\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

வளரும் வணிகங்கள்

உலகெங்கும் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வரும் இக்காலகட்டத்தில் சில வணிகங்கள் பெரிதும் வளர்ந்து வருகின்றன. கொரோனாவினால் பலவகைப் பிரச்சினைகள் உருவாகி, பல வணிகங்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளானாலும், பல வணிகங்களுக்குப் புதுப் பிறப்பாக இக்காலகட்டம் அமைந்துள்ளதையும் காணமுடிகிறது. மக்களின் முன்னுரிமையில் உருவாகியுள்ள மாற்றம், இதற்குக் காரணமாக அமைந்துள்ளது.

பல நாடுகள் லாக்-டவுன் எனப்படும் ஊரடங்கு முறையில் பல்வேறு நிலைகளில் உள்ளன. பொதுவாக, மக்களின் நடமாட்டம் குறைந்துள்ளது. பயணங்கள் குறைந்துள்ளன. வீட்டில் இருந்தே பல்வேறு பணிகளைச் செய்யத் தொடங்கியுள்ளனர். வெளியில் சாப்பிடுவது குறைந்து வீட்டில் சமைப்பது அதிகமாகி உள்ளது. அல்லது, வீட்டிற்கு வரவழைத்துச் சாப்பிடுவது கூடியுள்ளது. சமூக வலைத்தளங்களில் வெளியில் உணவகத்திற்குச் செல்லும் செக்கின் புகைப்படங்கள் போடுவது முற்றிலும் குறைந்து, வீட்டில் சமைத்த உணவினைப் பகிரும் கலாச்சாரம் உலகெங்கும் அதிகரித்துள்ளது. ஆக, எங்கு, எப்படிச் சாப்பிட்டோம் என்பது மாறி, சாப்பிடுவது என்பது அப்படியே தான் நடுத்தர, மேல்தட்டு மக்களிடம் இருக்கிறது.

மக்கள் வீட்டில் சமைத்தாலும், சமைப்பதற்கானப் பொருட்களை வெளியில் வாங்கவேண்டியுள்ளதால் அந்தத் தேவை அப்படியே தான் இருக்கிறது. வீட்டிற்கான மளிகை பொருட்கள் விற்கும் பல கடைகளிலும் விற்பனை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. வழக்கமான கடைகளில் விற்பனையாகும் பொருட்களை விட, ஆன்லைன் மூலம் விற்பனை அதிகரித்துள்ளது. இணையம் மூலம் பொருட்களை நேரடியாக வீட்டிற்கு வரவழைப்பதும், அல்லது கடையின் வெளிப்புறம் கார் நிறுத்துமிடத்திலிருந்து எடுத்துக் கொள்ளும் வழக்கமும் அதிகரித்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாக இணையம் சார்ந்த விற்பனைச் சேவைகளில் அமேசான், டார்கெட், வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் முதலீடு செய்து வந்ததின் பலனைத் தற்சமயம் அனுபவிக்கிறார்கள்.

இன்ஸ்டாகார்ட் (Instacart) எனப்படும் பொருட்களை வீட்டிற்கு வந்து கொடுக்கும் சேவையை, 2012 இல் ஒரு இந்தியரால் அமெரிக்காவில் தொடங்கப்பட்ட நிறுவனம் அளித்து வருகிறது. இந்த ஊரடங்கு நேரத்தில் பெரும்பாலான அமெரிக்கர்களால் இன்ஸ்டாகார்ட் சேவைதான் பயன்படுத்தப்படுகிறது. பெருகிவரும் விற்பனை எதிர்பார்ப்புகளால், அடுத்து வரும் சில மாதங்களில் 3 லட்சம் பேர்களைப் புதியதாக வேலைக்கு எடுக்க இருக்கிறார்கள். திடீர் தேவையின் அதிகரிப்பால், எதிர்பார்ப்பைப் பூர்த்திச் செய்வதில் இன்ஸ்டாகார்ட் போன்ற நிறுவனங்கள் சில சிரமங்களை எதிர்கொண்டாலும், இவ்வகைச் சேவைகளுக்கு வருங்காலத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும் என்றே தெரிகிறது.

பெரும்பாலான, கணினி சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் பலவற்றில் ஏற்கனவே வீட்டில் வேலை செய்வதற்கான ஏற்பாடுகள் இருந்ததால், வீட்டில் இருந்து பணிபுரிய பெரிதாகப் பாதிப்பு இல்லை. அப்படி இல்லாத நிறுவனங்களிலும் தற்சமயம் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மடிக்கணினி, கணினி திரை, கீ-போர்ட், மவுஸ் போன்ற மின்னணு உபகரணங்களின் பயன்பாடு வீடுகளில் அதிகரித்து இருப்பதால், அவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், விநியோகிக்கும் நிறுவனங்களின் விற்பனை உயர்ந்துள்ளன. இவை தொடர்ந்து அதிகரித்து வரும் வண்ணம் இல்லாவிட்டாலும், வீட்டு உபயோகம் சார்ந்த தொழில்நுட்பம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் வசதியை, பல நிறுவனங்கள் நிரந்தரமாக்க முடிவு செய்துள்ளன. அதனால், அலுவலகங்களில் மட்டும் அதிகமாகப் பயன்பட்டு வந்த பல கணினி பொருட்கள், இனி வீட்டிலும் அதிகம் பயன்படப்போவதால், அதன் விற்பனை உயரும்.

பணி சார்ந்து இல்லாமல் நண்பர்களுடன் கூடி பேச மக்கள் அதிகம் தற்சமயம் பயபடுத்துவது ஜூம் (Zoom) எனப்படும் வீடியோ தொலைதொடர்பு தொழில்நுட்ப சேவை ஆகும். இதுவும் 2012இல் அமெரிக்காவில் ஒரு சீனரால் தொடங்கப்பட்ட நிறுவனம் ஆகும். கடந்த ஆண்டு இறுதியில் 10 மில்லியனாக இருந்த இதன் பயனர் எண்ணிக்கை, அடுத்த மூன்றே மாதத்தில் 200 மில்லியனாக மாபெரும் வளர்ச்சியடைந்தது. பங்கு சந்தையே தொடர்ந்து விழுந்துக்கொண்டிருந்த போது, இந்த நிறுவனத்தின் பங்குகள் மட்டும் எழுந்தவாறு உள்ளது. பரதநாட்டியம் வகுப்பு, பாட்டு வகுப்பு மற்றும் பிற பள்ளிகளின் வகுப்புப் பாடங்கள் அனைத்தும் ஜூம், வெபெக்ஸ், ஹேங்கவுட் என இணையத்திற்கு வந்துவிட்டதால், ஜும் மட்டுமின்றி அது போன்ற வீடியோ தொடர்பு சேவைகள் அளிக்கும் பல நிறுவனங்களுக்கும் வளர்ச்சி இருப்பதாகவே தெரிகிறது.

அதே போல், பள்ளிகள், கல்லூரிகள் எல்லாம் அடைக்கப்பட்டு இருப்பதால், இணையம் சார்ந்த கல்வி மற்றும் பயிற்சி சேவைகளுக்கும் வரவேற்பு அதிகமாகிவிட்டது. உடெமி, ப்ளுரல்சைட், கோர்சேரா, கான், லிண்டா ஆகிய ஆன்லைன் கோச்சிங் தளங்களில் கற்போரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. கல்வி நிலையங்கள் இது போன்ற தளங்களுடன் இணைந்து தங்கள் மாணவர்களுக்குப் பாடம் சொல்லித்தர இருக்கிறார்கள். இப்போதைய இப்பழக்கம் வருங்காலத்தில் ஒரு வழக்கமாக மாற வாய்ப்புள்ளதாகக் கூறுகிறார்கள்.

திரையரங்குகள் அடைபட்டுக் கிடைக்கின்றன, படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. எப்பொழுது இவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று தெரியவில்லை. ஆனால், ஆரம்பித்த பிறகும், இவை முன்போலச் செயல்படாது என்கிறார்கள். அமேசான் ப்ரைம், நெட்ப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார், டிஸ்னிப்ளஸ் போன்ற வீட்டில் இருந்தே படம் பார்க்கக்கூடிய சேவைகளில் இப்பொழுதே மக்கள் மொய்க்கத் தொடங்கிவிட்டனர். வெளியீட்டுக்குத் தயாராக இருந்த சில படங்கள் நேரடியாக, இது போன்ற சேவைகளில் வெளியாகப் போகிறது. அதில் வரும் வரவேற்பைப் பொறுத்து, இதில் வெளியிடுவதற்கென்றே படங்கள் உருவாகும் நிலை வரும். ஏற்கனவே, வெப்சீரிஸ் பல மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதைக் காண்கிறோம். வெளிபுறத்தில் சமூக இடைவெளியுடன் அல்லது காரில் இருந்தே படம் பார்க்கக்கூடிய வசதிகளும் வரக்கூடும். அதே போல், பத்திரிக்கைகளைத் தாளில் வாசிப்பது மிகவும் குறைந்து, செல்போன் மற்றும் கணினியில் வாசிப்பது அதிகமாகும்.

இவை தவிர, ஆன்லைன் மருத்துவச் சேவை, உடற்பயிற்சி சேவைகளுக்கான செயலிகளுக்கும் வரவேற்பு உண்டாகியுள்ளது. கோவிட்-19 பிரச்சினை தொடங்கிய உடன், மக்கள் கடைக்குச் சென்று அள்ளி வந்தது, வீட்டையும், தம்மையும் சுத்தப்படும் பொருட்களைத் தான். மாஸ்க், சானிடைசர், சோப், ப்ளீச் போன்றவை இனி கொஞ்சம் அதிகமாகவே வாங்கப்படும். எல்லா இடங்களிலும் வைக்கப்படும் அத்தியாவசிய பொருட்களாகக் கருதப்படும்.

ஒவ்வொரு உலகப்போரின் பின்பும் உலகில் ஒரு அலை உருவாகி உலகை மாற்றிப்போட்டு இருக்கிறது. இம்முறை மொத்த உலகமும் ஒரு கண்ணுக்கு தெரியாத வைரஸுடன் போரிட்டுக்கொண்டிருக்கிறது. இந்தப் போருக்கு பின்பும் உலகில் மாற்றங்கள் பல உண்டாகும். அந்த மாற்றத்திற்கு ஏற்ப, தங்களது வணிக யுக்தியை மாற்றியமைத்துக்கொள்ளும் நிறுவனங்கள் வருங்காலத்தில் வெற்றிப்பெறும். அதனால், நாமும் நம் கண்முன் நிகழும் மாற்றங்களைக் கூர்ந்து நோக்குவோம். கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொள்வோம்.

  • சரவணகுமரன்.

சான்றுகள்

https://www.cnn.com/2020/03/23/tech/instacart-hiring/index.html

https://www.cnbc.com/2020/03/31/coronavirus-npd-group-says-monitor-sales-doubled-laptop-sales-up.html

https://www.businesstoday.in/current/corporate/post-coronavirus-75-percent-of-3-5-lakh-tcs-employees-permanently-work-from-home-up-from-20-percent/story/401981.html

Tags: , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad