய்  எழுதியதை விட்டு  விட்டோம்

பழகிவைத்த   மணலெழுத்தை மறந்து  விட்டோம் !

இன்முகமாய்க்   குளிர்பதனக் கருவி  வந்தே

இரவுபகல்   கதவடைத்தே அமர்ந்த   போது

நன்றாக   நுகர்ந்துவந்த   இயற்கை காற்றின்

நன்மையினை   நாமிழந்தே செயற்கை   யானோம் !

 

இருசக்கர   வாகனங்கள் மகிழுந்   தென்றே

இல்லத்து   முற்றத்தில்   நின்ற போது

இருகாலால்  கைவீசி காலை   மாலை

இருவேளை   நடந்ததெல்லாம்   நேற்றா யிற்று !

பெரும்வசதி   எனநகரின் குடியேற்  றத்தால்

பெற்றுவந்த   கிராமத்தின் எழிலை  யெல்லாம்

அருமையான  ஆற்றோரத் தோப்பை  யெல்லாம்

அமைதியான   சூழலையும் இழந்து   விட்டோம் !

உடலெல்லாம்   வாசனையின் திரவி   யத்தை

உள்ளுக்கும்   உடைகளிலும் தெளித்த  தாலே

மடலவிழ்ந்த   அழகினிலே மலர்கள்   வீசும்

மணமறிய   மூக்கிற்கு   முடிய வில்லை !

படபடக்கும்   எந்திரமாய் ஓடும்   வாழ்வில்

பதப்படுத்தி   வைத்திருக்கும்   உணவை உண்டும்

நடமாடும்   உணவகத்தில்   வாங்கி யுண்டும்

நலம்கொடுத்த   பரம்பரையின் உணவை   விட்டோம் !

 

புலனம்தான்   அலைபேசிக் குள்ளே   வந்து

புன்னகைத்து   பேசியதைத் துரத்தி  விட்டு

நலம்தானா   என்பதையும்   எழுத்தின் மூலம்

நமையெழுத   வைக்கவாயை மூடிக்   கொண்டோம் !

உலவுவதை   விட்டுவிட்டோம்   வீட்டிற் குள்ளே

உடன்பிறந்தோர்   பெற்றவர்கள் இருந்த   போதும்

கலகலப்பாய்ப்   பேசுவதை விட்டு  விட்டுக்

கணினிக்குள்   பேசிக்குள் முடங்கிக்   கொண்டோம் !

 

என்னயிந்த   வாழ்க்கையிது   விஞ்ஞா னத்தால்

எல்லாமே  பெற்றதுபோல்   இழந்து விட்டோம்

முன்னோரின்   உடல்நலத்தை நேயந்   தன்னை

முன்காலை  எழுகின்ற பழக்கந்   தன்னை

அன்போடு   வாழ்ந்தகூட்டுக்  குடும்பம் தன்னை

அரவணைத்தச்   சுற்றத்தை உறவு   தன்னை

என்றனைத்தை   தொலைத்துவிட்டுப்   பணத்தி னாலே

எதைப்பெற்று   வாழ்ந்தாலும் வாழ்வாய்   ஆமோ !

 

-பாவலர்  கருமலைத்தமிழாழன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad