புத்தகத் திறனாய்வு – மாயப்பெருநிலம்
சென்பாலனின் முன்னைய இரு நாவல்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட கதைக்களம்; ஈழப் போராட்டத்தின் இறுதிக் காலங்களில் தமிழகத்திற்குக் கடத்தப்படும் 40 கிலோ தங்கம் அங்கு விற்கப்பட்டு அந்தப் பணம் அன்று வெளிநாட்டிலிருந்த இயக்கப் பொறுப்பாளருக்கு மாற்றப்படுகிறது. அவர் அந்தப் பணத்தினை “பிட் கொயினாக” மாற்றி இரகசிய கணக்கில் வைத்திருக்கிறார். அவற்றின் மதிப்பு 21000 கோடி ரூபாக்கள் அந்த இரகசிய கணக்கினைத் திறப்பதற்கான குறிச்சொல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும்தான் தெரியும்; அவர்களில் ஒருவர் பேராசிரியர் ஜெயச்சந்திரன்.
அவரை நம்ப வைத்து அவரிடமிருந்து அதனைத் திருட ஒரு சிலர் திட்டம் போடுகிறார்கள். பேராசிரியர் ஏமாந்தாரா, அந்தப்பணம் என்னவானது என்பதே கதை.
மிக விறுவிறுப்பான நாவல்; கதையாசிரியர் சென் பாலனின் இலக்கிய அறிவு பிரமிக்க வைக்கிறது. இடையிடையே சில வரலாற்றுக் கதைகளையும் தொட்டுச் செல்கிறார். ஆபுத்திரன் கதை, நயினாதீவின் பழைய வரலாறு, பல்லவ குலத்தோன்றலான இளந்திரையன் கதை என்பன முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவை.
ஈழத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் சிலரை வஞ்சகமில்லாமல் வைச்சு செய்திருக்கிறார். “ஆடிட்டர் நந்தா” இளந்திரையன், பேராசிரியர் ஜெயச்சந்திரன் என்பன மனதைவிட்டு அகலாத பாத்திரங்கள். திராவிட அரசியலில் ஒரு உறுப்பினரான கதையாசிரியர் “திராவிடத்தால் விழுந்தோம்” “இலவசத்தால் விழுந்தோம்” எனும் வாக்கியங்கள் மீதுள்ள வெறுப்பையும் தொட்டுக் காட்டிச் செல்வது வியப்பாக உள்ளது.
மொத்தத்தில் நல்ல நாவல் படித்த திருப்தியுடன் சென்பாலனிடமிருந்து இன்னும் நிறைய எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”
நன்றி
தியா