வல்லவன் வாழ்வான்
“முதலில் அமெரிக்கா”! (America First) – அமெரிக்க அதிபர் டானல்ட் ட்ரம்ப் முன்வைத்த தேர்தல் கோஷங்களில் மிகப் பிரபலமான சொற்றொடர் இது. உலக நாடுகளின் வளர்ச்சிப் பரிமாணங்களில் அமெரிக்கா முதலில் நிற்கும் என்ற நோக்கத்தில் அவர் சொல்லி வந்த சொற்றொடர் இன்று மனித குலத்தையே அச்சுறுத்தி வரும் கோவிட்-19 எனும் பெருங்கொள்ளை நோயின் பாதிப்பைப் பொறுத்தவரை சந்தேகத்துக்கு இடமின்றி பலித்துள்ளது. திருவாளர் ட்ரம்பின் சாதனைகளில் இதுவும் ஒன்று என்று கூட சொல்லலாம். உண்மையில் பல நாடுகள் வெளிப்படைத்தன்மையும், போதுமான தகவலும் இல்லாமல் பாதிப்புகளை மறைப்பதை மறுப்பதிற்கில்லை. ஆனாலும் அமெரிக்காவின் பாதிப்பு தொடர்ந்து முன்னணியில் உள்ளது.
இன்றைய நிலையில், அமெரிக்காவில் கோவிட்-19 தொற்று நோயால் இறந்தவர் எண்ணிக்கை 1 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. வியட்நாம், வளைகுடா, ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களில் உயிரிழந்த வீரர்களின் மொத்த எண்ணிக்கையைவிட அதிகம் இது! இரண்டும் வெவ்வேறு வகையான உயிரிழப்புகள் என்றாலும் இந்தப் பேரழிவின் பாதிப்பைப் புரிந்துகொள்ள இந்த ஒப்பீடு உதவும். இறந்தவர்களை அடக்கம் செய்ய பல நகரங்கள் போராடி வருகின்றன என்பது உண்மை.
கோவிட்-19 கிருமிகள் பரவுவதைத் தடுக்கவும், கிருமிகளை ஒழிக்கும் மருந்தைக் கண்டுபிடிப்பதிலும் அனைத்து உலகநாடுகளும் முனைந்தாலும், சரியான தீர்வின்றி தடுமாறி வருகின்றன. பல நம்பிக்கைகள் ஹேஷ்யங்களாகிப் போகின்றன. ஊரடங்கு, சமூக விலகல், அடிப்படைச் சுகாதாரம் போன்ற முயற்சிகள் எதிர்பார்த்த அளவில் நோய்ப் பரவலைத் தடுக்கவில்லை. அன்றாடப் பணிகள், வணிகம் முடங்கிவிட வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் என்ற பேதமின்றி உலகப் பொருளாதாரம் பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள தேர்தல், அதிபருக்குப் பெரும் நெருக்கடியைத் தந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில், அவரது பல தவறான, அனுபவமற்ற முடிவுகளுக்கு இடையிலும் அமெரிக்கப் பொருளாதாரம் சீராக இருந்து வந்தது மட்டுமே மக்களுக்குப் பெரும் ஆறுதலாக அமைந்தது. ஆனால் தற்போது அமெரிக்கப் பொருளாதாரத்தின் அடித்தளமே ஆட்டம் கண்டு, குலைந்து வருகிறது. ஏறக்குறைய நாற்பது மில்லியன் மக்கள் வேலையிழந்துள்ளார்கள்; விவசாயம் முடங்கியுள்ளது ; ஏற்றுமதி, இறக்குமதி தடைகளால் வணிகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது; வியாபாரங்கள் முடங்கியுள்ளதால் பணச் சுழற்சி ஸ்தம்பித்துள்ளது; தனி மனித ஆக்கத் திறன் குறைந்து வருவதால் தொழிற்சாலைகள் / நிறுவனங்கள் மந்தமடைகின்றன.
எப்படியாவது பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துவதே அதிபரின் இன்றைய அதிமுக்கியக் குறிக்கோளாகவுள்ளது. பொதுச் சுகாதார நெருக்கடியின் மிக அடிப்படையான அம்சங்களை அவர் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. வணிகத்திற்குத் திரும்பும் ஆர்வத்தால் திருவாளர் ட்ரம்ப் அறிவித்து வரும் தளர்வுகள், நோய்ப் பரவலின் மற்றொரு அலையை உருவாக்கும் அபாயத்தை மருத்துவ நிபுணர்கள் எச்சரித்தாலும் அவர் அதற்குச் செவி சாய்ப்பதாயில்லை. மாறாக அவர் தொடர்ந்து சொல்லிவரும் பல பொய்யான, ஆதாரமற்ற தகவல்கள் மக்களைச் சலிப்படையச் செய்துள்ளன.
இந்த ஆண்டின் துவக்கத்தில் சீனா கொரோனா பற்றி உலகத்திற்குத் தெரிவித்தபோது அவர்களின் தடுப்பு நடவடிக்கைகளை மனதாரப் பாராட்டியவர், அடுத்த சில வாரங்களில் சீனா திட்டமிட்டு அமெரிக்காவில் இந்த நோயைப் பரப்பிவிட்டது என்று குற்றம் சாட்டினார். இந்தியாவில் உரையாற்றிய பொழுது அமெரிக்காவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஒருவரையும் இறக்கவிடாது என்றவர் சில வாரங்களுக்குப் பின்பு இப்பொழுது இறப்பவர்கள் ஏற்கனவே பிற நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என்றார். மருத்துவப் புள்ளி விவரங்கள் இறப்பு விகிதம் 3.5சதவிகிதம் என்று வெளியிட்டபோது, என்னுடைய உள்ளுணர்வு இது தவறான தகவல் எனச் சொல்கிறது, என்னுடைய கணிப்பின்படி ஒரு சதவிகிதத்திற்கும் குறைவானோர் மட்டுமே கொரோனாவால் இறந்துள்ளனர் என்றார். மேலும் மருத்துவ ஆலோசகர்களின் எச்சரிக்கைகளைப் புறந்தள்ளி தனது சுயகணிப்பின்படி இந்தத் தொற்றுக்கான மருந்து இரண்டு வாரங்களில் நாடு முழுதும் கிடைக்கும்; அடுத்த சில வாரங்களில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பூஜ்யத்துக்கு வந்துவிடும் என்று தம்பட்டம் அடித்தார். கோடைக்காலத்தில் பரவல் குறைந்து விடியல் பிறக்குமென ஜோசியக் கணிப்புகள் செய்தார்.
பல நேரங்களில் அவரது பேச்சும், டிவிட்டர் கீச்சுத்தகவலும் ஒன்றுக்கொன்று முரணாக இருந்தன. விமானப் போக்குவரத்து ஏற்றுமதி இறக்குமதிக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்று வெள்ளை மாளிகையில் பேசிவிட்டு அடுத்த நாள், அதை மறுத்தார். மார்ச் மாத இறுதியில் இந்தக் கொள்ளை நோயைப் பற்றி முன்னேரே தெரிந்திருந்தால் நாம் அதிகக் கவனத்துடன் இருந்திருக்கலாம் என்று அவர் பேசிய தினம் மத்திய நோய்த்தடுப்புத் துறை அதிகாரி அதிபருக்கு இந்த நோய் குறித்து சென்ற டிசம்பர் மாதமே விளக்கி எச்சரித்தோம் எனவும், அவர் அதில் அதிகக் கவனம் செலுத்தவில்லை எனவும் சொன்னார். மலேரியாவைக் குணப்படுத்தும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் கொரோனா கிருமியைக் கொன்று விடும் எனும் ஆதாரமில்லாத ஆய்வை நம்பி, அதிரடியாக இந்தியாவிலிருந்து அந்த மருந்தை இறக்குமதி செய்தார். இதற்கெல்லாம் உச்சமாக, கிருமிநாசினியை ஊசிமூலம் உடலுக்குள் செலுத்துவதால் கிருமிகளை அழித்துவிட முடியுமா என்ற கேள்வியெழுப்பி மருத்துவர்களை அசத்தினார்.
அரசியல் ரீதியாகவும் தொடர்ந்து அதிர்வலைகளை உருவாக்கிக் கொண்டுள்ளார் திருவாளர் ட்ரம்ப். மாநில ஊரடங்குகளைத் தளர்த்த அந்தந்த ஆளுநர்களைக் கடந்த அதிகாரம் தனக்கிருப்பதாக எச்சரித்தார். அமெரிக்க அரசியலமைப்பின்படி இதற்கு வழியில்லையென்றாலும் அதனை உருவாக்குவேன் என்று பேசியதை எவரும் விரும்பவில்லை. இதைத் தொடர்ந்து மாநில ஆளுநர்களுக்குக் கடுமையான அழுத்தம் கொடுத்து வருகிறார். உலகச் சுகாதார நிறுவனத்துக்கு அளித்து வந்த நிதியுதவியை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளார். நோய்க்கான மருந்துகளைக் கண்டுபிடிக்க ஏற்படும் தாமதத்திற்குத் தான் பொறுப்பு ஏற்க முடியாது என்று பத்திரிக்கையாளரிடம் பேசியவர் இதற்கு ஒபாமா அரசின் மெத்தனமே காரணம் என்று எவருக்குமே விளங்காத முடிச்சைப் போட்டுள்ளார்.
கொரோனா நோய் பயத்தால் தேர்தலில் வாக்களிப்போர் எண்ணிக்கை குறைந்துவிடக்கூடும் அதனால் அஞ்சல் வழியில் வாக்களிக்க ஏற்பாடு செய்யவேண்டும் எனக் கோரிய மாநிலங்களுக்குக் காட்டமாகப் பதிலளித்த அதிபர் அதற்கான நிதியை மத்திய அரசு ஒருபோதும் வழங்காது என மறுத்துள்ளார்.
ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் குறித்து மாற்றுக் கருத்து தெரிவித்த சுகாதார மனிதவளத் துறை உயரதிகாரியைப் பணியைவிட்டு நீக்கினார். தொடர்ந்து தான் தினசரி ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை உட்கொள்வதாகத் தெரிவித்தார். இதைச் சற்றும் எதிர்பாராத மத்திய நோய்தடுப்புத் துறை இந்த மருந்து கொரோனாவைத் தடுத்து குணப்படுத்தும் என்ற அறிவியல் ஆதாரம் எதுவுமில்லை. இதைச் சாப்பிடுவது சிலருக்கு மரணத்தை ஏற்படுத்தும் எனவே இதைப் பயன்படுத்த வேண்டாம் என எதிர்க்குரல் எழுப்பி பொதுமக்களை எச்சரித்து வருகின்றனர்.
நாட்டின் தலைவராக, மக்களுக்கு உதாரணமாக விளங்க வேண்டியவர் தொற்றிலிருந்து பாதுகாக்கும் முகக் கவசம் அணிய மறுக்கிறார். இதைத் தொடர்ந்து அவரது தீவிர ஆதரவாளர்களும் கவசம் அணிய மறுக்கின்றனர். இவர்களில் சிலர் கவசம் அணிய வற்புறுத்தும் வணிக நிறுவனங்களுக்குள் கவசமின்றி நுழைய முயன்றதோடு, தடுத்து நிறுத்திய காவலர்களிடம் சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை; எங்களது உரிமைகளை எந்தச் சட்டமும் பறிக்க முடியாது என்று வாதிட்டுள்ளனர். தங்கள் மாநில ஊரடங்கு விதிமுறைகளைத் தளர்த்தத் தயங்கும் சில ஆளுநர்களுக்கு அழுத்தம் கொடுக்க, மாநிலத் தலைமைச் செயலகம் முன்பு, நூற்றுக்கணக்கானோர் சூழ்ந்து அடுத்தவர்க்கு முடி திருத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு நூதனப் போராட்டத்தை அரங்கேற்றினர். சில மாநிலங்களில் டாட்டூ பார்லர்கள், திரையரங்குகள், உணவகங்கள் திறக்கப்பட்டுவிட்டன. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அனைத்து மாநிலங்களின் வழிப்பாட்டுத் தலங்களையும் திறக்க ஆணையிடவுள்ளார் அதிபர் டானல்ட் ட்ரம்ப். மாநில ஆளுநர்கள் அதிபரின் இந்தச் சர்வாதிகார அறிவிப்புகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அண்டை நாடுகளான கனடா, மெக்ஸிகோ நாடுகளுடனும் கடுமை காட்டிவருகிறார் திருவாளர் ட்ரம்ப்.
வெளிப்படையாகப் பொய் சொல்வது, அதிரடியாகப் பேசுவது, மோசமான முடிவுகள் எடுப்பது போன்ற பல காரணங்களுக்காக பொதுமக்கள் அதிபர் மீது கடுமையான அதிருப்தியில் உள்ளனர். ஃபிப்ரவரி மாத மத்தியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக திருவாளர் ட்ரம்ப் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை 63 புள்ளிகளிலிருந்து சமீபத்தில் 47 புள்ளிகளாகக் குறைந்துள்ளது.
ஒரு காலத்தில் நிலம் மற்றும் கட்டடத் தொழிலில் அரசாட்சி செய்து வந்த திருவாளர் ட்ரம்ப், அதிபரான பின்பாவது பொருளாதார வெற்றி மட்டுமே நாட்டின் குறிக்கோள் அல்ல என்பதைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். பொது மக்கள் நலனில், அவரது அக்கறை பெரிய கேள்விக் குறியாகியுள்ளது. அமெரிக்காவில் பொதுவாக ‘வல்லவன் வாழ்வான்’ என்ற கோட்பாடு மிகப் பிரபலம். அது போல் ‘எதிர்ப்புச் சக்தி உள்ளவர்கள் பிழைத்துக் கொள்ளட்டும், மற்றவர்கள் மடியட்டும்’ என்ற கொள்கையை அதிபர் கடைபிடிக்கத் தொடங்கி விட்டாரோ என்று சந்தேகமாகவுள்ளது.
ஆசிரியர்