விண்வெளியில் ஒரு அமெரிக்கச் சாதனை
வருகிற புதன்கிழமை மே 27 ஆம் தேதியன்று, சாதனை புரிவதற்கு, அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசாவும் (NASA), தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸும் (SpaceX) தயாராகி வருகின்றன. 9 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்காவிலிருந்து முதல்முறையாக விண்வெளிக்கு மனிதர்களைக் கொண்டு செல்லும் க்ரு ட்ராகன் (Crew Dragon) சீறிக்கொண்டு கிளம்ப இருக்கிறது. வரும் புதன் மாலை 4:33 மணிக்கு இரு விண்வெளி வீரர்கள், ராபர்ட் மற்றும் டக்ளஸ் இருவரையும் ப்ளோரிடா மாகாணத்தில் இருக்கும் நாசா விண்வெளி நிலையத்திலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஏற்றிச் செல்கிறது.
இந்த விஷயத்தை மேலும் பார்ப்பதற்கு முன்பு, சில முக்கிய விபரங்களை முதலில் தெரிந்துகொள்ளலாம். சர்வதேச விண்வெளி நிலையம் (International Space Station) என்பது அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா ஆகிய நாடுகள் ஒன்றாகச் சேர்ந்து விண்வெளியில் அமைத்திருக்கும் ஒரு சோதனை நிலையம். இதில் விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து ஆராய்ச்சியில் ஈடுபடுவார்கள். 2011 வரை இந்த விண்வெளி நிலையத்திற்குச் சென்று வர, அமெரிக்காவிற்குச் சொந்தமான விண்கலத்தைப் பயன்படுத்திவந்தார்கள். அதற்கு ஆகும் செலவினாலும், சில விபத்துகளினாலும், பின்னர் ரஷிய விண்கலங்களின் உதவியை நாடினார்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்று வருவதற்கு ரஷியாவைச் சார்ந்திருப்பது அமெரிக்காவிற்குப் பெரும் சங்கடமாக இருந்தது. அதே சமயம், நாசாவிற்குப் பெரும் நிதியைக் கொடுப்பதும் அரசிற்குக் கடினமாக இருந்தது.
2012இல் நாசா சில தனியார் நிறுவனங்களுடன் அமெரிக்காவிலிருந்து மனிதர்களை விண்வெளிக்குக் கொண்டு செல்வதற்கு ஒப்பந்தம் செய்துக்கொண்டது. அவற்றில் ஸ்பேஸ்எக்ஸ், போயிங் போன்றவை முக்கிய நிறுவனங்களாகும். இந்த இடத்தில் ஸ்பேஸ்எக்ஸ் குறித்துச் சிறிது விரிவாகப் பார்ப்போம்.
பேபால், டெஸ்லா என்று நமக்கு நன்றாகத் தெரிந்த நிறுவனங்களின் உருவாக்கத்தில் முக்கியமாக இருந்த எலான் மஸ்க் (Elon Musk) உருவாக்கிய நிறுவனம்தான், இந்த ஸ்பேஸ்எக்ஸ். 2002 இல் இந்த நிறுவனத்தை ஆரம்பித்த போது, செவ்வாய் கிரகத்தில் செடி வளர்ப்பது தான் எலானின் கனவாக இருந்தது. அந்தக் கனவை நனவாக்க முதலில் ராக்கெட் தொழில்நுட்பத்தில் இருக்கும் சிக்கல்களைக் களைந்து, அதிலிருக்கும் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.
ராக்கெட் எனப்படும் ஏவுகலன் விண்வெளிக்கு விண்கலங்களை எடுத்துச் செல்ல உதவுபவை. சாட்டிலைட், விண்வெளி உபகரணங்கள், மனிதர்கள் என இவற்றின் விண்வெளி பயணத்திற்கு உதவுபவை இந்த ஏவுகலன்கள். இவை பொதுவாக விண்வெளிக்கு எடுத்து செல்ல வேண்டியதை, விண்வெளியில் இறக்கிவிட்டபின் தனது உயிரை விட்டுவிடும். அடுத்தப் பயணத்திற்கு இன்னொரு ஏவுகலன் தயார் செய்ய வேண்டி வரும். இப்படி யோசித்துப் பாருங்கள், நீங்கள் ஒருமுறை ஊருக்குச் செல்ல, ஒரு விமானம் செய்ய வேண்டும் என்றால் அது எவ்வளவு செலவுக்குரிய விஷயம் என்று புரியும். இங்குத் தான் எலான் இப்படி யோசித்தார் – நாம் ஏன் விமானம் போல் ஏவுகலனையும் திரும்பத் திரும்பப் பயன்படுத்தக்கூடாது? விண்வெளிக்கு எடுத்து சென்றவற்றை இறக்கிவிட்டு அந்த ஏவுகலன் திரும்பப் பூமிக்கு திரும்பிவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்? உடனே, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டது எலானின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்.
ஒரு தனியார் நிறுவனமாக ஸ்பேஸ்எக்ஸ் பல முதன்முறை சாதனைகளைப் புரிந்தது. 2015 இல் விண்வெளி சுற்றுப்பாதையில் விண்கலத்தைச் செலுத்திவிட்டு, அவர்கள் விட்ட ஏவுகலன் திரும்பப் பூமியில் அவர்கள் குறித்து வைத்த இடத்திற்குச் சேதாரமில்லாமல் வந்து நின்றது. அந்த ஏவுகலன் அடுத்து இன்னொரு விண்கலத்தைத் தூக்கிச் சுமக்க தயாரானது. இப்படி ஏவுகலனின் செலவைக் குறைப்பதின் மூலம் பல நிறுவனங்கள் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துக்கொண்டனர். சிற்சில தோல்விகள் இருந்தாலும், அவர்கள் ஏவுகலனைப் பூமிக்குத் திரும்பக் கொண்டு வருவதில் பெரும் வெற்றி சதவிதத்தைக் கொண்டிருந்தனர். தனது டெஸ்லா காரை விண்வெளியில் சுற்றவிட்டது, கடலில் ஏவுகலனைத் தரையிறக்கியது, பதினொரு சாட்டிலைட்களை விண்வெளியில் கொண்டு சென்று நிறுத்தியது, எதிர்காலத்தில் நிலவிலோ செவ்வாயிலோ குடிபெயர்வதற்கான திட்டத்தில் இருப்பது என ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் குறித்துத் தனிக் கட்டுரையே எழுதலாம்.
இப்படிப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் இப்போது அமெரிக்கர்களைப் பெருமைப்பட வைக்கும் பரிசாகத் தனது ஃபால்கன் 9 (Falcon 9) ஏவுகலனில் இரு விண்வெளி வீரர்களை ஏற்றிக்கொண்டு சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்ல இருக்கிறது. இதன் மூலம் அமெரிக்கா ரஷியாவைச் சார்ந்து இருக்காமல், தங்கள் நாட்டிலிருந்தே சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்று வரலாம். இதனால் தற்சார்பு, குறைந்த செலவு எனப் பல பயன்கள்.
டெமோ-1 மிஷன் மூலம் ஏற்கனவே இதுபோன்று விண்கலத்தை விண்வெளிக்குக் கொண்டு சென்று தானியங்கும் வகையில் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைத்து இருக்கிறார்கள். இம்முறை டெமோ-2 மிஷன் மூலம் மனிதர்களையும் அது போல் ஏற்றிச்செல்ல இருக்கிறார்கள். இச்சோதனையின் மூலம் ஃபால்கன் ஏவுகலன், க்ரு ட்ராகன் விண்கலம் ஆகியவை விண்வெளி பயணத்திற்கு ஏற்றவை என்று நிருபணம் ஆகும். தொடர்ந்து விண்வெளி பயணத்திற்குப் பயன்படுத்தப்படும்.
புதன் மாலை 4:33க்குப் பூமியில் இருந்து புறப்படும் இந்த விண்கலம், பத்தொன்பது மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடையும். ஏதோ ஒரு காரணத்தில் புதன்கிழமை இந்தத் திட்டம் ரத்தானால் அடுத்துச் சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை புறப்படுவதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விண்வெளி வீரர்கள் அங்கு எத்தனை நாட்கள் இருப்பார்கள் என்று திட்டவட்டமாக இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. 3-4 மாதங்களுக்குப் பிறகு அவர்கள் திரும்புவார்கள் என்று கணிக்கிறார்கள். அச்சமயம் அவர்கள் சென்றிருக்கும் இந்த க்ரு ட்ராகன் விண்கலம் அங்கிருந்து பிரிந்து, பூமியை நோக்கி பயணித்து, ப்ளோரிடா பக்கமிருக்கும் அட்லாண்டிக் கடல் பரப்பில் இறங்கும். அங்கு அவர்களுக்காகக் காத்திருக்கும் மீட்பு கப்பல் அவர்களை வரவேற்கும்.
இந்த விண்வெளி பாய்ச்சலுக்கு நாசாவும், ஸ்பேஸ்எக்ஸும் பரபரப்பாக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இதை நேரடியாகக் காண ஜனாதிபதி ட்ரம்ப் ஃப்ளோரிடா செல்கிறார். அமெரிக்க மக்களும் இந்தச் சரித்திர முக்கியத்துவம் பெற்ற நிகழ்வைக் காண ஃப்ளோரிடா செல்ல நினைத்தாலும், தற்போதைய கோவிட்-19 சூழ்நிலையால் அங்குப் பயணிக்க வேண்டாம் என்று அவர்களை நாசா அமைப்பினர் அறிவுறுத்தியுள்ளனர். வீட்டில் இருந்தபடியே தொலைகாட்சியில் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.
இதையெல்லாம் பார்க்கும்போது அமெரிக்கப் பெருமிதத்தை மீட்க தனியாருடன் இணைந்து செயல்பட அமெரிக்க அரசு முடிவெடுத்தது சரியான முடிவாகத் தெரியக்கூடும். இதைப் போல, சமீபத்தில் இந்தியாவிலும் அரசின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவுடன் இணைந்து செயல்பட, தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது இந்திய அரசு. இதற்குக் காரணமாகவும் தற்சார்பு என்ற சொல்லை தான் இந்திய அரசு பயன்படுத்தியுள்ளது. இது எந்த வகையில் இந்தியாவிற்குப் பயனளிக்கப்போகிறது, பெருமையளிக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் காண முடியும். இப்போதைக்கு அமெரிக்கத் தனியார் கூட்டுச் சோதனை சாதனையில் முடிகிறதா என்பது சில நாட்களில் தெரிந்துவிடும். இதில் பங்குகொள்ளும் ராபர்ட் மற்றும் டக்ளஸ் ஆகியோரின் விண்வெளி பயணம் வெற்றிகரமாக அமைய நாம் வாழ்த்துவோம்.
மேலும் தகவலுக்கு,
https://www.nasa.gov/specials/dm2/
https://www.spacex.com/launches/
- சரவணகுமரன்