அடி முதல்
“என்னடா எல்லாத்தையும் வித்துட்டயா?” கேள்வி இவனிடம் கேட்கப்பட்டாலும் பார்வை அவன் மனைவி பார்வதி மேல்தான் இருந்தது.
உங்களை மாதிரி ஆளுங்க இருந்தா எங்களை மாதிரி ஏழைகள் பிழைக்க முடியுமா? இதை மனதுக்குள் நினைத்தாலும், “இல்லைங்க ஏட்டய்யா?இன்னும் நிறைய மீந்து கிடக்குது.,” மெல்ல சொன்னான் பரமன்.
“மணி இப்பவே ஒன்பதாயிருக்குமேடா?” இப்பொழுதும் பார்வை பார்வதியை மேய்வதில்தான் இருந்தது ஏட்டையாவுக்கு. தூத்தேறி என்று வசவை விசிறிய பார்வதி சட்டென திரும்பி எச்சிலை துப்புவது போல திரும்பித் துப்பினாள். போலீஸ்காரன் சட்டென திடுக்கிட்டு, பார்வையை இந்தப்புறம் மாற்றினான்.
இந்த நாடகத்தைப் பார்த்துக்கொண்டுதானிருந்தான் பரமன். இந்நேரம் வரைக்கும் இவளை நிறுத்தி வைத்த்து நம் தப்புத்தான். எப்பொழுதும் ஏழு மணிக்குள் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு, இவன் ஒற்றை ஆளாக சமாளித்துக்கொள்வான். அதற்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டுத்தான் அந்த இடத்தைவிட்டு செல்வாள் பார்வதி. இன்று கடை போடுவதற்கே காலதாமதம் ஆகி விட்டது. மகளுக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல், இருவரும் அவளை எடுத்துக்கொண்டு ஆஸ்பத்திரி சென்று வர நேரமாகி விட்டது. பார்வதி தனியாகவே பெண்ணைக் கூட்டி சென்று விடுவாள். ஆனால் காய்ச்சல் மிகவும் அதிகமாக இருந்ததால் பயத்தில் பரமனையும் கூடவே வரச் சொன்னாள். அவன் வந்தது கூட மிகவும் நல்லதாகப் போயிற்று. டாக்டர் அவர் மருத்துவமனையிலேயே அட்மிசன் போட சொல்லி விட்டார். உடனே போய் அம்மாவைக் கொண்டு வந்து மகளுக்குத் துணையாக இருக்க வைத்து விட்டு இவர்கள் இருவரும் அவசரமாய் வந்து கடையை விரித்தனர். இல்லாவிட்டால் அன்று ஆட்டி வைத்திருந்த மாவு சட்னி, சாம்பார் எல்லாம் வீணாகிவிடும். வியாபாரமும் ஆறு மணியிலிருந்து எட்டு வரைதான் வேகமாக நடக்கும். இதையும் விட்டு விடாமல் மகள் எப்படி இருக்கிறாளோ என்ற கவலையில் இட்லியை எடுத்து அடுக்கிக்கொண்டிருந்த பார்வதிக்கு போலீஸ்காரரின் இந்த பார்வையைக் கண்டு அடுப்புக்கருகில் நிற்பதை விட அனலாய்த் தகித்தது. ஒரு பொம்பளை ராத்திரியில ஒரு இடத்துல நிக்க கூடாதே, தனக்குள் முனகியவள், பரமனிடம் சரியா நீ வீடு வந்து சேரு என்று கிளம்ப ஆயத்தமானாள்.
“இரு புள்ள தனியா எப்படி போவே? அரை பர்லாங்கு நடக்கணும்”. கடை வீதி வழியாக நடப்பதற்குப் பயமில்லை, கொஞ்ச தூரம் நடந்து வலது சந்தில் திரும்ப வேண்டும். அந்த இடத்தில் கொஞ்சம் இருட்டு இருக்கும், அதற்கப்புறம் இவர்களைப்போல் நிறைய குடித்தனங்கள் அந்த இடத்தில் இருப்பதால் பயமில்லை.என்றாலும், இன்று போலீஸ்காரரிடம் இவள் கத்தியதால் ஆபத்து வந்து விடுமோ என்று பயந்தே இப்படி கேட்டான்.
“அட போயா ! எனக்கென்ன பயம்?” ஒற்றை வார்த்தை சொல்லிவிட்டு, தன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தாள். வீட்டுக்குப் போய் கொஞ்சம் துணி மணி எடுத்துகிட்டு ஆஸ்பத்திரி போகணும், அங்க கிழவியை வீட்டுக்கு அனுப்பிச்சுட்டு, மக கூட தங்கி காலையில கிழவி வந்த பின்னாடி வரணும், மனதுக்குள் இந்த எண்ணங்களை அசை போட்டுக்கொண்டு நடையை விரைவுபடுத்தினாள்.
ஒரு வழியாய் இரவு பதினோரு மணிக்குள் கொண்டு வந்த இட்லி, டிபன் அயிட்டங்களை, விற்று முடித்துவிட்டு தன்னுடைய தள்ளு வண்டியை தள்ளிக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தான் பரமன். உடல் அசதியால் காலியான வண்டியை கூட தள்ள முடியாமல் தடுமாறியது. சே என்ன வாழ்க்கை?தனக்குள் சலித்துக்கொண்டான். மில்லு வேலைக்கு போயிட்டிருந்த வரைக்கும் இந்த மாதிரி கஷ்டப்படலை. நினைத்து பார்த்தானா தான் வீதியில் இட்லி வியாபாரம் செய்ய நேரும் என்று? என்ன செய்வது? எல்லாம் நேரம், வரிசையாக ஒவ்வொரு மில்லாய் மூடிக்கொண்டிருந்த காலகட்டம் அது. இவர்களும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருந்தார்கள். கணவன் மனைவி இருவருமே மில் வேலைக்குச் சென்று வந்ததால், ஓரளவு நன்றாகவே வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது.
ஆனால் விதி விடவில்லை, ஒவ்வொரு மில்லாய் மூடிக்கொண்டிருந்த வேளை. இவர்கள் மில்லும் மூடப்பட்டு, அடுத்து என்ன செய்வது என்ற நிலையில் பரமன் மில்லில் வேலைக்கு சேருவதற்கு முன்னால் ஒரு சமையல்காரரிடம் கொஞ்சம் சமையல் வேலை கற்றுக்கொண்டிருந்தான், அதற்குள் மில்லில் வேலை வந்து விட மில்லில் சேர்ந்து விட்டான்.
அதற்குப் பின்னால் கல்யாணமாகி மில்லிலிலேயே வாழ்க்கை பத்து வருடங்கள் ஓடி விட்டது. இப்பொழுது திடீரென மில்லை மூடி விட அடுத்து என்ன செய்வது என்ற யோசனையில் இவர்களுக்கு உதித்தது இந்த தள்ளு வண்டியில், இட்லி வியாபாரம்.
இவர்கள் நினைத்த்து போல் அவ்வளவு சுலபமாக நடந்து விடவில்லை. தள்ளு வண்டி வாங்கவும், தினமும் அரிசியை ஊறவைத்து ஆட்டி வைக்கவும், கூடவே சட்னி, சாம்பார் என்ற வகையறாக்களைச் செய்து வண்டியில் வைத்து கடைவீதியில் வைத்து விற்பதற்கும், மனமும் உடலும் படாத பாடுபட்டன. இதில் இரவானால், ரவுடிகளின் தொந்தரவும்,அதை விட்டால் போலீஸ்காரர்களின் தொல்லையும், பேசாமல் இந்த வியாபாரமே வேண்டாம் என்று மனசு வெறுத்து விட்டது. பாரவதியின் நிறமும் உருவமும், சாப்பிட வருபவன் இட்லியை விட அவளைப் பார்வையில் பருகுவதற்குத்தான் அலைவது போல் இருந்தது. பார்வதிக்குத் தினமும் இந்தப் பார்வையினால் அருவருப்பும் அசூயையும் அடைய ஆரம்பித்தாள். ஒரு காலத்தில் கூட்டத்தோடு கூட்டமாய் மில்லுக்குள் போய் வேலை செய்து சம்பளம் வாங்கி கட்டு செட்டா குடும்பம் நடத்தி இப்பொழுது தெருவில் கண்ட பயலுகளின் கண் பார்வையில் பாடுபடுகிறோமே என்று கணவனிடம் புலம்ப ஆரம்பித்து விட்டாள்.
இந்த வியாபாரத்துக்கு முடிவு கட்டி வேறு ஏதாவது செய்தாகவேண்டும், மனதுக்குள் முணுமுணுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தவன், கதவைத் திறந்த ஆத்தாளிடம், “புள்ளை எப்படி இருக்கா?” என்று கேட்டான். “இப்போதைக்குப் பரவாயில்லை, காய்ச்சல் குறைஞ்சிடுத்து, காலையில் எழுந்து நான் போய் அவளை அனுப்பணும்”, கொட்டாவி விட்டுக்கொண்டே ஆத்தாள் போய் படுத்துக்கொண்டாள். பரமனுக்கு மேற்கொண்டு பேச மனமில்லாமல் அப்படியே தரையில் அங்கிருந்தப் பாயை விரித்துப் படுத்துக்கொண்டான்.அவனின் நினைவுகள் அவனைப் பால்ய பருவத்துக்குகொண்டு சென்றன.
ஓரளவுக்குத் தோட்டம் துரவு என்று ஓடிக்கொண்டிருந்த குடும்பம், விவசாயத்தை விட மில்லுக்கு வேலைக்குப் போவது லாபகரமாய் இருப்பதாய் பட இவர்கள் குடும்பமும் மூட்டை முடிச்சுகளுடன் மண்ணை விட்டு இந்த நகரத்தில் குடி புகுந்தனர். அப்பாவும், அம்மாவும் மில் வேலைக்குச் செல்ல பரமன், படிப்பு ஏறாமல் எப்படி தன் உடலை மேம்படுத்திக்கொள்வது என்ற ஆவலில் பஸ்கி, தண்டால் இது போக அந்த ஊரில் வாத்தியாரிடன், சிலம்பம் போன்றவைகள் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டினான். இதனால் அந்த ஊர் வஸ்தாதுகளுடன் பழக்கம் ஏற்பட சில இடங்களில் அடி,தடி கலாட்டா போன்றவைகளில் கல்ந்து கொள்ள ஆரம்பித்தான். இதனால் அரசியல் நட்பும் கிடைக்க, தன்னை ஒரு வஸ்தாது என்ற தோரணையில் நடந்து கொள்ள ஆரம்பித்தான்.
திடீரென, அப்பாவின் மரணம் இவர்கள் குடும்பத்தைப் புரட்டி போட்டு விட, இவனைக் கொஞ்ச காலம் சமையல்காரருக்கு உதவியாகப் போக வைத்தது. அதற்குள் அப்பாவுக்குப் பதிலாக மில்லில் வேலை கிடைக்க மில் தொழிலாளியாகவே வண்டி சீராக ஓட ஆரம்பித்து விட்டது.
இருந்தும் விதி விடாததால் மில்லும் அடைக்கப்படும் முன்னர் கற்ற சமையல் வேலை இப்பொழுது கை கொடுத்தது. என்றாலும் இதில் உள்ள சிரமங்களைப் பார்க்கையில் இந்த வியாபாரமே வேண்டாம் என்று நினைக்க தோன்றுகிறது.
ஒரு வாரம் ஓடியிருந்தது. “பரமா, பரமா,..” அழைப்பு கேட்டு வெளியே வந்த பார்வதி
“யாருங்க?” என்று கேட்டாள்.
“பரமன் இல்லையா?” அவர்.
“வந்துடுவாங்க, இப்படி வந்து உட்காருங்க”, அவளின் அழைப்புக்கு இணங்கி உள்ளே வந்தவன் அங்கிருந்த உடைந்த நாற்காலிகளைப் பார்த்து விட்டு “இல்லேம்மா வெளியே காத்தாட நிக்கிறேன்”, நாசூக்காக வெளியே சென்று நின்றுக் கொண்டார். அப்பொழுதுதான் வெளியே கொடுத்து அரைத்த மாவை எடுத்துக்கொண்டு உள்ளே வந்த பரமன் இவரைப் பார்த்து தயங்கினான்.
“பரமா, உன் கூட வேலை செஞ்ச ராசு உன்னையப் பத்தி சொன்னான், நாளானக்கி வீடு ஒண்ணு கிரகப்பிரவேசம் வச்சிருக்கேன், அதுக்கு லைட்டா கொஞ்சம் டிபன் செஞ்சு கொடுக்கணும், உன்னால முடியுமா? ஓட்டல்ல கொடுக்கலாம், ராசுதான் உனக்கு ஆர்டர் கொடுங்க அப்படீன்னு சொன்னான், என்ன சொல்றே?”
ராசு, இவனோடு ஒன்றாய் மில்லில் வேலை செய்து கொண்டிருந்தவன், மில் மூடியதும் பேசாமல் ஊர் பக்கம் போய் இருந்த நிலத்தில் விவசாயம் பார்க்க ஆரம்பித்து விட்டான். அவன் எப்படி இவரிடம் சொன்னான் என்று தெரியவில்லை. இருந்தாலும் வந்த ஆர்டர் இவனை யோசிக்க வைத்தது.
“என்ன பரமா?” அவரின் கேள்வி அவனை இந்த உலகத்துக்கு கொண்டு வந்தது “தாராளமா செஞ்சுடலாங்க”, சொன்னவன் மெல்ல தலையை சொறிந்தான். பையன் அட்வான்சுக்குத்தான் அடி போடுகிறான் என்பதை கண்டு கொண்டவர், பையை திறந்து ஆயிரம் ரூபாய் இந்தா என்று கொடுத்துவிட்டு என்ன என்ன வேண்டும் என்று எழுதி கையில் கொடுத்தார். கொஞ்சம் தயக்கமாகவே பெற்றுக்கொண்டான்.
முதல் ஆர்டர், தானாக வந்த்து. நம்மால் செய்ய முடியுமா? தயக்கத்துடன் அவர் போன பின்னும் யொசித்துக்கொண்டிருந்தவனைப் பார்வதி உசுப்பி, “என்ன பணத்தைக் கையில வச்சுட்டு கனா கண்டுகிட்டு இருக்கியா?”
“இல்லே நம்மால செய்ய முடியுமா?”
“தாராளமா செய்யலாம், ரோட்டுல போய் நூறு இருநூறுக்கு கண்டவன் கண்ணுல பட்டு இருக்கறதை விட இப்படியும்தான் செஞ்சு பார்ப்பமே”. மனைவியின் பேச்சு இவனுக்கு நம்பிக்கையை உண்டு பண்ண, சரி என்ன என்ன சாமான் வேணும்? சொல்லு, மனைவியிடம் கேட்டு எழுதிக்கொள்ள ஆரம்பித்தான்.
இவர்களே எதிர்பார்க்காதது போல அன்று ‘சமையல் நல்லா இருக்கு’ என்று நான்கைந்து பேர் சொல்லிச் சென்றுவிட்டார்கள். பரமனுக்கும், பார்வதிக்கும் ஒரே சந்தோசம். அந்த வீட்டுக்காரரும் இவன் ஆன செலவைச் சொன்னதுக்கு மேல் கூட இருநூறு அதிகமாகக் கொடுத்தார். கூட்டி கழித்து பார்த்ததில் எல்லா செலவுகளும் போக இவர்கள் கையில் ரூபாய் ஐநூறு கிடைத்திருந்தது.
அடுத்து இரண்டு நாட்கள் கடை வண்டியைத் தள்ளிக்கொண்டு கடை வீதி போகலாமா வேண்டாமா என்ற சிந்தனையிலேயே வீட்டில் இருந்தார்கள். அதற்கு பின் ஆர்டர் எதுவும் வராத்தால் சரி இன்னைக்கு ராத்திரி கடை வீதிக்கு போகலாம் என்று முடிவு செய்து அரிசி ஊற் போட உள்ளே போனார்கள். வெளியே அழைப்பு ‘யாருங்க வீட்டுல?’
இப்போது பரமனுக்கு மாதத்துக்கு பத்து ஆர்டர்கள் கிடைத்து விடுகிறது. பரமனை விட பார்வதியின் கை வண்ணம் பல பேருக்குப் பிடித்துவிட்டது. கையிலும் கொஞ்சம் காசு தங்க ஆரம்பித்தது.மீண்டும் இட்லி கடையை நினைக்க கூட அவர்களுக்கு நேரமில்லாமல் போய் விட்டது.
சமையல் செய்வதற்கு இவர்கள் இருந்த இடம் தோதுப்படாமல் அந்த இடத்தை விட்டு கொஞ்சம் தள்ளி வந்துவிடலாம் என்று முடிவு செய்தார்கள். நகரை விட்டு கொஞ்சம் தள்ளி ஒரு இடம் விலைக்கு வருவதாக கேள்விப்பட்டதும் பார்வதி வைத்திருந்த நகைகள், ஊருக்கு போய் பரமனின் பங்குக்கு இருந்த தோப்பை விற்று கொண்டு வந்த பணம் இவைகளைக் கொண்டு அந்த இடத்தையும் வாங்கி, அதில் சின்னதாய் இவர்கள் தங்கிக்கொள்வதற்கும், மற்ற இடங்களை சமையல் வேலைகள் செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்து கொண்டார்கள். பரமனின் ஆத்தாள், இட வசதி இல்லாத காரணத்தால் பரமனின் தம்பி வீட்டில் கொஞ்ச காலம் இருக்கிறேன் என்று கிளம்பி விட்டாள். மகள் சிறு பிள்ளையாய் இருந்ததால் மூவரும் இருக்கும் இடத்தில் வாழ பழகிக்கொண்டுவிட்டார்கள்.
இடம் மாறினாலும் இவர்கள் எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கவில்லை. பரமன் பயந்து விட்டான். தெரியாமல் ஆழக்கால் வைத்து விட்டோமா? இருக்கும் எல்லாவற்றையும் விற்று இடம் வாங்கி கட்டி உட்கார்ந்து விட்டோம், எதிர்பார்த்த ஆர்டர்கள் வரவில்லை என்றால் மறுபடியும் தள்ளு வண்டி வியாபாரமும் செய்ய முடியாது. இவர்கள் வசித்த இடமோ கடைவீதியை விட்டு நான்கைந்து மைல் தூரம் இருக்கும். மனதில் பெரும் திகிலை வைத்துக்கொண்டு இரண்டு மாதங்களை ஓட்டி விட்டான்.
அவன் இருந்த நகரில் பக்கத்து வீதியில் ஒரு மரணம் நடந்து விட்டது. அந்த வீட்டுக்காரர் இவன் சமையல் வேலை செய்து கொடுப்பவன் என்று தெரிந்தாலும், தயங்கி தயங்கி வந்து ‘ஆர்டர் செய்து தர முடியுமா?’ என்று கேட்டார்கள்.
இவன் இதுவரை நல்ல விசயங்களுக்கு மட்டுமே சமையல் செய்து கொடுத்திருக்கிறான். அதனால் தயங்கினான். அப்பொழுது வெளியே வந்த பார்வதி “தாராளமா செய்து தருகிறோம்” என்று அவர்களுக்கு வாக்கு கொடுத்து உடனே அச்சாரமாய் இருபது காபியை போட்டு அவர்கள் கையில் கொடுத்து வருபவர்களுக்கு இதை கொடுங்கள், அதற்குள் ஏதாவது டிபன் செய்து கொடுத்து விடுகிறோம், என்று அவர்களை அனுப்பினாள்.
அதற்கு பின் அந்த நகரில் எந்த ஒரு நிகழ்ச்சியானாலும் பரமனின் சமையல் இருக்கும் எனும் அளவுக்கு வந்துவிட்டது. பரமனும் நல்ல நிலைக்கு வந்து விட்டான். வீட்டையும் இன்னும் பெரிதாகக் கட்டி விட்டான். பக்கத்து இடத்தைக் கூட வாங்கி காம்பவுண்டு சுவர் எழுப்பிக்கொண்டான்.பெண் இப்பொழுது பிளஸ் டூ முடித்து கல்லூரிக்குப் போகும் அளவுக்கு வளர்ந்துவிட்டாள். பார்வதி தன் குடும்பம் நல்ல நிலைக்கு வந்து விட்ட்து என்று உணர்ந்து கொண்டாலும் அடி மனதில் பயம் உடையவளாகவே இருந்தாள். அவளைப் பொறுத்தவரை மேலும் மேலும் புதியதாய் ஏதாவது சமைத்துத் தரவேண்டும் என்ற ஆர்வம் மட்டும் குறையாமல் பார்த்துக்கொண்டாள்.
பரமனிடம் சிறிது சிறிதாக அலட்சிய மனப்பான்மை தலை தூக்க ஆரம்பித்தது. அவனின் சமையலுக்கு வரும் பாராட்டு அவனைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கர்வப்பட வைத்தது. தன் சமையல் ருசிக்காகவே தன்னை வேண்டி வருகிறார்கள் என்ற எண்ணம் வந்து விட்டதால் வருபவர்களிடம் அலட்சியம் காட்ட ஆரம்பித்தான்.அதிகப்படியான விலை வைக்கிறான், ஒத்துக்கொள்ளாதவர்களை ஏசுகிறான். தன்னுடைய புகழில் மனைவியின் கை பக்குவமும் இருக்கிறது என்ற எண்ணமே அவனுக்குத் தோன்றவில்லை.
ஆரம்பத்தில் அவனுக்கு ஆதரவு கொடுத்தவர்கள், இவனின் அலட்சியத்தால் ஒதுங்க ஆரம்பித்தனர். இவனுக்கு வரவேண்டிய ஆர்டர்கள் தற்போது வேறு பக்கம் திரும்ப ஆரம்பித்து விட்டன. பரமன் அதை உணரத் தயாரில்லை.ஏனென்றால் அவன் வாழ்க்கையே இப்பொழுது ஆகாயத்தில் இருப்பதாய் நினைக்கிறான். பார்வதியின் பார்வை ஓரளவு தரையில் இருப்பதால் அவனுக்கே தெரியாமல் வேறு பக்கம் போகும் ஆர்டர்கள், முழுவதும் மாறி விடாமல் இவர்களை வாழவைத்து கொண்டிருக்கிறது.
- தாமோதரன்.
Tags: இட்லி, கிரகப் பிரவேசம், பரமன், பொலீஸ்காரர், விதி, வியாபாரம்