எட்டாம் ஆண்டில் பனிப்பூக்கள்
இந்தாண்டின் தாய்மொழி தினத்தன்று, பனிப்பூக்கள் சஞ்சிகை எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. வட அமெரிக்காவில், கனேடிய எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு மாநிலம் மினசோட்டா. அமெரிக்க மாநிலங்களில் பரப்பளவில் 12 ஆவது, மக்கட்தொகையில் 21 ஆவது பெரிய மாநிலம். பன்முகக் கலாச்சாரம் கொண்ட மினசோட்டாவில் வாழும் 57 லட்சம் மக்களில், சுமார் 50 ஆயிரம் நபர்கள் இந்தியர்கள்; அதில் தமிழர் ஏறத்தாழ 75௦௦ பேர். பொதுவாக வாசிப்புத்தன்மை அதிகம் கொண்ட மினசோட்டா மக்களிடையே தமிழ்க் கலாச்சாரத்தைப் பகிரும் வகையில் கட்டுரைகள், கதைகள், கவிதைகள், செய்தித் துணுக்குகளை உள்ளடக்கி 2013 ஆம் ஆண்டு தாய் மொழி தினமான ஃபிப்ரவரி 21ஆம் நாள் முதல் இதழை வெளியிட்டோம். தொடர்ந்த ஆண்டுகளில் சிறுவர் பகுதி, சினிமா, அரசியல், பயணக் கட்டுரைகள் எனப் பல பகுதிகளைச் சேர்த்து இன்று உலகம் முழுதும் பல்லாயிரக்கணக்கான வாசகர்களைக் கொண்ட சஞ்சிகையாக வளர்ந்துள்ளதில் பரிபூர்ணப் பெருமிதமடைகிறோம். மேலும் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் சிறுகதைப் போட்டி, கவிதைப் போட்டி எனப் பலவகைப் போட்டிகள் மூலம் பலரது எழுத்துக்களை வாசகர்களுக்கு அறிமுகப் படுத்திய பெருமையும் பனிப்பூக்களின், கானம்பாடி பதிப்பகத்தைச் சேரும்.
மகிழ்ச்சிகரமான இத்தருணத்தில், எங்களது வளர்ச்சிக்குப் பங்களித்து, ஊக்கமளித்து, ஆதரவளித்து வரும் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அடுத்த கட்டமாக, வாசகர்களின் பரிந்துரைப்படி காணொளிகள், வலையொலிகள் மூலம் பயனுள்ள தகவல்களைப் பகிரத் தொடங்கியுள்ளோம். எமது இந்த முயற்சிகளுக்கும் உங்களது பேராதரவை நல்கிட வேண்டுகிறோம்.
இன்றைய சூழலில், உலகம் இயற்கையின் பல அறைகூவல்களையும், சோதனைகளையும் எதிர்கொண்டுள்ளது. அமேசான் காடுகளின் பெரும்பகுதி தீக்கிரையானதைத் தொடர்ந்து ஆஸ்திரலியக் காட்டுத் தீ பல உயிரனங்களை அழித்துள்ளது; இவ்வகைச் சம்பவங்கள் காடுகளை அழிப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றைச் சார்ந்துள்ள பறவை, விலங்குகளின் உணவுச் சங்கிலியை அறுத்து மாற்றங்களை உண்டாக்கிவிடுகின்றன; இதனால் இயற்கையின் சமநிலை கடுமையாகப் பாதிப்படைகிறது.
இது ஒருபுறமிருக்க இயற்கையின் ஐங்கொடைகளில் ஒன்றான காற்றின் மூலம் மிக, மிக வேகமாகப் பரவி வருகிறது கோவிட்-19. சீனாவில் தொடங்கிய கொரோனாவின் கோர தாண்டவம் இன்று 26 நாடுகளுக்குப் பரவியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில்லாத, சீனாவுக்கு சென்றிராத பலருக்கும் இந்நோய்த் தோற்று ஏற்பட்டிருப்பது மருத்துவ உலகை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. ஆசியக் கண்டத்தைத் தாண்டி, ஐரோப்பியக் கண்டத்திலும் இறப்புகள் தொடங்கியுள்ளன. சீனாவில் மட்டும் 2442 பேர் இறந்துள்ளனர். தென்கொரியா, ஜப்பான், ஹாங்காங், ஈரான், இத்தாலி, ஃபிரான்ஸ் இன்னபிற நாடுகளில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
இயற்கை தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும் அரிய சக்தி படைத்ததுதான். ஆனாலும் இயற்கையன்னையின் வரப்பிரசாதமான ஐம்பூதங்களை அறியாமையால் மனிதகுலம் தவறாகப் பயன்படுத்தி வருவது இயற்கைச் சமன்பாட்டைச் சீர்குலையச் செய்துவிடுகிறது.
கொரொனோ நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தவும், குணப்படுத்தவும் அதிவிரைவில் வழிமுறைகள் உண்டாக விழைகிறோம். அதே நேரம் இயற்கையிலிருந்து அதிகம் விலகாத உணவுப் பழக்கங்கள், வாழ்க்கை முறைகளை மேற்கொள்வதன் மூலம் இயற்கைப் பாதுகாப்புக்கான முதலடியை எடுத்து வைப்போம்!
– ஆசிரியர்