சைக்கிள்
இந்த சைக்கிளைத்தான் எங்கேயாவது கொண்டு போய்ப் போடுங்களேன், இருக்கற கொஞ்ச இடத்தையும் பிடுச்சுகிட்டு, போக வர வழியில்லாமல்..மனைவியின் கத்தலால், பேப்பர் படித்துக் கொண்டிருந்த நான் என்னமோ ஏதோவென்று ஓடி வந்தேன்.
என்ன கமலா ஏன் இப்படிக் கத்தற? இப்ப சைக்கிள் என்ன பண்ணுச்சு? இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் ஆங்காரத்துடன் என்னைப் பார்த்தவள் இருக்கற இரண்டே முக்கால் செண்ட் வீட்டுல இதை வேற அலங்காரத்துக்கு வாசலில நிக்க வச்சுக்கறீங்க. போக வர வழிய அடைச்சுகிட்டு, அதோடு விட்டிருந்தாலும் பரவாயில்லை. இங்க பாருங்க என்ன பண்ணுவீங்களோ எனக்குத் தெரியாது, இந்தச் சைக்கிளை எங்கயாவது போடுங்க. சொல்லிவிட்டு விறு விறுவென உள்ளே போய் விட்டாள்.
இத்தனை கத்தலுக்கும் காரணமான அந்தச் சைக்கிள் வாசலிலிருந்து பத்தடி தூரம் தள்ளி தேமே என்று நின்று கொண்டிருக்கிறது. இவளாய்ப் போய் அதில் மோதி விட்டு, சைக்கிளின் மேல் குறை சொல்கிறாள். மனதுக்குள் நினைத்தாலும் வெளியில் சொல்ல முடியாது. இந்தச் சைக்கிளை ஒழிப்பதற்கு இவள் மட்டுமல்ல, என் பையனும், பெண்ணுமே கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். நான் ஏதாவது சொன்னால் மூவரும் ஒன்று சேர்ந்து கொள்வார்கள். இவர்களுக்கு இது சாதாரண சைக்கிள், ஆனால் எனக்கு !
என் அப்பா விவசாய அலுவலகத்தில் பியூனாக வேலை பார்த்தார். அங்கு இருப்பவர்கள் எந்த வேலை சொன்னாலும் தட்டாமல் செய்வார். அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் சைக்கிளில் அலுவலகம் வந்து இறங்குவதை ஆச்சர்யமாய்ப் பார்ப்பார். இவருக்கும் சைக்கிள் விடவேண்டும் என்று ஆசை, ஆனால் யாரிடமாவது ஓட்டப் பழக்கித் தரும்படிக் கேட்க வெட்கம். அதனால் நிறுத்தி இருக்கும் சைக்கிள்களின் அருகில் சென்று தொட்டுப் பார்த்து மகிழ்வதோடு சரி. ஒரு முறை இவரோடு பியூனாய்ப் பணி புரிந்த முருகேசனிடம் எனக்கு சைக்கிள் ஓட்டச் சொல்லிக் கொடு என்று கேட்டார். முருகேசு என்னய்யா இன்னுமா நீ சைக்கிள் ஓட்டிப் பழகாம இருக்கே? நக்கலாய்ச் சிரிக்க இவருக்கு என்னமோ போலாகி விட்டது. அதிலிருந்து யாரிடமும் இனி கேட்கக் கூடாது என்று முடிவு செய்து விட்டார்.
ஒரு நாள் அலுவலகத்தில் கிளார்க்காய் இருந்த ரங்கசாமி இவரைக் கூப்பிட்டு நான் கோயமுத்தூர் ஹெட் ஆபிஸ் போறேன், வர்றதுக்கு ராத்திரி ஆயிடும். அப்படியே வீட்டுக்குப் போயிடறேன். நீ என் சைக்கிளை எங்க வீட்டுல கொண்டு போய் நிறுத்திடு, என்றார். அப்பாவுக்கு எனக்குச் சைக்கிள் ஓட்டத் தெரியாது என்று சொல்லவும் வெட்கம், சரி என்று தலையாட்டி விட்டார். அவர் கிளம்பும் முன் மறந்துடாதே என்று மீண்டும் ஒரு முறை ஞாபகப்படுத்தி விட்டுச் சென்றார்.
அப்பா அலுவலகத்திலிருந்து நாலு மணிக்கே கிளம்பி இவர் சைக்கிளைத் தள்ளிக் கொண்டே நான்கு மைல் சென்று அவர் வீட்டில் விட்டு விட்டு அதன் பின்னர் பஸ் ஏறி வீட்டுக்கு வந்தார்.
அப்பொழுதே முடிவு செய்து விட்டார், நாமும் ஒரு சைக்கிள் வாங்க வேண்டும். சொந்தச் சைக்கிள் இருந்தால் நாமாக ஓட்டிப் பழகலாம். கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்து ஒரு வருடத்திற்குள் ஒரு சைக்கிளை வாங்கி விட்டார். அம்மாவுக்கு ஒரே சிரிப்பு, ஏய்யா உனக்குத்தான் சைக்கிளே ஓட்டத் தெரியாதே, அப்புறம் எதுக்கு இந்தச் சைக்கிள். இவர் நீ கம்முனு இரு எனக்கு தெரியும் என்று அம்மா வாயை அடக்கி விட்டார்.
தினமும் காலை நாலு மணிக்கே எழுந்து ஒருவரும் நடமாடாத பொழுது சைக்கிளை எடுத்துக் கொண்டு உருட்டிக் கொண்டே செல்வார். அப்புறம் சுற்று முற்றும் யாராவது பார்க்கிறார்களா என்று பார்த்து விட்டு ஏறி உட்கார முயற்சி செய்வார்.
அப்பாவின் ஆசை ஒரு வழியாய் நிறைவேற மூன்று மாதங்களாகி விட்டன. அன்று காலை ஆறு மணி இருக்கலாம் எனக்குக் குடிப்பதற்குக் காப்பி கொடுப்பதற்கு வந்த அம்மா மணி அடிக்கும் சத்தம் கேட்டு வெளியே எட்டிப் பார்த்தாள் அப்பா ஜம்மென்று சைக்கிளில் உட்கார்ந்து தன் மனைவி பார்க்கிறாள் என்றவுடன் ஒரு சுற்றுச் சுற்றி வந்து மீண்டும் சைக்கிளைக் கொண்டு வந்து நிறுத்தி விட்டு அம்மாவைப் பார்த்தார். அப்பொழுது அம்மாவுடன் வெளியில் வந்த ஆறு வயது சிறுவனான நானும் அப்பாவைக் கவனித்தேன். அம்மாவுக்கு ஒரே பெருமை அப்பாவின் அந்தச் சைக்கிள் சவாரியைப் பார்த்து.
நாற்பது வருடங்கள் ஓடி விட்டன. இருவரும் இன்று இல்லாவிட்டாலும், அந்தக் காட்சிக்குச் சாட்சியாய் நான் இருந்ததால் எனக்குச் சைக்கிளை விட அப்பா அன்று சுற்றியதும், அம்மா மனம் விட்டுச் சிரித்ததும் மறக்க முடியவில்லை. இதை இவர்களுக்குச் சொன்னால் புரியாது. இன்று எனக்குத் தனியாய் ஒரு வண்டி, மகனுக்கு, மகளுக்குத் தனியாய் வண்டிகள் என இத்தனை இருக்க இவர்களுக்கு இந்தச் சைக்கிள் ஏன் கண்னை உறுத்திக் கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. இதற்கும் மாதம் ஒரு முறை துடைத்துச் சுத்தமாகத்தான் வைத்துக் கொண்டிருக்கிறேன்.
நான்கைந்து நாட்கள் ஓடியிருக்கும். மாலை வீட்டுக்கு வரும் பொழுது சைக்கிள் இருந்த இடம் வெறுமையாய் இருந்தது. மனசு பக்கென்றது. கமலா இங்கிருந்த சைக்கிள் என்னாச்சு? என் குரலில் இருந்த அவசரம் அவளைப் புன்னகைக்க வைத்தது. சும்மா தான நிக்குது, எனக்குக் கொடுத்தீங்கன்னா என் பையன் ஸ்கூல் போறதுக்கு உபயோகமாய் இருக்கும் அப்படீன்னு நம்ம தெருவுல கீரை விக்கற மாசிலாமணியம்மா கேட்டுச்சு, கொடுத்திட்டேன்.
எனக்கு ஆத்திரம் வந்தாலும் ஏதோ சொல்ல வாயெடுத்தேன், சரி சும்மா நிக்கற சைக்கிள்தானே, ஒரு பையனுக்கு உபயோகமாயிருக்கட்டுமே என்று மனசு சொல்ல அப்படியே அமைதியாகி விட்டேன். அப்பா, அம்மாவின் நினைவுகள் கூட நான் இருக்கும் வரைதானே. அந்தச் சைக்கிள் அந்தப் பையனுக்கு வேறொரு ஞாபகத்தைத் தொடங்கி வைக்கட்டுமே.
– தாமோதரன்