கொடூர கொரோனா
யுஹான் ஊர்காரர்களுக்குச் சில நாட்களுக்கு முன்பு வரை இருந்த பெருமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. 11 மில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்த ஊர், சீனாவின் பொருளாதாரத்திற்குப் பெரும் பங்காற்றும் ஊர். சீனாவின் சிகாகோ என்று அழைக்கப்படும் ஊர் இது. உலகின் மிகப் பெரிய மின் நிலையம் கொண்ட ஊர். சீனாவின் மிகச் சிறந்த கல்வி நிலையங்கள் கொண்ட ஊர். அதனால் இவ்வூர்க்காரர்களுக்குச் சீனாவில் நல்ல மரியாதை உண்டு. இது எல்லாம் கடந்த டிசம்பர் மாதம் வரை தான். 2020 தொடக்கம் மற்றவர்களுக்கு எப்படியோ, யுஹான் ஊரைச் சேர்ந்தவர்களுக்குப் பேரிடியாக அமைந்து விட்டது.
கடந்த டிசம்பர் 31 ஆம் தேதியன்று சீனாவிலிருக்கும் சுகாதார அமைப்பு, இவ்வூர்காரர்கள் 44 பேருக்கு ஏதோ ஒரு அறியப்படாதக் காரணத்தால் நிமோனியா வந்துள்ளதாய் அறிவித்தது. நிமோனியா என்பது நுரையீரலைத் தாக்கும் நோயாகும். அதன் பிறகு, இந்த நோய் சீனாவுக்குள்ளும், பிற வெளிநாடுகளுக்கும் மிக வேகமாகப் பரவியது. சீன அரசு யுஹானைச் சுற்றி அரண் அமைத்தது. அதற்குள் யுஹானிலிருந்து பலர் வெளியூர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பயணம் செய்திருந்தனர். இவர்கள் யுஹானிலிருந்து வந்தவர்கள் என்று தெரிந்தாலே, மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கை உணர்வு வந்துவிட்டது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் இறக்க, யுஹான்காரர்கள் என்றாலே ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் கொடுக்க ஆரம்பித்தனர். தனியாக இருக்க வைத்தல், மருத்துவப் பரிசோதனை என்று அரசு நிறுவனங்கள் ஒருபக்கம் தனிமைபடுத்தலைச் செய்தால், இன்னொரு பக்கம் இங்கு வந்துவிடாதீர்கள் என்று தங்குமிடங்கள் போர்டு மாட்டாதக் குறையாக வெளியூர்களில் இவர்களைத் துரத்தியடித்தனர். நொந்துப்போன இவர்களுக்கு ஒவ்வொரு ஊரிலும் தனித் தனியாகத் தங்குமிடங்கள் அமைத்துத் தற்காலிக வசதி செய்து கொடுத்துள்ளது சீன அரசு. நோய், சாவு, தீண்டாமை என்று யுவானை, கொடுமைகள் கூறுப்போட்டு வருகிறது. ஊரே வீட்டிற்குள் முடங்கி வெறிச்சோடிக் காணப்படுகிறது.
இதற்கெல்லாம் காரணகர்த்தாவாக இருப்பது ஒரு கொடூர கொரோனா வகை வைரஸ் தான். கொரோனா வைரஸ் என்பது ஒரு பெரிய வைரஸ் குடும்பம். இதில் பல வகைக் கொரோனா வைரஸ்கள் இருக்கின்றன. பொதுவாக, இவ்வகை வைரஸ்கள் சளி, இருமல், காய்ச்சல் போன்ற உபாதைகளை மனிதர்களுக்குப் பரிசளிக்கும். 2003இல் சார்ஸ் என்று உலகைக் கதிகலக்கிய வைரஸ் கூட, இக்குடும்பத்திலிருந்து வந்ததுதான். தற்சமயம் உலகையே பீதிக்குள்ளாக்கி வரும் கொரோனா வைரஸ் வகையின் பெயர் – “2019 நொவல் கொரோனா வைரஸ்” (2019 Novel Corona Virus). சுருக்கமாக, “2019-nCoV”. இதன் பிறப்பு எங்குத் தொடங்கியது என்று இன்னமும் சரியாகத் தெரியவில்லை. முதலில் இது ஏதோ ஒரு மிருகத்திலிருந்து ஆரம்பித்து, தற்சமயம் மனிதர்களுக்குள் பரவத் தொடங்கியுள்ளது.
யுஹான் நகரில் இருக்கும் மீன் மார்க்கெட்டில் இப்பிரச்சினை ஆரம்பித்ததாகக் கைக்காட்டுகிறார்கள். இந்த மார்க்கெட்டிற்குச் சென்று வந்தவர்களிடமிருந்து தான், இந்த நோய் முதலில் தொடங்கியது என்கிறார்கள். சீனா இந்த நோயை பற்றி அறிவித்த பத்து நாளில், தாய்லாந்து தனது முதல் கொரோனா கணக்கை அறிவித்தது. அடுத்தது, ஜப்பான், கொரியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், நேபாளம், இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து என ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டுக் கணக்கை அறிவிக்கத் தொடங்கினர். தற்சமயம் 300 பேர் வரை இந்த நோயால் இறந்திருக்கிறார்கள் என்றும், சுமார் 14000 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் சனிக்கிழமை வரை 8 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க அரசு, சீனாவிற்குப் பயணம் செய்திருக்கும் எந்த வெளிநாட்டினரையும் அமெரிக்காவிற்குள் அனுமதிக்கச் சில காலம் தடை விதித்துள்ளது. 195 அமெரிக்கர்கள் யுஹானிலிருந்து மீட்டுக்கொண்டு வரப்பட்டு, கலிஃபோர்னியாவில் இருக்கும் தொற்றுநோய் ஒதுக்கிடத்தில் வைத்துள்ளனர். இது போன்ற ஒரு நிகழ்வு கடந்த 50 ஆண்டுகளில் நடந்ததில்லை என்கிறார்கள். சீனப் பயணம் கூடாது என்று தனது மக்களுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளது அரசு.
சீனா இந்த நோய்க்கென்றே ஒரு பிரத்யேக மருத்துவமனையை யுஹானில் பத்தே நாட்களில் கட்டியுள்ளது. 1000 கட்டில்களைக் கொண்ட இந்த மருத்துவமனையை அடுத்து, 1500 கட்டில்களைக் கொண்ட மற்றொரு மருத்துவமனையையும் கட்டி வருகிறது. அது இன்னும் ஒரு வாரத்தில் திறந்துவைக்கப்படும். சீனா இந்த நோயைக் கட்டுப்படுத்த தற்சமயம் வேகமாக முயன்று வந்தாலும், இந்த வேகத்தை முதலிலேயே காட்டி இருக்கலாம் என்ற அங்கலாய்ப்பு பல்வேறு இடங்களிலும் கேட்கிறது..
இதுவரை இந்த நோய்க்கு எந்த மருத்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. தற்காப்பு ஒன்று தான் தற்சமயமிருக்கும் ஒரே வழி. காய்ச்சல், இருமல், சளி போன்றவை தான் இதன் அறிகுறிகள். இந்த அறிகுறிகள் எல்லாம் சர்வ சாதாரணமாக மனிதர்களிடையே காணப்படுபவை. இந்த அறிகுறிகள் தொடங்கினாலே, எச்சரிக்கையாக இருக்க வேண்டியது தான். தும்மல், இருமல் போன்றவற்றால் பரவி வருவதால், வெளியே எங்குச் சென்று வந்தாலும், 20 நொடிகளுக்குக் கையைக் கழுவ பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கழுவாத கைகளால் கண், மூக்கு, வாய் போன்ற உறுப்புகளைத் தொடக்கூடாது. இது போன்று சளி, காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களைத் தொடக் கூடாது. சளி, காய்ச்சல் இருப்பவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று பல பரிந்துரைகளை மருத்துவர்கள் அறிவித்து உள்ளனர்.
மருந்து கண்டுப்பிடிக்கும் வரை எச்சரிக்கையாக இருப்பது மக்கள் கையில் தான் இருக்கிறது. மனித குலத்திற்கே பெரும் சவாலாக இருக்கும் இந்த வைரஸை வீழ்த்தி, இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, இதனால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் காப்பாற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கையுடன் உலக மக்கள் வேண்டி வருகிறார்கள்.
- சரவணகுமரன்