அன்னையர்க்கு அர்ப்பணம்
Podcast: Play in new window | Download
Subscribe: Apple Podcasts | Spotify | Email | RSS
கையினிலே கல்லொன்று கனத்திட்டால் களைந்திடுவோம்
தோள்களிலே தொங்கியதை தேவையென்றால் தவிர்த்திடுவோம்
முதுகில்சிறு மூட்டையென்றால் முழுவதுமாய் மறுத்திடுவோம்
அவ்வளவேன், அரைக்கிலோ அரிசிதூக்க அழுதே அலறிடுவோம்!!
மாதமும் மாறிவர மாதவளுள் மகவுதோன்ற
வருகின்ற வாரங்களில் வயிறதுவும் வளர்ந்துவர
இயல்பது இல்லாததாகி இடுப்புவலி இயல்பென்றாக
பின்னெலும்பு பிளக்கும்வகை பிள்ளையதைப் பிரசவித்தவள்!!!
உள்ளிருந்து உருவாகி உணர்வுகளை உரித்தாக்கி
உதரத்தில் உறைந்திருந்து உதிரத்தை உறிஞ்சியுண்டு
உயர்வான உண்மைக்கு உவகையான உறவுமாக
உயிரும் உடலுமாய் உன்னதமாய் உதித்ததது!!
சிசுவது சிரிப்பதற்கும் சிரந்தூக்கிச் சிறப்பதற்கும்
மழலைவாய் மலர்வதற்கும் மணம்வீசி மகிழ்வதற்கும்
வளர்ந்து வயதாகி வான்புகழ வாழ்வதற்கும்
கருமமே கண்ணாகிக் கரைந்து கற்பூரமானவள்!!!
வியர்வையோ விழிநீரோ விழுந்து விடாதிருக்க
தன்பசி தவிர்த்து தனயன்பசி தணித்திருக்க
கந்தலைக் கசக்கியுடுத்தி கனவானாய்க் காட்டிச்சிறப்பிக்க
மறுத்திடா மௌனியாகி மெய்வருத்திய மெழுகுவர்த்தியவள்!!!
படித்துப் பட்டங்களும் பதவிகளும் பெற்றுவாழ
செல்வமும் செழிப்பும் சென்றவிடம் சேர்ந்துவர
மங்கையை மாலையிட்டு மங்கலமாய் மணமுடிக்க
சடுதியும் சளைத்திடாமல் சிதைந்திட்ட சந்தனமவள்!!!
இகத்திருக்கும் இல்லமனைத்தும் இறங்கிவந்து இயைந்திருத்தல்
இயலாதசெயல்! இதைப்புரிந்த இறைவனவன் இரக்கத்தால்
இனிதுவந்து இன்பமாய் இவர்வாழ இந்தாருங்கள்
இவளேயுங்கள் இதயம்நிறை இறையென்று இறக்கிவிட்டான் !!
அக்கடவுளர் அனைவருக்கும் அன்பான அன்னையர்தினம் !!!
- வெ. மதுசூதனன்
Tags: அன்னையர் தினம், கவிதை