நல்லெண்ணங்கள் நாற்பது
“கடுகு சிறிதானாலும் காரம் பெரிது” என்றொரு பழமொழி உண்டு. பிரபா அனந்த் அவர்களின் “நல்லெண்ணங்கள் நாற்பது” என்ற கைக்குள் அடக்கமான மிகச் சிறிய நூல் நிறைந்த கருத்துக்களுடன் ஒரு “கையேடு” போலத் திகழ்கின்றது. ஒரு நூல் நயம் அல்லது திறனாய்வு என்றால் அந்த நூல் பற்றிய சில பல விளக்கங்களுடன் ஒரு சில எடுத்துக்காட்டுகளையும் தர வேண்டும். திருக்குறள் போல , ஒரு துளிக் (ஹைக்கூ) கவிதை போல நல்லெண்ணங்கள் நாற்பதில் எதைத் தொடுவது எதை விடுவது என்று குழம்பிய நிலையில் இதை எழுதத் தொடங்குகிறேன். ஏனென்றால் அத்தனையும் அருமையாக உள்ளன.
“வாழ்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்”
என்ற கவியரசு கண்ணதாசன் பாடல் வரியை ஓரிடத்திலும்;
“கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே
சங்கு சுட்டாலும் வெண்மை தரும்”
என மூதுரையில் வரும் ஔவையார் பாடலை வேறொரு இடத்திலும் நினைவு கூர்ந்திருப்பது சாலச் சிறப்பே.
“வாழ்க்கைக்குப் பணம் மட்டுமே பிரதானமா” என்று கேட்குமிடத்தில் அவரின் சமநோக்குப் பார்வை புலனாகிறது.
கூடு திரும்பும் பறவை, பாரம் சுமக்கும் மனிதன், ஏழை, பணக்காரன், சாதி, நிறபேதம் , இயற்கை, இறைவன், குடும்ப உறவுகள், ஓய்வின் அவசியம், வேகம், விவேகம், இளமை, முதுமை, இன்பம், மற்றும் துன்பம் போன்ற இன்னோரன்ன பயன்தரும் விடயங்களைப் பேசியிருக்கும் “நல்லெண்ணங்கள் நாற்பது” என்ற நூல் ஒரு முறையாவது படிக்க வேண்டிய சிறந்த நூலாகும்.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் கபிலர் எழுதிய இன்னா நாற்பதும் பூதஞ்சேந்தனார் எழுதிய இனியவை நாற்பதும் வாழ்க்கைக்கு தேவையான பல விதமான பல கருத்துக்களை அழகிய வெண்பா வடிவில் தந்த தமிழ் நூல்கள் அந்த வரிசையில் உரை வடிவில் பிரபா அனந்த் அவர்களின் “நல்லெண்ணங்கள் நாற்பது” சிறந்து விளங்குகிறது.
நன்றி
-தியாவின் பேனா-