மினசோட்டாத் தமிழ்ச்சங்கப் பள்ளியின் உலகத் தாய்மொழி தினக் கொண்டாட்டம்
உலகத் தாய்மொழி தினத்தையொட்டி, மினசோட்டாத் தமிழ்ப்பள்ளியில் தமிழ்மொழி சார்ந்த கொண்டாட்ட நிகழ்ச்சிகள், பிப்ரவரி 22ஆம் தேதியன்று ஈடன் ப்ரெய்ரியில் இருக்கும் PiM Arts High School இல் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் தமிழ்ப்பள்ளியில் தமிழ் பயிலும் மாணவர்கள் வெவ்வெறு தலைப்பில் காட்சிப்பொருட்கள் செய்து, அவற்றைக் காட்சிப்படுத்தியிருந்தனர். கீழடி, கல்லணை, தமிழ் மன்னர்கள், தமிழ்த் தலைவர்கள், தமிழ் கவிஞர்கள், தமிழ்நாட்டு மாவட்டங்கள், ஊர்கள், ஆறுகள், விளையாட்டுகள், கலைகளின் சிறப்புகள் எனப் பல்வேறு தலைப்புகளில் தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்தியிருந்தனர்.
பின்னர், “கண்ணைக் கட்டு, வாலை ஒட்டு!”, “பந்தை எடு, குவளையில் போடு!”, “பகடை உருட்டு, வெற்றி நடை போடு” போன்ற பெயர் கொண்ட கேளிக்கை விளையாட்டுகள் நடைபெற்றன. இந்த விளையாட்டுகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். தமிழ்மொழியில் பல வடிவத்தில் பச்சைக்குத்தலுக்கான பிம்பங்கள் (Tatoo) வழங்கப்பட்டன. அவற்றை ஒட்டிக்கொள்வதில் சிறுவர்-சிறுமியர் மட்டுமின்றி பெரியோர்களும் ஆர்வம் காட்டினர். கையில் மருதாணி, முகத்தில் கண்கவர் ஓவியங்கள் என குழந்தைகள் மகிழ்வடைய அங்கு பல விஷயங்கள் வரிசையில் இருந்தன.
அதற்குப் பிறகு, தாய்மொழி தினப் பேச்சுப் போட்டிகள், மாணவர் பயிலும் நிலைக்கேற்ப நான்கு பிரிவுகளில் நடைபெற்றன. எனக்குப் பிடித்த பாடல், மரங்களை நேசிப்போம், உழவைக் காப்போம், பாரம்பரிய உணவும் மருத்துவக் குணமும் உள்ளிட்ட பல தலைப்புகளில் மாணவர்கள் பேசினர். பெற்றோர் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் போட்டியில், மாணவர்களின் மழலைத் தமிழ் முதல் சரளமாக, பிரவாகத்துடன் பொங்கி வந்த தமிழ் வரை கேட்க முடிந்தது. மாணவர்களின் பேச்சைக் கேட்டு, பார்வையாளர்கள் கைத்தட்டி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இறுதியில், போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது. முன்னதாக நடைபெற்ற பெரியோர்களுக்கான கட்டுரை மற்றும் கவிதை போட்டியின் முடிவும் அறிவிக்கப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
- சரவணகுமரன்