\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

புதர்க் காடு

Filed in கதை, வார வெளியீடு by on March 3, 2020 0 Comments

பரந்து விரிந்த இந்த இடத்தைக் காடு என்றும் சொல்லலாம், ஆனால் காடு என்று சொன்னாலும் பெரிய பெரிய மரங்கள் எதுவும் இல்லை. புதர்களும், புற்களுமே அதிகமாகக் காணப்பட்டன. புதர்க்காடு என்று சொல்லிக்கொள்ளலாம். புதர்கள் என்றால் அப்படி ஒரு இறுக்கமான காடுகள் கொண்டது. அடர்த்தியான புதர்கள், செடிகள் இணைந்து அதன் மேல் கொடிகள் படர்ந்து பொதுவாக உள்ளே நுழைவது என்பது சிரமப்படக்கூடிய விசயம்தான்.

காலை ஆறு மணி இருக்கலாம். அந்த இடத்தின் மண்மேட்டில் காணப்பட்ட பொந்து ஒன்றிலிருந்து மெல்ல தலையை மட்டும் நீட்டி பார்த்த பாம்பு தனது தலையை அங்குமிங்கும் திருப்பிப்  பார்த்தது. சுற்றி வர பார்க்க எந்த ஆபத்தும் இல்லை என்று உணர்ந்து தனது உடலை உள்ளிருந்து வெளியே இழுத்தது. பொந்தின் உள்ளே அடிக்கடி சென்று வருவதால் தரை வழுவழுப்பாக இருந்தது. இதனால் பாம்பின் உடல் எந்த வித சிரமமுன்றி வெளியே வந்தது. 

முழு உடலையும் வெளியே எடுத்த பின் தான் தெரிந்தது, அதனுடைய உடலின் நீளமே பத்தடிக்கு மேல் இருக்கலாம். இரவு முழுக்க மண்ணுக்குள்ளே சுருண்டு படுத்திருந்ததாலும், அந்த மண்ணிலிருந்து தன்னுடலை வெளியே இழுத்து வந்ததாலும் அதன் உடலில் மண் துகள்கள் நிறைய ஒட்டி இருந்தன.அந்த மண் துகள்களை, தன் உடலை ஒரு முறை விறைப்பாக்கி உதிர்த்தது. 

காலை வெயிலில் அதன் கருமேனி பளபளப்பாய் இருந்தது, இரவு உணவு எதுவும் எடுக்காததால் பசியின் கோபத்தைக் காட்ட புஸ்புஸ் எனச் சீறியது.

இதனுடைய சீற்றம் அப்பொழுதுதான் வளையிலிருந்து வெளியே வந்திருந்த காட்டெலியை உசாரடையச் செய்தது. சட்டென மீண்டும் தன் வளைக்குள் ஓடியது எலி. அரவம் கேட்டு திரும்பி பார்த்த பாம்பு எலி ஒன்று தன்னிடமிருந்து தப்பித்துவிட்டதை அறிந்து ஆத்திரம் கொண்டது போல் மீண்டும் தன் சீற்றத்தை வெளிப்படுத்தியது.மெல்ல மெல்ல உடலை நகர்த்தி அந்தப் புதரை நோக்கிச்  செல்ல ஆரம்பித்தது, எப்படியும் தனக்கு உணவு ஏதாவது அங்கு கிடைக்குமென்று.

அந்தக் காட்டின் மற்றொரு புறம், அத்தனைக் குட்டிகளையும் கூட்டிக்கொண்டு வேக வேகமாய் தன் மூக்கால் தரையைத் தொட்டவாறு நடந்து வந்து கொண்டிருந்த காட்டுப்பன்றி ஒரு இடத்தில் சட்டென்று தன் மூக்கினால் மண்ணைக் குத்தி கிளற ஆரம்பித்தது. ‘அம்மா எதையோ தேடுகிறாள்’ இதை மட்டும் உணர்ந்து குட்டிகளும் தங்களது பங்குக்காகத் தங்களுடைய சிறு சிறு மூக்குகளை மண்ணுக்குள் நுழைத்துக்கொண்டன.

விசுக்கென காட்டுப்பன்றியைக் தாண்டி ஏதோவென்று ஒடியது. சட்டென திகிலுடன் தலையை உயர்த்தி பார்த்த பன்றி தன் குட்டிகளுக்கு ஆபத்துஎன்று சிக்னல் தர நினைக்கையில் ஓடியது முயல்தான் என்று தூரத்தில் தெரிய மீண்டும் மூக்கைத் தரையில் வைத்து குழி பறிக்க ஆரம்பித்து விட்டது. குட்டிகளும், மீண்டும் தங்களது வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்துவிட்டன.

நேற்றிரவு பெய்திருந்த சிறு மழையில் தேங்கிய குட்டையிலிருந்து ‘கிராக்.. கிராக்’ சத்தம் தவளை ‘நான் இங்கிருக்கிறேன்’ என்று சொல்வது போலிருந்தது. இப்பொழுது புதரை நோக்கி ஊர்ந்து கொண்டிருந்த பாம்பு சட்டென தலையை உயர்த்தி சத்தம் வந்த இடத்தை ஒரு முறை பார்த்துவிட்டு விர்ரென தன்னுடலை நகர்த்திக்கொண்டு கிடைக்கப்போகும் தவளை உணவுக்காக அங்கு விரைந்தது.

மண்குட்டையா, செடிகொடிகளா என்று கணிக்க முடியாமல் காணப்பட்ட ஒரு புதரில் இருந்து நரி ஒன்று தன்னுடைய சிறு உடலை காண்பித்து வெளியே வந்தது. இப்பொழுது பன்றியைத் தாண்டி ஓடிக்கொண்டிருந்த முயல் இதன் கண்ணுக்குத் தட்டுப்பட எப்படியும் முயல் தனக்குத்தான் என்று முடிவு செய்து முயலை விரட்ட ஆரம்பித்தது. முயல், நரி வருவதை எப்படியோ உணர்ந்து கொண்டு தன் ஓட்டத்தை விரைவுபடுத்தி ஓடி சட்டென அங்கிருந்த ஒரு வளைக்குள் நுழைந்து கொண்டது. எப்படியும் முயல் ஏதொவொரு வளைக்குள்தான் ஒளிந்திருக்க  முடியும் என்று முடிவு செய்த நரி அங்குள்ள எல்லா வளைகளிலும் தன் மூக்கை வைத்து மோப்பம் பிடித்து தேட ஆரம்பித்தது.

காலை ஆறு மணிக்கு ஆரம்பித்த இந்த உயிர்களின் இயக்கங்கள், பத்து மணி ஆகும்போது ஒவ்வொன்றும் போய் இளைப்பாற ஆரம்பித்து விட்டன. அதற்கு தகுந்தாற்போல் நிழல் தர செடிகொடிகள் பரவலாக இருந்ததால் அக்கடாவென படுத்துக்கிடந்தன. பாம்பும் மீண்டும் மண் பொந்துக்குள் நுழைய சோம்பல்பட்டு அங்கிருந்த ஒரு பாறைக்கடியில் ஊர்ந்து சென்று தன்னுடலைச் சுருட்டிப் படுத்துக்கொண்டது.

இவைகள் எல்லாம் ஓய்ந்து கிடக்க, குருவிகளும், மைனாக்களும், பல வகையான குருவிகளும், ஓய்வில்லாமல் கீச் கீச் என கத்திக்கொண்டு ஒவ்வொரு செடியிலும் உட்கார்ந்து அதனதன் ஜோடிகளுடன் பாடிக்கொண்டிருந்தன. அவைகள் விடியலிலேயே தனது ரீங்காரங்களை ஆரம்பித்திருந்தாலும், மற்ற உயிரினங்களைப் போல் ஓய்ந்து போகாமல் தனது ஜோடிகளுடன் இயங்கிக்கொண்டுதான் இருந்தன. அவைகளின் சத்தம் மட்டுமே அந்தக் காட்டில் நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தது.

ட்ரக்..ட்ரக்..என்ற் புதிதாக வந்த சத்தம் ஓய்ந்து உறங்கிக்கிடந்த எல்லா ஜீவன்களையும் உசுப்பி எழச் செய்தன. அது என்ன சத்தம், பாறையினடியில் படுத்து சுகமாய் உறங்கிக்கொண்டிருந்த பாம்பு கூட அந்த நடையின் நில அதிர்வால் விருக்கென வெளியே வந்து தனது பொந்தை நோக்கி விரைய ஆரம்பித்தது. நான்கைந்து பேர் காலில் கருத்த நீளமாய் பூட்ஸ் போட்டுக்கொண்டு தன் கையில் இருந்த நீளமான கத்தியால் அந்தப் புதர்களைச் சீவிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தனர். அவ்வளவுதான் அங்கிருந்த அத்தனை மிருகங்களும் சட சடவென அவரவர்கள் இடத்துக்குள் போய் ஒளிந்து இந்த மனிதர்கள் அடுத்து என்ன செய்யப் போகிறார்கள் என்று திகிலுடன் பார்த்துக்கொண்டிருந்தன.

எத்தனை ஏக்கரா வரும்?’ ஒருவனின் கேள்வி அந்தப் புதர்க்காட்டில் அந்நியமாய் ஒலித்தது, ‘பதினெட்டு ஏக்கரா இருக்கும், சரி, நாளைக்கு சர்வேயரை கூப்பிட்டு பவுண்டரி அளந்து, புல்டோசர் கொண்டு வந்துடுங்க’. இப்பொழுது மீண்டும் அந்த மனிதக்குரல்கள் திரும்ப நடந்து செல்வதை பார்த்துக்கொண்டிருந்த உயிரினங்கள் மீண்டும் மெல்ல வந்து தன் ஓய்வு உறக்கத்தை மகிழ்வாய் அனுபவித்து கொண்டிருந்தன. நாளை நடக்கப்போவதை அறியாமல்.

மறு நாள் வழக்கம் போல் விடியலில் அங்குள்ள பறவைகள் தத்தமது ஜோடிகளுடன் காதல் பாட்டுக்களைப் பாடிக்கொண்டிருக்க, வழக்கம்போல பாம்பு தன்னுடலை வெளியே எடுத்து இரை தேட வெளியே வர, ஒவ்வொன்றும் காலை வெயிலில் தன் உடல் சோம்பலைப் போக்க வெளியே வந்தன.

பத்து மணி இருக்கும், அந்த காடே அதிர ஆரம்பித்தது. அதனுடைய அதிர்வுகள் அங்குள்ள அனைத்து புழு பூச்சிகளையும் ஏதொவொரு பூகம்பம்தான் வரப்போகிறது என்பதை உணர்ந்து அங்கும் இங்கும் ஓட வைத்தது.

அந்தப் பூகம்பம் எதனால் ஏற்பட்டது என்பது அந்த காட்டுக்குள் புகுந்த இரு இயந்திரங்களின், இயக்கமும், சீற்றமும்தான் என்பதை உணருமுன், அங்குள்ள செடி கொடிகளையும், வேரோடு பிடுங்கி எறிந்தன. அதற்குள் காலம் காலமாக, குடும்பங்களாய் இருந்த அனைத்து ஜீவராசிகளும், உயிருக்குப் பயந்து வெளியே ஓடி வர அந்தோ பரிதாபம், அந்த மிகப்பெரிய இயந்திரத்தில் அடிபட்டு ஒவ்வொன்றாய் உடல் துண்டாகி விழ ஆரம்பித்தன.

இரண்டு பக்கத்திலிருந்தும் சீறிக்கொண்டு தனது பெருத்த உடலுடன் நகர்ந்து வந்து கொண்டிருந்த அந்த இயந்திரங்களில் அடிபடாமல் தப்பி ஓடிய உயிரினங்கள், சுற்றியிருந்த ஆட்களால் அடித்து கொல்லப்பட்டன. மண் மேட்டில் இருந்த பொந்தை, அந்த இயந்திரம் அடியோடு பெயர்த்து எடுக்க அதில் பயந்து ஓளிந்திருந்த பாம்பு தைரியமாய்ச் சீறிக்கொண்டு அந்த இயந்திரத்தின் மீது நான்கைந்து கொத்து கொத்தி விட்டு சின்னாபின்னமாய் உடல் சிதறி விழுந்தது. ஒரு மணி நேரத்தில் அந்த இடம் முழுவதும், கோரத்தாண்டவம் ஆடிய அந்த இரண்டு இயந்திரங்களும் தன் பெருத்த பிரமாண்ட உடலால் மிச்சம் மீதி வைக்காமல் எல்லா உயிர்களையும்,முடித்து விட்டுச் சென்றது.

இரண்டு நாட்களில் கூட்டி வைத்த புதர்களில் ஒளிந்து கொண்டிருந்த மிச்ச மீதி தப்பி பிழைத்த உயிர்களும் மனிதர்களால் சுற்றிலும் தீ வைக்கப்பட்டு, வெப்பத்தால் கருகிச் சாம்பலாகின.

இரண்டு வருடங்கள் கழித்து அந்த இடத்தில் பிரமாண்டமாய் வளர்ந்திருந்த நான்கு அபார்ட்மெண்ட் கட்டிடங்களைத் திறந்து வைத்து உரையாற்றிக்கொண்டிருந்தார் ஒருவர்.

இந்த அபார்ட்மெண்டில் ஏகப்பட்ட வசதிகள் செய்து கொடுத்திருக்கிறோம். அது மட்டுமல்ல, நம் அரசாங்கம் காடுகளை வளர்ப்போம் என்று அறிவித்துள்ள கொள்கைப்படி ஒவ்வொரு அபார்ட்மெண்ட் முன்னால் பார்க் அமைக்கப்பட்டு  மலர் செடிகளும், மரங்களும், வளர்த்துள்ளோம். உங்க வீட்டுக்கு முன்னால் தொட்டிகளில் செடிகளை வளருங்கள், மரம்,செடி,கொடிகள்தான் நமக்கு மழையைக் கொடுக்கும்’.

– தாமோதரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad