அமெரிக்க அதிபர் தேர்தல் – 2020
‘தூங்கு மூஞ்சி ஜோ’, ‘குட்டி மைக்’, ‘கிறுக்கு பெர்னி’, ‘போக்கொஹாண்டஸ் வாரன்’, ‘பூட்டட்ஜீட்ஜ்’ – இவையெல்லாம் எதோ சிறுவர் காமிக் புத்தகங்களில் வரும் கதாபாத்திரங்கள் அல்ல. வல்லரசு நாடான அமெரிக்காவின், வருங்கால அதிபராக வர ஆசைப்படும், ஆசைப்பட்ட எதிர்க்கட்சியினருக்குத் தற்போதைய அதிபர் திருவாளர் ட்ரம்ப் வைத்த செல்லப் பெயர்கள்.
‘பத்துப் பேர் ஒண்ணாச் சேந்து, ஒருத்தர எதுக்கறாங்கன்னா, அந்தப் பத்து பேர் பலசாலியா இல்ல அவங்க எதிர்க்குற அந்த ஒருத்தர் பலசாலியான்னு நீங்களே முடிவு செஞ்சுக்கறளவுக்கு’ அமெரிக்க அரசியல் எளிதானதல்ல. ஏனென்றால் இங்கு இரண்டே பேர், ‘ஒண்டிக்கு ஒண்டி’ நின்று, நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் குத்துச்சண்டைப் போட்டி போன்ற தேர்தல் முறை நிலவுகிறது.
சுமார் 2 நூற்றாண்டுகளாக யானை, கழுதை என்று இரண்டே இரண்டு சின்னங்கள். குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி என்று இரண்டே இரண்டு கட்சிகள். நான்காண்டுகளுக்கு ஒரு முறை இவற்றில் ஏதேனும் ஒன்றிலிருந்து, ஒருவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். இருந்தாலும் மக்களிடம் சுவாரசியம் குறைந்து விடக்கூடாதென புது அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாதங்களிலேயே அடுத்த அதிபர் தேர்தலுக்கான முனைப்புகள் துவங்கிவிடுகின்றன.
இரண்டு கட்சிகளிலிருந்தும் பலர் தங்களது கொள்கைகளை முன் வைத்தோ, பண பலத்தை முன் வைத்தோ ‘நான் தான் கட்சி வேட்பாளர்’ என நிலைநாட்டிக் கொள்ள முனைவர். ஆயத்தச் சுற்றுகளைக் கடந்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் குத்துச் சண்டை வீரனைப் போன்ற போட்டி. நடுநடுவே சில அபிமானிகள் ‘ எவனுக்காவது தில் இருந்தா எங்க தல மேல கைய வெச்சுப் பாருங்கடா…. தல நீ தைரியமா எறங்கு தல’ என யாரையாவது கோதாவில் தள்ளிவிடுவதும் உண்டு. ஆயத்தச் சுற்றுகளில் தாக்குப் பிடிக்க முடியாமல் சிலர், ‘தாவு தீந்து போச்சுடா ..’ என்று விலகிவிடுவது இயல்பு. இந்த ஆயத்தச் சுற்றுகள் வெவ்வேறு முறைகளில் நடைபெறுகின்றன. இவற்றில் காகஸ் மற்றும் ப்ரைமரி தேர்வு முறைகள் பிரசித்தி பெற்றவை.
காகஸ் (Caucus)
காகஸ் என்பது கட்சியில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் (registered members of a party) கலந்து கொண்டு அதிபர் பதவிக்குப் போட்டியிடும் தங்கள் கட்சி வேட்பாளர்களின் கொள்கைகளையும், அரசியல் பலம் மற்றும் செல்வாக்கையும் புரிந்து கொள்ளும் கூட்டம். ஒரு மாநிலத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் (precinct) நடைபெறும் இவ்வகைக் கூட்டங்களிலிருந்து ஒருவரோ, சிலரோ பிரதிநிதிகளாகத் (delegates) தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவ்வாறாகத் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் (electoral college) அதிபர் தேர்தல் நடந்து முடிந்த பின்னரும் கூட, முடிவை மாற்றி நிர்ணயிக்கும் வல்லமை கொண்டவர்கள். (தேர்தல் வாக்குகள் (electoral votes) மற்றும் பெரும்பான்மை வாக்குகள் (popular votes) பற்றிப் பின்னர் வரும் வாரங்களில் பார்க்கலாம்).
ஆயத்தச் சுற்றுகளில், இப்பிரதிநிதிகள் ஒன்றிணைந்து தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவைத் தெரிவிப்பார்கள். வேட்பாளரின் பெயர் வாசிக்கப்படும்பொழுது கையை உயர்த்தியோ, அல்லது அவருடன் குழுமி நின்றோ தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவர்.
ப்ரைமரி (Primary)
காகஸ் போன்ற குறிக்கோளுடனே நடைபெறும் இவ்வகைக் கூட்டங்கள் காகஸ் போன்று வெளிப்படையானவை அல்ல. பொதுத் தேர்தலைப் போல வாக்குச்சீட்டு முறையில் தங்களது அபிமான வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் முறை இது. இதிலும் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் அவர்கள் கூடித் தங்களது வேட்பாளருக்கு வாக்களிப்பார்கள். ப்ரைமரி முடிவுகள் காகஸ் முடிவுகளைவிடச் சற்று துல்லியமானவை. காகஸ் முறையில் ஒரே உறுப்பினர் இரண்டு அல்லது பல வேட்பாளர்களுக்குக் கை உயர்த்த வாய்ப்புள்ளது. ப்ரைமரி முறையில் ஒருவருக்கு மட்டுமே வாக்களிக்க முடியும். இதை மேலும் சிக்கலாக்கும் வகையில், இரண்டு விதமான ப்ரைமரிகள் உண்டு.
க்ளோஸ்டு (மறைமுக) ப்ரைமரி – (Closed Primary)
க்ளோஸ்டு ப்ரைமரி என்பது கட்சியின் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மட்டுமே பங்கெடுத்து வாக்களிப்பது.
ஓபன் (வெளிப்படையான) ப்ரைமரி – (Open Primary)
ஓபன் ப்ரைமரி (Open Primary) முறையில் கட்சிப் பாகுபாடுகளின்றி வாக்குரிமை கொண்ட பொதுமக்கள் எவரும் வாக்களிக்கலாம்.
இதன் மூலம் எதிர்க்கட்சியினர் தங்களது கட்சிக்குப் பலமான போட்டியளிக்கக் கூடிய ஒருவரை வீழ்த்தக் கூடிய வாய்ப்புள்ளது. குடியரசுக் கட்சியைப் பொறுத்த வரையில் தற்போதைய அதிபர் திருவாளர் ட்ரம்ப் தான் வேட்பாளர் என்று ஏறக்குறைய முடிவாகிவிட்டது. இதனால் குடியரசுக் கட்சி ஆதரவு வாக்காளர்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் பலவீனமான வேட்பாளருக்கு வாக்களித்து இறுதிச் சுற்றில் தங்கள் தலைவரின் வெற்றியை எளிதாக்க முயல்வர். திருவாளர் ட்ரம்ப், ஜனநாயகக் கட்சியின் பெர்னி சாண்டர்ஸுக்கு வாக்களியுங்கள் என்று கேட்டுக் கொண்டதற்கு, இறுதிச் சுற்றில் தன்னால் பெர்னியை எளிதாக வெல்ல முடியும் என்ற மனக்கணக்கு தான் காரணம்.
காகஸ் அல்லது ப்ரைமரியின் மற்றுமொரு முக்கிய அம்சம், பிரதிநிதிகளின் பங்கீடு. இந்தப் பங்கீட்டு முறை முற்றிலும் சிக்கலான ஒன்று. ஏற்கனவே பார்த்ததுபோல் இவர்கள் அதிபர் தேர்தலில் மக்கள் நேரிடையாக வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும் ஒருவரை மாற்றக் கூடிய சக்தி கொண்டவர்கள். எனவே, வேட்பாளர்கள் இந்தப் பிரதிநிதிகள் பங்கீட்டையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் இரண்டு கட்சிகளுக்கும் குறிப்பிட்ட பிரதிநிதிகள் எண்ணிக்கை அளிக்கப்படும். ஆண்டுதோறும் நடக்கும் கட்சி மாநாட்டில் இவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். காகஸ் மற்றும் ப்ரைமரியில் வேட்பாளர்கள் பெறும் வாக்குகளை வைத்து ஒவ்வொரு வேட்பாளருக்கான பிரதிநிதித்துவப் பலம் கணக்கிடப்படும். உதாரணமாக ஒரு மாநிலத்தில் ஒரு கட்சிக்கு இருபது பிரதிநிதிகள் என்று எடுத்துக் கொள்வோம். அக்கட்சியின் சார்பில் ஜோ, ஜாக், ஜில் என மூன்று வேட்பாளர்கள் காகஸில் பங்கெடுக்கின்றனர் என்று வைத்துக்கொள்வோம். ஜோ 70%, ஜாக் 20% ஜில் 10% வாக்குகளைப் பெறுகிறார்கள் என்றால் அதே அடிப்படையில் பிரதிநிதிகள் கணக்கிடப்பட்டு ஜோவுக்கு 20 x 70 /100 = 14, ஜாக்குக்கு 4, ஜில்லுக்கு 2 எனப் பதிவாகும். இது ஜனநாயகக் கட்சியின் கணக்கிடும் முறை. குடியரசுக் கட்சியின் கணக்கீடுப்படி ஜோ முன்னணி வகித்ததால் 20 பிரதிநிதிகளையும் ஜோவே பெறுவார்.
இவ்வாறாக ஒதுக்கப்படும் பிரதிநிதிகள் குறிப்பிட்ட வேட்பாளரின் கொள்கைகளை ஏற்று முற்றிலும் அவரது ஆதரவாளராக இருக்கலாம் (pledged delegate), இல்லை இறுதியில் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் நாள் வரை முடிவெடுக்க முடியாத நிலையிலும் இருக்கலாம் (unpledged delegates). இவர்களை ஜனநாயகக் கட்சியில் அதிபல பிரதிநிதிகள் (super delegates) என்று குறிப்பிடுகின்றனர். இவர்கள் எந்த வேட்பாளருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கக் கூடிய சக்தியுள்ளவர்கள்.
காகஸ் அல்லது ப்ரைமரி மூலம் வேட்பாளர்கள் தங்களுக்கு மக்கள் மத்தியிலுள்ள ஆதரவைத் தெரிந்துகொள்ள முடியும். இம்முடிவுகள் அம்மாநிலத்து மக்களின் கருத்துகள் மட்டுமே. ஏற்கனவே சொன்னது போல் இவை துல்லியமானவை அல்ல. இருப்பினும் தாங்கள் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை என்று உணரும் வேட்பாளர்கள், தங்கள் கட்சியின் சார்பாகப் போட்டியிடும் மற்றவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொள்வர். அவ்வாறாக விலக நேரும் வேட்பாளரின் பிரதிநிதிகள், போட்டியில் எஞ்சியிருக்கும் மற்ற வேட்பாளர்களுக்குத் தங்களது ஆதரவைத் தெரிவிக்கலாம்.
காகஸ் முறையில் பல சிக்கல்கள் இருப்பதால் பல மாநிலங்கள் ப்ரைமரிக்குத் தாவி விட்டன. தற்போது ஐயோவா, நெவாடா, வையோமிங் ஆகிய மூன்று மாநிலங்கள், குவாம், வெர்ஜின் ஐலண்ட்ஸ் உள்ளிட்ட நான்கு ஒன்றியப் பிரதேசங்கள் மட்டுமே காகஸ் முறையைக் கையாள்கின்றன.
குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ஏறத்தாழ முடிவாகிவிட்டதால் ஆயத்தச் சுற்றுகள் அதிக பரபரப்பின்றி நடைபெற்று வருகின்றன. ஜனநாயகக் கட்சியில் ஓராண்டுக்கு முன்னரே தொடங்கிய போட்டியில் இன்னாள், முன்னாள் செனட்டர், ரெப்ரசன்டேட்டிவ், மேயர், தொழிலதிபர், மருத்துவர் என 29 பேர் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்து விண்ணப்பித்திருந்தனர். பிரைமரிகள் துவங்கும் முன்னரே ஜான் டெலானி, கோரி பூக்கர், மரியான் வில்லியம்ஸ், ஜூலியன் காஸ்ட்ரோ, கமலா ஹாரிஸ், ஸ்டீவ் புல்லக், ஜோ செஸ்டக், வெய்ன் மேஸாம், பீட்டோ ரூர்கி, டிம் ரையன், பில் ப்லசியோ, கிர்ஸ்டன் கில்லிபிரண்ட், சேத் மால்டன், ஜே இன்ஸ்லீ, ஜான் ஹிக்கன்லூப்பர், மைக் கிரேவல், எரிக் ஸ்வால்வல், ரிச்சர்ட் ஒயேடா ஆகிய பதினெட்டு பேர் போட்டியிலிருந்து விலகிவிட்டனர்.
பிரைமரிகளில் போதிய அளவு ஆதரவு கிடைக்காத காரணத்தால் எலிசபெத் வாரன், ஏமி க்ளொபுச்சார், பீட் பூட்டிஜெட்ஜ், மைக்கேல் ப்ளூம்பெர்க், ஆண்ட்ரு யாங், டாம் ஸ்டேயர், டேவல் பாட்ரிக், மைக்கேல் பென்னட் ஆகிய எட்டு பேர் தங்களது பங்கெடுப்பை நிறுத்திக் கொண்டனர்.
இப்போது போட்டியில் ஜோ பைடன், பெர்னி சாண்டர்ஸ், துல்சி கேப்பர்ட் ஆகிய மூவர் மட்டுமேயுள்ளனர். 19 மாநிலம் / ஒன்றியப் பிரதேசங்களில் பிரைமரிகள் முடிந்துவிட்ட நிலையில் ஜோ பைடன் 11, பெர்னி சாண்டர்ஸ் 6, மைக் ப்ளூம்பெர்க் 1, பீட் பூட்டிஜெட்ஜ் 1 மாநிலங்களை கைப்பற்றினர். மொத்தமுள்ள 3979 பிரதிநிதிகளில் (delegates) பைடனுக்கு 665 பிரதிநிதிகளின் ஆதரவும், பெர்னிக்கு 573 பிரதிநிதிகளின் ஆதரவும் கிடைத்துள்ளது. துல்சி கேப்பர்டை 2 பிரதிநிதிகள் ஆதரிக்கின்றனர். ப்ரைமரிகளில் வெற்றி பெற குறைந்தபட்சம் 1991 பிரதிநிதிகளின் ஆதரவு தேவை. இதன் பின்னரும் ஒரு வேட்பாளரைத் தெரிவு செய்யமுடியவில்லையென்றால், 771 அதிபல பிரதிநிதிகள் (Super delegates) வாக்களிக்கும் சூழ்நிலை உருவாகலாம்.
மொத்தப் பிரதிநிகள் 3979 –
இறுதி வேட்பாளராகத் தேவையான பிரதிநிதிகள் ஆதரவு – 1991
வேட்பாளர் | பிரதிநிதிகள் எண்ணிக்கை | பிரைமரி வெற்றிகள் |
---|---|---|
ஜோ பைடன் | 665 | 11 |
பெர்னி சாண்டர்ஸ் | 573 | 6 |
துல்சி கேப்பர்ட் | 2 | 0 |
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எலிசபெத் வாரன் (64 பிரதிநிதிகள்), கமலா ஹாரிஸ், பீட் பூட்டிஜெட்ஜ் (26 பிரதிநிதிகள்), ஏமி க்ளொபுச்சார் (7 பிரதிநிதிகள்), மைக்கேல் ப்ளூம்பெர்க் (61 பிரதிநிதிகள்), ஆண்ட்ரு யாங் ஆகியோருக்குப் போதுமான ஆதரவு கிடைக்காததால் வெளியேறியது துரதிர்ஷ்டமே. துளியும் வாய்ப்பில்லை என்று தெரிந்தும் துல்சி கேப்பர்ட் முட்டி மோதி வருவது ஆச்சரியம்
குடியரசுக் கட்சி வேட்பாளருக்கான போட்டியில் திருவாளர் ட்ரம்பை எதிர்த்து ராக்கி ஃபண்டே, மார்க் சான்ஃபோர்ட், பில் வெல்ட் ஆகியோர் முயன்று வருகின்றனர். ட்ரம்பின் அசுர பலத்துக்கு முன் தாக்குப் பிடிக்க முடியாமல் இவர்கள் விரைவில் விலகுவார்கள்..
மார்ச் 10 துவங்கி ஜூன் 6 வரை இதர மாநிலங்களில் ப்ரைமரிகள் நடைபெறவுள்ளன. தற்போதைய வேகத்தில் ஜூன் மாதத்துக்கு முன்னரே, ஜனநாயகக் கட்சி சார்பில், திருவாளர் ட்ரம்பை எதிர்த்துப் போட்டியிடப் போவது யார் என்று தெரிந்துவிடும் என்றே தோன்றுகிறது.
- ரவிக்குமார்