கொரோனா… கொரோனா…
குறிப்பு: உலகம் முழுவதையும் பீதியில் ஆழ்த்தியிருக்கிறது இந்த கொரோனா வைரஸ். இது குறித்துப் பலவிதமான புள்ளி விவரங்களும், பாதுகாப்புக் குறிப்புக்களும் வந்த வண்ணமுள்ளன. அவையனைத்தையும் படித்துப் பயன்பெறும் அதே வேளையில், இதனையே சற்று நகைச்சுவையாக அணுகலாம் என்ற எண்ணத்தில் விளைந்த கற்பனையே இது. “வாய் விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்” என்ற நம்பிக்கையில் படிக்க வேண்டிய, சாதாரணப் பொழுது போக்கு மட்டுமே!.
“ஏன்னா… இருபத்தியோரு நாள் ஆத்துக்குள்ளயே மொடங்கிண்டு இருக்கிறது எப்டி?” நீட்டி முழக்கிக் கேட்டுக் கொண்டே, ஃப்ரிட்ஜைத் திறந்து அன்றைய சமையலுக்கான கரிகாய்களை எடுக்கத் தொடங்கினாள் லக்ஷ்மி.
“ஆமாண்டி, என்ன பண்றது சொல்லு.. இந்தக் கொரோனா பரவுறதப் பாத்தியோன்னோ.. மத்த நாட்லயெல்லாம் ..” படித்துக் கொண்டிருந்த புத்தகத்திலிருந்து தலையை நிமிர்த்தி, மனைவி இருந்த திசையைப் பார்த்து, பதிலளித்தான் கணேஷ்.
“ஓ… ஆனாலும் மோடி ரொம்ப புத்திசாலிதான்னா… ஏதேதோ புதுசு புதுசா திங்க் பண்றார்.. இல்லையா..” என்றாள். “ஒண்ணும் புதுசு இல்லடி… இத்தாலி, ஃப்ரான்ஸ்’னு உலகம்பூரா ட்ரை பண்ன மெத்தெட்தான்… நம்மூர்ல எவ்வளவு ப்ராக்டிகல்னு தெரியல…” புத்தகத்தை மேய்வதைத் தொடர்ந்தான்.
“இருபத்தோரு நாள் ஆத்துக்குள்ளயே இருந்தா வைரஸ் பரவாதக்கிப் போய்டுமோ?” நியாயமான சந்தேகத்தை எழுப்பினாள். “தெரியலடி… ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரிச் சொல்றா… எது நிஜம்னு யாருக்கும் தெரியாதுன்னு நெனக்கிறேன்… ஒருத்தரண்ட ஒருத்தர் போகாம இருக்குறது நல்லதுதான்..” பொதுப்படையாகப் பதிலைச் சொல்லித் தொடர்ந்தான்….
காலை பதினோரு மணி…. காலையில் எழுந்ததிலிருந்து ஐந்து மணி நேரங்கள் உருண்டோடின. வழக்கமாக இந்த நேரம் கால்ஃப் ஆடிக் கொண்டிருப்பான். அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கால்ஃப் கோர்ஸ், டென்னிஸ் க்ளப், பாட்மிண்டன் செண்டர்… இவ்வளவு ஏன், தனது சொஸைட்டியில் உள்ள பேஸ்கெட் பால் கோர்ட், பிங்க் பாங்க் ரூமென அனைத்துமே மூடப்பட்டுள்ளன. ஏதேதோ வேலைகளைச் செய்து பொழுதைக் கடத்த முயன்றான்.. அன்றைய சமையலைக் கூட அவனே கவனித்துக் கொண்டான். ஆனாலும் பொழுது போகவில்லை.
“ஏன்னா, ரொம்ப போரடிச்சுண்டிருக்கே.. என்ன பண்ணலாம்.. டி.வி. போடலாமா?” என்று கேட்டுக் கொண்டு, அவனது பதிலுக்குக் காத்திராமல் தொலைக்காட்சியை ஆன் செய்தாள் லக்ஷ்மி. என்னடி “லாக்டௌன் தின ஸ்பெஷல்”னு ஒண்ணும் ஸ்பெஷல் ப்ரொக்ராம் வர்லயா” என்று கிண்டலடித்தான். “என்ன இழவோ, பாக்கலாம்” என்று சொல்லி சேனலை மாற்றினாள்.
முதலில் வந்த சேனல் டி.டி. அவர்கள், “வாலிப வாலி” என்று பத்து வருடங்களுக்கு முன்னர் காட்டப்பட்ட அதே ப்ரோக்ராமை நூறாவது முறையாக மீண்டும் ஒளிபரப்புச் செய்து கொண்டிருந்தனர். “இவாளுக்கு என்னதான் வந்துதோ, வாலி செத்துப் போயே ஏழெட்டு வருஷமாயிடுத்து, இன்னும் அதையே காட்டிண்டு இருக்கா..” சொல்லிக் கொண்டே சேனலை மாற்றினாள்.
அடுத்த சேனலில் நடிகர் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். மிகவும் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு, எப்பொழுதும்போல மணிக்கணக்காக ப்ரிப்பேர் செய்து கொண்டு வந்திருந்தார். மேடையில் பத்துப் பதினைந்து கிழங்கள் அமர்ந்திருக்க, ஆயிரக் கணக்கான மக்கள், தங்கள் அறிவினை அடமானம் வைத்துவிட்டு, இந்த மனிதரும் அரசியலுக்கு வந்துவிடுவார், தங்களது வாழ்வாதாரத்தைக் காத்து விடுவார் எனப் பகல் கனவு கண்டுகொண்டு இவர் பேசுவதற்குக் கை தட்டத் தயாராய்க் காத்திருந்தனர்.
“என்னை வாழவைக்கும் தய்வங்களே…. நான் சொல்றதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்; இங்க சிஸ்டம் சரியில்லை.. இதத்தான் நானும் பல வருஷமா, சரியாச் சொல்லணும்னா 1996ல இருந்து, மனசுல நெனச்சுகிட்டு இருந்தேன்… ஆனா அப்பல்லாம் வெளிய சொல்ல பயம்.. நாட்டைவிட்டே… ஏன் உலகத்தை விட்டே அனுப்பியிருப்பாங்க… இப்ப என்ன வேணாச் சொல்லலாமே… ஓ.. இந்த கரோனா வைரஸை ஸ்டேட்டுக்குள்ள விட்டீங்கன்னா தமில் நாட்டை அந்த ஆண்டவனாலயும் காப்பாத்த முடியாது.. நான் சொல்றதச் சொல்லிட்டேன்… தொடர்ந்து பிக்விக் மேகஸீன் படிக்கிறவங்களுக்குத் தெரியும், நைண்ட்டீன் சிக்ஸ்ட்டீஸ்ல அந்தச் சிறியார் நடத்துன ஒரு மாநிலம் தழுவின ஊர்வலத்துல கரோனா வைரஸை ஆதரிச்சுப் பேசியிருக்காருன்னு பிக்விக்ல எழுதியிருக்காங்க.. அதுனால.. மக்களாகிய நீங்களே பாத்து டிஸைட் பண்ணுங்க… தமில் நாட்டைக் காப்பாத்துறது ஒங்க கையிலதான்” என்று பேசிக் கொண்டே சென்றார்.
“என்னன்னா சொல்றார் இவர்? ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுலயே கரோனா இருந்துதா? அதை அவர் ஆதரிச்சாரா? ஒரே பேத்தலான்னா இருக்கு”.. என்ற லக்ஷ்மியைப் பார்த்துச் சற்று ஏளனமாகச் சிரித்துவிட்டு, “நோக்கு இதெல்லாம் புரியாதுடி… அவர் அடுத்த படத்துக்குப் பூஜை போட்டுட்டார்னு அர்த்தம்” என்றபடி சேனலை மாற்றினான் கணேஷ். என்ன சொல்கிறான் இவனென்று லக்ஷ்மி குழப்பத்தோடு பார்த்துக் கொண்டிருக்க, அடுத்த சேனலில் இன்னொரு பெரிய நடிகர் பேசிக் கொண்டிருந்தார்.
“உங்களின் அய்யம் என்னவென்று தெரிந்ததாலேதான் நான் மய்யத்தில் வந்து நின்று, பொய்யனென்று பெயர் வாங்கிவிடாமல் உலகம் உய்ய வேண்டி பதிலுரைக்கும் கட்டாயத்திலிருப்பதை உணர்ந்து, இந்தக் கரோனா தவிர்க்க வேண்டிய உபாயங்களைச் சொல்லக் விழைந்திருக்கிறேன். நீங்க திருப்பித் திருப்பிக் கேட்டதால, தெளிவாவே சொல்லிடறேன்… நீங்கள் குழப்பமடைய வேண்டாம். இந்த வைரஸ் பத்தி உலகத்துக்கே, ஐ மீன், தமிழ்நாட்டுக்கே முதல்ல சொன்னது யாருன்னு மக்களாகிய உங்களுக்கே தெரியும்… நமக்குத் தற்பெருமை தேவையில்லையென்றாலும், உலகிற்கு உண்மையை உணர்த்த வேண்டி நாமும் அடக்கமாகவே தசாவதாரத்தில் காட்டப்பட்ட வையல் .. ஐ மீன் வைரஸ் என்கிற நுண்கிருமி குறித்து அறிந்திராத தமிழனே இல்லையென நான் என்றுமே நம்பாத கடவுளின் பேரில் சத்தியம் செய்வதற்கும் தயாராகவே உள்ளேன். நம் நாட்டு விவசாயிகளை நாம் சரியாக நடத்தியிருந்தால், நம் வீட்டில் குப்பை அள்ளும் தொழிலாளிகளை நாம் சரியாக நடத்தியிருந்தால், நம் நாட்டுக் குப்பனையும் சுப்பனையும் நாம் மரியாதையுடன் கும்பிட்டிருந்தால், வணங்கியிருந்தால், ஐ மீன், சமமா.. ஈக்வலா ட்ரீட் பண்ணியிருந்தால், இந்த வைரஸ் ஒரு பிரச்சனையாகவே உருவெடுத்திருக்காது என்பதில் எனக்கு எள் முனையளவும் சந்தேகமில்லை…” அவர் தொடர்ந்து கொண்டிருக்க, நன்றாகவே தமிழ் தெரிந்திருந்தாலும் லக்ஷ்மிக்கு எதுவும் விளங்கவில்லை. கணேஷைப் பார்த்து, “என்னன்னா சொல்றார் இவர்? எதுனா க்யூர் சஜஸ்ட் பண்றாரா?” என்றவளிடம், “ஏண்டி, என்னை என்னன்னு நெனச்ச? மனுஷா பேசறத வேணா என்னால இண்டர்ப்ரெட் பண்ண முடியும், இவர் அதையும் தாண்டிப் புனிதமானவர்னா” என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு, அடுத்த சேனலை மாற்றினான்.
அடுத்த சேனலில் ஒரு தலைவர் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். “சரியான கேள்வி. சென்ற சுதந்திர தினத்தன்று, அதாவது சனவரித் திங்கள் இருபத்தி ஆறாம் நாள்…” என்ற தலைவரை இடைமறித்து பேட்டி எடுப்பவர், “சார் அது குடியரசு தினம்” எனச் சொல்ல, “ஆமாம், அதைத்தான் குறிப்பிட்டேன். என் தந்தை காலத்திலிருந்தே நாங்கள் தமிழர்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்தவர்கள். நெருக்கடி நிலைப் பிரகடனத்தின்போது….” என்றவரை மறித்து, “சார், அதெல்லாம் நெறயாப் பேசியாச்சு, இப்ப இந்தக் கரோனா வைரஸ்க்காக எல்லாரையும் வீட்டுக்குள்ளயே இருக்கச் சொல்லி மத்திய அரசு உத்தரவு போட்டிருக்கே, அதப்பத்தி எடுத்துச் சொல்லுங்க…” என்றார் பேட்டி எடுப்பவர். “இதற்கு எதிராக, நாங்கள் கடந்த மே மாதம் பதினோராம் தேதியே புதுதில்லி சென்று குரல் கொடுத்தோம். எங்கள் கழகப் பாராளுமன்ற உறுப்பினர்களும், போன மாதமே வெளி நடப்புச் செய்தனர். இவையெல்லாம் இந்துமதத்தில் சொல்லப்பட்ட மூட நம்பிக்கைகள். இவற்றை எதிர்த்து என்னுயிர் உள்ள அளவும் போராடுவேன்” என்றார். இந்தத் தலைவரின் பதிலைக் கேட்ட தொலைக்காட்சி ஒருங்கிணைப்பாளர், தன்னாலேயே பொறுக்க இயலாமல் கேமெராவைப் பார்த்து, மக்களிடம் பேசுவதுபோல், “ப்ளீஸ், எல்லாரும் சேனலை மாத்திட்டு வேற ஏதாவது ப்ரோக்ராம் பாருங்க.. எனக்குத்தான் வேற வழியில்ல” என்றார். கணேஷும், லக்ஷ்மியும் தங்கள் காதுகளையே நம்ப முடியாதவர்களாக, அதே நேரத்தில் அந்த அறிவிப்பாளரின் வேதனை புரிந்தவர்களாகச் சேனலை மாற்றினர்.
அடுத்த சேனலில் ஒரு பொதுக்கூட்டம். தமிழினத்தின் காவலர்களில் ஒருவரான, இல்லையில்லை உலகத் தமிழர்கள் அனைவருக்குமே ஒரே காவலரான, கொள்கைமாறாச் சிங்கம் ஒருவர் உறுமிக் கொண்டிருந்தார். போடப்பட்டிருந்த மேடையில், பல சேர்கள். ஆனால் எல்லா சேர்களும் காலியாகவே இருந்தன. மேடைக்குக் கீழே மக்கள் அமர்வதற்கான திடலும் பெருமளவு காலியாகவே இருந்தது. மேடையில் அண்ணன் மட்டும் ஆளேயில்லாத டீக்கடையில் வீராவேசமாக டீ ஆற்றிக் கொண்டிருந்தார். அவர் பேசுகையில் கழுத்தில் நரம்புகள் புடைத்தன, காதுகள் மேலேயும் கீழேயும் போய் வந்து கொண்டிருந்தன. திடலில் அமர்ந்திருந்த நான்கைந்து மனிதர்களில் ஒருவரான மைக்செட் கம்பெனிக்காரர் மிகவும் அசௌகரியமாகக் காணப்பட்டார். அவரருகில் அமர்ந்திருந்த ட்யூப் லைட் கம்பெனிக்காரரைப் பார்த்து ஏதோ கேட்க, அவரும் ஏதோ பதில் சொல்ல, இவரின் முகத்தில் கவலை இன்னும் அதிகமாகிவிட்டது. இதைத் தொலைக்காட்சியில் பார்க்க முடிந்தாலும், என்ன பேசுகிறார்கள் என்று கேட்க முடியாததால், லக்ஷ்மி கணவனைப் பார்த்து, “ஏன்னா, இவர் மாட்டுக்கு ஏதோ பேசிண்டே போறார், அவா இரண்டு பேரும் அவாளுக்குள்ள பேசிண்ட்ருக்கா… என்னதான் பேசிண்டிருப்பா?” எனக் கேட்டாள். அவர்கள் யாரெனச் சரியாகத் தெரியாவிட்டாலும், மைக்செட் காரர், ட்யூப் லைட் காரராகத்தான் இருக்க வேண்டுமென்ற யூகத்தில் கணேஷ் பதில் சொன்னான், ’இவரு இப்டி நரம்பு பொடைக்கப் பேசயில, எச்சி தெறிக்கிதே.. இது என் மைக்ல விளுந்தா கரோனா வந்துருமா’னு கேட்ருப்பாரு… அவரும் கண்டிப்பான்னு பதில் சொல்லியிருப்பாரு… அதான் இன்னும் கவலையோட இருக்கார்” கேட்ட லக்ஷ்மி உடனடியா, “அதெப்டி, அவா மைக்செட் ட்யூப் லைட்னு சொல்ற” எனக் கேட்க, “வேற யாரு ஃபுல்லா ஒக்காண்டு இதயெல்லாம் கேட்டுண்டு இருப்பா” என்று சிரித்தான். “சரி, சரி, சேனலை மாத்து” என்றவளிடம், “நோ, நோ, திஸ் இஸ் மை ஃபேவரிட்… என்ன உணர்ச்சிவசமா… என்ன ரியலா.. என்ன அக்கறையா.. எவ்வளவு ப்யூட்டிஃபுல் தமிழ்ல… ஐ லவ் ஹிம்” என்றான். “சீரியஸ்லி?…. இஸ் ஹி தட் குட்?” என்றவளைக் கையைக் காட்டி அமைதியாக இருக்கச் சொல்லி, அவர் பேசுவதை உன்னித்துக் கேட்கலானான்…
“எங்க முப்பாட்டன் முருகன் காலத்துல இருந்துச்சா… இந்தக் கரோனா… திடீர்னு எப்டி வந்து குதிச்சுச்சு…. நம்ம விவசாயிங்க.. கல்லு மாதிரி உடம்பு… சிலப்பதிகாரத்துல இளங்கோ சொல்லியிருக்கான், உண்மையான தமிளனுக்கு நோயெதுவும் வராது…. இந்த நூத்துப்பத்துப் பேரு தமிள் நாட்ல கரோனா வந்தவுங்க எல்லாம் நெசமான தமிள் வித்தா இருக்க முடியுமா…. அதுசரி… இருபத்தோரு நாள் வீட்டுக்குள்ளயே இருந்தா எல்லாம் சரியாப் போயிருமா… “எல்லாரும்ஹேய்… வீட்டுக்குள்ளேஹேய்.. ஹூனு’ வந்து டீவில பேசிட்டா… ஹய்யோ… ஐயோ… என்ன கருமாந்திரம்யா இது… ஆஹ்ஹாஹா.. .. நம்ம தம்பிகளுக்கு ஒரு அஞ்சு வருசம் ஆச்சியைக் குடுத்துப் பாருங்க…. இந்தமாதிரி கிருமிகளையே தமிள் நாட்டுச் சரித்திரத்துலயே இல்லாமப் பண்ணிருவோம்… “ அவர் தொடர்ந்து கொண்டிருக்க, “கணேஷ், ப்ளீஸ், அந்த டி.வி.யை ஆஃப் பண்ணேன்… வேற என்ன வேணாப் பண்ணலாம் டி.வி. மட்டும் வேணாண்டா சாமீ” என்றாள் லக்ஷ்மி.
- வெ. மதுசூதனன்
Tags: Corona