\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

பேரிடர் காலத்தில் தமிழால் இணையும் அட்லாண்டாத் தமிழர்கள்

படுப்பினும் படாது, தீயர்

பன்னாளும் முன்னேற்றத்தைத்

தடுப்பினும், தமிழர் தங்கள்

தலைமுறை தலைமுறைவந்து

அடுக்கின்ற தமிழே! பின்னர்

அகத்தியர் காப்பியர்கள்

கெடுப்பினும் கெடாமல் நெஞ்சக்

கிளைதொத்தும் கிளியே வாழி!

                                                           -பாரதிதாசன்

 

மேற்கூறிய பாரதிதாசனாரின் பாடலுக்கிணங்க  அட்லாண்டா மாநகரத் தமிழ் சங்கம்  இனி வரும்  தலைமுறைக்கும் தமிழைக்  கொண்டு சேர்க்கும் வகையில் பாடுபடுகின்றது என்று சொன்னால் அது மிகையாகாது!

ஆமாம்,தமிழே! அமுதே! என்ற நிகழ்ச்சியின் வாயிலாக வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு ஒருவர் படித்த புத்தகத்தின் சாரத்தை அடுத்தவரிடம்  பகிர்ந்துக்  கொள்கின்றார். இதன் மூலம் தமிழ் நூல்களைப் படிக்கும் ஆர்வம் மிகுந்து தமிழ் நூல்களைப் படிக்கும் பழக்கம் மிகுதி அடைகின்றதென்பது உள்ளங்கை நெல்லிக்கனி. மேலும் இந்த நிகழ்வின் உச்சமாக கடந்த வாரம் சனிக்கிழமை, சிறார்களின் சிறப்பு வாரமாக இருந்தது ,இதில் 7 குழந்தைகள் புத்தகம் படித்து பகிர்ந்தார்கள்; நிகழ்ச்சி முழுவதையும் இளைய தலைமுறை மாணவர்களே வழி நடத்தினர், இந்த நிகழ்வின் மூலம் எங்கெங்கு தமிழன் சென்றாலும், அங்கெல்லாம் தமிழ் வாழ்வதோடு தலைமுறை தாண்டியும் செழிக்கும் என்பது அனைவருக்கும் விளங்கியது.

அடுத்ததாக, திருக்குறள் நேரம் – அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தினர்  குழந்தைகளுக்காக, திருக்குறள் நேரத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். குழந்தைகள்  திருக்குறளுடன் அதன் பொருளைக் கூறும் காணொளி ,அட்லாண்டா மாநகர தமிழ்ச் சங்கத்தின் முகநூல் மற்றும் வலையொளியில் தினமும்  இரண்டு முறை பகிரப்படுகின்றது, இதில் அட்லாண்டா குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர்,இதனால் செந்நாப் புலவரின் வரிகள் நம் பிள்ளைகளின் வாயில் நடனமாடுவதைப்  பார்க்க உள்ளம் நெகிழ்வடைகின்றது  .

மேலும் கதை கேட்கலாம் வாங்க என்ற நிகழ்ச்சியும்  அட்லாண்டாத் தமிழ்ச் சங்கத்தினரால் நடத்தப்படுகின்றது, இதில் சிறுவர் முதல் பெரியவர் வரை தங்களுடைய தமிழ்க்  கதைகளைக்  கூறி காணொளி அனுப்ப,  அவை தகுந்த படங்களுடன் மிக அழகாகத் தொகுக்கப்பட்டு புதன் மற்றும் ஞாயிறுதோறும்  வெளிவருகின்றது, இது அனைவரின் மொழி ஆர்வத்தை தூண்டுவதோடு சிறார்கள் தமிழ் மொழியில் சிறந்து விளங்கவும் உதவுகின்றது.

மேலும் அன்னையர் தின விழாவை இந்த கோவிட் -19 நேரத்தில் நிகழ்வுநிரல் வழியாக அட்லாண்டாத்  தமிழ்ச் சங்கம் நடத்திய விதம் ஒட்டுமொத்த உலகத் தமிழரையும்  வியக்க வைத்ததென்று சொன்னால் அது மிகையாகாது ,ஆமாம் 8 நாட்கள் நடந்த அந்த நிகழ்வின் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட துறையைச் சார்ந்தோரும் , தன்னார்வத் தொண்டு புரியும்  அனைத்து மகளிரும் அழைக்கப்பட்டு சிறப்பிக்கபட்டனர்.சித்திரை மாதத்தில் நடந்த இந்த விழா, ஒரு சித்திரை திருவிழாவாகவே கொண்டாடப்பட்டு மக்கள் மனதில் நீங்கா  இடம் பெற்றுள்ளது.

பேரிடர் நேரத்தில் மக்கள் கலங்காமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அனைத்தையுமே அட்லாண்டாத் தமிழ்ச் சங்கத்தினர் ( சங்கத்தின்  தலைவர் திரு ஜெயசாரதியும் , 2020 ஆண்டு தமிழ்ச் சங்கக்  குழுவினரும், மற்றும் தன்னார்வலர்களும்) தமிழ் மக்களுக்காக அளித்து தமிழரின் அறத்தைப் பேணிக் காக்கின்றனர்  என்பதைச் சொல்லிக் கொள்ள விழைகின்றோம்.

                                                                          நன்றி!

 

அட்லாண்டாத் தமிழ்ச் சங்கம் ,

2020 ஆண்டுக் குழு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad