1917 – திரை அனுபவம்
முதல் காட்சியில் பசுமை படர்ந்து கிடக்கும் அமைதியான ஒரு நிலப்பரப்பைக் காட்டும் கேமரா, கொஞ்சம் பின்னால் நகரும் போது, இரண்டு இளம் சிப்பாய்கள் ராணுவ உடையில் உறங்கிக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. அங்கு வரும் ஒரு அதிகாரி, ஒருவனை எழுப்பி, “உனக்குத் துணையாக இன்னொரு ஆளைத் தேர்வு செய்துகொண்டு உயர் அதிகாரியைப் போய்ப்பார்” என ஆணையிடுகிறார். கதாநாயகன் தன் நண்பனை எழுப்பிவிட, இருவரும் உயர் அதிகாரி இருக்கும் இடத்தை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறார்கள், நடந்து முன்னோக்கிச் செல்லும் அவர்களை காட்டிக்கொண்டே செல்லும் கேமரா, அவர்களைச் சுற்றி இன்னும் நிறைய ராணுவ வீரர்கள் இருப்பதை, சிலர் சமைப்பதை, சிலர் கதை பேசுவதை, சிலரின் காயங்களுக்கு வைத்தியம் பார்ப்பதை, அடுத்த தாக்குதலுக்காகக் காத்திருப்பதை என நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் உள்ள ஒரு போர்க்களத்தைக் காட்சியின் மூலம் விவரித்துத் திரையில் எழுதிய போது நிமிர்ந்து உட்கார்ந்தேன். படம் முடியும் வரை அந்த பிரமிப்புக் குறையவில்லை.
முதல் உலகப்போரில் ஜெர்மனிக்கு எதிராகப் போரிடும் பிரிட்டிஷ் ராணுவம் இரண்டு இடங்களில் முகாமிட்டுள்ளது. ஒரு முகாமில் இருந்து சில மைல் தொலைவில் உள்ள மற்றொரு முகாமிற்கு, அவர்கள் ஜெர்மன் படைக்கு எதிராக நடத்தத் திட்டமிட்ட தாக்குதலைத் தவிர்க்கும் படி ஒரு செய்தி அனுப்ப வேண்டும். இரண்டு இடத்திற்கும் இடையில் போரில் அழிக்கப்பட்ட, இன்னும் ஜெர்மன் படைகள் நோட்டமிடும் யாருக்கும் சொந்தமில்லாத ஒரு நிலப்பகுதி இருக்கிறது. அதனைத் தாண்டிச் செல்வது அசாத்தியம். அந்தப் பயணம் என்ன ஆனது, தாக்குதலைத் தடுத்து, ஜெர்மன் படை சூழ்ச்சியில் இருந்து ஆயிரக்கணக்கான பிரிட்டிஷ் ராணுவ வீரர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டதா என்பது தான் கதை.
எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல், ஒரு ஞாயிறு மாலையில் எதேச்சையாக இந்தப் படத்திற்குப் போனேன். முதல் உலகப் போரின் பின்னணியில் உள்ள கதை எனத் தெரியும். இந்த முதல் மற்றும் இரண்டாவது உலகப் போர்களை வைத்து எத்தனையோ படங்கள் வந்துவிட்டன. Schindler’s List, The Pianist போன்ற அதி அற்புதமான படங்களும் இந்த வகையைச் சார்ந்தவையே. போர்கள் மூலம் மக்கள் படும் இன்னல்களை அவர்களின் கதை வழியாகவே காட்டி, போரின் கொடூரங்களை உலக மக்களின் மனதில் ஆழமாகப் பதித்து, போரின் மீது வெறுப்பையும் பயத்தையும் உண்டாக்கியத்தில் இந்தப் படங்களுக்குப் பெரும்பங்கு உண்டு. அந்த வகையில் இன்னொரு போர் பற்றிய படம் 1917. போரினால் பாதிக்கப்பட்டவனின் வலியைப் போல அதன் கதைகளும் என்றும் தீராதவை.
இரண்டு சிப்பாய்களின், ஆபத்தான பயணம் தான் படம் எனினும், அதைக் காட்சிப்படுத்தும் கேமரா போரின் கொடூரங்களை வசனமின்றி, காட்சியாக நாம் மனதில் எழுதிக்கொண்டே வருவது இந்தப் படத்தின் சிறப்பு. நான் முன்பு குறிப்பிட்ட இரண்டு படங்களைப் போல் இந்தப் படத்தின் கதைமாந்தர்கள் போரினால் பாதிக்கப்படும் அப்பாவிப் பொதுமக்கள் அல்லர். மாறாக, போரில் ஈடுபட்டிருக்கும் இரண்டு சிப்பாய்கள் எனினும் அந்தப் படங்கள் போருக்கு எதிராக ஏற்படுத்திய தாக்கத்தை இந்தப் படமும் சிறிதும் குறைவின்றி ஏற்படுத்துகிறது. ஆர்ப்பரிக்கும் அலை, அடங்கும் அதன் கரையில் செத்து ஒதுங்கிய மீன்களைப் போல அதிகார வெறியால் அழிக்கப்பட்ட நிலத்தில் மனிதரின் பிணங்கள் அழுகிக் கிடக்கின்றன.
இந்தப் பயணத்தின் நடுவில், எரிந்துகொண்டிருக்கும் விமானத்தில் இருந்து எதிரிப்படையின் சிப்பாய் ஒருவனை மனிதாபிமானம் கொண்டு காப்பாற்ற முனையும் கதாநாயகனை வன்மத்தின் குறுவாள் கொண்டு குத்திக் கொல்கிறான் அவன். அந்த எதிரியைக் கொன்றொழிக்கும் நண்பனைக் கொண்டு மீதிப் பயணத்தைத் தொடரவேண்டிய சூழ்நிலை, அவனைக் கதாநாயனாக்கி மீதமுள்ள தன் கதையை நகர்த்துகிறது.
படத்தின் மற்றொரு காட்சியில், வெறும் சுவர்கள் மட்டும் நிற்கும் எரிக்கப்பட்ட ஒரு நகரத்தின் தெருக்களில் சாவில் இருந்து தப்பித்து, தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் கதாநாயகன், ஒரு வீட்டின் பாதாள அறையில் சென்று ஒளிகிறான். அதன் தூணின் மறைவிலிருந்து ஒரு இளம்பெண் பயத்துடன் இவனிடம் பேசுகிறாள். இப்படி உருக்குலைந்த இந்த இடத்தில ஒரு பெண்ணைப் பார்ப்பது ஆறுதலாக இருக்கிறது அந்த கதாநாயகனுக்கு. அவள் அவனின் காயத்தைப் பரிசோதித்து மருந்திடுகிறாள். சதா குண்டுகள் பொழியும் மரணத்தின் வாயிலில் நின்று மிகச்சில நிமிடங்கள் இருவரும் அன்பைப் பரிமாறி ஆசுவாசம் கொள்கிறார்கள். அந்த இடத்தின் மூலையில் இருந்து ஒரு பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்கிறது. தானும் இந்தக் குழந்தையும் தான் இங்கு இருப்பதாகவும், அதன் பெற்றோர் யாரெனத் தெரியாது எனவும் கூறுகிறாள். உணவுப்பொருளை அவர்களிடம் கொடுக்கும் கதாநாயகன், ஒரு பாடல் பாடி அழும் குழந்தையை சமாதானம் செய்கிறான். அடர்ந்த இருள் கொண்ட இரவின் மீது விழும் விடியலின் முதல் வெளிச்சக் கீற்று போல இந்தக் காட்சி நமக்குள் ஒரு நம்பிக்கையை கடத்துகிறது.
பல இன்னல்களைத் தாண்டி ஒருவழியாகத் தாக்குதல் தொடங்குவதற்குச் சற்று முன் இரண்டாம் முகாமை அடையும் கதாநாயகன், அந்தப் படையின் தலைவனை விரைந்து சந்தித்து செய்தியைச் சேர்ப்பதற்காக எடுக்கும் துணிச்சலான முயற்சியும், அதனை அவன் செய்யும் விதமும் நம்மை சீட்டின் நுனிக்குக் கொண்டு செல்கிறது.
இப்படியாகப் பார்க்கும் ஒவ்வொரு காட்சியிலும் நமக்குள் ஒரு அதிர்வை ஏற்படுத்திக்கொண்டே செல்கிறது இந்தப் படம். படம் முடிந்த பிறகு இந்தப் படத்தை பல காட்சிகளாக எடுத்து இணைத்தார்களா..? இல்லை முழுநீளப் படத்தையும் ஒரே காட்சியில் எடுத்தார்களா..? என்ற கேள்வி எழாமல் இல்லை. அந்த அளவுக்கு காமிரா மற்றும் எடிட்டிங் மிகத் துல்லியம். படத்தின் மற்றுமொரு சிறப்பு ஒலிக்கலவை. இப்படிச் சிறப்பான தொழில்நுட்பம் மூலம் படம் நெடுக பார்வையாளனை ஒரு போர்க்களத்தின் வழியே அழைத்து சென்றது தான் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். இத்தனை திறமையான கலைஞர்களையும், நேர்த்தியான தொழில்நுட்பமும் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படம் சொல்லும் செய்தி, போர் என்பது அருவெறுக்கத்தக்கது. அது அழிவைத் தவிர வேறொன்றும் தரப்போவதில்லை என்பதுதான். இதுவரை வந்த படங்களை விட இந்தப் படம் மேலானதொரு திரை அனுபவத்தைத் தரும் என்பது உறுதி. மேலும் இந்தப் படம் மூன்று பிரிவுகளில் ஆஸ்கார் விருது வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
-மனோ அழகன்