\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

அமெரிக்கன் கனவும் தற்போதய நனவும்

நீங்கள் இன்று பணக்காரப் பெற்றார்களுக்கு அமெரிக்காவில் பிறந்து இருந்தீர்களே ஆயின் உங்கள் வாழ்வு மீதி மக்களிலும் திடகாத்திரமானது. அதாவது உங்கள் வாழ்வில் முன்னேற அதிக சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகள் சாதகமாக உண்டு என்கிறது அண்மையில் வெளியான “The global social mobility report 2020” புதிய அறிக்கை.

வளர்முக நாடுகளில் இருந்து அமெரிக்கா வந்து குடியேறிய தமிழருக்கு இதில் என்ன புதிய செய்தி இருக்க முடியும் என்று சிந்தித்துக் கொள்ளலாம். ஆயினும் இது அமெரிக்க ஐதீகத்திற்குச் சவலான ஆதாரங்களுடனான ஒரு கணிப்பே ஆகும்.

சமூக நகரும் தன்மை (social mobility)

இது பிள்ளைகள்,தமது பெற்றார் சந்ததியில் இருந்து ஒப்பீட்டளவில் சமூக பொருளாதார நிலைமையில் உயர்ந்துள்ளனரா என்ற கணிப்பே ஆகும். இன்றய அமெரிக்க சூழல் இவ்விடத்தில் பெரும்பான்மையான மக்களுக்கு ஒத்தாசையாக அமைந்து கொள்ளவில்லை என்பதே இந்தக் கட்டுரையின் தலையாய செய்தி. வறுமையான குடும்பங்களில் பிறந்தவர்கள் வீடு வாங்குதல், நல்ல கல்வி பெறுதல்,தமது பெற்றோரிலும் நல்வாழ்வு அமைத்துக் கொள்ளும் வாய்ப்பு இன்று கனடாவில் பிறந்தவர்களுக்கு உண்டு. ஆயினும் அமெரிக்கருக்கு இந்த அருகதை கிடையாது என்று இந்த அறிக்கை மேலும் சுட்டிக் காட்டுகிறது. எனவே இதை நாம் இன்னொரு வகையிலும் குறிப்பிடலாம். அமெரிக்கன் கனவு கனடாவில் தான் நனவாகிறது.

அமெரிக்கன் கனவு (American Dream) என்றால் என்ன?

பாரபட்சம் இன்றி அவரவர் திறமை, முயற்சிக்கு ஏற்ப அவரவர் வாழ்வு சிறப்பாக,நிறைவாக,செல்வத்துடன் வாழும் சந்தர்ப்பம் தரும் நிலம் அமெரிக்கா. இது 1931இல் பிரசுரமான “The Epic America” எனும் புத்தகத்தில் அமெரிக்க எழுத்தாளர்,வரலாற்றாசிரியர் ஜேம்ஸ் ரஸ்லோ அடம்ஸ் (James Truslow Adams 1878 – 1944) குறிப்பிட்டிருந்தார். இதுவே நாட்டின் நம்பிக்கையாக அமெரிக்க மக்களை பல தலைமுறைகளாகக் கட்டியெழுப்பியது எனலாம். ஆயினும் இந்தச் சிந்தனை இன்றும் தொழிற்பாட்டளவில் உண்டா என்று பார்க்கும் போது பெரும் கேள்விக்குறிகள் மாத்திரமே எஞ்சியுள்ளன எனலாம்.

எனவே மேற்குறிப்பிடப் பட்ட அமெரிக்கா பற்றிய தகவல் பாரபட்சம் இன்றி வெளிவரும் உலக பொருளாதார சமூகவியல் அட்டவணையில் இருந்து பெறப்பட்டது. இந்த அட்டவணையனது உலகின் 87 நாடுகளைத் தனது கணிப்பில் எடுத்துக் கொள்ளுகிறது.

இந்தக் கணிப்பு பிரதானமாக ஒவ்வொரு நாட்டுப் பிரசைகளும் தமது முழுத்திறமையையும் கொண்டு, தமது தற்போதய சமூக பொருளாதார நிலையில் இருந்து உயர்வு அடைய வழிவகைகள் உள்ளனவா என்பதைக் கணித்துக் கொள்கிறது.

அட்டவணை இந்த வருடம் 2020 ஜனவரியில் 20ம் திகதி டவோஸ் G7 எனும் உலக பொருளாதார சம்மேளன மாநாட்டை குறியாக வைத்து, முன்கூட்டி வெளியிடப்பட்டது. இந்த G7 பணக்கார நாடுகள் மாநாட்டில் வருடாவருடம் உலக மக்கள் வருமான பாரிய உயர்வு தாழ்வு இடைவெளிகள் பற்றி உரையாடப் படும். இதற்கான நிவாரணம் பற்றியும் பணக்கார நாட்டு ஒத்தாசைகளும் குறிப்பிடப்படும்.

உலக சமூக நகருதன்மை அறிக்கை 2020

இந்த அறிக்கை அட்டவணை ஐந்து பிரதான பரிமாணங்களில் கணிக்கப்படுகிறது. அவையாவன; கல்வி, சுகாதாரம், தொழில்நுட்ப இயலுமை, பாதுகாப்பு போன்ற தலையாயவற்றிலும், அந்தந்த நாட்டு அரசு, தனியார் சேவை தாபனங்கள் போன்றவையும் அந்தக் கணிப்பில் உள்ளெடுக்கப்படும்.

அடுத்து நாம் G7 எனப்படும் உலக பணக்கார நாடுகளையும், அவர்கள் பிரசைகள் சூழலையும் எடுத்துப் பார்க்கலாம்.

G7 நாடுகள்

G7 என்பது Group of 7 எனும் உலகில் பணக்கார நாடுகள் குழுமியம் ஆகும். இவை குழுமிய நாட்டு அரசுகளின் பொருளாதார அமைப்புக்கள், மற்றும் பெரும் பணக்கார தாபனங்கள், தனிப்பட்டோர் கலந்த ஒரு ஒன்றியம். இந்தக் குழுமியம் உலகில் பெரும்பணமுள்ள அனைத்துலக நாணய நிதியம் (International Monetary Fund IMF) கடன் கொடுக்கும் நாடுகளையும் உள்ளடக்கியது. இதில் கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, யப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா அங்கம் வகிக்கின்றன. இந்த ஏழு நாடுகளும் 2018இல் அகில உலகின் 58% சதவீதமான நிகர செல்வத்தை net wealth கொண்டிருந்தன. இந்தச் செல்வம் சுமார் 317 ரில்லியன் அமெரிக்க டொலர்களுக்குச் சமன். இத்துடன் அனைத்துலக உற்பத்தியில் global gross domestic product (global GDP) 46% சதவீத்தையும் கொண்டிருந்தன. மேலும் உலகின் 36% சதவீதமான வாங்கும் பலத்தையும் purchasing power கொண்டுருந்தன. வழக்கமாக GDP கணிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்திக் கணிப்பையே குறிப்பிடும்.

டாவோஸ் சுவிஸ்ஸலாந்தில் இவர்கள் வழக்கமாக தை மாதம் கூடும் போது நாம் அதைச் செய்தோம் இதைச் செய்தோம் என இந்த பணக்கார நாடுகளில் சிலர் தம்பட்டம் போடுகினும் சில அடிப்படை சமூக மேம்பாட்டு விடயங்களை அடுத்துப் பார்க்கலாம்.

G7 நாடுகளில் சமூக மேம்பாட்டு அட்டவணையில் ஜெர்மனி உயரிடம் மாகிய 11 வது தானத்தை இவ்வருடம் பெறுகிறது. பிரான்ஸ் 12, கனடா 14, யப்பான் 15, இங்கிலாந்து 21, அமெரிக்கா 27, அதே சமயம் இத்தாலி 34வது இடந்தையும் பிடித்துள்ளன. ஒரு விதத்தில் பார்த்தால் செல்வந்த நாடுகள் தமது பிரசைகள் மேம்பாட்டில் பின்தங்கியுள்ளதையே எடுத்துக் காட்டுகிறது. அதாவது நாட்டில் நடைபெறும் பொருளாதார மேம்பாடுகள் பிரசைகளுக்கு பாரிய சமமற்ற சூழ்நிலையில் பகிரப்படுகிறது.

நாம் வட ஐரோப்பிய (Nordic) நாடுகளை எடுத்துப் பார்த்தால் அவற்றின் பிரசைகள் வாழ்வு ஆரோக்கியமாகவே உள்ளது. டென்மார்க், பின்லாந்து.நொர்வே,சுவீடன்,ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் சமுக மேம்பாட்டுக் கணிப்பில் மிகவும் உயர்ந்த தானத்தைப் பெற்றுள்ளன. இதன் காரணி அந்த நாடுகளின் ஆழமான பொதுநல சிந்திப்பே ஆகும்.

உலகின் வளர்முகப் பெரும் பொருளாதார நாடுகளாகிய ரஷ்யா 39, சீனா 45, பிரேசில் 60, இந்தியா 76, தென் ஆபிரிக்கா 77வது தானத்தையும் பெற்றுள்ளன.

இந்த உலக சமூக நகரும் தன்மை 2020 அறிக்கையின் தலைப்புச் செய்தி என்னவென்றால், பெரும்பாலான உலக நாடுகள் தமது பிரசைகள் வாழ்வில் முன்னேற வேண்டிய வழிவகைகளை உருவாக்கித் தரத் தவறியுள்ளன. இதனால் இப்பேர் பட்ட நாடுகளின் பிரசைகள் எப்பேர் பட்ட முயற்சிகளைச் செய்யினும், அவர்கள் வாழ்க்கைத் தரும் உயரமுடியாத சூழலில் சிக்கித் தவிக்கின்றனர் எனலாம். இதனை வரலாற்று ரீதியில் பார்க்கும் போது, சாதாரண மக்கள் பாரிய பொருளாதார சமமின்மை எனும் பாரிய குழியில் தொடர்ந்தும் இருப்பதையே சுட்டிக்காட்டுகிறது.

அமெரிக்கா பற்றிய சில அடிப்படை உண்மைகள்

நாம் இன்றய அமெரிக்காவை எடுத்துப் பார்த்தால் பல அசௌகரியமான விடயங்கள் அம்பலமாகும். ஒருவர் இன்று வறிய குடும்பத்தில் பிறந்திருந்தால், அவர் சந்ததி மத்திம ஊதியம் பெறும் சராசரி நிலைக்கு உயர 5 தலைமுறைகள் எடுக்கின்றது. இந்த விடயம் வறுமையில் இல்லாத மத்திம ஊதிய மக்களே அறிந்து கொள்ளாத விடயம். ஒரு அபிவிருத்தி அடைந்த நாடு இப்பேர் பட்ட சூழ்நிலையில் இருக்கத் தேவையில்லை. எம் நாடு அரசியல் ஐதீகம், நிறப் பிளவுகள், சுயநல வர்த்தக-அரசியல் செல்வாக்காளர் என பலவகையில் பந்தாடப் பட்டு பொதுநல மேம்பாடு என்ற விடயம் ஐம்பது ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதன் பாரிவிளைவே இன்றய நிலைப்பாடு. ஆனால் சமூக மேம்பாடு அடைய அரசியல் ஐதிகங்கள் கிழித்துப் பொதுநல சிந்தனையில் மக்கள், அவர்கள் பிரதிநிதிகள் அக்கறை செலுத்த வேண்டும். உதாரணமாக, அமெரிக்க வரலாற்றை எடுத்துப் பார்த்தால் 1970 களில் அமெரிக்காவில் இரண்டு தலைமுறைகளில் வறுமையில் இருந்து சராசரி வாழ்வை அடைய முடிந்தது.

கணிப்பளவில் சில விடயங்களில் அமெரிக்க அரசியல்வாதிகள், அட்டவணைப்படி அமெரிக்கத் தலைமுறை வறுமையில் இருந்து சராசரி வாழ்வு நிலைமையை அடைய தாம், ஜெர்மன்,பிரான்ஸ் நாடுகளை விடத் திறமானது என்று தம்பட்டம் அடிக்கலாம். ஆயினும் அமெரிக்கா அயல் நாடாகிய கனடா, அவுஸ்திரேலியா,டென்மார்க் போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது மிகவும் பின்தங்கியே காணப்படுகிறது. மேல் குறிப்பிட்ட நாடுகளில் வறுமையில் இருந்து விடுபட ஓரிரு, மூன்று தலைமுறைகளே செல்கிறது. ஆயினும் அது அமெரிக்காவில் ஆகாத விடயம். எனவே இன்று 2020இல் அமெரிக்கன் கனவு நனவாகும் நாடு கனடாவே.

சமுக பொருளாதார தலைமுறை இடைவெளி அட்டவணை 

மேலுள்ள அட்டவணையின் படி டென்மாராக்கில் வறமையில் பிறந்த பிள்ளையும், செலவந்தத்தில் பிறந்த பிள்ளையும் தம் வாழ்வில் மேம்பட சமான வாய்ப்புக்களை அந்த நாட்டில் கொண்டுள்ளனர். இதன் பிரதான காரணி டென்மார்க் நாட்டின் பக்குவமாக அமைக்கப் பட்டுள்ள சிறந்த பொதுப்பாடசாலைக் கல்வி, நல் தொழில் வாய்ப்புச் சந்தர்ப்பங்கள், ஒத்தாசையான சுழல், மற்றும் நாட்டின் சிறந்த பொதுநல காப்புத்திட்டங்கள். இதே போன்று ஜெர்மனி,பிரான்ஸ் நாடுகளிலும் நல்ல பொதுநல காப்புத்திட்டங்கள், நியாயமான வருமானம், போன்றவற்றில் அமெரிக்கவை விட உயர்ந்த தானத்தில் உள்ளன.

அமெரிக்காவின் உழைப்பாளிகள் அருகதை

ஒருகாலத்தில் அமெரிக்கா; ஐரோப்பிய சமூகவர்க்கம் போலன்றி சதாரண குடிமக்கள் எதையும் சாதிக்கலாம் என்ற சிந்தனையை வளர்த்து வந்தது. ஆயினும் 1970களில் பொதுமக்கள் பெரும் பொருளாதார பிரிவுகள் ஆரம்பித்தன. இவை ஆரம்பத்தில் பெரிதாகப் பொது மக்கள் உணர்ந்து கொள்ளவில்லை. ஆயினும் படிப்படியாக சென்ற 50 ஆண்டுகளில் பெரும் பிளவாகி விட்டது.

அமெரிக்க உயர் வருமானம் உடையோர், அதாவது 1% சதவீத மிகப்பெரிய செல்வந்தர் தாம் 1970களில் பெற்ற வருமானத்திலும் 2018இல் 158% சதவீதமான வருமானத்தைப் பெற்றுக் கொண்டனர். அதே காலப் போக்கில் நாட்டின் 90% சதவீதமான மக்களின் வருமானம் 24% சதவீத உயர்வையே கண்டது. விலை வாசிகள் கடந்த 50வருடங்களில் அதிகரித்தும் அதற்கேற்ப பெரும்பான்மை மக்கள் வருமானம் உயரவும் இல்லை அவர்கள் சமுக உயர்வும் முட்டுக்கட்டையானது.

செல்வந்தர் சிறுகதை

இதே சமயம் இன்று பணக்காரக் குடும்பங்களில் இருந்து வரும் பிள்ளைகள் பிறப்பினால் பல பாரிய அந்தஸ்த்துக்களையும் பெற்றுள்ளனர். இது உயரமட்டித்தில் குடும்பச் செல்வம் சேகரித்தல் மாத்திரம் அல்ல. பணக்காரக் குடும்பங்களில் இருந்து வரும் பிள்ளைகள் தமது சமூகத் தொடர்புகளைப் பாவித்தே வறியவர்களிலும், மத்திம வருமானம் பெறுவோரிலும் மூன்று மடங்கு தொழில்வாய்ப்புப் பெறும் ஆற்றலைக் கொண்டுள்ளனர் என்று அவதானிக்கப் பட்டுள்ளது. மேலும் IPSO (Independent Press Standards Organization) அறிக்கை சமூக பொருளாதார அந்தஸ்திலும் பணக்கார வீட்டுப் பிள்ளை, வறிய வீட்டுப் பிள்ளையிலும் இருண்டு மடங்கு சமூக சலுகைகளைப் பெறமுடிகிறது என்றும் தெரிவிக்கிறது.

மேலே குறிப்பிட்ட விடயம் வளர்முக நாட்டு மக்களுக்கு நிதர்சன விடயமாயினும், இது அமெரிக்க அடிப்படை ஐதிகத்திற்கு முரண்பாடாகவேயுள்ளது. யாரும் முயற்சி செய்தால் எதையும் சாதிக்கமுடியும் என்ற சிந்தனை, செயலளவில் இன்று ஆகாத விடயம் ஆயிற்று.

சமூக பொருளாதார சமமின்மையைச் சரி செய்தல்

உலக சமூக நகரும்தன்மை அறிக்கையின் படி நாட்டில் பணம்,செல்வம் சேகரிப்பு மிகச் சிறிய குழுவிடம் மாத்திரம் சேருவது நாட்டின் பொதுநலன் கருதித் தவிர்க்கப் பட வேண்டும். இது இலகுவான விடயம் அல்ல. ஆயினும் நாட்டின் சகல பிரசைகள் சார்பிலும் நாட்டின் நலம் நிர்ணயிக்கப் பட வேண்டும். அல்லாவிடில் அடுத்து வருவது மக்கள் பிரளயம், அல்லது கொடுங்கோல் ஆட்சியே. இது சனநாயகம் என்ற அமெரிக்க ஐதீகத்தையே தவிடு பொடியாக்கும் விடயம்.

எனவே பொதுவளவில் நாடு சம நிலைப்பாடு அடைய தனிப்பட்ட வருமான வரி,செலவந்த வரிகள் சிந்தித்து செயலில் கொண்டு வரப்பட வேண்டும். இதை எதிர்த்துப் போராட செலவந்தர் சிலரும், அவர்கள் அரசியல் செல்வாக்காளரும் துரிதமாக செயல்பட முனையினும், பெரும்பான்மைச் சமூகத்தின் பொதுநலம் பேண, பெறும் வருமானத்தைப் பொறுத்து முற்போக்கான வரிகள், அத்துமீறி அதிவருமானங்களை உண்டு பண்ணும் பொருளாதார சாதனங்களைக் குறிவைத்து தணிக்கைச் சட்ட செயற்பாடுகள் கொண்டு வரப்பட வேண்டும்.

அதேவேளை சமூக பொருளாதார மேம்பாட்டுக்கு உதவும் வகையில் நாட்டில் உயர்தரமான பொதுக்கல்வி, நியாயமான அடிப்படைச் சம்பளம், தொழில் வாய்ப்பில் திறனடைய உரிய பயிற்சி அனைவருக்கும் கிடைக்க வைக்கலாம். மேலும் தொழில் வாய்ப்பு இழந்தோர் குறுகிய காலத்தில் மீளவருமானம் உண்டுபண்ணிக்கொள்ள தொழில் அபிவிருத்திகள் மேற்கொள்ளப் படவேண்டும்.

அமெரிக்க வர்த்தக தாபனங்கள் ஆதாயம் பெற தொடர்ந்து தமது வேலையாட்களிலும் கவனம் செலுத்த வேண்டும். பாரபட்ச மற்ற வகையில் ஊழியர்களைத் தெரிவு செய்தல், நியாமான சம்பளம் தருதல், தொடர்ந்து ஊழியர் திறன்களை வளர்ப்பதில் மூலதனம் இடுதல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். இதுவே ஜேர்மன் நாட்டின் அடிப்படை அத்திவாரம். 

சமூக பொருளாதார சமின்மை தொடருதல், நாட்டவர் என்ற தேசிய எண்ணத்தைக் கிழித்து அழிக்க வல்லது. மேலும் குடிமக்கள் நாட்டின் தாபனங்களை நம்பிச் செயல்படுவதையும் தகர்க்கும். இது தொடரின் நாட்டின் சீரழிவுக்கே வழிவகை செய்யும். இதற்கு வரலாற்றுச் சான்றுகள் இறந்த பல நாகரிகங்களில் இருந்து உள்ளது.

அமெரிக்காவும், மற்றய சமூக மேம்பாட்டில் பின் தங்கியவர்களும் தமது நிலைமையே விழித்தெழுந்து உணர்ந்து கொள்ளவேண்டும். ஐம்பது வருட பொதுநல சூழல் புறிக்கணிக்கப்பட்டமை தொடரக் கூடாது. இது பல சந்திகளுக்குப் பாதகமாகும். இதை நேர் கொள்ள புதிய பாரபட்சம், அரசியல் ஐதீகங்களிற்கு அப்பாற் பட்ட சிந்தனைகளே என்று தேவை. அமெரிக்கன் கனவு அமெரிக்காலேயே நனவாக நல்லெண்ணச் சிந்தனை செயற்பாடுகளை நாம் ஒவ்வோருவரும் செய்ய முனைவோம், பொதுமக்கள் பிரதிநிதிகளக்குப் பரிந்துரைப்போம், சகபாடிகளையும் ஊக்குவிப்போவோம்.  

– யோகி –

உசாத்துணை நூல்கள்

  1. World Economic Forum – Global Scoial Mobility Report https://www3.weforum.org/docs/Global_Social_Mobility_Report.pdf
  2. https://www.cnbc.com/2020/01/21/wef-where-youre-born-determines-the-opportunities-you-get-in-life.html
  3. https://www.ipso.co.uk/monitoring/annual-reports/
  4. Oxfam Anual Report 2018-2019 https://oi-files-d8-prod.s3.eu-west-2.amazonaws.com/s3fs-public/2019-12/191219_Oxfam_Annual_Report_2018-19.pdf

Comments (2)

Trackback URL | Comments RSS Feed

  1. AaRaa says:

    Mr.Yogi. Very nice article. Well drafted in Tamil shows the efforts put into. Referendum adds value too. Keep it up and do put up such article. AaRaa

    • யோகேந்திரன் அருமைநாயகம் says:

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி AaRaa.
      நாம் அமெரிக்கத் தமிழர், இது எமது நாடு. இவ்விடம் வாழும் தமிழ் மக்களில் பெரும்பான்மையானோர் கை நிறைய வருமானம் சம்பாதிப்பவர்கள். எனவே இந்த நாட்டு ஏழ்மை, சமூக வித்தியாசங்கள் ஆழமாகக் கண்டு கொள்வதில்லை. ஆயினும் போகும் போக்கில் எமது அடுத்த தலைமுறைகள், அவர்கள் வாழ்வு அவர்கள் பெற்றார்களைப் போன்று தான் இருக்கும் என்றில்லை. எனவே எமது நாடு நல்ல நிலையை அடைய எமது சமூக,பொருளாதார விடயங்களை மக்களுக்கு முடிந்தளவு பாகுபாடுகள் இல்லாமல் எடுத்துச் சொல்ல முனைகிறேன். சனநாயகம் திளைக்க நாம் ஒவ்வொருவரும், வாக்குப் போடுவது மாத்திரமல்ல சமமின்மைகளைத் தணிக்கவும் பங்கு பெற்றி உழைப்பது நமது பிள்ளைகள் எதிர்காலத்திற்கான அத்திவாரமுமேயாகும்.

      பணிவுடன் யோகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad