வேற்றுமையைக் காட்டுவது ஏனோ?
சாம்பல் மேடுகள் சரிவரச் சமைக்கிறதா – இன்று
போரில் உயிர்த்த வெண்புறாக்களுக்கு விடிவில்லை.
மல்லுக்கட்டிப் புறநகர்ச் சமைந்த மாந்தர்க்கில்லை – சரிநிகர் வாழ்விங்கு
செல்லரித்துப் போன மனப்புண்ணை ஆற்றுதல்தான் என்ன வகை?
மந்திரி சகமாந்தர் என ஆரைத்தான் நம்புவது ஐயோ!
வேற்று நாடுகள் தாமும் வேற்றுமையைக் காட்டுவது ஏனோ?
தோலுக்கு ஒவ்வோர் நிறம்
சதைத் தொகுப்பிற்கு ஒவ்வோர் நிறை
மாந்தர் தம்முன் வேற்றுமைதான் எத்தனையோ!
அண்டிப் பிழைக்க வந்து தாய்நாடு நாம் துறந்தோம்
வந்துசேர் நாட்டிற்கூடப் பெண்டீர் நாம்
அல்லலுறும் வகை தாளாது பரிதவித்தோம்
ஏனிந்த விதி செய்தாய் இறைவா – இவ்வுலகை
ஏந்திய பாரம் கனக்கிறதோ இன்றுனக்கு?
கோயில் வாசலில் கையேந்தி நித்தம்
பிச்சகர் நிலை நிரை இன்று
பேதமின்றி எங்கும் வழிகிறதே!
ஏதிது ஒரு புதுக்கணக்கு?
கருவிலே திருவறியாக் காட்டுமிராண்டிகளாய்
வாழ்ந்து மாய்ந்து சல்லடைத் தண்டை உண்டபோது
விறலாய் விழுப்புண் சமைத்து
போகும் வழிப் பெருமைசேர் வாழ்விங்கில்லை
அவர் தமக்குள்
பாட்டெழுதிக் கைசோர்ந்த
பாவலத்தாள் எந்தனுக்கின்று
கேள்வியொன்று மீதமுண்டு
எங்கு சென்றால் அமைதிசேர் வாழ்வு.
-வெண்நிலா விஜய்-