மனக்குப்பை
பீரோவுக்கு அடில, கட்டிலுக்கு அடிலன்னு விட்டுப் பெருக்கணும்னு எத்தனை தடவை சொன்னாலும் தெரியறதில்ல….!
தன் கணவரிடம் அந்தம்மாள் சொல்லியதே காதில் மீண்டும் மீண்டும் ஒலித்தது சம்பங்கிக்கு. சாலையில் போய்க் கொண்டிருந்த லாரியின் பேரிரைச்சலை மீறி அந்தக்குரல் இவள் காதில் அசரீரியாய் ஒலித்தது. யதார்த்தமாய்ப் பேசிய பேச்சாய் அதை எப்படிக் கொள்வது? வழக்கத்திற்கு மாறாய் சற்றுச் சத்தமாகத்தானே அந்தக் குரல் ஒலித்தது. அருகில் நின்று பல் துலக்கிக் கொண்டிருந்த கணவரிடம் அப்படிச் சத்தமாய்ச் சொல்ல வேண்டிய அவசியம்தான் என்ன?
அந்தப் பேச்சு தன் காதில் விழ வேண்டும் என்பதுதானே? எத்தனை தடவை சொல்லியாச்சு என்கிற கேள்விக்கே இடமில்லையே? அப்படிச் சொல்லும்படி, தான் என்றும் நடந்து கொண்டதில்லையே! ஓரிரு முறை சொல்லியிருக்கிறார்கள்தான். மறுப்பதற்கில்லை. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. அதையே பல தடவை சொல்லியிருப்பதாய்க் கடிந்து கொள்வது வெற்றுப் பெருமைதானே…! உற்ற கணவனிடம் என்ன பீற்றல்? வீட்டை அப்படிக் கண்ணும் கருத்துமாய் நிர்வகிப்பதாய்க் காட்டிக் கொள்கிறார்களோ?
அப்படியில்லை. இது அதுதான். அதுவேதான். ரெண்டு பேரும் பேசி வைத்துக் கொண்டு செய்கிறார்கள். சோதிக்கிறார்கள். தன்னை எடை போடுகிறார்கள். அல்லது அந்தம்மாள் மட்டும் மனதில் இதை வைத்துக் கொண்டு கணவனிடம் சொல்வதுபோல் இதைச் செய்கிறது. தெரிந்தால் ஒரு வேளை அவன் “சே…சே….இதெல்லாம் வேண்டாம்….பாவம்…“ என்று கூறலாம். அல்லது மனைவிக்கு ஜால்ரா என்றால் ஓ.கே.ஓ.கே….செய்யு…செய்யு…என்று தலையாட்டலாம். கரெக்ட்…அதுல தெரிஞ்சி போகும்ல..வண்டவாளம்..என்று உற்சாகப்படுத்தியிருக்கலாம். வீட்டு நிர்வாகம் மனைவிக்குத்தான் என்று ஒதுங்கிப் போகும் தன்மை. என்னத்தையோ செய்து தொலையட்டும்…நம்ம தலைல விழாம இருந்தாச் சரி என்று மண்டையாட்டும் பொம்மைகள்.
நினைக்க நினைக்க சம்பங்கிக்கு வேதனையாய்த்தான் இருந்தது. வாழ்க்கையில் ஒரு முறை தப்பு செய்து விட்டால் பிறகு அதற்கு விமோசனமே கிடையாதா? அதுவேவா நிலைத்து விடும்? ஏதோ தவறி நடந்து போச்சு….என்று விட மாட்டார்களா? அப்படியா எல்லோரும் இந்த உலகத்தில் யோக்கியர்களாக இருக்கிறார்கள்? தவறிச் செய்பவர்களை விட, தெரிந்தே செய்பவர்கள்தானே அதிகம்? தப்பு என்று தெரிந்தும் தொடர்ந்து செய்பவர்கள்தானே நிறைய? தவறு செய்தவர்கள் திருந்தி விட்டால் அதை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்களா? தப்பு செய்தவர்களெல்லாம் அதுக்காக வருந்தாமல், திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருக்கும்போது ஒரே ஒரு முறை தவறிப்போய் தவறு செய்தவளை, சட்டென்று உணர்ந்தவளை, தன் தவறுக்காக வருந்தியவளை அதற்கான தண்டனையையும் ஏற்றுக் கொண்டவளை, அதன் தொடர்ச்சியாய் சிறிது காலம் வேலையின்றி, வருமானமின்றிக் கஷ்டம் அனுபவித்தவளை இந்த உலகம் ஏனிப்படி அந்த முகமாகவே பார்க்கிறது? இதுக்கு முந்தி எங்கிருந்தே? என்று கேட்டு மொத்த ஜாதகத்தையும் அறிய முற்படுவது என்ன பண்பாடு?
குப்பை லாரி வந்து நிற்பது தெரிந்தது. அவளின் அந்த சிறிய ஓட்டு வீட்டின் நேர் தெரு முக்குப் பகுதியில் தினமும்தான் அது கண்ணில்படுகிறது. மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து வையுங்கள்… உங்கள் வீட்டு வாசலுக்கு வண்டி வரும்போது…. கொடுங்கள் என ஒலி பெருக்கியில் கத்திக் கொண்டே மாசக் கணக்காய்ப் பிரச்சாரம் செய்துதான் என்ன பயன்? எல்லா நல்லதிற்கும் மக்கள் செவிடாகி விட்டார்களோ? வழக்கமான பழக்கத்தை யாருக்காகவும் மாற்றுவதற்கில்லை என்று தெருவில் உள்ள குப்பைத் தொட்டியில்தானே கொண்டு வீசுகிறார்கள்? தொட்டி இருந்தால்தானே போட….என்று அதையும் அகற்றிப் பார்த்தாயிற்று. போனால் என்ன? அது குப்பைகளுக்கு என்று வரிக்கப்பட்ட இடம்தானே…அது போதாதா எங்களுக்கு என்று அந்தப் பிராந்தியத்தையே நாறடிக்கிறார்களே…? அடேயப்பா….அந்தக் காட்சிகளைக் காணக் கண்கோடி வேண்டும். அப்படி ஒரு ஜாலி அதில். பொறுப்பற்ற ஜனங்கள் என்று சொல்வதைத் தவிர வேறென்ன பகர்வது?
போகிற போக்கில் டூ வீலரில் இருந்தமேனிக்கே அங்கு வீசுவதில் ஒரு இனம் புரியாத குஷி. ப்ளாஸ்டிக் உபயோகிக்காதீர்கள் என்று சொல்லிச் சொல்லி மாய்ந்து போக, எங்கிருந்துதான் கிடைக்குமோ? வீசும் பை, மேய்ந்து கிளறிக் கொண்டிருக்கும் மாட்டின் மேல் போய் சொத்தென்று விழ…ஐயையோ….பாவம்….என்ற இரக்கம் வேறு. காரில் போகும் கனவான்கள் என்ன ரொம்ப யோக்யமா? காரில் பயணிக்கும்போது குப்பை வீசுவது யாருக்கும் தெரிந்தால் அநாகரீகமாகிவிடும் என்கிற நினைப்பிலான கணப் பொழுதில், மட்டுப் படுத்தாத வேகத்தில், மின்னல் தெறித்தாற்போன்ற நொடிப் பொழுதில் வந்து விழும் குப்பைப் பொதிகள் சிதறிப் பறக்கின்றன. அதான் கார்ப்பொரேஷன் வண்டி வருமே…விடு…விடு…
நம்ப ஜனமாவது திருந்துவதாவது? தவறிப்போய் எச்சில் துப்பினால் தண்டனை என்கிறான் வெளிநாட்டில். ஒரு காகிதப் பிசிறு விழுந்தாலும் அபராதம். ஒரு வேளை இவங்களையெல்லாம் அங்க கூட்டிக் கொண்டுபோய்க் கதற விட்டு, திரும்பக் கூட்டியாரணுமோ? அப்பவாவது திருந்துவாங்களா? பிறவிக் குணம் போலல்லவா இயங்குகிறார்கள்!
ச்சே…நம்ப நாட்டுல எவ்வளவு சுதந்திரம்? கட்டற்ற சுதந்திரம். கட்டுப்பாடற்ற சுதந்திரம். – கணவன் ஆதி அன்றொருநாள் வயிற்றெரிச்சலோடு சொல்லிக்கொண்டே போனது நினைவுக்கு வர களுக்கென்று சிரித்துக் கொண்டாள் சம்பங்கி.
இந்நேரம் எந்த பீட்டில் குப்பை அள்ளிக் கொண்டிருக்கிறானோ? லாரி வரும் முன்னே, இடத்தில் இருந்தாக வேண்டும் என்று ஓடுவான். இன்னும் ரெண்டு பாக்கெட் கொடுங்கண்ணே…என்று ப்ளீச்சிங் பவுடர் கெஞ்சி வாங்கிப் பரவலாய்ச் சிதறவிட்டு ஒதுக்கப்பட்ட பகுதியைச் சுத்தமாய் வெள்ளை வெளேர் என்று ஆக்கி பவுடர் மணக்க மணக்க விலகி ஓட வைத்து உணர்த்துகிறான் ஜனங்களுக்கு.
அதன் மேலேயே கொண்டு வந்து கொட்டுகிறார்களே…! போடாதீங்க…போடாதீங்க…என்று அங்கேயே கதி கிடந்தும் பார்த்து விட்டான். கண் முன்னாலேயே விசிறியடிக்கிறார்களே…நல்லவேளை…கொஞ்சம் விட்டால் தன் மேலேயே அபிஷேகம் நடந்தாலும் போச்சு…! ஒராள் திருந்தல….இன்னும்…என்று வயிரெறிவான். பார்க்கப் பாவமாய் இருக்கும் இவளுக்கு. எதற்கு இப்படி வருந்துகிறான்?
என்னாடீ…இப்டிச் சொல்றே? நாம வேலை பார்க்குறதே குப்பைலதான். குப்பைக்காகத்தான். அதைச் சுத்தம் பண்ணத்தான். திருந்தச் செய்தாத்தானே நமக்குப் பேரு? அழுகலாப் போட்டுட்டு சும்மாக் கெடக்க முடியுமா? அவன் மனம் குப்பையில்லை என்று அவள் மனசு கலங்கியதுதான் மிச்சம்.
அரசாங்கமும் நன்றாகத்தான் யோசிக்கிறது. மக்களை எந்த வழியிலாவது வழிக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என்று. அருகிலிருக்கும் சுவரைச் சுத்தம் செய்து வெள்ளையடித்து, எம்மதமும் சம்மதம் என்று சாமி படங்களை வண்ணங்களில் வரைந்து “இங்கே குப்பை போடாதீர்கள்…மீறினால் அபராதம்” என்றும் எழுதிப் போட்டாயிற்று. கேட்டால்தானே? யாரும் தண்டனைக்குப் பயப்படுவதில்லையோ? அல்லது அட…போய்யா…நீ என்ன யோக்கியம்….எங்களுக்குப் புத்தி சொல்றதுக்கு?- ஜனநாயகத்தில் எவனும், என்னமும் கேள்வி கேட்கலாம் என்று ஆகிப் போனதே?
மூலையில் திரட்டிய தூசியைச் சேர்த்து அள்ளி ஒரு பைக்குள் போட்டாள். மக்காத குப்பை பெரும்பாலும் அவளிடம் சேருவதேயில்லை.
ஊருக்கெல்லாம் சொல்லிப்புட்டு கடைசில நாமளே தப்பு செய்யலாமா? ரெண்டு பை தயார் பண்ணு. காகிதப்பையா இருக்கோணும்…என்று ஆதிதான் சொல்லியிருந்தான். அதை நினைத்துக் கொண்டு வேலை செய்தாளே ஒழிய மனசு பூராவும் புதிதாய் வேலை செய்யப்போன அந்த வீட்டிலேயே இருந்தது.
எப்படியிருந்தாலும் எடுத்துக் கொடுத்திருந்தால் பிரச்னையில்லையோ? நம்பியிருப்பார்களோ? தன் மீது நம்பிக்கை வந்திருக்குமோ? நற்பெயர் என்பதைவிட நம்ப வைக்கிறாளோ என்று சந்தேகமும் கொண்டிருக்கலாமே? தெரியாமலும் கிடந்திருக்கலாம்…வேண்டுமென்றேயும் விட்டிருக்கலாம். வேண்டுமென்றே விட்டிருப்பவர்கள் நாளை வேண்டுமென்றே, ஒன்று தொலைந்து போனது, நீதான் எடுத்திருக்கே எனச் சொல்லவும் வாய்ப்புண்டுதானே? கண்ணில் படாததுபோல் போய் விடுவதே மேல். ஒருவர் மீது நம்பிக்கை கொள்ள இப்படியா சோதனை வைப்பது? அவரின் பேச்சு, நடத்தை, வேலைத் திறன் இவைகளை வைத்தல்லவா மதிப்பிட வேண்டும்? அடுத்தவர் மனசை மதிக்கவே தெரியாதோ?
காலையில் நடந்ததைக் கணவன் ஆதியிடம் சொல்வோமா வேண்டாமா என்ற யோசனை வந்தது சம்பங்கிக்கு. அவனைத் தவிர வேறு ஆறுதல் தனக்கு யார்?
அப்படியாப்பட்ட இடம் நமக்கு வேண்டாம். வேலையை விட்ரு….என்றுதான் சொல்வான் நிச்சயம். ஒரு பொருள வலிய பாத்ரூம்ல வைக்கலாம்..மறந்தும் வைக்கலாம்….தலை வார்ற கண்ணாடி முன்னாடி வைக்கலாம்….அட பூஜை ரூம்ல கூட வைப்பாங்க சில விட்ல….இப்டி பீரோக்கடில யாரும் போட்டு வைக்க மாட்டாங்க…அதுவும் போற வர்றவங்க பார்வைல துல்லியமாப் படுற மாதிரி…உன் கண்ணுல படும்னா, அது அவங்க கண்ணுக்கும் படும்தானே? கூட்டிப் பெருக்குற உன் பார்வைலதான் படும், எங்களுக்கெல்லாம் தெரியாதுன்னு சொல்ல முடியாதே…அப்போ, உன்னைச் சோதனை பண்றதுக்காக வேணும்னே போட்டு வச்சிருக்காங்கன்னுதானே அர்த்தம்? நீ ஏற்கனவே ஒரு இடத்துல தவறு பண்ணினதும், அதை உணர்ந்திட்டதும் உண்மைதான். நாமதான் அதுக்கு மன்னிப்புக் கேட்டுட்டோம், அங்கேயிருந்து விலகவும் செய்திட்டோம்…..அந்த விஷயம் தெரிஞ்சிதானே உன்னை இவங்க வேலைக்கு வச்சிக்கிட்டாங்க……அப்புறமும் சோதனை பண்ணினா? தெரியாமக் கீழ விழுந்திருக்கும், கவனிச்சிருக்க மாட்டாங்கன்னு அவங்க சார்பா சலுகையா நினைக்க முடியும்னா, நம்ப சார்பா அது வேணும்னே, உன்னைச் சோதிக்கிறதுக்காகச் செய்த காரியம்னு நாம ஏன் நினைக்கக் கூடாது? கௌரவம்ங்கிறது எல்லாருக்கும் பொதுவானதுதானே? அது ஏழைகளுக்கு மட்டும் கிடையாதுன்னு கேவலப்படுத்த முடியுமா? வேலை செய்துதானே பிழைக்கிறோம்? அவன் சொன்னதை யோசித்து யோசித்து ஓய்ந்துதான் போனாள் சம்பங்கி. தனக்கிருக்கும் ஒரே துணை அவன்தான். அவனிடம் எதையும் மறைப்பது கூடாது. குப்பை அள்ளும் வேலை செய்யும் அவன் மனம் சுத்தமானவன். ஒரு நாள் கூட தப்புத் தண்டாவாய் பேசி அவள் கேட்டதில்லை. என்ன தீவிரம் அவன் செயலில்?
இந்த ஏரியா ஜனங்கள் அத்தனை பேரையும் இன்னும் கொஞ்சநாள்ல சரி பண்றேனா இல்லையான்னு பாரு….எத்தனை நாளைக்குத்தான் அங்க கொண்டுவந்தே குப்பையை வீசுவாங்கன்னுதான் பார்ப்போமே….? நானும் விடாம பேட்டரி வண்டியை வீடு வீடா ஓட்டிட்டுத்தானே போயிட்டிருக்கேன்…முன்னைக்கு இப்ப வீட்டு வாசலுக்கு இறங்கி பிரிச்சு வச்ச குப்பையை நேரடியாக் கொடுக்கப் பழகியிருக்காங்கதானே… வீதில எறியற பழக்கம் குறைஞ்சிருக்குதானே…? கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் சரியாயிடும்…. வீதிக் குப்பைத் தொட்டில கொண்டு வந்து போடுங்கன்னு பழக்கினதும் நாமதானே…! இப்போ அவுங்கவுங்க வீட்டு வாசலுக்கே வந்து நின்னு குப்பையைக் கொடுங்கன்னு கேட்குறதும் அவங்க வசதிக்குதானே…! மக்குறது, மக்காததுன்னு பிரிச்சிப் போடுறது கொஞ்சம் கஷ்டமா இருக்கிறதாத் தோணுது….போகப் போகப் பழகிடும்….நம்பிக்கையா முயன்றுக்கிட்டே இருக்க வேண்டிதான்….எல்லாமும் ஒரு நாளைக்கு சரியாகித்தானே ஆகணும்…..இனி வேறே வழியில்லேங்கிறபோது, ஒழுங்குக்கு வந்துதானே ஆகணும்?
குறைந்த வருவாயில், மிக எளிய பணியில் இருக்கும் இவனுக்குத்தான் எவ்வளவு நம்பிக்கை? விடாத முயற்சியில்தான் எத்தனை முனைப்பு? அவன் கடமை அவனுக்குப் பெரிசு…என்று இயங்குகிறானே…!
எப்பயும் போல நாளைக்கும் வேலைக்குப் போயிட்டு வந்திடு…பிறகு சொல்லு…. – இதுதான் ஆதி அளித்த பதில். எதை நினைத்து, எதை மனதில் வைத்து இப்படிச் சொல்கிறான்? மனுஷங்க எல்லாருமே அப்படியெல்லாம் ரொம்ப மோசமானவங்க இல்லை…அடிப்படைல எல்லாருமே நல்லவங்கதான்…சந்தர்ப்ப சூழ்நிலைதான் ஆட்கள மாத்தி விட்டிடுது…நீபாட்டுக்குப் போ…வேலையைப் பாரு…வா….-
மறுநாள் எப்பொழுதும் போல் வேலைக்குப் போகத்தான் செய்தாள் சம்பங்கி..பாத்திரங்களெல்லாம் விளக்கிச் சுத்தம் செய்து அடுக்கிவிட்டு, வீடு பெருக்க ஆரம்பித்தபோது கவனித்தாள். பீரோவுக்கு அடியில் அந்த மோதிரம் இல்லை. தான் பார்த்தும் பார்க்காததுபோல் வந்து விட்டது எவ்வளவு நல்லதாய்ப் போயிற்று? கவனித்து எடுத்து விட்டார்களா அல்லது வேறு ஏதாவது ஆகியிருக்குமா? தலைக்கு மேலே பேயாய்ச் சுற்றும் ஃபேன் காற்றில் சிறிது சிறிதாக நகர்ந்து ஒருவேளை இன்னும் அடியில் போய் மறைந்திருக்குமோ? அந்தக் குறிப்பிட்ட பீரோவுக்கு அடியில் மட்டும் நேற்று கூட்டவில்லையே…இன்று கூட்டுவோமா? அடியில் நன்றாகப் பெருக்குமாரை விட்டு இழுத்து ஒரு வேளை அது தட்டுப்பட்டால் போனால் போகிறது என்று எடுத்துக் கொடுத்துவிட்டால் என்ன? ஒரு வேளை அப்படி ஒரு மோதிரம் கீழே விழுந்ததும், அடியில் போனதும் அவர்களுக்கே தெரியாமல் இருந்தால்?
பலவிதமான யோசனையோடே கூட்டிக்கொண்டே அடுப்படியை ஒட்டிய பகுதிக்கு வந்தபோது அந்தப் பேச்சு காதில் விழுந்தது. வழக்கத்திற்கு மாறாக ரகசியம்போல் சற்றே மெதுவாக ஒலிக்க, காதைத் தீட்டிக் கொண்டு மறைப்பில் நின்று கேட்க முனைந்தாள் சம்பங்கி.மனசு உறுத்துகிறதே…!
மோதிரம் கிடைச்சிடுச்சிங்க…ஊஞ்சல்ல கண்ணயர்ச்சியாப் படுத்திருந்தபோது நழுவி ஓடியிருக்கும் போல….இன்னும் நாலு சுத்து நூல் சுத்தணும்னு சொல்லிட்டேயிருந்தனா..அதை உடனே செய்யாம விட்டது தப்பாப் போச்சு. .தலைக்கு மேலே கையை நீட்டி சங்கிலியைப் பிடிச்சமேனிக்கு கவிழ்ந்தவாகுல அசந்திட்டேம்போல…நேத்து என்னவோ உடம்புக்கு ரொம்ப மாச்சலாப் போச்சு….ஏன்னே தெரில…நீங்க கூட ஆடிக்கிட்டே கீழே சரிஞ்சிறப் போறேன்னு சொல்லல்லே…என்னை மறந்து அப்படியொரு அசதி.
அவ்வளவு சடவுலயும் அந்தம்மா எடுத்திருக்குமோன்னு ஒரு சின்ன சந்தேகம்….எப்டிக் கேட்குறது? தப்பாயிடுச்சின்னா? யோசனைலயே விட்டுட்டேன்…அவங்களும் வேலையை முடிச்சிட்டுப் போயிட்டாங்க….என்னவோ பளிச்சின்னு ஒரு யோசனை….நேரே இருக்கிற பீரோக்கு அடில தெறிச்சி ஓடியிருக்குமோன்னு….நெனச்சாப்லயே கெடந்திச்சிங்க….பாவம் அந்தம்மா….நல்லவேள…வார்த்தையை விடல….அநாவசியமா சந்தேகப்படப்போய் திருட்டுக் குத்தம்னு ஆயிடுமே…! ஒருத்தர சட்டுன்னு அப்டி சந்தேகப்படலாமா, தப்பில்ல….? கோவிச்சிட்டு நின்னுட்டாங்கன்னா? வேலைக்கு ஆள் கிடைக்கிறதே பெரும்பாடா இருக்கு…!
மனசுக்குள் நிம்மதி பரவியிருந்ததை உணர்ந்தாள் சம்பங்கி. வேலை முடித்துப் போய்க்கொண்டிருந்தபோது ஆதி பேட்டரி வண்டியோடு குப்பை…குப்பை….என்று மணியடித்துக் கொண்டே வீடு வீடாய் நகர்ந்து கொண்டிருப்பதைக் கண்டாள். மனித மனங்களில் குப்பை சேராமல் இருந்தால் சரி…அதுவே நிதர்சனம். விவேகமறிந்தவர்கள் அதற்கு இடம் கொடுக்க மாட்டார்கள். இந்த உண்மை ஆதிக்கு மட்டும் துல்லியமாய்த் தெரிந்திருக்கிறதோ? அவனிடம்தான் என்னவொரு பக்குவம்?!
மக்கும் குப்பை…மக்காத குப்பை என்று விரைவில் அனைத்து வீடுகளிலும் பிரித்து வழங்கப் பழகி விடுவார்கள் என்கிற ஆதியின் தீவிர முயற்சியின் மீதான நம்பிக்கை மீது முதன் முறையாய் அவளுக்கும் ஒரு நம்பிக்கை துளிர்த்தது அந்தக் கணத்தில்.
உஷாதீபன்