நாகரீகம்..!!!
“இந்தியாவிடம் மருந்து அனுப்ப வேண்டுமாய்க் கேட்டுள்ளோம். அவர்கள் தரவில்லை என்றால் பரவாயில்லை .. ஆனால் அதற்குத் தக்க பதிலடி கொடுப்போம்.. There may be a retaliation, why wouldn’t there be?” – உலகத்தின் வளர்ந்த நாடான அமெரிக்காவின் அதிபர் மேதகு டிரம்ப் அவர்கள். — ஆகா என்ன ஒரு நாகரீகம், நட்புணர்வு, தலைவனுக்கான பேச்சு பாருங்கள். ஊரில் பொறுக்கித் தனம் செய்து கொண்டு திரியும் மூன்றாந்தர குடிமகனைப் போல பேசியுள்ளார் .. இந்தப் பைத்தியக்காரப் பேச்சைக் கொண்டு அவரின் மனநிலையைக் கணித்தோமானால், கொரோனா கிருமியிடம், “நாங்கள் அமெரிக்கா, வல்லரசு நாடு, சிறந்த போர்க்கருவிகள் வைத்துள்ளோம், உயிர் மீது ஆசை இருந்தால் திரும்பி சீனாவுக்கே ஓடிவிடு” என மிரட்டி அந்தக் கிருமியை விரட்டி விடலாம் என்று அலட்சியமாக இருந்திருப்பார் என்று நினைக்கிறேன். அதனால் தான் இத்தனை லட்சம் பாதிப்புகள். மனிதம் மற்றும் சகோதரத்துவம் போற்றும் எந்த நாடும் இது போன்ற சூழ்நிலைகளில் மற்றவர்களுக்கு முடிந்த வரை உதவி செய்யவே முன் வரும். அதுவும் இந்தியா நட்பு நாடு. உதவி என்று கேட்டால் இவருக்கு இல்லாத மீசையில் மண் ஒட்டிக் கொள்ளுமா என்ன..? என்ன ஒரு அநாகரீகமான பேச்சு. நான் இந்தியாவை மிரட்டிவிட்டேன் என அமெரிக்க மக்களுக்குப் பேட்டி அளிக்க வேண்டிய அவசியம் என்ன..? அமெரிக்க மக்கள் ஒரு ரௌடியை, பொறுக்கியைத் தான் நம்மை ஆளத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் எனப் பெருமிதம் கொள்வார்கள் என்பது தான், தன் நாட்டின் பிரஜைகளைப் பற்றிய ஒரு ஆட்சியாளனின் புரிதலா? இந்தப் பொறுக்கித்தனங்கள்தான் இந்தத் தலைவனின் தகுதிகள் என்றால், இவர் அமெரிக்கா என்ற வல்லரசின் தேசிய அவமானம் இல்லையா? கோடானுகோடி அமெரிக்க மக்களை உலகத்தின் பார்வையில் தரம் தாழ்த்தும் வேலை இல்லையா?
இந்தச் சமயத்தில், இந்தியா அமெரிக்காவிற்கு மருந்துகளை அனுப்புவதோடு, கொரோனவால் பாதிக்கப்பட்ட மற்ற சிறிய நாடுகளுக்கும், அதாவது கண்ணியமான, உண்மையான தலைமைப் பண்பு மிக்க ஆட்சியாளர்கள் ஆளுகிற, நாடுகளுக்கும் மருந்துகளை அனுப்ப வேண்டும். அது உலகப் பத்திரிக்கைகளில் செய்தியாக வேண்டும். கஷ்டத்தில் உள்ள மக்களுக்கு உதவ இந்தியா ஒரு நாளும் தயங்கியதில்லை., அப்படி உதவி பெறுவதற்கு அடியாளின் மனோபாவம் கொண்டு மிரட்டும் பொறுக்கித்தனங்களும் தேவை இல்லை. எங்கள் தேசத்தின் விடுதலைக்கே அஹிம்சை வழியைத் தேர்ந்தெடுத்து உலகத்திற்க்கு உதாரணமானவர்கள். அதற்காக யாரும் எங்களை மிரட்டலாம், அடிக்கலாம், எதிர்வினை ஆற்றமாட்டோம் என அர்த்தம் அல்ல. உங்கள் மிரட்டலுக்குப் பயந்துவிட்டோம் என்றும் அர்த்தம் அல்ல. அருவாள் கொண்டு வெட்ட வரும் சண்டியரின் வீரம் என்பது, தன் மக்களைக் காக்கும் பொருட்டு, வெட்டைத் தன் நெஞ்சில் வாங்குபவனின் கால் தூசுக்குச் சமானம். எங்கள் தேசத்தின் தலைவர்கள் சொல்லித் தந்த பாடம் அதுதான். எங்கள் பிள்ளைகளுக்கு நாங்கள் சொல்லுவதும் அதுதான். இப்போது இந்த உலகத்திற்கு மீண்டும் நாங்கள் நினைவுறுத்துவதும் அதுதான். ஒரு தலைவனின் பைத்தியக்காரப் பேச்சினால், தானும் மதியிழந்து கஷ்டத்தில் இருக்கும் மக்களைக் கைவிடாத தேசம்தான் இந்தியா. இது உலக நாடுகள் மத்தியிலோ, அல்லது மிரட்டல் விடுத்த டிரம்ப் மனதிலோ, நாங்கள் பயந்துவிட்டோம் அல்லது மிரட்டலுக்குப் பயந்துவிட்டோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதைப் பற்றியும் கவலை இல்லை. ஒட்டு மொத்த மனித குலத்திற்கே சவாலாக உள்ள இந்த நெருக்கடியான கால கட்டத்தில், மனித இனத்தைக் காக்க இந்தியா தன்னாலான எல்லாவற்றையும் செய்யும். 130கோடி மக்கட்தொகை கொண்ட வளரும் நாடான இந்தியா, 30 கோடி மக்கள் தொகை கொண்ட உலகத்தின் வல்லரசு நாட்டு மக்களின் நலனுக்காக, அவர்களை ஆளும் தலைவரின் பொறுப்பற்ற, தரக்குறைவான பேச்சையும் பொருட்படுத்தாது உதவும் மனிதநேயம் கொண்டதுஎன்பதை வரலாற்றில் பதிய வைக்க வேண்டும். இந்தியா மீது மிகுந்த பற்று கொண்டவர்கள் எனச் சொல்லிக் கொள்ளும் இந்த ஆட்சியாளர்கள் இதைச் செய்ய வேண்டும். பதிலடி என்றால் என்ன என்பதை , அதைச் சொன்னவருக்கு நமது பாணியில் நாகரீகமாகக் காட்ட வேண்டும்.!!
-மனிதன்