2020 மக்கட்தொகை கணக்கெடுப்பு
நீங்கள் கடைதெருவுக்குச் சென்று அரிசி, பருப்பு, காய்கறி வாங்குகிறீர்கள் என்றாலே உங்கள் வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள், அவர்களது விருப்பம் என்னென்ன போன்றவை தெரிந்து, அதற்கேற்ப தான் நீங்கள் பொருட்கள் வாங்குவீர்கள். அந்தத் தேவைக்கேற்ப உங்களது உழைப்பு இருக்கும், சம்பாத்தியம் இருக்கும், செலவினங்கள் இருக்கும். இது போலவே, ஒரு நாட்டின் நிர்வாகமும் அந்த நாட்டு மக்கட்தொகையைப் பொறுத்தே அமையும். அதற்காக, அந்த நாட்டு மக்கள் குறித்த தகவல்கள் அந்நாட்டின் அரசிற்கு அவசியமாகிறது. அந்தத் தகவல்களைச் சேகரிக்கச் சென்சஸ் எனப்படும் மக்கட்தொகை கணக்கெடுப்பு நடைபெறுகிறது.
அமெரிக்காவில் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கட்தொகை கணக்கெடுப்பு நடைபெறுகிறது. கடந்த முறை 2010இல் கணக்கெடுப்பு நடைபெற்றது. தற்சமயம் இம்மாதமான மார்ச்சில் மக்களுக்குக் கடிதங்கள் அனுப்பப்பட்டு, இப்போதைய 2020க்கான கணக்கெடுப்புத் தொடங்கியுள்ளது. ஏப்ரல் 1 என்பது சென்சஸ் நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது அன்றைய தினத்தில் உங்கள் வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை உங்களது கணக்கெடுப்புப் பதிலில் குறிப்பிட வேண்டும். அன்றைய தினத்தை மையமாகக் கொண்டு இந்தக் கணக்கெடுப்பு இருக்கும்.
இந்தக் கணக்கெடுப்பில் பின்வரும் கேள்விகள் கேட்கப்படுகின்றன.
- உங்கள் இல்லத்தில் எத்தனை பேர் வசிக்கிறார்கள்?
- தற்காலிகமாக யாரும் தங்கி இருக்கிறார்களா?
- என்ன வகை வீடு? அடுக்கு மாடி குடியிருப்பா? சொந்த வீடா? வாடகை வீடா?
- தொலைபேசி எண்
- வீட்டில் இருப்போரின் பெயர்கள்
- பாலினம்
- பிறந்த தினம், வயது
- பூர்விகம்
- இனம்
- வீட்டில் இருக்கும் பிறரின் பெயர்கள்
- என்ன உறவு?
அமெரிக்கப் பூர்விகவாசிகள் மட்டுமின்றி, அமெரிக்காவில் வாழும் அனைத்து மக்களும் இந்தக் கணக்கெடுப்பில் கலந்துக்கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர். பயணியர் நுழைவிசைவு எனப்படும் விசிட்டர் விசா தவிர பிற விசாக்கள் எதில் வந்திருந்தாலும், பிற நாட்டுமக்களும் இந்தக் கணக்கெடுப்பில் கலந்துக்கொள்ளலாம். ஒரு மாநிலத்தின் மக்கட்தொகைக்கு ஏற்பவே, அதன் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் அமையும். சட்டங்கள் இயற்றப்படும் போது, ஒரு மாகாணத்தின் குரல், அந்த எண்ணிக்கையின் மூலமாகவே வலிமையாக ஒலிக்கும். உங்கள் பகுதி பள்ளிகளுக்கு, மருத்துவத்திற்கு, கட்டமைப்பிற்கு நிதி ஒதுக்கீடு போன்ற திட்டங்கள் இந்தக் கணக்கெடுப்பின் மூலம் பெற்ற தகவல்களைப் பொறுத்தே அமைகின்றன. அதனால், இந்தக் கணக்கெடுப்பில் ஒவ்வொருவரும் தவறாமல் பங்கேற்பது முக்கியமாகிறது.
இதில் இனம் என்ற கேள்விக்கு ‘Other – Asian’ என்று குறிப்பிட்டு, ‘Tamil’ என்று எழுதுவதற்கு அமெரிக்கத் தமிழ் அமைப்புகள் பரிந்துரைக்கின்றனர். இதன் மூலம் அமெரிக்காவில் மரபு, பண்பாடு, கலை சார்ந்த திட்டங்களில் தமிழைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. மொழி வளர்ச்சி மற்றும் கல்வி சார்ந்த பணிகளுக்கு மானியம் அளிக்கவும் இத்தகவல் அரசிற்கு உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன் எப்பொழுதும் இல்லாதது போல், இம்முறை இணையம் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் இந்தக் கணக்கெடுப்பில் சுலபமாகப் பங்கேற்கலாம். ஆனால், அதற்கு உங்கள் வீட்டிற்குக் கணக்கெடுப்புக் குறித்த கடிதம் வந்திருக்க வேண்டும். அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள எண்ணை பதிவிட்டு, இணையத்தில் உங்கள் தகவலைப் பதிந்துக்கொள்ளலாம். மக்களின் பதில்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டியது, அரசின் சட்டக்கடமையாக உள்ளது. இந்தத் தகவல்கள் அனைத்தும் புள்ளி விவரங்கள் உருவாக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் வேறு எதற்கும் பயன்படுத்தப்படாது என்றும் கணக்கெடுப்பு அலுவலகமான சென்சஸ் பீரோ உறுதியளிக்கிறது.
கடிதங்கள் அனுப்பப்பட்டு, மார்ச் 12 ஆம் தேதியன்று தொடங்கிய சுய பதிவு கட்டமானது, ஜூலை 31ஆம் தேதிவரை திட்டமிடப்பட்டிருந்தது. தற்சமயம், கொரோனா பாதிப்பால் அது ஆகஸ்ட் 14 ஆம் தேதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. சுயமாகக் கணக்கெடுப்பிற்காகத் தகவல்களைச் சமர்பிக்காதவர்களை, இக்காலக்கட்டத்தில் இருமுறை நினைவூட்டுவார்கள். வீடில்லா மக்களையும் கணக்கெடுக்க அலுவலர்களை நியமித்துள்ளார்கள். கணக்கெடுப்பு அலுவலர்களை அதிகம் சிரமப்படுத்தாமல், விரைவாக உங்கள் தகவல்களை உங்களுக்கு வசதியான வழியில் பதியுங்கள். 230 ஆண்டுகளாகப் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வரும் இந்தக் கணக்கெடுப்புத் திருவிழாவில் கலந்துகொள்ளுங்கள். உங்கள் சமூகக் கடமையை எளிமையாகத் தவறாமல் நிறைவேற்றுங்கள்.
மேலும் தகவலுக்கு,
சரவணகுமரன்
Arumai, Good article