வேற்றுமை கடந்த ஒற்றுமை
“இந்திய நாட்டின் அழகே அதன் வேற்றுமையில் ஒற்றுமை என்ற தன்மையில்தான் உள்ளது. ஒற்றுமை எனும் மந்திரத்தைச் சிந்தனையிலும், வெளிப்பாட்டிலும் கொண்டு சென்று முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஒருமைப்பாடு என்பதே நமது சிந்தனையின், நடத்தையின், வெளிப்பாட்டின் ஊடகமாக இருக்க வேண்டும். இந்தியா என்பது வேற்றுமைகளால் நிரம்பியது. இதில் பல தரப்பட்ட பிரிவினர்கள், பல தரப்பட்ட மதத்தினர், பல்வேறு மொழிகள், பல்வேறு சாதிகள் என்று பன்முக த்தன்மையுடன் விளங்குகிறது. இப்படி ஏகப்பட்ட வேற்றுமைகள் நாட்டில் உள்ளன, இந்த வேற்றுமைகளே நாட்டின் அழகு.” – 2015 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 25ஆம் நாள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையின் ஒரு பகுதி இது.
“இந்தியா எனது தாய் நாடு. இந்தியர்கள் அனைவரும் எனது உடன்பிறப்புகள். எனது நாட்டைப் பெரிதும் நேசிக்கிறேன். இந்நாட்டின் பழம் பெருமைக்காகவும், பன்முக மரபுச் சிறப்பிற்காகவும் நான் பெருமிதம் அடைகிறேன். இந்நாட்டின் பெருமைக்குத் தகுந்து விளங்கிட என்றும் பாடுபடுவேன். என்னுடைய பெற்றோர், ஆசிரியர்கள், எனக்கு வயதில் மூத்தோர் அனைவரையும் மதிப்பேன். எல்லோரிடமும் அன்பும் மரியாதையும் காட்டுவேன். என் நாட்டிற்கும் என் மக்களுக்கும் உழைத்திட முனைந்து நிற்பேன். அவர்கள் நலமும் வளமும் பெறுவதிலே தான் என்றும் மகிழ்ச்சி காண்பேன். வாழ்க நமது மணித்திரு நாடு.” இது இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டு உறுதிமொழி. ஒரு காலத்தில், தினந்தோறும் ஒப்பிக்கச் செய்து, சிறுவர்கள் மனதில் ஆழப்பதிய வைக்கப்பட்ட வரிகள்.
உறுதிமொழியாகட்டும், உரைமொழியாகட்டும் இரண்டுமே காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. சில மாதங்களுக்கு முன்பு பெங்களுருவில் ஒரு தனியார் பள்ளியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை, மாணவர்களைக் கொண்டு காட்சியாக அரங்கேற்றிக் காட்டினர். பெரிய விளையாட்டரங்கு ஒன்றில் பாபர் மசூதி படத்தைக் கொண்ட சுவரொட்டியை நூற்றுக்கணக்கான மாணவர்கள் தடிகள், கற்கள் போன்ற ஏதோவொன்றைக் கொண்டு அடித்து, கிழித்துச் சாய்க்கின்றனர். பின்னணியில் ‘ஸ்ரீ ராமச்சந்திரருக்கு’, ‘ வீர அனுமாருக்கு’, ‘பஜ்ரங் பாலிக்கு’, ‘பாரத் மாதாக்கு’ என்று ஒரு முழங்க ஒவ்வொன்றுக்கும் மாணவர்கள் ‘ஜெய்’ என்று சொல்லிக் கொண்டே தாக்கி மகிழ்கின்றனர். இதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகள் ஒன்றிணைந்து கோயில் போன்ற வடிவத்தை உருவாக்கி நிற்கின்றனர். மத்திய அரசின் அமைச்சர் ஒருவரும், ஒன்றியப் பிரதேச ஆளுநர் ஒருவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இன்னொரு சம்பவத்தில் அதே கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிதாரிலுள்ள தனியார் பள்ளியொன்றில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான நாடகமொன்று தொடக்கப்பள்ளி மாணவர்களால் நடத்தப்பட்டுள்ளது. இதில் ‘ குடியுரிமை தொடர்பாக யாராவது ஆவணங்கள் கேட்டு வந்தால் அவர்களைச் செருப்பைக் கொண்டு அடியுங்கள்’ என்ற வசனத்தை, கையில் செருப்புடன், ஒன்பது வயது சிறுமி ஒருத்தி பேசுவதாகக் காட்சியமைக்கப்பட்டிருந்தது. இது பிரதமர் நரேந்திர மோதியைக் குறி வைத்து, அவரை நோக்கிச் செருப்பைக் காண்பிப்பதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்றொரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஃபிப்ரவரி மாத இறுதியில், அமெரிக்க அதிபர் விஜயம் செய்திருந்த நாளில், டெல்லியில் வெடித்த கலவரத்தில் மசூதிகள், வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் எரிக்கப்பட்டுள்ளன. தெருவில் நடந்து சென்ற அப்பாவிகள் சுடப்பட்டுள்ளனர். துப்பாக்கிகள் ஏந்திய நபர்கள், எரிபொருள் நிரப்பிய புட்டிகளையும், அரிவாள், இரும்புத் தடி எனப் பல்வகை ஆயுதங்களோடு வலம் வந்த கும்பல், இவர்களால் தாக்கப்பட்டுச் சரிந்து விழும் மக்களென உலகத்தின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைநகர் அவலத்தின் உச்சமாக மாறிவிட்டிருந்தது. சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் நடைபெற்ற கலவரங்களைப் பின்னணியாகக் கொண்டு வெளிவந்த ‘ஹேராம்’ படத்தை மறுபடியும், இயக்கம் தொகுப்பு ஏதுமின்றி நேரில் பார்ப்பது போலிருந்தது இந்தக் காட்சிகள். இந்தக் கலவரத்திலும், இதற்கு முன்பு நடைபெற்ற கலவரங்களிலும் ஐம்பதுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் உடல் ரீதியில் காயமடைந்துள்ளனர். ஆனால் கோடிக்கணக்கான மக்கள் மன ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவர் மனதிலும் வன்மம் கொழுந்து விட்டெரியத் தொடங்கிவிட்டது. துப்பாக்கிக் குண்டுக்கும், அரிவாள் வெட்டுக்கும், பெட்ரோலிய நெருப்புக்கும் பலியானோரின் பெற்றோர், மனைவி, கணவன், சகோதர, சகோதரி, நண்பன், பிள்ளை என ஒவ்வொருவர் மூளையிலும் இக்காட்சிகள் ஆழப் பதிந்துவிட்டன. ஐந்தாண்டு கால அரசாங்கப் பதவிக்காலத்தோடு முடிந்து ஆறிவிடும் காயமல்ல இவை. தனது தந்தை கொல்லப்பட்டதைப் புரிந்து கொள்ள முடியாமல் தனது புத்தகங்கள் எரிக்கப்பட்டுவிட்டதற்கு அழும் குழந்தைக்கு, நிதர்சனங்கள் புரியும் நாளில் மீண்டும் இது போன்ற போராட்டம், வன்முறை வெடித்துத் தொடரும். அமைதி போதிக்கும் மதங்களைப் பின்பற்றும் போர்வையில் சகமனிதரை அடித்துக் கொல்லும் இன்றைய சம்பவங்கள் மனித சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய கறை, களங்கம்.
அரசாங்கம் கையறு நிலையில் இருந்தது, அரசாங்கம் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறது என அரசியல் கட்சிகள் பழி சுமத்திக் கொண்டிருக்கும் வேளையில் கலவரத்துக்குப் பின்னர், அங்கிருக்கும் சமுதாயத்தினரின் நடவடிக்கைகள் சில அரசியல், மத வேறுபாடுகளைக் கடந்த மனிதநேயம் சற்றே இழையோடிக் கொண்டிருப்பதைக் காட்டுகின்றன.
கலவர நாளில் தடைபட்டு போன இந்து மணமக்களுக்கு, அங்கிருந்த இஸ்லாமியர்கள் செலவழித்து ஏற்பாடுகள் செய்து திருமணம் செய்து வைத்துள்ளனர்; தனது தீக்காயத்தையும் பொருட்படுத்தாது இஸ்லாமியர் பலரைக் காப்பாற்றிய இந்து இளைஞன்; அவன் உடல் நலம்பெற வேண்டித் தொழுத இஸ்லாமியர்; எங்களைக் கொன்ற பின்னர் தான் எங்களது சகோதர இஸ்லாமியரை நீங்கள் தொட முடியுமெனக் கலவரக்காரர்களை எதிர்த்த சீக்கியர்கள்; மக்களைக் காப்பாற்றுவது தான் என் பணி – மதம் பற்றி எனக்குக் கவலையில்லை – இங்கிருக்கும் ஒருவரையும் காயப்படுத்த உங்களை அனுமதிக்க மாட்டேன் என ஆயுதங்களோடு வந்த வன்முறையாளர்களைத் தன்னந்தனியாளாகத் தடுத்து நிறுத்திய எஸ்.பி. இவற்றுக்கு உச்சமாகக் கலவரச் சமயத்தில் மசூதியில் ஏற்றப்பட்டிருந்த அனுமார் கொடியையும், காவிப் பதாகைகளையும் மசூதித் தூண்களில் ஏறி அகற்றிய இந்து இளைஞன்; கலவரத்தில் சிதைக்கப்பட்ட மசூதிச் சுவர்களையும், தூண்களையும் நிர்மாணித்து உதவிய இந்து மக்கள் – இவர்கள் தான் உண்மையான இந்தியர்கள்.
இந்த உணர்வின்றி பாரத மாதாவை வாழ்த்தி வாய் கிழியக் கத்திக் கூச்சலிடுபவர்கள் கபடவேஷதாரிகள். அரசியல் சாதுர்யமும், பெரும்பான்மையும் சில வருடங்களில் முடிந்து விடும்; சில தசாப்தங்களில் மத வேற்றுமைகள் ஏற்ற இறக்கம் காணலாம்; இந்த வேற்றுமைகளைக் கடந்த ஒற்றுமை தான் அவசியம். வேற்றுமை கடந்த ஒற்றுமை என்ற உறுதிமொழி தான் நாட்டின், உலகின் இன்றைய தேவை. இக்கருத்தை வருங்காலச் சந்ததியினருக்கு அறிவுறுத்தும் பொறுப்புள்ள மனிதராக மாறுவோம்!
ஆசிரியர்