உழவுத் தொழில்
காலையில் எழுந்து
கதிரவன் தொழுது
கடமையை நாளும்
செய்திடுவோம்!
கதிரவன் கொடுத்த
உழவுத்தொழிலை
உயிர்மூச்சென்றே
போற்றிடுவோம்!
பஞ்சமில்லாமல்
பார்ப்பதுயெல்லாம்
பாரினில் அவனின்
செயல்தானே!
வஞ்சனை செய்து
வாழ்வை அழித்தால்
வீழ்வது பூமியில்
நாம்தானே!
உழவுத்தொழிலை
உயிர்மூச்சாக்கி
உழைத்தது நமது
நாடன்றோ!
உழவர் வாழ்வை
உயர்த்தச் செய்வது
உயர்ந்தோர் செய்யும்
செயலன்றோ!
பசியைப் போக்கிடும்
உழவர் வாழ்வினில்
பட்டினிச் சாவினைத்
தடுத்திடுவோம்!
பசுமை நிறைந்த
பாரினைக் கண்டிட
உழவர் வாழ்வினைப்
போற்றிடுவோம்!
உழவர் வாழ்வினை
உயர்த்தச் செய்தால்
உயர்வது நமது
உலகமன்றோ! – இதை
உணர்ந்து என்றும்
செயல்பட்டாலே இந்த
உலகில் நாமே
முதலன்றோ!
மா.வீரா
மாணிக்க.வீரமுருகன்