இப்போது வேண்டுவதெல்லாம்
பனி விலகி வசந்த காலம் வந்தது
தொட்டுவிடும் தூரத்தில்
கோடை எட்டிப் பார்க்கிறது!
காட்டாற்றின் கரையதனில்
கதையளந்த காலம் போய்
கையறு நிலையில்மனிதர்கள் நாம்
சுவரில் ஒட்டிய பல்லிகளாய் – இன்னும்
மடித்துப் போடப்பட்ட காகிதத் தாள்களாய்
கசங்கிக் கிடக்கின்றோம் தனி அறைகளில்
பல்லாயிரம் உயிர் தின்றும்
அடங்காது ஆர்ப்பரிக்கும் பூதமாய்
இன்னும் வேண்டும் என அடம் பிடிக்கிறது
இந்தக் கொடூர கொரோனா!!
உலக மீட்பர்கள் தாங்கள் என்று
தமக்குத் தாமே பட்டங்கள் சூட்டி
அழகு பார்த்த எங்கள் எஜமானார்களே
இனிவரும் நாளில்
உங்கள் பசப்பு வார்த்தைகள்
காற்றில் பறந்து போகலாம்
பின்னொரு நாளில் நாங்கள்
முடிவிலாப் பெருந் துயர் கடந்து மீள்கையில்
அவலம் மட்டுமேபேசித் துயருறும்
அந்தர நிலைக்குள்ளும்தள்ளப் படலாம்.
இப்போது எல்லாமே முடிந்து போயிற்று
தனித்திரு என்று எழுதப்பட்டு
கடலிலும் மண்ணிலும் வானிலும் விரிந்த
எம் மக்களுக்கான வழிகள்
அனைத்தும் அடைக்கப்பட்டன
நித்திரையற்ற இந்நாட்களில்
படுக்கையறைக்கும் கழிவறைக்குமாய்
நடந்து நடந்து கால்கள் வலிக்கின்றன.
தனித்து விடப்பட்ட சிறு தீவின் குமுறலாய்
ஒவ்வொரு இதயமும் துயரெடுத்துப் புலம்புகின்றன
பரஸ்பரத் துயரங்களுக்கும் வலிகளுக்கும் நடுவே
இப்போது வேண்டுவதெல்லாம்
உடலுருக்கும் இந் நோயும் உயிரறுக்கும்
தினச் சாவுக் குறிப்புக்களும் இல்லாமல்
என் ஊர், என் நகரம், என் நாடு
இனி என்று மீளும் என்பது மட்டுமே.
-தியா-