\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

போதை

போதைப் பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகிட்டே போகுதாம். இந்தப் பத்திரிக்கையில் ஒரு கணக்கெடுப்பு போட்டிருக்கு. இந்த பகவான்‌இதெல்லாம் பார்த்திட்டு கம்முனு தானே இருக்காரு.அநியாயம் முத்திப் போச்சுன்னா அவதாரம் எடுப்பேன்னு சொன்னவர் இவ்ளோ அநியாயம் முத்தின அப்புறமும் என்ன பண்றாரு தெரியல.தன் மனைவியின் இந்தப் பிதற்றல்களை அமைதியான ஒரு அசட்டுச் சிரிப்போடு செவி மடுத்துக் கொண்டிருந்தார் ரங்கநாதன்.அந்தச் சிரிப்போடு சிறு வேதனையும் ஓரமாய் ஒட்டிக்கொண்டிருந்தது.

‘ஏன் அப்படிச் சிரிக்ரீங்க??’

‘ஒண்ணுமில்ல’

‘சரி விடுங்க. இந்த40 வருஷமா உங்களோட குடித்தனம் நடத்துறேன்.நீங்க மறைச்சிட்டா நீங்க என்ன நினைக்கிறீங்கனு தெரியாதாக்கும்?’

அதற்கும் ரங்கநாதனின் அசட்டுச் சிரிப்பு தொடரவே ஏதோ முணுமுணுத்தபடியே முற்றத்தில் இருந்து நகர்ந்தாள் மங்கலம். அவர் முற்றத்தின் கூடத்தில் இருந்த அந்த ஈசிச்சேரில் கண்மூடி அண்ணாந்து சாய்ந்து கொண்டார்.

காதல் முற்றிப் போய், தவறான ஒருத்தனுடன் ஓட்டம் பிடித்து இன்று ஒற்றை மகனோடு தன் பக்கத்துத் தெருவிலேயே சீரழிந்து கொண்டிருக்கும் தன் மகளின் முகம் ரங்கநாதனின் மூடிய விழிகளுக்குள் நிமிடத்திற்கு இருமுறை வந்து மறைந்து கொண்டிருந்தது. அவரை அறியாமலேயே அவர் விழி கட்டிய நீர் விழியின் விளிம்புகள் கடந்து வெளி வந்து கொண்டிருந்தது.

‘என்ன காலங்காத்தால அந்த ஓடுகாலிக் கழுத நினைப்பு வந்திடுச்சு போல இன்னிக்கு.’ மங்கலத்தின் இந்த அதட்டல் வசனம் கேட்டு ரங்கநாதனின் நீர் கட்டிய விழிகள் படக்கென திறந்தன.

‘ஆமா, உன்னை மாதிரி என்னால கல்லு மாதிரி இருக்க முடியல. என் தோள்ல போட்டு வளர்த்தவ இப்படிச் சீரழியுறது தெரிஞ்சும், எதும் பண்ண முடியாம கல்லாட்டம் உயிரோட இருக்கேனே.’என்று முடிப்பதற்குள் சிந்தாமல் அவர் விழிகளுக்குள் இவ்வளவு நேரம் ததும்பி நின்ற மீதி நீரும் முத்தெனத் திரண்டு அவர் கண்ணங்களில் வழிந்தோடியது.

‘ரொம்ப அலட்டிக்காதீங்க. நானும் தான் அந்தக் கழுத மேல உயிரையே வச்சிருந்தேன். அந்தப் பித்துப் பிடிச்சவ அதையெல்லாம் புரிஞ்சிக்காம எவனோ ஊரு பேரு தெரியாதவன் தான் உசத்தினு ஓடுனா. அப்ப நல்லா அனுபவிக்கட்டும்’ இப்படிக் கடிந்து பேசினாலும் மங்கலத்தின் தாய்மை அவளை அறியாமலேயே அவள் விழியிலும் நீர் சுரக்கத்தான் செய்தது.

‘அவ குழந்தை டீ. தெரியாம பண்ணிட்டா’

‘குழந்தை தான் கல்யாணத்துக்கு அத்தனை அவசரப்பட்டு நம்ம கெளரவத்தைக் குழி தோண்டிப் புதைச்சிட்டு ஓடினாளோ? அவளுக்குப் பரிஞ்சு பேசி காரியத்தச் சாதிச்சிரலாம் பார்க்காதீங்க. அவள இந்த வீட்டுக்குள்ள கூட்டிட்டு வரணும்னு நினைச்சீங்க, அது என் அந்திம அக்னியச் சுற்றித் தான் நீங்க செய்ய முடியும். மனசில வச்சுக்கங்க.’கூறிக் கொண்டே தன் விழியின் நீரைத் தன் கணவர் கவனிக்கும் முன் அங்கிருந்து நகர்ந்து விட்டாள். அவளின் அதட்டல் பேச்சுக்கு, பதில் கூறாமல் தரையைப் பார்த்தபடி அமர்ந்திருந்த ரங்கநாதனிடம், ‘மூஞ்சியத் தொங்கப் போட்டது போதும், இந்தக் காப்பித் தண்ணியக் குடிங்க.’ என்று கூறி டம்ளரை அவர் கையில் எரிவதிற்கு இணையான வேகத்தில் திணித்து சமையலறையை நோக்கி நடையைக் கட்டினாள்.

தன் கையில் திணிக்கப்பட்ட காப்பியைக் குடிக்க மனமில்லாமல் குனிந்து அதை ஈசிச்சேரின் காலருகே வைத்துவிட்டு, மீண்டும் முன்பு சாய்ந்திருந்த அதே தோரணையில் சாய்ந்து கொண்டார் ரங்கநாதன். அவரின் நினைவுகள் தன் சீமந்த புத்திரியை அவர் கையில் முதன் முதலாய் ஏந்திய அந்தத் தருணத்தில் ஆரம்பித்து, ஒற்றை மகளாய்ச் செல்லமாய் அவர் காலைச் சுற்றி அவள் துள்ளித் திரிந்த ஒவ்வொரு நிகழ்வாய் அசை போட்டுக் கொண்டிருந்தது. ஒரே மகள் என்றதால் தன் மகளுக்கு அளவுக்கு அதிகமாய்ச் செல்லம் கொடுத்து வளர்த்த தன் அன்புப் போதையால் இன்று அவள் சீரழிகிறாளா?? காதல் போதையால் பெற்றோரைத் தூக்கி எறிந்ததால் சீரழிகிறாளா? பெண் போதையால் ஒரு அப்பாவிப் பெண்ணை ஏமாற்றிச் சென்ற அந்தக் கயவனின் சுயநலத்தால் அவள் சீரழிகிறாளா? இல்லை தன் மகள் இத்தனை கஷ்டப்படுகிறாள் என்று தெரிந்தும் தன் மனதைக் கல்லாக்கிக் கொண்டு வருத்தப்படாது இருப்பது போல் தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டிருக்கும் மங்கலத்தின் வரட்டுக் கெளரவப் போதையால் தன் மகள் சீரழிகிறாளா? என்று வரிசையாய்ப் பல கேள்விகளை ரங்கநாதனின் மனது அவர் புத்தியிடம் வீசிக் கொண்டிருந்தது.

“காப்பியைக் குடிச்சாச்சா.” என்று மங்கலத்தின் குரல் சமையலறைக்குள் இருந்தபடியே முற்றத்தில் இருக்கும் ராங்கநாதனின் மனக் கேள்விகளுக்குத் தடையிட ‘இதோ குடிச்சிட்டு இருக்கேன்’ என்று கூறியபடியே குனிந்து காப்பி டம்ளரைக் கையில் எடுத்தார்.

தன் மகளின் நிலையைக் காண மனம் பொறுக்காமல் வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கொண்டாலும் தினமும் ஏதோ ஒன்று அவள் நிலையை நினைவுபடுத்தி விடுகிறதே. இன்று போதைப் பொருளின் பயன்பாடு குறித்துத் தன் மனைவி வாசித்த இந்தச் செய்தி.அதற்கும் தன் மகளுக்கும் என்ன சம்மந்தம்?சில நேரம் சம்மந்தமில்லாத செய்திகள் கூட மனிதர்களின் வாழ்வை எதோ ஒரு மூலையில் பிடித்து சம்மந்தபடுத்தி துக்கத்தில் தள்ளிவிடும் மாயையை எண்ணி நொந்தவாறே,அரை மணி நேரமாய் ஆறிப் போய் இருந்த அந்தக் காப்பியை எந்த ரசனையும் இன்றி வாயில் ஊற்றிக் கொண்டார் ரங்கநாதன்.

    பத்மகுமாரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad