நெஞ்சு பொறுக்குதில்லை
நெஞ்சு பொறுக்குதில்லை
துஞ்ச விடுவதுமில்லை
வெஞ்சினம் மிகுந்து
கிஞ்சித்தும் இரக்கமின்றி
வஞ்சித்துக் கொன்றவர்க்கு
அஞ்சி நடுங்குவமோ
கெஞ்சிக் குழைவமோ
எஞ்சியிருக்கும் நாளெல்லாம்
மிஞ்சிநிற்குமே இவ்வடுவும்
வனத்து விலங்கதுவும்
மனவொழுக்கம் கொண்டிருக்கும்
இனத்துச் சோதரரை
சினத்துக் கொல்லாதடா!
அனத்திக் கெஞ்சியவரை
கனத்தக் கழியாலடித்து
பிணமாக்கி மகிழ்ந்தாயே
தினவெடுத்த கல்நெஞ்சனே
நனவுடன்தான் இருந்தாயா?
அதிகாரம் எவர்தந்தார்
சதிகாரச் செயலதற்கு?
விதிபோற்றவே காவலர்
விதிமுடிக்கும் காலனல்ல
உதிரஞ்சொட்டக் கதறியவரை
சிதிலமாக்கித் தின்றாயே!
மதியிழந்து போனீரே!
உதிர்ந்தவை இருஉயிரென்றாலும்
அதிர்ந்தது அகிலமன்றோ?
வெட்டப்பட்ட ஆட்டுக்கழுத்தை
ஒட்டிவிடுமோ மஞ்சள்நீர்?
விட்டம்பார்த்திருக்கும் குடும்பத்து
புட்டந்துடைக்குமோ நிதியுதவி?
பட்டதுயர்த் துடைத்தெடுக்க
எட்டுஜென்மம் போதாதன்றோ?
சுட்டஆவி அடங்குமுன்
சட்டத்தைச் சீர்செய்வீர்!
பட்டறிவுப் பாடம் தரட்டும்!
– ஜெ . பாபு