கொலைக் குற்றம்
கண்களைக் குத்திக் கிழித்திடும் இமைகள்!
நாவினைக் குத்தி நறுக்கிடும் பற்கள்!
விரல்களில் புகுந்து வெளிவரும் நகங்கள்!
பயிரினை மேய்ந்து பிரித்திடும் வேலிகள்!!!
சட்டங்கள் இயற்றிடத் துறையொன்று உண்டு!
இயற்றியதைக் காத்திட காவலென்ற ஒன்று!
காத்திடும் வேலையை அழித்தலாக்கியது என்று?
வேலையைக் கொலையாய் மாற்றியது இன்று!!!
கால்வயிற்றுக் கஞ்சிக்குக் கால்கடுக்க உழைத்தவர்!
காலையில் தொடங்கி காரிருளில் முடிப்பவர்!
காலம்பல உழைத்தாலும் காசுபணம் காணாதவர்!
காவல்துறை வன்முறைக்குக் காவாகிப் போனவரவர்!!!
அப்பாவைக் கண்முன்னே அடித்து நொறுக்குகையில்
அங்கம் துடித்திடா அன்பு மகனுமுண்டோ?
அவனையும் உள்ளிழுத்து அராஜகமாய்க் கொன்றிட்ட
அரக்கத்தனம் கேட்டிட அதிர்ச்சியால் கொதிக்குதன்றோ!
பிடித்துச் சென்றவர் பிழையே செய்திடினும்
பிளந்து நொறுக்கிடும் பிரம்பினை யார்தந்தார்?
பிரச்சனை முழுவதும் பிரித்து ஆய்ந்திட்ட
பின்னர் தீர்ப்பளிக்கப் பிறிதொரு நீதித்துறையில்லையோ?
நடந்த அனைத்து நிகழ்வையும் பார்க்கையில்
நோக்கத்தில் பழுதும் நேர்மையற்ற செயலும்
நம்பகம் குறைந்த நயமற்ற வினைகளும்
நன்றாகத் தெரிகிறது நம்போன்ற சாதாரணர்க்கு!!!
தொடர்ந்து யோசிக்க, தோன்றுகிற எண்ணமிது!
திரைப்பட நாயகன் துரத்திக் கொல்வததைத்
திறமெனக் கைதட்டி தீமைமறந்து ரசிப்பதுவும்
தொடர்கொலை நடப்பதற்குத் தூண்டுகோல் ஆயிற்றென்று!!!
சட்டத்தைக் கையெடுக்கச் சகமனிதனுக்கு உரிமையில்லை!
சட்டத்தைக் கையெடுக்கும் சகலரையும் புறக்கணிப்போம்!
சட்டத்தைக் காப்பாற்றச் சரியானது நீதிமன்றமொன்றே!
சட்டத்தை நம்புவோம், சந்ததியை நல்வழிப்படுத்த!!!
கொடுமையை நடத்திக் கொலைசெய்த காவலரைக்
கடுமையாய்த் தண்டிக்கக் கோர்ட்டாரை வேண்டுகிறோம்!
கொலைகாரன் படும்துயர் குலைநடுங்கும் விதம்வேண்டும்!
கயவர்களை என்றென்றும் கலங்கிடச் செய்தல்வேண்டும் !!!
வெ. மதுசூதனன்.