\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

Kutty Story

Filed in கதை, வார வெளியீடு by on March 10, 2020 0 Comments

‘வெல்கம் டு தி டுமீல் டாக்கீஸ் டாட் நெட். திரைவிமர்சனம் நிகழ்ச்சியில இன்னைக்கு நாம் பாக்க போற படம் டேஷ். டேஷ்னு’  சொன்ன உடனே எதோ கெட்ட வார்த்தைப் படம்னு நினைச்சிக்காதீங்க. ‘டேஷ்’ னா கோடிட்ட இடம். 

ஏன்னா, குவாண்டின் டாரண்டினோவே வந்து தமிழ்ப் படம் எடுத்தாலும், நான் இதையே தான் சொல்லப் போறேன். டெம்ப்ளட்ல டேஷ் போட்டு வச்சுக்கிட்டா படத்தோட பேர மட்டும்  அதுல போட்டு புது வீடியோவ ரிலீஸ் பண்ணிடலாம். நீங்களும் வேற வேலை இல்லாம அத வாரம் வாரம் பாப்பீங்க. நான் கூகிள் கிட்டேயிருந்து காசு வாங்கி ECR ல பங்களா வாங்கிடுவேன். இதுல பியூட்டி என்னன்னா, இவ்ளோ ஓப்பனா நானே சொன்னதுக்கு அப்புறமும் நீங்க இதப் பாக்கறத நிறுத்த மாட்டீங்க. குடி, சிகரெட் மாதிரி எதிர்மறை சிந்தனையும் ஒரு வித அடிக்சன். இனிமே இயக்குனர் புஷ்கின் இயக்கத்துல வெளி வந்திருக்கிற டேஷ் படத்தைப் பத்தி பாக்கப் போறோம். டைரக்டர் புஷ்கின்பத்தி சொல்லணும்னா, அவரு இனிமே படிக்கணும்னா புதுசா புத்தகம் போட்டாத்தான் உண்டு. அப்படி உலகத்துல இருக்குற எல்லா புத்தகத்தையும் படிச்சி முடிச்சி, பேட்டி எடுக்க வர்றவன்கிட்டலாம் அதையே பேசி சாவடிப்பாருனு நம்ம எல்லாருக்கும் தெரியும். தமிழ் சினிமாவையே தலைகீழா புரட்டிப் போடப்போறார்னு படத்துக்குப் போனா, எடுத்த உடனே படத்தோட பேர் போட்றாய்ங்க. அட..!! உலகத்துல இது மாதிரி புதுமையை யாருமே பண்ணினது இல்லை..!!, இவரு படத்துல மட்டும் தான் இப்படிலாம் நடக்குதுனு பூரிப்படைஞ்சுப் பாத்தோம்னா, படம் ஆரம்பிச்சதிலேர்ந்து காட்சிகளா காட்டிகிட்டே இருக்காங்க. இதை தான எல்லா சினிமாவுலையும் காட்றான். ஒருவேளை போகப் போகத்தான் புதுமை வருமோனு பாத்துக்கிட்டுருந்தா, படம் ஆரம்பிச்சு ஒண்ணேகால் மணி நேரத்துல, இன்டெர்வல் விட்டுட்டாய்ங்க. தலைவலி தாங்க முடியாம கேண்டீன் போனா, நான் போன படம் பாக்க வந்தப்ப   இருந்த அதே முட்ட பப்ஸ். அட கருமம் புடிச்சவய்ங்களா, படம் தான் புதுசா இல்லனா, முட்ட பப்ஸ் கூடவா,..?!!

சரி பரவாயில்ல, அப்படினு ரெண்டு பப்ஸ் தின்னுட்டு திரும்பவும் தேட்டர்க்குள்ள  போய் உக்காந்தா, திரும்பவும் நெறையக் காட்சிகளைக் காமிச்சு, கரெக்டா கிளைமாக்ஸ்ல படத்தை முடிச்சிட்டாங்க. இதுல என்ன புதுமை இருக்குனு எனக்கு ஒண்ணும் புரியல. ஆங்..  இதுக்கு எதுக்கு 72 மணி நேரத்துக்கு youtube ல இருக்குற எல்லா சேனலுக்கும் பேட்டி தரணும்.? உண்மையச் சொல்லணும்னா இந்தப் படத்தை விட அந்த முட்ட பப்ஸ் நல்லாவே இருந்தது. என்ன எழவு, ரெண்டு நாளா ஏப்பம்  வர்றது மட்டும் நிக்கவே இல்லை.. இந்த வீடியோ எடுக்கும் போதே 18 வாட்டி ஏப்பம் விட்டேன். எடிட்டிங்ல தூக்கிட்டாய்ங்க. இந்த இயக்குநரோட போன படத்துக்கு நான் சொன்ன விமர்சனத்தைப் பாத்துட்டு , “இவ்ளோ பேசுறானே, அவனால இது மாதிரி ஒரு சினிமா எடுக்க முடியுமா”ன்னு சவால் விட்டாரு. அவருக்கு நான் சொல்லிக்கிறது என்னனா, நூறு ரூவா குடுத்து முடி வெட்டிக்கிறீங்க. அவன் ஒழுங்கா வெட்டலைனா, ஏண்டா இப்படி வெட்டிட்டேனு சண்டை போடுவீங்களா மாட்டீங்களா..?  அதுக்கு அவன், “நீ வேணும்னா முடி வெட்டி பாரு அப்படினு சொன்னா நமக்கு எவ்ளோ கோவம் வரும்? ஆங்.. முடி வெட்டுறதா நம்ம வேலை..? நம்ம என்ன முடி வெட்டுற “பரியேறி”யா..? அது மாதிரி தான் இருக்கு அவரு பேசுறது. மொத்தத்துல இந்தப் படம் எப்படி இருக்குன்னா, தமிழ் சினிமாவைப் புரட்டி போடலானாலும் சரி போனு மன்னிச்சு விட்டுட்டு ஒரு தடவ பாக்கலாம். அடுத்த நிகழ்ச்சியில வேறொரு படத்துக்கு இதே விமர்சனத்தோட நாம சந்திக்கலாம். நன்றி . எப்போதும் கொதிக்கும் எண்ணெய் போல இருக்கும் தமிழகத்திற்குள், கடுகைப் போட்டு நிகழ்ச்சியை முடித்தார் அண்ணன் க்ரீன் சட்டை. 

“பரியேறி” எனும் வார்த்தை ஜாதியின் பெயரா, பொதுவெளியில் சொல்வதற்கு அருகதையற்றதா, முடி சீர்திருத்தும் தொழிலாளர்களுக்கு இந்த வார்த்தை அவமானத்தைப் பரிசளிக்குமா என்பதெல்லாம் இதைச்  சொன்னவருக்கும், இதை எழுதும் எனக்குமே தெரியாது. ஆனால் இந்த வார்த்தை பிரயோகத்தை ஆதாரமாகக் கொண்டுதான் மீதமுள்ள சம்பவங்கள் நடக்க போகின்றது. 

தங்களது பொறியியல் அறிவை பயன்படுத்தி, நவீன தொழில்நுட்பத்தில் இயந்திரங்கள் கண்டுபிடித்து, உயிரைப் பணயம் வைத்து, சாக்கடையில் அடைப்பு எடுப்பதிலிருந்தும், மனிதனே மனித மலம் அள்ளும் கொடுமையில் இருந்தும் மனிதனைக் காப்பாற்றி அனைவரையும் கவுரவமாக வாழச் செய்து இந்தியாவுக்கே முன் மாதிரியாக விளங்கும் அறிவார்ந்த தமிழக இளைஞர்கள், ஆசுவாசம் அடையவேண்டி ஒரு நாள் மெரினா பீச்சுக்குச் சென்று, கடலும் அலையும் இவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு அழகாக இல்லாததால், மேற்சொன்ன வீடியோவை ஃபோனில் பார்த்துமுடிக்கும் போது அவர்களுக்குக் கை நடுங்கத் தொடங்கியிருந்தது. அடுத்த போராட்டத்துக்கான நேரம் இது என்பதை அந்த நடுக்கம் அவர்களுக்குச் சொல்லியது.

‘ஜாதி வெறி பிடித்த க்ரீன் சட்டை.. ஒழிக.. ஒழிக.. 

இந்து தீவிரவாதி, ஆரிய வந்தேறி, பாசிச ஆட்சிநடத்தும் அமரேந்திர மோடி  ஒழிக.. ஒழிக.. இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கும்  கையாலாகாத, அடிமை தமிழக அரசே.. ஒழிக.. ஒழிக ..’ என கோஷங்கள் எழுப்பத் தொடங்கினர். 

இவர்களுக்கு வெகு தொலைவில் அமர்ந்திருந்த, நாட்டில் நடக்கும் செய்திகளையெல்லாம் சேகரித்து முடித்து, வேறு வழியில்லாமல் ஒவ்வொரு வீடாக எட்டி பார்த்து செய்தி தயாரித்துக்கொண்டிருக்கும், தமிழகத்தின் நூறுக்கும் மேற்பட்ட செய்தி சேனல்களில்  ஒன்றான “என் பொண்டாட்டி மீது சத்தியம்” செய்தி தொலைக்காட்சியில் புதிதாகச் சேர்ந்திருக்கும் ஒரு நிருபரின் காதில் இந்த கோஷங்கள் விழுவதற்குச் சற்று முன்னால் வரை, தனக்கு முன்னால் அமர்ந்திருந்த ஒரு கள்ளக் காதல் ஜோடியை உற்று நோக்கி அவர்களின் ஒவ்வொரு அசைவையும்  குறிப்பு எடுத்து கொண்டிருந்தார். பெருகி வரும் கள்ளக்காதல் என்ற செய்தி தொகுப்பிற்காக, கள்ளக் காதலன் எங்கெல்லாம் அவசரமாகக் கையை விடுகிறார், அதன் பின்னால் இருக்கும் உளவியல் காரணங்களை அலசி ஆராய்ந்து ஒரு கட்டுரையாகத் தயாரித்து கொண்டிருந்தவர் இந்த கோஷம் வந்த திசையை நோக்கி திரும்பிய போது, கலங்கரை விளக்கம் அவர் கண்ணுக்குத் தெரிந்தது. சொர்க்கத்திலிருந்து பாலச்சந்தரே வைத்த ஷாட் போல அது  இருக்க, கள்ளக் காதலர்களை அனாதையாக விட்டுவிட்டு, தனக்கு ப்ரோமோஷன் தரப்போகும் பிரேக்கிங் செய்தியை நோக்கி நடக்கத் தொடங்கினான். 

எ.பொ.மீ .ச டிவியின் போராட்டம் பற்றிய நேரடி ஒளிபரப்பைத் தொடர்ந்து, பெருகி விட்ட செய்தி சேனல்களின் கடும் போட்டியின் காரணமாக,  மற்ற டிவி சேனல்களும் மெரினா கடற்கரையை நோக்கி படையெடுக்கத் தொடங்கின. டிவி கேமராவைப் பார்த்து மக்களும், மக்களைப் பார்த்து அதிகமான செய்தி சேனல்களும் மெரினா பீச்சில்  குவிந்ததால் அதிகக் கூட்டம் கொண்ட ஒரு போராட்டமாக அது மாறியது. கூட்டத்தில் சத்தமாகக் கத்தும் இளைஞனைத் தனியே அழைத்து கேமராவுக்கு முன்னால் இன்னும் ஆக்ரோஷமாகக் கத்தச் சொல்லி  படம்பிடித்து சேனலுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அஜய் டிவி மூலம் எதிர்காலத்தில் உலகப் புகழ் பெறப்போகும் அநேகம் பேர் வித விதமாகக் கத்திக்கொண்டும், கோஷம் எழுப்பிக்கொண்டும் இருந்தார்கள். செய்தித்தாள் நிறுவனங்களும் சும்மா இருப்பார்களா.. கடற்கரையை விட்டுவிட்டு, கடலின் புகைப்படத்தை வெளியிட்டு, கூட்டமே  இல்லாத ஜாதி எதிர்ப்பு போராட்டம் என வர்ணித்துக் கட்டுரையை வெளியிட்ட பனமலர் பத்திரிக்கை, “லாலாக்கு டோல் டப்பிமா” என அந்தக் கட்டுரைக்குப் பெயரிட்டிருந்தது.

போராட்டத்துக்கு, ஆதரவு தெரிவிக்க வந்த இயக்குனர்  கா. பஞ்சித்திடம் மைக்கை நீட்டிய பத்திரிக்கையாளர், “சார்.. டுபாலி படம் எடுத்து தமிழ்நாட்டில் பாதி ஜாதியையும், ஓலா படம் எடுத்து மீதி  ஜாதியையும் ஒழித்து விட்ட நீங்கள், இப்போது மீண்டும் ஜாதி வெறி தலைவிரித்து ஆடுவதை எவ்வாறு பார்க்கிறீர்கள்..?” என்றார். 

“என் சேவை இந்த நாட்டுக்கு இன்னும் தேவைனு நினைக்குறேன்”, என்ற இயக்குனரின் பதிலைக் கேட்டு லேசாக ஜெர்க்கான நிருபர், “அப்படினா திரும்பவும் படம் எடுக்கப்  போறீங்களா.?” என சற்று பீதியுடனே கேட்டார்.

கண்டிப்பா.. இப்போ கஜினியைத் தான் பார்க்கப் போறேன். அடுத்த படத்துல அவர் ஒரு முடி திருத்தும் தொழிலாளரா நடிக்கிறார். அமெரிக்க அதிபருக்கு ஷேவ் பண்ற சீன்ல, அவரோட கழுத்துல கத்திய வச்சி  

“உனக்கு இது வெறும் மயிறு, 

இதனால தான் நிரம்பும் எங்க வயிறு, 

என் கையிலதான் இப்போ உன் உயிரு…….. னு 

ஆக்ரோஷமா பஞ்ச் டயலாக் பேசிட்டு, கேமராவைப் பாத்துகிட்டே ஸ்லோ மோஷன்ல  நடந்து வரும் போது சந்தோஷ் வாராயணன் போட்ட வெறியேத்தும் பாட்டு ஆரம்பிக்குது. பாட்டு முழுவதும், வருண்ராஜா காமராஜை “ டேய்ய்ய்ய்ய்ய்ய்.. ஒம்மாளேஏஏ……. ஓடிடுஉஉ…. அப்படினு கத்தவிட்டா, செம மாசா இருக்கும்.  அந்த ஒரு சீன பார்த்தாலே போதும், தமிழ்நாட்டு மக்கள் திருந்தி, ஒருத்தருக்கொருத்தர் அன்பு செலுத்தி, ஜாதிக்கு சாவுமணி அடிச்சி, சகோதரத்துவம் பேணி, அண்ணன் தம்பிகளா வாழ ஆரம்பிச்சுடுவாங்க., எனச் சொல்லி, அந்த மகத்தான தருணத்தையும், அது தன்னால் தான் நடக்கப் போகிறது என நினைப்பும் தந்த நெகிழ்ச்சியில் கலங்கிய கண்களைத் துடைத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்த போது தொலைபேசி அழைப்பு வந்தது. 

‘ஹலோ.. யாருங்க..?’

‘பஞ்சித் சார்.. நான் கஜினி பிஏ பேசுறேன், நீங்க சார் வீட்டுக்கு வரீங்கனு   நியூஸ் பார்த்தேன்.. கஜினி சார் இன்னைக்குக் காலைல தான் கெளம்பி இமயமலை போனாரு.. பாபாஜி ஆசீர்வாதத்தோட இன்னும் நூத்தம்பது வருஷம் கழிச்சுத்தான் வருவேன்னு சொல்லச் சொன்னாரு.’

‘அடடா, இப்போ தமிழ்நாட்டுல அவரசமா ஜாதிய ஒழிச்சு ஆவணும். அது சாரால  மட்டும் தான் முடியும். இப்போ போய் இப்படி சொல்றீங்களே..!!’

‘சொல்றனேனு தப்பா நினைக்காதீங்க.. நீங்களும் சாரும் சேர்ந்து ஏற்கனவே ரெண்டு தடவை ஜாதிய ஒழிச்சிட்டீங்க. இந்தத் தடவை வேணும்னா குமலோட சேர்த்து ஒரு தடவை ஒழிச்சி பாருங்களேன். பாவம், அவருக்கும் ஜாதியை ஒழிக்க ஒரு வாய்ப்பு குடுத்த மாதிரி இருக்கும் பாருங்க.’

‘அவர் கொள்கை வேற, என் கொள்கை வேறங்க. எங்க ரெண்டு பேரோட கொள்கையும் ஒரு புள்ளியில் இணையாது. அதுவும் இல்லாம அவர் பேசுறது எனக்கு புரிஞ்சு, நான் படம் எடுத்து முடிக்கறதுக்குள்ள நூத்தம்பது வருஷமாயி, அதுக்குள்ள கஜினி சாரே திரும்பி வந்துடுவார்.’

‘அடடா., இதை கேள்விப்பட்டா  கஜினி சார் ரொம்ப வருத்தப்படுவார் தம்பி.’

‘ஏங்க, அவர் பேசுறது உண்மையிலேயே  யாருக்குமே புரியலைங்க. அதை தாங்க சொன்னேன் . இதுல அவர் வருத்த படுறதுக்கு என்ன  இருக்கு .?’

‘நான் அதச் சொல்லல தம்பி, குமலுக்கு எதோ கொள்கை இருக்குனு சொன்னீங்களே, அதைச் சொன்னேன். குமல் சாரும் தன்னை மாதிரியே  டைம் பாஸுக்கு உளறிட்டு இருக்கார்னுதான் இது வரைக்கும் நம்பிகிட்டு இருக்கார். இப்படி அவருக்குத் திடீர்னு கொள்கை இருக்குனு தெரிஞ்சுதுன்னா, அரசியல் களத்துல தன் நண்பனின் துரோகத்தல தனிச்சி விட பட்டுட்டோமேனு ரொம்ப கலங்கிப் போயிடுவார். சரிப்பா, சார் வந்தவுடனே, அது வரைக்கும் நான் உயிரோட இருந்தன்னா,  உனக்கு ஃபோன் பண்ணிச் சொல்றேன்’ என் இணைப்பை துண்டித்தார்.

இந்தச் சம்பவத்துக்கு முதல் நாள்,  போயஸ் கார்டனில், கஜினியின் வீட்டை நோக்கி தடதடவென நிருபர்கள், மைக்கும், கேமராவையும் தூக்கி கொண்டு ஓடினார்கள். கதவைத் திறந்து வெளியே வந்த ரஜினி , “போச்சுடா..!” என்பது போல அவர்களைப் பார்த்துவிட்டு,  திரும்பவும் காம்பௌண்டுக்குள் போக எத்தனித்து கேட்டைப் பிடித்துத் திரும்ப, அவரின் அக்குளின் வழியாக குனிந்து அவருக்கு முன்னால் சென்ற இளம் நிருபர் அவர் வாய்க்கு நேராக மின்னல் வேகத்தில் மைக்கை நீட்டி, ‘தமிழகத்தில் ஜாதிக்கு எதிராக பொதுமக்கள் பெரிய போராட்டம் நடத்துறாங்க. அத பத்தி உங்க கருத்து என்ன சார் ..?’ என்றான். ‘சே.. இப்படி வந்து மாட்டிகிட்டேனே..!!’ என நினைத்துக்கொண்டே அவர்களுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

‘தோ.. பாருங்க .. இந்த ஜாதி, மதம் எல்லாம் சுத்த வேஸ்ட்.’ – கஜினி 

“ஆஹான்”.. என்றார் முதல் வரிசையில் நின்றிருந்த இவரைவிட வயசான மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர். 

‘அதெல்லாம் ரொம்ப ரொம்ப தப்பான விஷயம். ‘

‘ஓஹோ..’

‘ஜாதி, மதத்தை  தன்னுடைய அரசியல் லாபத்துக்காக மிஸ்யூஸ் பண்றாங்க அப்டி சொன்னா.., அதை நாம சும்மா விடக்கூடாது.’

‘உம்ம்… ‘

‘இந்தியாவில உள்ள எல்லா மக்களும் ஒண்ணு சேர்ந்து இதுக்காகப் போராடணும்னு இந்த நேரத்துல வேண்டி கேட்டுக்குறேன்.’

“சார், இந்தியாவுல எல்லா மக்களும் ஒண்ணா ஆயிட்டா.., யாரை எதிர்த்து போராடுவாங்க” என குனிந்தபடி குறிப்பு எடுத்துக்கொண்டே கேட்டார்  அந்த மூத்த நிருபர்.

‘அதாவது நான் என்ன சொல்ல வரேன்னா, மக்கள் எல்லாரும் ஜாதி மதத்தையெல்லாம் மறந்துட்டு ஆன்மீக வழியில பயணம் செய்யணும்.’

“ஜாதி, மதமே இல்லனா ஆன்மீகம்  மட்டும் எப்படி சார் இருக்கும்.? ஒண்ணும் புரியலையே ” என்ற நிருபரைப் பார்த்து பொறுமையிழந்த கஜினி ..

‘தோ பாருங்க, நான் பாட்டுக்கு சிவனேனு என் பேரன் கூட கிரிக்கெட் விளையாண்டுட்டு இருந்தேன். அவன் ஒரு பால தூக்கி அடிச்சான், அது வெளில வந்து விழுந்துடுச்சு, அத எடுக்க நான் வெளில வரும்போது, என் வீட்டு வாசல் இருந்த நீங்க என்கிட்டே வந்து தேவையில்லாத கொஷின்ஸ் கேக்கறீங்க அப்டி சொன்னா, அது எல்லாத்துக்கும் காரணம் என் வீட்டு முன்னால இருக்குற “வெற்றிடம்” தான். அந்த “வெற்றிடத்தை” போக்குவதற்கு நான் நிச்சயமா எதாவது செய்வேன்’ என கோவமாகச் சொல்லி முடிக்கும் போது, கடைசி வரிசையில் நின்று எக்கி மைக்கை பிடித்து கொண்டிருந்த இளம் நிருபர், ‘அப்போ தமிழக அரசியல்ல நல்ல தலைமைக்கான வெற்றிடத்தை போக்க நீங்க நேரடி அரசியல்ல இறங்க போறீங்களா..?’ என்றான். 

‘அவனை எட்டி பார்த்த ரஜினி, நீ நியூஸ் கலெக்ட் பண்ண வந்தியா..? இல்ல எனக்கு ப்ராப்லம்ஸ்  குடுக்க வந்தியா.? நீயெல்லாம் எங்கடா ஜெர்னலிசம் படிச்ச?’ என்றார். இவ்ளோ பெரிய செலிபிரிட்டி முதன் முதலாக தன்னிடம் அக்கறையாக விசாரிக்கிறாரே என ஆர்வத்தில் அவனும் பதில் சொன்னான்.

‘நான் எங்க அதெல்லாம் படிச்சேன்..? நான் ஒரு என்ஜினீயர் சார். நம்ம  திராவிட கட்சி முன்னாள் வார்டு மெம்பெரோட காலேஜ் இல்ல, அதுதான் சார்  “அருள்பாலிக்கும் அன்னை அகிலாண்டேஸ்வரி சமேத வீரபத்திர சுவாமி சந்நிதான கொங்கு வெள்ளாள, செங்குந்த நாகபதனி  மகாஜன சங்கம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி. அங்க தான் ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் படிச்சேன்’, என அவன் சொல்லி முடிக்கும் போது கஜினிக்கு லேசாக கிர்ரென்று வந்தது. 

‘அப்புறம் எப்படி இங்க ..?’ என அவர் முடிக்கும் முன் 

‘போன வாரம் வரைக்கும் கார்பொரேஷன்ல குப்பைதான் சார் அள்ளிக்கிட்டு இருந்தேன். காண்ட்ராக்ட் லேபர் .. சம்பளம் ஒழுங்கா தர்றதில்லை. பிரெண்ட்   தான் சொன்னான்.. இது மாதிரி சினிமாகாரங்க பிரஸ் மீட்டுக்கு போனா சாப்பாடு போடுவாங்கனு .. அதான் வந்தேன்.. பிரியாணி ரெடி ஆயிட்டு இருக்கா சார்..?’ என வெள்ளந்தியாக கேட்டான்.

தமிழ்நாட்டில் இன்ஜினீயரின் பாவமான நிலைமையை நினைத்து வருத்தமடைந்த  கஜினி தன் கோபத்தையெல்லாம் குறைத்துக்கொண்டு தன்மையாகச் சொன்னார்.

‘கடைசி ஓவர்ல இன்னும் ரெண்டு பால் மிச்சம் இருக்கு. அதுக்கு அப்புறம் நான் பேட்டிங் பண்ணனும்.நெறைய வேலை இருக்கு. ஆங்.. நாளைக்கு நான் இமயமலை போறேன். வந்த உடனே தமிழ் நாட்டுக்கே பிரியாணி விருந்து போடப் போறேன். நீங்க எல்லோரும்  அவசியம் வரணும்’ எனச் சொல்லிவிட்டு வேகமா உள்ளே சென்றார்.                  

“சாதி இரண்டொழிய வேறில்லை” எனச் சொன்ன தமிழ்க் குடி பிள்ளைகள் நாங்கள். எங்களை அனாவசியமா சீண்டாதீங்க.. அடிக்க ஆரம்பிச்சோம்னா ஆசுபத்திரி பத்தாது.. யாருகிட்ட..!!’ எனச் சொன்னபோது அந்த அதிரடி பேச்சாளரின் கழுத்தின் நரம்பு புடைத்தது.  மேலும் தொடர்ந்தார்.

‘என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க..? அயோக்கிய பயலுகளா. 

எங்ககிட்ட வந்து சாதி மயிறுனு பேசிப் பாரு பாப்போம்..

அத்தனை பேரையும் மல்லாக்கப் போட்டு, என் வீரத் தமிழ் பாட்டிகள் வேலு நாச்சியாரும், கண்ணகியும் நெல்லு குத்திய   உலக்கையை வச்சி வாயிலேயே குத்துவோம்…. ஒருத்தனுக்கும் வாய் இருக்காது. பின் வழியா தான் அப்புறம் எல்லாமும்.. ஹா.. ஹா..’   என சிரித்தவருடன் சேர்ந்து கூட்டமும் சிரித்தது. 

‘அதுக்கு தான் சொல்றோம்., என் ரத்த ஒறவுகளே…!!  ஆட்சியை எங்ககிட்ட குடுங்க, அதுக்கு அப்புறம் என்ன நடக்குதுன்னு வேடிக்கை மட்டும் பாருங்க.. ‘ என ஆவேசமான பேச்சு டிவியில் வருவதைக் கேட்டு, புத்தகம் படித்துக்கொண்டிருந்த அமிழ்து நாட்டு  முதல்வர் நிமிர்ந்து பார்த்தார். பெருங்கூட்டம் நிற்பதைப் பார்த்து, அது போராட்ட கூட்டம் என்பதைக் கண்டு அருகில் இருந்த உதவியாளரிடம் கேட்டார்.

‘இப்போ என்னவாம்..?’

‘ஜாதிய ஒழிக்கச் சொல்லி மெரினால போராட்டம்.’

‘ஓஹோ … வழக்கம் போலத்தானே ..? சாதிக்கு அமரேந்திர மோடி தான் காரணம் .. நான் அவருக்கு சப்போர்ட் பண்றேன்.. அதான..?’

‘அதேதான்.. ‘

‘நிம்மதியா ஒரு புத்தகம் படிக்க விட்றானுங்களா..? என தான் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைக்கும் போது, அந்த புத்தகத்தின் பெயரைப் படித்தார்.    

“இறந்தவனின் நிழலோடு தட்டாமாலை ஆடும்போது கீழே விழாதிருப்பது முக்கியம் –  எழுத்தாளர் பெருந்தேவி” என போட்டிருந்தது. 

“அடக் கடவுளே..!! இந்தப் புத்தகம் எழுதறவன்லாம், “சில்க் ஸ்மிதா”, “சிக்கன்  பகோடா” னு ஈஸியா நியாபகம் வச்சிக்கற மாதிரி எல்லாம் பேர் வைக்க மாட்டாங்களா..? இவ்ளோ பெரிய பேர நான் எப்படியா நியாபகம் வச்சி எவனாவது கேட்கும் போது சொல்றது..? இவனுங்ககிட்ட புத்தகம் படிப்பேன்னு சொன்னா  சரிதான்னு போகாம, புத்தகத்தோட பேர வேற கேட்டு அசிங்கப்படுத்துவானுங்க.. சை…’

‘அது கிடக்கட்டும்.. இந்தக் கலவரத்துக்கு இப்போ என்ன பண்றது..? போலீசை விட்டு தடியடி நடத்த சொல்லுவோமா…?’ என்றார்…

‘அதெல்லாம் வேணாங்க.. இது என்ன ஜல்லிக்கட்டா..? ஜாதிப் போராட்டம்.. அவனுங்களே அடிச்சிக்கிட்டு ஓடிடுவானுங்க. சும்மா ரெண்டு  நாள் தான்.’

‘அப்படிங்குற?… அதுவும் சரிதான்.. ஆனா இந்த எதிர்க்கட்சி காரங்களை நெனைச்சாதான் கொஞ்சம் பயமா இருக்கு எனச் சொல்லிவிட்டு திரும்பவும் புத்தகத்திற்குள் மூழ்கினார்.

ஆக, நான் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என பேசமாட்டேன்.. ஏனென்றால் நான் என் அப்பாவின் மகன்என அமிழ்து நாட்டு எதிர்க்கட்சி தலைவர் மேடையில் சொன்னபோது, அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது. கூட்டத்தை முடித்துக்கொண்டு காரில் சென்று கொண்டிருந்த போது, எதிர்கட்சித்தலைவரின் உற்ற நண்பரும், அரசியலில் தனது வலதுகரமுமான உரைமுருகன் மெல்ல பேச்சை தொடங்கினார். தலைவரே.., பேச்சு படு அமக்களம். அப்படியே உங்க அப்பாவைப் பாக்குற மாதிரி இருந்தது.’

‘அது இருக்கட்டும் உரை. நான் என் அப்பாவின் மகன்னு சொன்னதும் எதுக்குயா எல்லாரும் அப்படி கைதட்டுனானுங்க.? எல்லாரும் அவன் அவன் அப்பனுக்கு தான பிறக்கிறான். இதுல என்னயா ஸ்பெஷல்.?’

‘அட இந்த தமிழ்நாட்டு மக்களே அப்படி தான் தலைவரே. ரொம்ப நக்கல் புடிச்சதுங்க. எதுக்கு கத்துதுங்க, கை தட்டுதுங்கனே சொல்ல முடியாது. இதெல்லாம் போட்டு மனச கொழப்பிக்காதீங்க. நிம்மதியா போய் தூங்குங்க, நாளைக்கு சாயங்காலம் அந்த காலேஜ் மீட்டிங்ல பேசுறீங்க.,’ எனச் சொல்லி தலைவரை வீட்டில் விட்டுவிட்டு உரை அவர் வீட்டிற்கு சென்றார்.

வழக்கம் போல, பழைய வரலாறு ஆகிவிட்ட தனது சாதனைகளையும், தனது கட்சியின் சாதனைகளையும் அரை மணி நேரத்துக்கும் மேலாக மூச்சு முட்ட பேசியும், மாணவர்களிடம் இருந்து எந்த ரியாக்ஷனும் வராததால், பக்கத்தில் நின்றிருந்த உரையை அருகில் கூப்பிட்டார் தலைவர்

‘யோவ் உரை, என்னயா  எல்லாரும் தூங்கிட்டானுங்களா ..? ஒரு ஆறுதலுக்கு கூட கைத்தட்ட மாட்டுறானுங்க

‘அட, பூரா பயலும் மில்லெனியல்ங்க. பப்ஜி விளையாண்டுட்டு, tiktok பண்ற பசங்க. அவனுங்கள்ட்ட போய், ரயில், தமிழ், தண்டவாளம்னா அவனுக்கு என்னங்க புரியும்.?

‘இப்போ என்னய்யா பண்றது?

தலைவரே, புதுசா படம் எடுக்குற ஒரு சில  டைரக்டர், ஒரு சீனுக்காவது கை தட்டல் வரட்டுமேனு எதாவது  ஒரு சீன்ல ரஜினியோட படமோ, பாட்டோ, இல்ல  போஸ்டரா வரமாதிரி சீன் வச்சிடுவானுங்க. அந்த மாதிரி யூத் பல்ஸ் தெரிஞ்சி எதாவது ஒண்ண அடிச்சுவிடுங்க தலைவரே..’

‘அப்படிங்குற.., இப்போ பாரு வேடிக்கைய..

தமிழகத்தில் ஜாதியை ஒழித்து இந்த மாநிலத்தையே சமத்துவபுரமாக மாற்றுவது தான் எங்கள் கட்சியின் குறிக்கோள்ஆக, நான் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என பேசமாட்டேன்.. ஏனென்றால் நான் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமாரின் மகன் எனச் சொன்னபோது, ஆரம்பித்த கைதட்டலும்,விசிலும் அடங்குவதற்கு பல நிமிடங்கள் ஆனது.

இதைச் சொல்லிவிட்டு உரையைப் பெருமிதமாக திரும்பி பார்த்தார், எந்த சூழ்நிலையையும் சிரித்துக் கொண்டே சமாளிக்கும் உரையின் முகம் குப்பென வேர்த்திருந்தது. ‘தலைவரே., நாம அரசியல்ல எந்த எல்லைக்கும் போறவங்கதான், ஆனா நீங்க கொஞ்சம் எல்லை தாண்டி போயிட்டீங்க. ரசிகன்னு சொல்லி இருக்கலாம்.

‘அதுக்கென்னயா..? திருத்திச் சொல்லிட்டா போச்சு. நாம மேடையில உளர்றது சகஜம் தான..? பத்தோட பதினொண்ணு, அத்தோட இது ஒண்ணுனு கண்டுக்காம உட்ருவானுங்க.’

‘இந்தப்  பதிலைக் கேட்டு ஆசுவாசம் அடைந்த உரை சொன்னார்,  நமக்கு இப்படி ஒரு வசதி இருக்கறதால தப்பிச்சோம் தலைவரே.!! என்ன வேணும்னாலும் உளறலாம்.. என்ற உரை தன் தானைத் தலைவனின் சாமர்த்தியத்தை நினைத்துப் பெருமிதம் அடைந்தார்.

மாநிலம் அதிர்வது மத்திக்கு கேட்காமல் இருக்குமா..? குமித் ஷா..ஜி .., இந்தத் தடவை நான் ஒண்ணுமே பண்ணல, ஆனா போராட்டத்துல என் பெயரைச் சொல்லி கத்துறானுங்க. இதுக்கெல்லாம் ஒரு எண்டு கார்டே கிடையாதா.? எலெக்ஷன் நடத்தாமலேயே  ஆட்சியைப் புடிக்கிற அளவுக்கு திறமைசாலி நீங்க . இந்த தமிழ்நாட்டுக்கு ஒரு வழி சொல்லுங்களேன் எனக் கதறினார் அமரேந்திர மோடி.

அரே பைய்யா.. போராட்டம் எங்க நடக்குது..?’

மெரினா பீச்சல.

‘ONGCக்கு கால் பண்ணி மெரினா பீச்ல, மீத்தேன் எடுக்கச் சொல்லி, அத சென்ட்ரல் கவர்மெண்ட் கண்ட்ரோல்ல எடு. எவன் உள்ள வரணும்னாலும் சென்டரலோட அனுமதி வாங்கிட்டு தான் வரணும்னு சொல்லு. தியானம் பண்றதுக்கு, சமாதி மேல சபதம் பண்றதுக்கெல்லாம் அனுமதி இல்லேனு ஸ்ட்ரிக்டா  சொல்லிடலாம்.’

‘அடப் போங்க ஜி.. போராட்டத்தை நிறுத்துறதுக்கு ஐடியா கேட்டா அடுத்த போராட்டம் ஆரம்பிக்கறதுக்கு கன்டென்ட் குடுக்குறீங்க. நீங்க ஒரு பெரிய ராஜதந்திரி. இந்த ஐடியா உங்க ஸ்டேண்டர்டுக்கு  இல்லையே ஜி ..!! தமிழ்நாட்டு மக்களை கொஞ்ச நாளைக்கு கோமாவுல வைக்கிற மாதிரி எதாவது ஐடியா சொல்லுங்க.’

‘ஹா.. ஹா.. அப்படியே..!! என்ற சொல்லிக்கொண்டே போனை எடுத்து நம்பரை டயல் செய்கிறார்.

‘ஹலோ குமல் ஜி .. நமஸ்தே.. நான் ஷா பேசுறேன். கொஞ்ச நாளைக்கு அங்கிருந்து எந்தச் சத்தமும் வரக்கூடாது., ஆப்பரேஷன ஆரம்பிங்க ‘

‘புரிகிறது ஷா ஜி.. அடுத்தவராமே ஆரம்பிச்சிடலாம்.’

குபூச்சிக்கு குபூச்சிக்கு பிக் பாஸ்….!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கும் ஒரு இளம் ஜோடி, இரவு பத்து மணிக்குமேல், விளக்கெல்லாம் அணைத்த பிறகு என்ன செய்திருப்பார்கள் என்பதை மக்கள் தீவிரமாக யோசிக்க தொடங்கியதில், தற்காலிகமாகத் தமிழகம் அமைதிப் பூங்காவனது.  

-மனோ அழகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad