அவன் போராளி
வெடித்து முழங்கிய துப்பாக்கிச் சின்னங்களால்
துளையுண்டு உயிர்த்தெழுந்த வெள்ளைப் பூக்களுக்கு
ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தக்கூடப் பிரக்யை அற்றுத்
தொலைவில் தன் பார்வையைப் பதித்தவாறே
வருகிறான் அவன்
நிற்கக்கூட நாதியற்றுத் தளர்ந்துவிட்ட
வயோதிப மாதுபோல அவன்
சுமந்து வந்த AK-47…
பசித்திருக்கிறது…
“பையில் பாணும் தண்ணீரும் இருக்கிறது
இரவு விடிகிறபோது அதிகாலையில்
பார்த்துக்கொள்ளலாம்”
என முணுமுணுக்கிறது அவன்வாய்
இறந்துபோன தன் சகாக்கள் பற்றிய நினைவுகளோடு
-தூக்கிப்போகிறான்.
அரையிருட்டில் சரசரவெனத் தூறிய மழைக்குள்
சல்லடை போடுவதற்குப் புற்றீசலாய்
இராணுவச் சிப்பாய்கள் புறப்பட்டு அண்மிக்க
மெதுவாகப் பின்புறம் பதுங்கும் அவன்
“குடியும் கும்மாளமுமிட்டு
அவர்கள் கலைவதற்குள் ஒருகை பார்த்துவிடலாம்”
மனதில் படபடதான்
“ஒக்கமே கிஹில்லா” என்று தலைவன் சத்தமிட
ஆரவாரம் செய்கிறது கூலிப்படை
துயின்றுவிட்ட தன் சொந்தங்களுக்காய்
மழையுடன் கண்ணீருத்தித்தான் அவன்
சிப்பாய்கள் ஒருவர் பின் ஒருவராய்ச் சேர்ந்து நின்று
“ஜயவேவா” கோஷிக்க
“வேண்டுங்கள் இது உங்கள் கடைசி ராத்திரி”
என்ற வண்ணம்
உயிர்ப் பறவையைப் புறந்தள்ளி
அள்ளி வீசுகிறான் தனது வெட்டுக்களை
பாய்கிறது பூமியில் குருதி
“என் சகோதரர்களுக்கு அஞ்சலி செலுத்த
மீளவேண்டும் பாசறைக்கு” என்றவண்ணம்
போகிறான் தொலைதூரம்
“பாணும் தண்ணீரும் இனித் தேவையில்லை
பாசறைக்குப் போனால்
பால்க் கோப்பியே குடிக்கலாம்”
என எண்ணியபோது
சகாக்களின் எண்ணம் வருகிறது
சேர்ந்து உண்ட ரொட்டித் துண்டுகளும் சம்பலும் கூட
-ஞாபகம் வருகிறது
கதறியழுகிறான் இனிக் காணமுடியாத்
தனது சகோதரர்களுக்காய்
-வெண்நிலா விஜய்-