உயிலுடன் வாழ்வோம்
Podcast: Play in new window | Download
Subscribe: Apple Podcasts | Spotify | Email | RSS
ஊர் இருக்கிற நிலைமையில யாருக்கு எப்ப உயிரு போகும்’ன்னு தெரியல. இந்த நிலவரத்துலயாவது நாம உயிலு பத்தி யோசிக்கணும் இல்ல? எல்லாருக்கும் உயில்’ன்னா என்ன’ன்னு தெரிஞ்சிருக்கும். ஆனா, எல்லோரும் அது நமக்குச் சம்பந்தம் இல்லாத விஷயம்’ன்னே டீல் பண்ணியிருப்போம். கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து, மரணப் படுக்கையில் இருக்கிற வயசானவங்களுக்குத் தேவையான விஷயம் அது அப்படி’ன்னு தான் நம்ம நினைப்பு இருக்கும். உண்மை அப்படி இல்லை. உயில் பத்தி நாம எல்லோருமே தெரிஞ்சிக்கணும். ஏன்னா…
உயில் இல்லாத நிலையில் பெற்றோர் இருவரும் ஏதோ ஒரு விபத்திலோ அல்லது நோயினாலோ துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட்டால், அவர்களது குழந்தையை யார் வளர்ப்பது என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும். அதேபோல், இறந்தவரின் சொத்து யாருக்குச் செல்ல வேண்டும், எப்படிப் பங்கிடப்பட வேண்டும் என்பதையும் நீதிமன்றம் சொல்லும். அந்த முடிவுகள் இறந்தவரின் விருப்பத்தையொட்டி இருக்குமா என்று தெரியாது. இறந்தவரின் சொத்தைப் பராமரிக்க, அவர்களது குழந்தையை வளர்ப்பதற்கான செலவிற்கு என நீதிமன்றமே ஒரு அறக்கட்டளை அமைக்கும். அந்த அறக்கட்டளையின் செலவிற்கும் அந்தச் சொத்தில் இருந்து தான் பணம் எடுக்கப்படும். யாரும் இப்படி ஒரு நிலை உண்டாவதற்கு விரும்ப மாட்டார்கள். ஆனால், எல்லோரும் இப்படிப்பட்ட நிலையைத் தவிர்ப்பதற்கு உயில் எழுதுகிறார்களா என்றால் பெரும்பாலும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ரொம்ப யோசிக்காமல், அதிகம் தள்ளிப்போடாமல், இது போன்ற நிலையைத் தவிர்க்க, உடனே இதற்கான வேலையில் இறங்கவும்.
சிம்பிளான தனிநபர் உயில், பெற்றோர் இருவரும் சேர்ந்து எழுதும் கூட்டு உயில், வாழும் காலத்திற்கான வாழும் உயில் எனப் பலவகையான உயில்கள் இருக்கின்றன. அவரவர் வசதிக்கேற்ற, தேவைக்கேற்ற வகையில் உயில்கள் எழுதிக்கொள்ளலாம். கையெழுத்திலான உயில், ஆன்லைன் உயில் போன்ற உயில்களும் இருக்கின்றன. நீங்கள் இருக்கும் மாநிலத்தில் எவ்வித உயில் அங்கீகரிக்கப்படும் என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ற உயிலை எழுதுங்கள்.
உதாரணத்திற்கு மினசோட்டாவில் உயிலுக்கென்று உள்ள சட்டத்திட்டங்கள் என்ன சொல்கிறது என்றால்,
- உயில் எழுதுபவருக்கு 18 வயதாகி இருக்க வேண்டும்.
- உயில் எழுதுபவர் நல்ல திடமான மனநிலையுடன் இருக்க வேண்டும்.
- உயில் கையெழுத்தோ, டைப் செய்யப்பட்டதோ எழுத்தில் இருக்க வேண்டும். ஆடியோ, வீடியோ துணுக்குகள் ஒத்துக்கொள்ளப்படாது.
- உயில் எழுதுபவர் கையெழுத்திட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால், உயில் எழுதுபவரால் அங்கீகரிக்கப்பட்டவர் கையெழுத்திட்டிருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் இருவர் சாட்சி கையெழுத்திட்டிருக்க வேண்டும்.
உயில் எழுதுவதற்குக் கண்டிப்பாகச் சட்ட நிபுணரிடம் செல்ல வேண்டும் என்றில்லை. கொஞ்சம் விவரம் தெரிந்தவராக இருந்தால், எளிமையான உயிலை நீங்களே எழுதிக்கொள்ள முடியும். இணையத்தில் தேடினால், மாதிரி உயில் ஆவணங்கள் கிடைக்கும். அதைப் பார்த்து காப்பி அடித்து எழுதிக் கொள்ளலாம். கவனம், ஈ அடிச்சான் காப்பியாக அடித்து, உங்கள் சொத்தை வேறு யாருக்கோ தப்பாக எழுதி வைத்து விடாதீர்கள்!!
சட்டச் சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க, ஒரு சட்ட நிபுணர் உதவியை நாடுவது நல்லது. ஒரு அட்டர்னியிடம் சென்றால், அவர் உங்களிடம் இருந்து தேவையான அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொண்டு, உங்களது உயிலைத் தயார் செய்து கொடுத்துவிடுவார். பொதுவாக உயில் எழுதுபவரின் பெயர், முகவரி, குடும்பத்தினர் தகவல், சொத்து விபரங்கள், கடன் விபரங்கள், காப்பீடு விபரங்கள், இறப்பிற்குப் பிறகு யார் சொத்தைப் பராமரிக்க வேண்டும், யாருக்கு எவ்வளவு பங்கு கொடுக்க வேண்டும், குழந்தைகளை யார் பார்த்துக்கொள்ள வேண்டும் போன்ற தகவல்கள் அனைத்தும் குறிப்பிட வேண்டும். ஒரு சிலர் பல இடங்களில் முதலீடு செய்திருப்பார்கள். ஆனால், எங்கே முதலீடு செய்திருக்கிறோம், எவ்வளவு முதலீடு செய்திருக்கிறோம் போன்ற தகவல்களை யாரிடமும் பகிராமல் இருந்திருப்பார்கள். இவை யாருக்குமே தெரியாமல் போனால், அந்த முதலீடுகள் எல்லாம் பாழாகிவிடும் வாய்ப்பிருக்கிறது. அது போன்ற நிலை வராமல் இருக்கத் தான் உயில்கள் உதவுகின்றன. அமெரிக்காவில் உயில் எழுதும் இந்தியர்கள், தங்கள் வாரிசுகளுக்கும் சொத்துகளுக்கும் காப்பாளர்களாக இந்தியாவில் இருக்கும் சொந்தங்களையும் குறிப்பிடலாம்.
கையெழுத்திடப்பட்ட உயில்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று அவசியம் இல்லை. வேண்டுமென்றால், தாக்கல் செய்து கொள்ளலாம். இல்லாவிட்டால், வீட்டில் பத்திரமாகப் பாதுகாத்து வைத்துக்கொள்ளலாம். உயில் எங்கே இருக்கிறது என்பதை மறக்காமல் குடும்பத்தினரிடம் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.
சில நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்குச் சட்ட உதவி, அவர்களுடைய வருடாந்திர பலன்களின் ஒரு அங்கமாக இருக்கும். அப்படி இருந்தால், அந்த வசதியைப் பயன்படுத்தி உயில் எழுதிக் கொள்ளலாம். பலவகையான சொத்துகள் இருந்து, ஒன்றுக்கு மேற்பட்ட வாரிசுகள் இருந்து, சிக்கலான வகையில் உயில் எழுத வேண்டி இருந்தால், சட்ட நிபுணரிடம் செல்வது நல்ல முடிவாக இருக்கும். ஒருவர் இறந்த பின்பு தான், அவரது உயில் அவரைச் சார்ந்தவர்களுக்குப் பயனளிக்கும் என்றில்லை. வாழும் உயில் எனப்படும் உயிலானது, அவர் உயிருடன் இருக்கும் போதே, அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பயனளிக்கக்கூடியது. உயிருக்கு போராடும் நிலை வந்தால், எவ்வித மருத்துவச் சேவை அளிக்கப்பட வேண்டும் என்று எழுதி வைப்பதுதான் வாழும் உயில். அது போன்ற சூழ்நிலை ஏற்படும்போது, அவரது குடும்பத்தினருக்குக் குழப்பமோ, சங்கடமோ இல்லாமல், அவரின் விருப்பத்திற்கேற்ப மருத்துவச் சேவை வழங்க, அந்த உயிலின்படி முடிவு எடுக்கலாம்.
பொதுவாக, இறப்புக் குறித்துக் குடும்பத்திற்குள் பேச யாருக்கும் மனம் வராது. அதனால், அது குறித்துத் திட்டமிடுவது என்பதும் தயக்கத்திற்குரிய விஷயமாக இருக்கும். சகுனம், சங்கடம், தயக்கம் என்று இவற்றையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு, இறப்பு என்பது நிதர்சனம் என்றும், அதைத் தள்ளி வைக்கவோ, அதை யூகிக்கவோ யாராலும் முடியாது என்ற யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இது போன்ற மனத்தடைகளைக் கடந்துவிட்டு, இச்செயல் சார்ந்தோரைக் காலத்திற்கும் காத்திடும் செயல் என்ற புரிதலுடன் உயிலை மகிழ்வுடன் எழுதிவிட்டால், ஏனையோர் மனதில் என்றென்றும் வாழ்ந்திடலாம்.
- சரவணகுமரன்