ஆழியிலே அமிழ்ந்த என் அழகிய மரப்பாச்சி – நூல் நயம்
கவிதை மொழியை அமைக்கும் ஆற்றல் பற்றி சொற்களால் விளக்குவது கடினம். அது வியக்க வைக்கும் வகையில் நம் உணர்ச்சியைத் தூண்டி, சத்தமே இல்லாமல் எம்மிடம் ஒருவகையான சலனத்தை அல்லது கிளர்ச்சியை உண்டாக்கி விடுகிறது. 2009 இல் எனது முதுகலைப் பட்டப் படிப்பு ஆய்வின் ஒரு பகுதியாக புலம்பெயர் தமிழர்களின் கவிதைகளை ஆய்வு செய்திருந்தேன். பெரும்பாலும் தாய்நாட்டிலிருந்து பல்வேறு காரணங்களுக்காகச் சொந்த நிலத்தை விட்டுப் புலத்துக்குப் பெயர்பவர்கள் தங்கள் நிலம் சார்ந்து எழுதுவதைக் காட்டிலும் புலத்தில் சந்திக்கும் அல்லது சந்தித்த பல்வேறுபட்ட சிக்கல்களை, சவால்களையே தமது கவிதைகளில் பேசுபொருளாகக் கொண்டிருக்க, அந்தக் கவிதைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட களத்தைத் தெரிவு செய்து தமிழின் தொன்மை, தமிழின் தற்கால நிலைமை, சுயம் பற்றிய தேடல் சார்ந்து சிந்தித்திருப்பதால் கவிதாயினி த.ச.பிரதீபா பிரேம் அவர்களின் “ஆழியிலே அமிழ்ந்த என் அழகிய மரப்பாச்சி” என்ற கவிதைத் தொகுப்பு முக்கியம் பெறுகிறது.
“மரப்பாச்சி” என்ற பெயரில் வந்த இரண்டு சிறுகதைகள் படித்துள்ளேன். ஒன்று கனியூரான் எழுதிய “மரப்பாச்சி மனுசி” மற்றையது உமாமகேஸ்வரி எழுதிய “மரப்பாச்சி”. அதுதவிர எஸ்.பாலபாரதியின் “மரப்பாச்சி சொன்ன ரகசியம்” என்று ஒரு சிறுவர் கதைத் தொகுப்பு படித்ததாகவும் ஞாபகம். இந்தவகையில் முதல் முறையாக கவிதையில் “மரப்பாச்சி” பார்ப்பது சிறப்பாக உள்ளது.
34 கவிதைகள் அடங்கிய இந்தத் தொகுப்பில் “குமரி”க்கண்டம் பற்றி எழுதிய;
“மூத்த குடி அங்கே மூழ்கிக் கிடக்கையிலே…” என்ற வரியும்
“எங்கே போயின எம் தமிழ் மாதங்கள்…” என்ற தொடரும் சிந்திக்க வைக்கின்றன.
கவிதாயினி பிரதீபா அவர்களின் மனித நேயத்தைக் கோடிட்டு காட்டத் “தாய்க்குருவி” என்ற ஒரு கவிதையே போதும். இவரின் பெரும்பாலான கவிதைகள் அணி உத்தி இன்றி நேரடியாக சொல்வனவாக இருப்பினும் இந்த “தாய்க்குருவி” கவிதை அப்படிச் சொல்லிவிட முடியாதளவுக்கு மிகச் சிறப்பாக உள்ளது.
புரட்சிக்கு “தமிழர் கூட்டம்” மற்றும் “வீறுகொண்டு எழுந்து நிற்கும் தமிழா”, ஒற்றுமைக்கு “பாரதத்தாயின் பிள்ளைகள் நாம்”, தொன்மைக்கு “ஆழியிலே அமிழ்ந்த என் அழகிய மரப்பாச்சி”, பெண்மைக்கு “ஒளவை போன்ற பெண்ணாயிரு”, உறவுக்கு “அம்மா” மற்றும் “அன்புள்ள அப்பா” போன்றவற்றை சொல்லிக் கொண்டே போகலாம்.
மேலைத்தேசத்து இயந்திர மயமான வாழ்விலும் தமிழை உள்ளம் நிறைத்து மடை திறந்த வெள்ளமென அழகிய கவிதை மொழியில் தன் கருத்தையும் உணர்ச்சியையும் வெளிக்காட்டி எளிய நடையில் நிரம்பச் சொன்ன கவிதாயினி பிரதீபா அவர்களின் “ஆழியிலே அமிழ்ந்த என் அழகிய மரப்பாச்சி” போல் இன்னும் பல படைப்புகள் எதிர்காலத்தில் வரவேண்டும்.
நன்றி
-தியாவின் பேனா-